தர்ம - சத் சங்கம் செய்யும் போது, ``நைராஷ்யத்தை’’ விட்டுவிட வேண்டும். அது என்ன ``நைராஷ்யம்’’? ஒரு ஜீவன் தன் கடமைகளை செய்யாது பிறரோடு தன்னை ஒப்பீடு கொள்ளும். உதாரணத்திற்கு; ``இன்னும் பிரம்மாவிற்கே முக்தி கிடைக்கவில்லை. நாம் ஏகாதசி உபவாசம் இருந்து, பூஜைகள், தான - தர்மங்களை செய்து எப்போது முக்தி பெறுவது போன்ற எதிர்மறை சிந்தனையே ``நைராஷ்யம்’’ இன்னும் சுருக்கமாக சொல்லவேண்டும் என்று சொன்னால், ``நம்பிக்கையின்மை’’ கைவிடவேண்டும். என்று பீமசயனன் சொல்கிறார்.
சத் சங்கம் செய்யும் போது, ``இதனை செய்ய வேண்டும்’’ என்னும் உற்சாகம் நம் மனதில் இருக்க வேண்டும். இதனையே தர்மராஜனுக்கு பீமசயனன் சொல்கிறார், முக்தியை பெற இந்த மூன்றும் இருக்க வேண்டுமாம். அவை;
1) பிரயத்தனம் (முயற்சி)
2) யோக்கியதை (அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும்)
3) எல்லாவற்றுக்கும் மேலாக, பகவானின் அனுக்கிரகம் இருக்க வேண்டும்.இது மூன்றும் இருந்தால், ஒருவருக்கு நிச்சயம் முக்தி கிட்டும் என்கிறார் பீமன்.
பிரயத்தனம் (முயற்சி)
ஏகாதசி அன்று, புதியதாக உபவாசம் இருப்பவர். முதல் வாரத்திலேயே நிர்ஜலம் உபவாசமாக இருக்க வேண்டும் என்பதில்லை. முதல் ஏகாதசியில் அல்ப ஆகாரம் அதாவது அரிசியினால் செய்யப்பட்ட உணவுகளை தவிர்த்து, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை கலக்காமல், கோதுமை ரவை உப்புமா செய்து சாப்பிடலாம். ஒரு வேளை மட்டும் காபி, டீ ஆகியவை அருந்தலாம். இரவில், சப்பாத்தி சாப்பிடலாம்.
(தோசை, இட்லி வேண்டாம். காரணம், அதிலும் அரிசி கலந்துள்ளதால்)அடுத்த முறை வரும் ஏகாதசியில், ஒரு வேளை குடிக்கும் காபியை நிறுத்தவும். அடுத்த மாதம் வருகின்ற ஏகாதசியில், இரவில் சாப்பிடும் சப்பாத்தியை நிறுத்தவும். இப்படியே, படிப்படியாக ஏகாதசி அன்று உணவை தவிர்த்து, நிர்ஜல உபவாசத்தை மேற்கொள்ளலாம். இதுவே.. பிரயத்தனத்திற்கு ஓர் உதாரணம்.
யோக்கியதை
ஆன்மிகத்தில், தகுதியினை வளர்த்துக் கொண்டே செல்ல வேண்டும். அனுதினமும் ஏதாவது ஒரு விஷயத்தை கற்றுக் கொண்டே வரவேண்டும். உதாரணமாக, ஸ்லோகமாக இருக்கலாம், பூஜைகளாக இருக்கலாம், சதாசர்வ காலமும் ஆண்டவனை நினைத்துக் கொண்டே இருக்கலாம், இப்படி தனது தகுதியை (யோக்கியதை) வளர்த்துக்கொண்டு முக்திக்கு வழிவகை செய்ய வேண்டும்.
பகவானின் அனுக்கிரகம்
பிரயத்தனம், யோக்கியதை ஆகிய இரண்டையும் நாம் செய்தோமேயானால், மூன்றாவதாக இருக்ககூடிய பகவானின் அனுக்கிரகம் தானாக கிடைக்கும். அவனின் அருளாசிகள் நிச்சயம் நமக்கு கிடைக்கும். அவை, முக்திக்கு நம்மை அழைத்துச் செல்லும்.
தொகுப்பு: ஜி.ராகவேந்திரன்