Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பகவானின் முதல் தொண்டனை வணங்குவோம்!

நாகபஞ்சமி - ஜூலை 29,2025

ஆடி மாதத்தில் கருட பஞ்சமி, நாகபஞ்சமி, நாக சதுர்த்தி வருகிறது. இந்த விசேஷங்களில் பெரிய திருவடியான கருடனையும், நாகங்களையும் நினைத்து வழிபட வேண்டும். நாக சதுர்த்தி / பஞ்சமி அன்று கிராமத்தில் புற்று மாரியம்மன் கோயில்களுக்குச் சென்று நாகங்களை வழிபடுகின்றார்கள். நாகங்களை வழிபடுவது ஆதிகாலத்திலிருந்து மக்கள் செய்து வரும் வழிபாடு. அதுவும் எளிய மக்களின் வழிபாடு. இந்தக் கட்டுரையில் நாகபஞ்சமி / சதுர்த்தியை முன்னிட்டு, நாகங்களின் தலைவனான ஆதிசேஷனைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

பகவானைப் பிரியாதவன்

பகவான் தன்னோடு பிரியாமல் வைத்துக் கொள்வது இரண்டு பேரை. ஒன்று மகாலட்சுமித் தாயாரை. ‘‘ஒரு நொடியும் பிரியாள்’’ என்பதுபோல, பகவானுடைய திருமார்பிலே எழுந்தருளி இருப்பவள் மகாலட்சுமி. அதனால்தான் பெருமாளுக்கே திருமால் என்று பெயர். திரு இல்லாதமால் இருக்க முடியாது. பகவானுக்கு திருமாமகள் செல்வன், திருவாழ்மார்பன், ஸ்ரீநிவாசன் என்றெல்லாம் திருப்பெயர்கள் உண்டு.

அதைப் போலவே பகவானைப் பிரியாமல் இருக்கக் கூடிய நித்யசூரிகள் ஒருவர் அனந்தன் என்று அழைக்கப்படும் ஆதிசேஷன்.விண்ணாடு என்று சொல்லப்படும் பரமபதத்தில் நித்திய கைங்கரியம் செய்யக்கூடிய ஆத்மாக்களை நித்யசூரிகள் என்று அழைப்பார்கள். அதன் வரிசையைச் சொல்லுகின்ற பொழுது அனந்த, கருட, விஷ்வக்சேனர் என்று சொல்வார்கள். இந்த வரிசையில் முதலாவதாக வருபவர்ஆதிசேஷன்தான்.

முதல் தொண்டன்

தலைவனை சேஷி என்றும், தொண்டனை சேஷன் என்றும் குறிப்பிடும் வழக்கம் வைணவத்தில் உண்டு. பகவானுக்கும் உயிர்களுக்கும் உள்ள தொடர்பினை சேஷ - சேஷி பாவம் என்பார்கள். ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் இந்த சேஷ - சேஷி பாவம்தான்.கருடன், பகவானுடைய புறப்பாட்டின் போது வருவார். ‘‘பறவை ஏறும் பரம் புருடா” என்று அப்பொழுது பகவானை மங்களாசானம் செய்வார்கள். இது கருடனுக்கு பெருமை.

ஆனால் மற்ற நேரத்தில் அவர் பெருமாளுக்கு எதிரிலே, பெருமாள் எப்போது அழைப்பாரோ என்று தயார் நிலையில் கைகூப்பி நிற்பார். இதைத்தான்பலசந்நதிகளில் காண்கின்றோம். பகவானுடைய கருவறைக்கு முன்னாலே கொடிக் கம்பம் இருக்கும். அந்த கொடி கம்பத்துக்கு பக்கத்திலே கருடனுக்குத் தனிச் சந்நதி இருக்கும். கருடன் கைகூப்பிய நிலையில் பகவானுடைய ஆணையை எதிர் பார்த்து காத்திருப்பார். ஆனால், பகவானுடைய கருவறைக்குள்ளேயே எப்பொழுதும்பகவானோடு பிரியாத நிலையில் இருப்பவர் ஆதிசேஷன். இதை ஆழ்வாருடைய இந்தப் பாசுரம் எடுத்துக்காட்டும்.

``சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்,

நின்றால் மரவடியாம் நீள்கடலுள், - என்றும்

புணையாம் மணிவிளக் காம் பூம்பட்டாம் புல்கும்

அணையாம், திருமாற் கரவு. (முதல் திரு.53)’’

எம்பெருமான் நந்தவனங்களிலோ மற்ற இடங்களிலோ உலா வருகின்ற பொழுது அவன் திருமேனி மீது மழையோ வெயிலோ படாதபடி ஆதிசேஷன் குடைபோல் தன் ஆயிரம் தலைகள் விரித்து நின்று கொண்டு இருப்பாராம்.சற்று அமரலாம் என்று எம்பெருமான் நினைத்தால்போதும். ஒரு சிம்மாசனமாக தன்னை அமைத்துக் கொள்வாராம். சரி, சற்று நேரம் நிற்கலாம் என்று நினைத்தால் அவனுடைய மென்மையான தாமரைத் திருப்பாதங்களில் கல் மண் குத்தி விடுமே என்று அவனுக்கு கீழே பாதுகையாகஇருப்பாராம்.

சரி, சற்றுபடுப்போம் என்று பகவான் நினைக்கும் பொழுது, “இதோ பாய் விரித்து விட்டேன், படுத்துக் கொள்ளுங்கள்” என்று திருப்பள்ளி மெத்தையாக இருப்பாராம். சரி ஏதாவது ஒன்றைப் பார்ப்போம் என்று நினைக்கின்ற பொழுது வெளிச்சம் காட்டுகின்ற விளக்காக இருப்பாராம். இடுப்பிலே சாத்திக் கொள்வதற்கு பரிவட்டம் (ஆடை) தேடுகின்ற பொழுது, என்னை கட்டிக்கொள்ளுங்கள் என்று அந்த பரிவட்டமாகவும் இருப்பாராம்.

சரி பாற்கடலில் சற்று சுற்றி வருவோம் என்று நினைத்தால், ‘‘தெப்பமாக மிதந்து கொண்டிருக்கிறேன், என் மீது ஏறிக்கொண்டு சுற்றி வாருங்கள்’’ என்று தெப்பமாக இருப்பாராம். பகவான் சுகமாக சாய்ந்து கிடக்கும் போது, தலையணையை தேட வேண்டாம், என்னையே கட்டிக்கொள்ளுங்கள் என்று தலையணை போல மிருதுவாக இருப்பாராம். (பிராட்டியோடு ஊடல் கொண்ட தற்காலிகபிரிவுகளில் இந்த நிலை.) இப்படி எல்லாக் காலத்திலும், எல்லா நிலையிலும், `‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும்” என்று பெருமாளை விட்டுப் பிரியாமல் அவருக்குத் தொண்டு செய்வதே தொழிலாகக் கொண்டவர் என்பதால்இவருக்கு ஆதிசேஷன் என்று பெயர். சேஷன் என்றால் தொண்டன். பெருமாளுக்கு ஆதிக் காலத்திலிருந்து தொண்டு செய்து வருபவன் பொருள்.

எல்லா அவதார காலங்களிலும் ஆதிசேஷன் தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே ஆதிசேஷன் மீது எம்பெருமான் சயனித்திருக்கிறான் என்பது எம்பெருமானின் பரத்துவ சூசகம் என்பர் வைணவ ஆச்சாரியர்கள். நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் என்று நம்மாழ்வார் திருவனந்தாழ்வாராகிய ஆதிசேஷனை புருஷகாரமாகக் கொண்டு எம்பெருமானைப் பற்றுகிறார். ஆதிசேஷன் பிரஜாபதிகள் ஒருவராக மதிக்கப்படுகிறார். திருப்பாற் கடல் கடையப்பட்ட பொழுது மந்திர மலையைத் தூக்கி வந்து நிறுத்தியவர் ஆதிசேஷன். அஷ்ட நகங்களுக்குள் உயர்ந்த இடத்தில் இருப்பவர் ஆதிசேஷன். உலகத்தை தலையால் தாங்குபவர். திருமலையில் ஏழு மலைகளில் ஒரு மலைக்கு சேஷகிரி என்று பெயர். பகவானின் எல்லா அவதார காலங்களிலும் ஆதிசேஷனுக்குப் பங்குண்டு.

பகவானின் இரண்டு பூர்ண அவதாரங்கள் ராம அவதாரமும் கிருஷ்ண அவதாரமும். இந்த இரண்டிலும் ஆதிசேஷன் பகவானோடு அவதரித்தான். ராம அவதாரத்தில், ராமனின் நிழலாக சதாசர்வ காலமும் அவனுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதற்காகவே காட்டிலும் மேட்டிலும் நடந்தான் கண் துயிலாது இருந்தான். கம்பர், இமைப்பிலா நயனன் என்பார். இதைக்கண்டு ராமனே நெகிழ்ந்தான். இப்படி ஒரு தம்பியா என்று வியந்தான். அதற்காகவே அந்த ஆதிசேஷனை அடுத்த அவதாரத்தில் அண்ணனாகப் பிறக்க வைத்து, தான் தம்பியாக அவதரித்து அண்ணனுக்குத் தொண்டு செய்தான். அதுதான் கிருஷ்ணாவதாரம். அதிலே பலராமனாகப் பிறந்தவர் ஆதிசேஷன்.

கண்ணன் பெரிய தீம்பன் என்பது ஸ்ரீமத் பாகவதம் படித்தவர்களுக்குத் தெரியும். எங்கே போனாலும் ஒரு வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டுதான் வருவான். எல்லா இடத்திலும் கம்சனால் அனுப்பப்பட்ட சகடாசுரன் பகாசுரன் முதலிய அசுரப் பிரகிருதிகள் இருந்தார்கள். இவர்களிடமிருந்து எப்படிக் கண்ணனைக் காப்பாற்றுவது என்று தாய்யசோதை தவிப்பாளாம். அண்ணனாகிய பலராமன் எப்பொழுதும் கண்ணனோடு இருந்துஅவனைக் காப்பாற்றுவாராம். ஆதிசேஷ அவதாரம் அல்லவா பலராமன்.

பகவான் தன்னைக் காத்துக் கொள்ள மாட்டாரா? ஒரு தொண்டன்தான் காப்பாற்ற வேண்டுமா என்ற கேள்வி இங்கே எழல் ஆகாது. இது பரிவின் அடிப்படையில் வருவது. தட்டு மாறிய நிலை என்பார்கள். தூய்மையான தொண்டிற்கும் பக்திக்கும் இந்தப் பரிவு மிகவும் அவசியம். இந்த ஆதிசேஷன் அவதாரங்கள் இதோடு நிறைவு பெறவில்லை. ஆச்சாரியர்கள் வம்சத்திலுமே தொடர்ந்தது. பகவத் ராமானுஜர் ஆதிசேஷன் அம்சமாகவே அவதாரம் செய்தார். அவருடைய புனர் அவதாரமான சுவாமி மணவாள மாமுனிகள் ஆதிசேஷ அம்சமாகவே அவதாரம் செய்தார். அதனால் பல திருக்கோயில்களில் ஆதிசேஷன் குடைபிடிக்க சுவாமி மணவாள மாமணிகள் திருவுருவ தரிசனம் காணலாம். பாஞ்சராத்ர ஆகமத்தின் படி ஆதிசேஷன் எனும் அனந்தன் மகாவிஷ்ணுவின் நான்கு வியூகங்களில் ஒருவர். அப்பொழுது அவருடைய திருநாமம் சங்கர்ஷணன்.

கருடனும் அனந்தனும்

கச்யப முனிவருக்கு வினதை, கத்ரு என இரண்டு மனைவியர் இருந்தனர். அவர்கள் இருவருக்கும் உச்சிச்ரைவஸ் எனும் இந்திரனுடைய குதிரையின் வாயில் உள்ள முடிகள் எந்த நிறத்தில் இருக்கும் என்று ஒரு சர்ச்சை எழுந்தது. கத்ரு கருப்பு நிறத்தில் இருக்கும் என்று சொன்னாள். அவள் சொன்னதை வினதை மறுத்தாள். இருவரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். யார் சொன்னது தவறு என்று நிரூபிக்கப்படுகிறதோ அவர்கள் மற்றவருக்கு அடிமை என்று பந்தயம் கட்டிக்கொண்டார்கள்.

கத்ரு, தான் சொன்னதை நிரூபிப்பதற்காக தன்னுடைய பிள்ளைகளான100 பாம்புகளை இந்திரன் குதிரையின் வாலில் மூடியவாறு தொங்குமாறு சொன்னாள். சில பிள்ளைகள் செய்தன ஆனால் அனந்தன் முதலான சில பாம்புகள் இந்த செய்கைக்கு உடன்படவில்லை. ஆத்திரமடைந்த கத்ரு, தன் பேச்சை மதிக்காத பிள்ளைகள் `ஜனமே ஜயன்’ நடத்தும் சர்ப்ப யாகத்தில் விழுந்து சாகட்டும் என்று சபித்தாள்.

அந்த சமயத்தில் அனந்தன், பல்வேறு புனித திருத்தலங்களுக்குச் சென்றார். பிரம்மா அவர் முன்தோன்றி பாதாள உலகம் சென்று உலகத்தைத் தலையால் தாங்குமாறு கட்டளையிட்டார் அப்போது கருடன் அவருக்குத் தேவையான உதவிகள் யாவையும் செய்வார் என்றும் கூறினார். அதனால்தான் கருடனின் உடலை அலங்கரிக்கும் எட்டு நாகங்களில் ஒன்றாகஅனந்தன் விளங்குகிறார்.பகவானின் வாகனம் கருடன்.

படுக்கை அனந்தன் என்னும் ஆதிசேஷன். இந்த இருவரும் கச்யப முனிவரின் பிள்ளைகள். ஒருவருக்கு ஒருவர் சகோதர உறவு கொண்டவர்கள். அதனால்தான் கருட பஞ்சமியும், நாகபஞ்சமியும் இணைந்து கொண்டாடப்படுகிறது.பிரம்மோற்சவத்தில் பல்வேறு வாகனங்களில் பகவான் பவனி வருவார். கஜ வாகனம், அஸ்வ வாகனம், கருட வாகனம், என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் ஆரோகணம் செய்து திருவீதி உலா கண்டருள்வார். ஆனால் திருமலை பிரம்மோற்சவத்தில் மட்டும் பகவான் இருமுறை சேஷ வாகனத்தில் ஆரோகணித்து வீதி வலம் வருவார். இதனை சின்ன சேஷ வாகனம், பெத்த சேஷ வாகனம் என்று சொல்வார்கள். இந்தப் பெருமை ஆதிசேஷனுக்கு மட்டுமே உண்டு.

உபநிடதத்தில் ஆதிசேஷன்

பிரளய காலத்தின் போது ஆலின்

இலையின் மீது பகவான் சயனித்து இருப்பான். ஆலின் இலையாய் அருளேல் என்பது ஆண்டாள் பாசுரம். அந்த ஆல் இலை ஆதிசேஷன்தான். எல்லாவற்றையும் தாங்கும் எம்பெருமானைத் தாங்குபவர் ஆதிசேஷன் என்று எம்பெருமானே அவருக்கு ஒருபெருமையைத் தந்து இருக்கின்றார்.கௌஷீதகி என்னும் உபநிடதத்தில் ‘‘பர்யங்க வித்தை’’ என ஒரு பிரம்மவித்தை விவரிக்கப்படுகிறது. அதில் முக்தி அடையும் ஜீவாத்மா பரமபதம் செல்கின்றான். அங்கே ஒரு பிரம்மம் படுக்கையில் படுத்து இருக்கிறது. அந்தப் பிரம்மத்தின் திருவடியைப் பற்றிக் கொண்டு படுக்கையில் ஏறும் விபரம் வர்ணிக்கப்படுகிறது அந்த உபநிடத வாக்கியம் ‘‘ஆமி தௌ ஜா பர்யங்க;’’ என்பது சகல உலகங்களையும் தாங்குகின்ற பிரம்மத்தைத் தாங்குகின்ற பலத்தை உடையவர் ஆதிசேஷன் என்று அவனுடைய மிடுக்கையும் பலத்தையும் இந்த உபநிடதம் விளக்குகிறது என்பதைக் கண்டு தெளியலாம்.

ஆதிசேஷனுடைய பலத்துக்கு நிகரான பலம் வேறு எந்த தேவர்களுக்கும் கந்தர்வர்களுக்கும் இல்லை. குணங்களின் எல்லை கடந்தவர் என்பதால் அனந்தன் என்கின்ற திருநாமம் இயல்பாக அமைந்தது.திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதியில் பாசுரத்தில் ஆதிசேஷனுடைய வைபவத்தை தெரிவிக்கின்றார். ``எம்பெருமானுக்கு அருகில் இருக்கும் ஆதிசேஷன், எப்பொழுது, எம்பெருமானுக்கு, யாரால் துன்பம் நேர்ந்து விடுமோ என்று யாரையும் நெருங்க விடாமல் விஷக் காற்றை வாரி இறைப்பாராம்.

‘‘ஆங்கு ஆரவாரம் அதுகேட்டு

அழல் உமிழும் பூங்காரவணையான்’’

- என்பது ஆழ்வார் பாசுரம்.

எம்பெருமான் மீது அளவற்ற பரிவு கொண்டு மங்களாசாசனம் செய்யும் அடியார்களில் முதலானவர் ஆதிசேஷன் என்று இதற்குப் பொருள். இன்னும் ஆதிசேஷனைப் பற்றிச் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. இப்போதைக்கு இந்த அளவில் நிறுத்திக் கொள்வோம். நாகபஞ்சமி அன்று ஆதிசேஷனைப் பற்றி பகவானைப் பற்றுவோம். அதுதான் முறை.

‘‘ஓம் சஹஸ்ர சீர்ஷாய வித்மஹே, விஷ்ணு வல்லபாய தீமஹி,

தன்னோ சேஷ ப்ரசோதயாத்’’என்று சொல்லுங்கள்.

இந்த மந்திரம், பயத்தைப் போக்கவும், ஆதிசேஷனின் அருளைப் பெறவும்பயன்படும்.

முனைவர் ஸ்ரீராம்