ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 99 (பகவத்கீதை உரை) அர்ஜுனனுடைய மனசைப் படிக்கிறார் கிருஷ்ணன். அவன் இரட்டை மனசுக்காரன். தராசு முள்ளாக நிலை நிற்க முடியாதவன். இந்த யுத்தத்தின் விளைவைத் தன் மனப்போக்கில் ஊகிக்கிறான். மனமோ அவனை அலைக்கழிக்கிறது. ஜெயித்தால், வெற்றிச் சாதனையையும் மீறி, ‘சொந்த பந்தங்களையே கொன்று குவித்து அடைந்த சாதனைதானே இது!’...
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 99 (பகவத்கீதை உரை)
அர்ஜுனனுடைய மனசைப் படிக்கிறார் கிருஷ்ணன். அவன் இரட்டை மனசுக்காரன். தராசு முள்ளாக நிலை நிற்க முடியாதவன். இந்த யுத்தத்தின் விளைவைத் தன் மனப்போக்கில் ஊகிக்கிறான். மனமோ அவனை அலைக்கழிக்கிறது. ஜெயித்தால், வெற்றிச் சாதனையையும் மீறி, ‘சொந்த பந்தங்களையே கொன்று குவித்து அடைந்த சாதனைதானே இது!’ என்று பிறர் விமரிசிக்கக் கூடுமோ? தோற்றால் ‘இவனைப் போய் மாவீரன் என்று நினைத்திருந்தோமே, இப்படி தோல்வி கண்டிருக்கிறானே!’ என்ற விமரிசனத்துக்கு ஆளாகக் கூடுமோ? சரி, இரண்டு கருத்துகளுமே தோன்றாமல் பார்த்துக் கொள்வது எப்படி? போரிலிருந்து விலகி விடுவதுதான்! கொஞ்ச காலத்துக்கு கேலி பேசுவார்கள்; ‘சகோதரர்கள், குருமார்கள், உற்றார், உறவினர் என்று பச்சாதாபம் பார்த்து போரை விட்டுக் கொடுத்துவிட்டான்,’ என்று அவர்கள் கூடவே சமாதானமும் சொல்லக் கூடும்.
ஆனால், போரில் தோற்ற பிறகு, தன்னால் சுதந்திரமாக நடமாட முடியுமா? வென்றவர்களுக்கு அடிமையாக அல்லவா வாழ வேண்டியிருக்கும்? ஊர் வாய் அடங்கிய பிறகும், தனிப்பட்ட முறையில், எல்லாத் தேவைகளுக்கும் அதுவரை விரோதிகளாக இருந்தவர்களிடம் கையேந்த வேண்டிய அவலம்…. மனசே, மனசே… ஒன்றே நினை, உறுதியாக நினை. குழப்பாதே, அலைக்கழிக்காதே, கையறு நிலையை உண்டாக்காதே… இதை நன்கு புரிந்து கொண்டுதான் கிருஷ்ணன் அவனுக்கு உபதேசம் செய்கிறார்.
‘நீ சமத்துவப் புத்தியை நிலைநாட்டு. அக்கணமே நீ யோக நிலையை அடைவாய். சிந்தனை வயப்படாத இந்தத் தன்மையால் உன்னிடமிருந்து மனசு அகன்றுவிடும். அப்போது நீ அர்ஜுனனாக இருக்க மாட்டாய், ஆன்ம சொரூபியாகிவிடுவாய்,’அதாவது விருப்பு - வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட, (மோகம் - விரக்தியில் உணர்வற்ற நிலை) - பயத்தால் பாதிக்கப்படாத ஆன்மாவாகவே மாறிவிடு என்று உபதேசிக்கிறார் கிருஷ்ணன்.
பச்சைப் பசுமையான அடர்ந்த மரத்தின், உச்சிக்கிளையில் அமர்ந்திருந்த பச்சைக் கிளியின் கண்ணைப் பார்த்து அம்பு எய்து அதை வீழ்த்தியபோது எத்தகைய உணர்வோடு செயல்பட்டானோ, அதே உணர்வை அர்ஜுனன் இப்போதும் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் கிருஷ்ணன். ஆமாம். இலக்கை நோக்கிய பார்வையில் தடுமாற்றம் இல்லை, அக்கம் பக்கத்து ஈர்ப்பு இல்லை. என்ன பலன் என்ற எதிர்பார்ப்பு இல்லை. ‘குரு ஆணையிடுகிறார், செயல்படுகிறேன்’ என்ற யோக மனோநிலை மட்டுமே இருந்தது.
இலக்கை நோக்கிச் செயல்புரிவது என்ற தீர்மானமான கொள்கையைக் கொண்டிருந்த அர்ஜுனன் இப்போது பாதை மாறுவது ஏன்? அது என் குருநாதரால் உருவாக்கப்பட்ட பொம்மைக் கிளி.
என் குறி எந்த அளவுக்கு தீர்க்கமாக இருக்கிறது என்பதைச் சோதிக்க வைக்கப்பட்ட போட்டி அது. ஆனால் இப்போது உடலும், உயிருமாக என் எதிரே வரிசை கட்டி நிற்கும் சொந்த பந்தங்கள் அப்படியா? என்று அவன் பதில் சொல்லக் கூடும்.
ஆனால் இவ்வாறு அவன் சொல்லும் பதில், அவன் தன் கொள்கையிலிருந்து பிறழ் பவன் என்பதாக அல்லவா அமைகிறது? போர்தான். யாராயினும் எதிரிதான் என்ற யுத்த தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய அவன், இந்தத் தருணத்தில் தன் சுய பலத்தைவிட கூடுதல் ஆதரவை எதிர்பார்க்கிறானோ? அந்த ஆதரவு கிருஷ்ணனாகவே இருக்கும்போது இவனுக்கு என்ன கவலை? ஒருவேளை கிருஷ்ணனின் பராக்கிரமத் திலேயே சந்தேகம் வந்துவிட்டதோ?
ஒருவன் கடற்கரை ஓரமாக நடந்து சென்றுகொண்டிருந்தான். தற்செயலாகக் கீழே குனிந்து பார்த்தபோது நடந்து கொண்டிருக்கும் தன் இரு பாதங்களைத் தவிர மேலும் இரு பாதங் களின் சுவடுகள் மணற்பரப்பில் பதிவதைக் கண்டான். இது என்ன விபரீதம்? தனக்கு நான்கு கால்களா இருக்கின்றன? அப்போது ஓர் அமானுஷ்ய குரல் ஒலித்தது: ‘அன்பனே, அது என் பாதச் சுவடுகள்தான். நான் உன்னுடனேயே வந்துகொண்டிருக்கிறேன், உனக்கு பக்க பலமாக இருந்து கொண்டிருக்கிறேன்.’ அதைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்தான் அவன். கடவுள் அவனுடனேயே இருக்கிறார், இனி என்ன கவலை? பிறகு, வெகு தூரம் நடந்து களைத்த அவன், மீண்டும் குனிந்து பார்த்தான், திடுக்கிட்டான். அங்கே இரண்டு பாதச்சுவடுகள்தான் தெரிந்தன. பொசுக்கென்று நம்பிக்கை இழந்து விட்டான்.
‘என்னைக் கடவுள் ஏமாற்றிவிட்டார். என்னுடனேயே வருவதாகச் சொன்ன அவர் இப்போது என்னைத் தனியே விட்டு விட்டு எங்கோ போய்விட்டார்,’ என்றெல்லாம் புலம்பினான். அப்போது மீண்டும் ஓர் அமானுஷ்யக் குரல்: ‘அன்பனே, கவலைப்படாதே; இப் போதும் நான் உன்னுடன்தான் இருக்கிறேன். கீழே நீ பார்க்கிறாயே, இரு சுவடுகள், அவை என்னுடையவை. ஆமாம், நான் இப்போது உன்னைச் சுமந்து சென்று கொண்டிருக்கிறேன்.’ பக்தன் பேரானந்தம் அடைந்தான்.
சுகம் அனுபவிக்கும் காலங்களில் இறைவன் உடனிருக்கிறான் என்றும், சோகம் சூழ்ந்த சமயங்களில் அவர் கை விட்டுவிட்டார் என்றும் கருதும் அற்பனாகி விட்டோமே என்று அவன் தன்னை நொந்து கொண்டான். அர்ஜுனனுக்கு இப்போது கிருஷ்ணனின் தாங்குதல் தேவை.
இத்தனை நாள் அவருடைய மகிமை களால், தெய்வீகச் செயல்களால், மகிழ்ந்திருந்த அவன், இப்போது தனக்குப் பெரும் பொறுப்பு சுமத்தப்பட்டிருக்கிறது என்பதை நினைக்கும்போது, கண்ணெதிரே, கூடவே நிற்கும் கிருஷ்ணர் மீது அவநம்பிக்கை ஏற்பட்டு விடுகிறது! அதாவது தன் லட்சியம் நிறைவேற வேண்டுமானால் கிருஷ்ணன் போன்றவரின் ஆதரவும், ஒத்துழைப்பும் தனக்குத் தேவைப்படுகிறது. ஆனால் அதையும் மீறிய மனக் குழப்பம், அந்த தெய்வ உதவியையே சந்தேகிக்க வைக்கிறது!
யதா ஹி நேந்த்ரியார்த்தேஷு ந கர்மஸ்வனுஷஜ்ஜதே
ஸர்வஸங்கல்பஸந்யாஸீ யோகாரூடஸ்ததோச்யதே (6.4)
‘‘புலன்கள் தரும் போகத்தினால் மோக
மடையாமல் ஒருவன் இருக்கிறான் என்றால், அதேபோல தன் கர்மங்களாலும் அவன் மோகமடையாதிருக்கிறான் என்றால், அவனே யோகாரூடன் என்று அழைக்கப்படுகிறான்.’’ ஆனால், ஒருவன் கர்மங்களில் ஈடுபட வேண்டும் என்றால், அவன் இந்திரியங்களில் மோகம் கொண்டவனாகத்தானே இருக்க வேண்டும்? அதாவது, இன்பம் துய்க்கப்பட அதை அளிக்கும் பொருளை வாங்க வேண்டியிருக்கிறது. பொருளை வாங்க பணம் தேவைப்படுகிறது.
பணம் சம்பாதிக்க கர்மத்தில் ஈடுபட வேண்டியிருக்கிறது! இதுதானே யதார்த்தம்? இப்படியிருக்க இந்திரியங்களிலும், கர்மங் களிலும் மோகம் கொள்ளாமல் இருப்பது என்பது சாத்தியமா? புலன்களைத் திருப்திபடுத்த வேண்டும் என்பது வாழ்க்கையின் நியதியாகிவிட்டதே! செல்வத்தினால்தான் சுகத்தை வாங்க முடியும் என்பது இப்போதைய வாழ்க்கை இலக்கணமாகி விட்டதே!‘‘நன்றாகப் படி, அப்போதுதான் மிக உயர்வான பணியில் அமர்ந்து கைநிறைய சம்பாதிக்கலாம்,’’ என்றுதானே நாம் குழந்தைகளுக்குப் போதிக்கிறோம்? நம் நாட்டில் கிடைக்காத சுகம், வெளிநாட்டில் கிடைக்கிறது, அங்கே போய் வேலை பார்த்தால் நினைத்ததையெல்லாம் வாங்கிவிட முடியும். அதனால் உள்நாட்டைவிட வெளிநாட்டு வேலை கிடைக்குமா பார் என்றும் குழந்தைகளை ஊக்கப்படுத்துகிறோம்.
அதே வெளிநாட்டின் பூர்வாசிரம மக்கள், ஒரு கட்டத்தில் இனி வாழ்க்கையில் அடைய வேண்டிய சுகம் என்னதான் இருக்கிறது என்ற விரக்தி தோன்றிவிட, இந்திரிய சுகத்தையும்விட மேலான ஒன்று இருக்கிறது என்று எதிர்பார்த்து, அதைத் தேடி நம் நாட்டிற்கு வந்துகொண்டிருக்கிறார்கள்! ஏனென்றால், ஒரு கட்டத்தில் திகட்டல் வந்துவிடுகிறது அவர்களுக்கு. அதற்கும் மேலாகச் சுகத்தைத் தேடுவதை விட்டுவிட்டு, ஒன்றுமே வேண்டாத, புலன்கள் தோற்றுப்போகிற ஒரு நிலையை எட்ட முடியுமா என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
புலன்கள் அதனதன் வழிப்படியே மனசை மகிழ்விக்க முயற்சிக்கின்றன. நாம் ஈட்டும் செல்வம் அதை நிறைவேற்றுவதாக நம்பிக்கை அளிக்கிறது. இதற்காகவே நாம் கர்மாவில் ஈடுபடுகிறோம். நாம் வாழ்வதன் அர்த்தமே புலன்களில்தானே இருக்கிறது! ஆனால், உங்களிடமிருந்து நீங்கள் விலகுங்கள், உங்கள் உணர்வுகளிடமிருந்து நீங்குங்கள், நீங்கள் யோகாரூடனாவீர்கள் என்கிறார் கிருஷ்ணன். அதாவது ஆன்ம சுத்தத்தில் வாழ்வீர்கள்; ஏன் பரமாத்மாவாகவே ஆகிவிடுவீர்கள் என்கிறார்.
‘‘ஆசைகளாகிய பெருங்காற்றினால் சித்தமாகிய ஆகாசம் அலைக்கழிக்கப்படும் வரையில் ஈஸ்வரனாகிய ஒளியை அங்கு காண இயலாது. ஈஸ்வரனுடன் ஐக்கியமாகி, சாந்தமாக இருக்கும் மனதில்தான் அந்த திவ்ய தரிசனம் தோன்றும்,’’ என்கிறார், மகான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர். ‘சங்கல்பத்திலிருந்தே ஆசையும், செயலும் வடிவெடுக்கின்றன,’ என்கிறது மனு சாஸ்திரம். இதையே, ‘ஆசையே, நீ எங்கிருந்து பிறந்து வருகிறாய் என்பதை நான் அறிவேன். ஆமாம், நீ சங்கல்பத்திலிருந்துதான் உதிக்கிறாய். நான் சங்கல்பமே கொள்ளாமல் விட்டுவிட்டால், நீ முற்றிலுமாக அழிந்து விடுவாய்,’ என்று விவரிக்கிறது சாந்தி பர்வம்.
இச்சை கொள்வதையும், அதிலிருந்து விலகுவதையும், மனிதனைவிட மிருகம் நன்கு அறிந்திருக்கிறது. விலங்கியல் பூங்காவில் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு சிங்கத்துக்கு வேளா வேளைக்கு உணவு கொடுத்துவிட்டால், அதுவும் அந்தந்த சமயத்துக்குப் பசியாறிவிட்டால், அதற்குப் பிறகு அதன் முன்னே மாமிசத் துண்டைத் தூக்கிப் போட்டாலும், அது முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விடும்.
பசி தீர்ந்த பிறகு அதற்கு எந்த உணவும் தேவைப்படாது. இது காட்டிலேயே, அதன் பாரம்பரிய உணர்வாகவே தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. என்ன, காட்டில் சுதந்திரமாக உலா வருகிறது, இங்கே கூண்டுக்குள் அடைபட்டுக் கிடக்கிறது, அவ்வளவுதான். ஆனால், காட்டில் கட்டுப்பாடு இன்றி, உலா வந்தாலும், தன் பசி தீர்ந்த பிறகு, தன்னெதிரே வரும் ஆட்டையோ, மாட்டையோ, தன்னைவிட வலு குறைந்த எந்த மிருகத்தையோ அது சீந்துவதே இல்லை. ஆனால் மனிதன், வயிறு நிரம்ப உண்ட பிறகும், கொரிப்பதற்கு என்று ஏதேனும் கிடைத்தால் அதையும் விடுவதில்லை!
‘இன்னும் கொஞ்சம் சாப்பிடலாமா? என்று தோன்றும்போதே, சாப்பிடுவதை நிறுத்திவிடு’ என்கிறது ஜப்பானிய பழமொழி ஒன்று. இச்சையில் கட்டுப்பாடு கொள்ளப் பழகிக் கொண்டால், ஒரு கட்டத்தில் இச்சையே இல்லாத வாழ்வை மேற்கொள்ள இயலும் என்று இதற்கு அர்த்தம். இந்தக் கட்டுப்பாடு, நம் அகந்தையை வேரறுக்க வல்லது.
‘நம்மை, நம் உடம்பை நாமேதான் காப்பாற்றிக் கொண்டு வருகிறோம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஆழ்ந்த உறக்கத்தில், அக்கம் பக்கத்தில் என்ன நேருகிறது என்று தெரிந்துகொள்ள முடியாத தூக்கத்தில், நம்மை நாமேவா காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம்? இல்லவே இல்லை. அந்த தெய்வம்தான் காப்பாற்றுகிறது. நாம் தொடர்ந்து ஜீவிக்க வேண்டியதன் அவசியத்தை இறையருள்தான் நிச்சயிக்கிறது,’ என்கிறார் புட்டபர்த்தி சத்ய சாயி பாபா. அவசியத் தேவைகள் என்பது நம் இச்சையின்பால் பட்டது. ஒருவருக்கு எத்தனை சட்டை வேண்டும், வேட்டி வேண்டும்? எதற்காக பத்துக் கணக்கான உடைகளை வாங்கி, பீரோவில் அடுக்கி வைத்துக்கொண்டிருக்கிறோம்? புதிய உடை வாங்கும்போது, நல்ல நிலையிலுள்ள பழைய உடையைத் தேவைப்படுவோருக்கு வழங்க நமக்கு ஏன் மனம் ஒப்புவதில்லை? இச்சைதான்.
சேகரிப்பு என்ற இச்சை. பால்ய வயதில் தீப்பெட்டிப் படங்கள், கோலிக்குண்டுகள் என்று சேகரத்தில் காட்டிய ஆர்வமே, வயதாக ஆக ஆடை, ஆபரணம், பணம் என்று தேவைக்கும் அதிகமாகச் சேர்க்க வைக்கிறது! புதியதை வாங்கும்போது பழையதைக் கழிப்பதால், தேசிய அளவில் ஆரோக்கியமான பொருளாதார சுழற்சிக்கும் நாம் உதவுகிறோம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
(கீதை இசைக்கும்)