பகுதி 2
போனதும் வந்ததும் அனுபவித்துக் கொண்டிருக்கக்கூடிய நல்லவற்றை இழக்கும் போது, அதனுடைய பாதிப்பு நன்றாகவே தெரியும்; இருக்கும் போது தெரியாத அதனுடைய அருமை, இழந்த நிலையில் தெளிவாகவே தெரியும். இதை விளக்கும் நிகழ்வு இது...விஜயநகர சாம்ராஜ்யத்தை `ராமராயன்’ எனும் மன்னர் ஆட்சிசெய்து வந்தார். நல்லவர்; நற்காரியங்களுக்கு மனம் சலிக்காமல் கொடுக்கக்கூடியவர். அப்படிப்பட்ட அவரைத்தேடிப் பாண்டுரங்க பக்தர் ஒருவர் வந்தார்.
வந்தவர்,``மன்னா! பாண்டுரங்கன் ஆலயத்திற்கு நிதி உதவி வேண்டி வந்தேன்’’ என்று விவரித்துச் சொல்லி வேண்டினார். அன்று என்னவாயிற்றோ தெரியவில்லை; ராமராயன் மறுத்துவிட்டார். கூடவே,``உங்கள் பண்டரிநாதனுக்கு நான் நிதி உதவிசெய்ய மாட்டேன்’’ என்று சொல்லவும் செய்தார். உதவிகேட்ட பக்தரோ,``என் தெய்வம் உன் தெய்வம் என்ற பேத புத்தி அரசனுக்கு இருந்தால், மக்கள் நிலை என்னவாகும்?’’ என நினைத்தார். நினைத்ததை வெளிப்படுத்தவும் செய்தார்.
``மன்னா! உங்கள் திருப்பணிகளைவிடப் பலமடங்கு சிறப்பான திருப்பணிகளுடன், எங்கள் பாண்டுரங்கன் தங்கமயமான ஆலயத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கின்றார்’’ என்றார் பக்தர். மன்னர் தொடர்ந்தார்; ``ஐயா! பண்டரிபுரத்தைப்பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறேன் நானும். ஆனால் தங்கமயமாக ஜொலிக்கின்றது எனக்கேள்விப் பட்டதில்லை. இப்போதே பண்டரிபுரம் சென்று பார்ப்பேன். அவ்வாறு இல்லையானால் உமக்குக் கடுந்தண்டனை விதிப்பேன்’’ என்றார். மந்திரிகள் சூழ்ந்துவரப் பண்டரிபுரத்தைநோக்கிப் புறப்படவும் செய்தார். அடியார் அதிர்ந்தார்.
``தெய்வமே! நான் என்ன செய்வேன்? அடியனைக்காப்பது உம் பொறுப்பு’’ என வேண்டினார்.
அன்றிரவு அடியவர் கனவில் ருக்மணிதேவியுடன் காட்சியளித்த பாண்டுரங்கன், ``கவலைப்படாதே! உன் எண்ணப்படியே நடக்கும்’’ என்று அருளி மறைந்தார். அடியார் கவலை நீங்கியது. மன்னர், பண்டரிபுரத்தை அடைந்தார். அவர் கண்களில் பண்டரிபுரம் வைகுண்டம் போலக் காட்சியளித்தது. தகதகவெனத்தங்கமயமாய் ஜொலித்தது. பார்த்த மன்னர் அயர்ந்து போனார். ``அரசவைக்கு வந்த அந்த அடியார் சொன்னது உண்மைதான்! பாண்டுரங்கா! அடியாரை அவமானப்படுத்திய அடியேனை மன்னித்துவிடு!’’ என்று மனமுருகி வேண்டினார்.
என்ன இருந்தாலும் நல்லவர்; நற்காரியங்களுக்கு மனம் கோணாமல் அள்ளிக்கொடுப்பவர் அல்லவா? தூய்மையான பக்தி யுடன் கைகளைக் கூப்பியபடி ஆலயத்திற்குள் நுழைந்தார்;
பண்டரிநாதரைத் தரிசித்தார்; கண்களில் கண்ணீர்வழிய வெகு வேகமாகப் போய், ``பண்டரிநாதா! பண்டரிநாதா!’’ எனக்கூவியபடி, பண்டரிநாதரை அப்படியே கட்டித்தழுவிக் கொண்டார். அது மட்டுமல்ல!``பண்டரிநாதா! என்னுடன் வித்தியாரண்ய நகரத்திற்கு எழுந்தருள வேண்டும்’’ என வேண்டுகோளும் விடுத்தார் மன்னர். பண்டரிநாதர் ஒப்புக் கொண்டார். அதேசமயம், ஒரு நிபந்தனையும் விடுத்தார்;
``மன்னா! ராமராயா! இப்போதே உன்னுடன் வருகிறேன். ஆனால், நீ ஏதாவது தவறுசெய்தால், இங்கேயே திரும்பி விடுவேன்’’ எனக் கூறினார்.``அப்படியே பகவானே!’’ என்று ஒப்புக்கொண்டார் மன்னர். பிறகென்ன? பண்டரிநாதரைத் தூக்கிக்கொண்டு, வித்தியாரண்ய நகரம் திரும்பிவிட்டார், மன்னர். அங்கே தனியாக ஆலயம் கட்டிப் பண்டரிநாதரை அங்கேயே பிரதிஷ்டை செய்தார். கூடவே கடுமையான கட்டுக்காவலையும் ஏற்பாடு செய்தார். அதே சமயம், பண்டரிபுரத்தில் மூலவரான பகவான் இல்லாமல், ஆலயம் வெறிச் சோடியது. நடந்ததை அறியாமல், பக்தர்கள் தவித்தனர். பானுதாசருக்கோ நடந்தது அனைத்தும் தெளிவாகத் தெரிந்தன. பகவானைப் பண்டரிபுரத்திற்கே திருப்பிக் கொண்டுவரத் தீர்மானித்தார் அவர்; உடனே வித்தியாரண்ய நகரத்திற்குப் புறப்பட்டார்.
அங்கு போனதும், நிலைமையை நன்றாகப்பார்த்துக் கொண்ட பானுதாசர், இரவுநேர அர்த்தஜாமப் பூஜை முடியும் வரை காத்திருந்தார். அர்த்தஜாமப் பூஜை நேரம் கடந்ததும் பானுதாசர், மெள்...ள ஆலயத்தை நோக்கி நடந்தார். ஆலயக்கதவுகள் தாமாகவே திறந்தன. உள்ளே நுழைந்த பானுதாசர் பகவானைத் துதித்து, ``பாண்டுரங்கா! பகவானே! அடியேனுடன் பழையபடியே பண்டரிபுரத்தில் எழுந்தருள வேண்டும்’’ என வேண்டினார். பகவான் பதில் சொன்னார்;``வருகிறேன்; வருகிறேன்... ராமராயனும் உண்மையான பக்தன். அவன் அழைத்ததால் வந்தேன்’’ என்ற பகவான், தன் கழுத்தில் இருந்த ரத்தின மாலையைக் கழற்றி, பானுதாசரின் கழுத்தில் போட்டார். மகிழ்ச்சியுடன் விடை பெற்றார் பானுதாசர்.
மறுநாள் காலை! கழுத்தில், பகவான் தந்த ரத்தினமாலையுடன் நதியில் நீராடிக் கொண்டிருந்தார் பானுதாசர். அவரைப் பார்த்த அரண்மனை காவலாளிகள், இழுத்துப்போய் அரசர் முன் நிறுத்தினார்கள்; ``அரசே! பகவானுக்குச் சாற்றியிருந்த ரத்தின மாலையை, இவன் திருடிவிட்டான்; பாருங்கள்! கழுத்தில் அணிந்திருக்கிறான்’’ எனப் புகார் செய்தார்கள். அவசரகதியில் தீர்ப்பளித்தார் அரசர்;``கழுவில் ஏற்றுங்கள் இவரை!’’ என்றார்.
``மன்னா! மரணத்தைக்கண்டு நான் அஞ்சவில்லை. இறப்பதற்கு முன், கடைசி முறையாகப் பாண்டுரங்கனைத் தரிசனம் செய்ய வேண்டும். அதற்கு அனுமதித்தால் போதும்’’ என வேண்டினார் பானுதாசர். அனுமதி கிடைத்தது. ஆலயத்திற்குப் போன பானுதாசர்,``பாண்டுரங்கா! எந்தப் பிறவி வந்தாலும் சரி! உன்னை மறவாமல் இருக்க வேண்டும் நான்’’ என மனம் உருகி வேண்டினார். கொலைக் களத்திற்குக் கூட்டிப் போனார்கள். வழக்கப்படி வேடிக்கை பார்க்க, ஊரே கூடியிருந்தது. பானுதாசர் கண்களை மூடியபடி, ``விட்டல! விட்டல! பாண்டு ரங்கா!’’ என்று பாடியபடி நின்றார். அவரைக் கழுவில் ஏற்ற முயன்றார்கள் வீரர்கள். அப்போது அனைவரும் அதிசயிக்கும் படியாக, கழுமரம் தளிர்த்தது; இலையும் பூவும் பழமுமாகமாறிக் காட்சியளித்தது.
வீரர்கள் திகைத்துப்போய், மன்னரிடம் தகவல் சொன்னார்கள். ஓடி வந்தார் அவர். வந்த மன்னர், பானுதாசரின் மகிமையை அறிந்து, அவர் திருவடிகளில் விழுந்து வணங்கி, தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். அதே வேளையில், ``மன்னா! நீ தவறு செய்யாத வரையில் உன்னிடம் இருந்தோம். தவறுசெய்யாத பானுதாசனைக் கழுவில் ஏற்றச் சொல்லித் தவறு செய்து விட்டாய் நீ! ஆகையால் யாம், உத்தம பக்தனான பானுதாசனுடன் பண்டரிபுரத்திற்கே திரும்புகிறோம்’’ என்று அசரீரி கேட்டது.
மன்னரால் மறுத்துப் பேச முடியவில்லை. ஆலயத்தில் இருந்த பாண்டுரங்க விக்கிரகத்தை, ஒரு பல்லக்கில் ஏற்றி, பண்டரிபுரம் நோக்கிப் பயணம் தொடர்ந்தது. பானுதாசரும் அடியார்களும் நாம பஜனை செய்ய, ஊர்வலமாகப் புறப்பட்டார்கள். ஊர்வலம் `பத்மாளம்’ எனும் ஊரை அடைந்தபோது, பல்லக்கு தானாகவே நின்றுவிட்டது. அதன்பிறகு தேரில் பாண்டுரங்கரை ஏற்றிப் பண்டரிபுரம் கொண்டு சென்றார்கள்.
அங்கு போனதும் முறைப்படிப் பிரதிஷ்டையும் மற்ற வைபவங்களும் வெகு சிறப்பாக நடந்தேறின. இழந்த பாண்டுரங்கரை மறுபடியும் பெற்றதில், அடியார் அனைவரும் மகிழ்ந்தார்கள். இதற்கு காரணமான பானுதாசரைக் கொண்டாடினார்கள். இந்த வைபவத்தை, `பலசுருதி’ (பலன்) என்னும் நூல் மிக அழகாக விவரிக்கிறது. இதைப் படிப்பவர்களும், கேட்பவர்களும் எல்லாவிதமான மங்கலங்களையும் அடைவார்கள் என்கிறது. தூய்மையான பக்திக்குத் தெய்வம் வசப்படும் என்பதை விளக்கும் வரலாறு இது!
V.R.சுந்தரி
