Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பத்ர யோகம் என்ற மஹாமாயா யோகம்

* ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன்

பத்ர என்பதற்கு காப்பவன் என்றும், மாயை என்றும் பொருளுடையதாக உள்ளது. இந்த இரு பொருளுக்கும் பொருத்தமான தேவதையான விஷ்ணுவை குறிப்பதாகும். அப்படிப்பட்ட விஷ்ணு, நவக்கிரகங்களில் புதனுக்கு தனது ஆற்றலை கொடுக்கிறார். புதன் சுப தன்மையுடைய அலி கிரகம். இந்த கிரகம் இரட்டை தன்மையுடைய கிரகமாகும். தூது செல்வதற்கும் தரகு செய்வதற்கும் இந்த கிரகமே அடிப்படையாக உள்ளது. இவை கேந்திரங்களில் தங்கும் போது, வலிமையாக செயல்படுகிறது. அப்படிப்பட்ட பஞ்சமஹா புருஷயோகங்களில் ஒரு தலையாய யோகம் ``பத்ரயோகம்’’ என்பதாகும்.

பத்ர யோகம் என்பது என்ன?

லக்னத்திற்கு அல்லது ராசிக்கு கேந்திரங்கள் என்று சொல்லக்கூடிய லக்னம் (1ம்), சுகஸ்தானம் (4ம்), சப்தம ஸ்தானம் (7ம்), கர்மஸ்தானம் (10-ம்) பாவங்களில் புதன் அமர்வதும் அல்லது ஆட்சி உச்சம் பெறுவதும் பத்ரயோகம் என்றாகிறது. சில தருணங்களில் கேந்திரங்களில் பரிவர்த்தனை பெற்றும் இந்த பத்ரயோகம் செயல்பட்டு நற்பலன்களை வாரி வழங்குகிறது. சுப கிரகங்களான வளர்பிறை சந்திரன் மற்றும் வியாழன் பார்வை செய்தால் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

பத்ர யோகத்தின் பொதுவான பலன்கள்

* இந்த கிரகம் கொடுக்கக்கூடிய மிகவும் நுண்ணிய அறிவாற்றல் நிறைந்த பலனையும் பலருக்கு ஆலோசனை சொல்லும் அமைப்பாகவும் உள்ளது.

* இந்த யோகம் உள்ள சிலர் பிரபல ஆடிட்டராகவும், அக்கவுன்டிங் துறையிலும் சிறப்பாக பணிபுரிபவராக உள்ளனர்.

* கேந்திரங்களில் புதன் அமர்ந்து வாக்கு வன்மையுடையவராக இருந்தால் ஜோதிடத்துறையில் சிறந்த ஜாம்பவானாக வலம் வருபவராக உள்ளார். நுட்பமான யாரும் தீர்க்க முடியாத அல்லது அறிய முடியாத பிரச்னைகளை இனம் சொல்லும் ஜோதிடராகவும் தனக்கென தனி முத்திரையை கொண்டவராகவும் உள்ள அமைப்பை இந்த யோகம் செய்யும்.

* பத்ர யோகத்தால் தலைசிறந்த வக்கீல்களாகவும், வழக்குகளில் வாதம் செய்யும் திறமையுடையவர்களாகவும், எந்த சிக்கலான வழக்குகளையும் தன் அறிவுத்திறமையால் வெற்றிக்கொள்ளும் நபராக இருப்பார்.

* இந்த யோகம் நட்பு வட்டத்தை மிகவும் பெரிதாகவும் படித்தவர்களாகவும் பெரிய தொழில் அதிபர்களாகவும் இருக்க வைக்கும் அமைப்பை உடையதாக இருக்கும்.

* மஹாமாயா யோகம் தரகு வேலையின் மூலம் அதிக லாபங்களை தரக்கூடிய சூட்சுமத்தை இவர்களுக்கு வாரி வழங்கும். ஷேர் மார்க்கெட்டில் தரகராக இருந்து பெரிய பெரிய வெற்றிகளை குவிக்கும் அமைப்பை கொடுக்கும்.

* இவர்களுக்கு நகைச்சுவை கைவந்த கலையாகவும் இருக்கும். அச்சுத் துறை, ஊடகத் துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறையிலும் பணி செய்யும் வாய்ப்புகள் அதிகம்.

* கணிதத்தில் கைதேர்ந்தவர்களாக உள்ள அமைப்பு இந்த பத்ர யோகத்திற்கு உண்டு.

* எழுத்துத் துறையில் தனக்கென முத்திரைகளை பதிப்பவர்களும் இந்த பத்ரயோகம் உள்ளவர்களே.

பத்ர யோகம் குறைபடும் அமைப்புகள்

* புதன் சூரியனோடு நெருங்கிய பாகையில் அமரும் போது அஸ்தங்கம் பெறுவது கொஞ்சம் பலன்களை சுருக்கும்.

* புதன் அசுப கிரகங்களான சனி, செவ்வாய் இவர்களோடு சேராமலும் இவர்களின் அசுப பார்வை இல்லாமலும் இருப்பது சிறப்பை தரும்.

* அசுப கிரகங்களுக்கு நடுவில் இருப்பதும் சில தருணங்களில் புதனின் வலிமையை குறைக்கும்.

* புதன் வளர்பிறை சந்திரனுடன் இணைந்திருப்பது இன்னும் சிறப்பைத்தரும். தேய்பிறைச் சந்திரன் சற்றே வலிமையை குறைக்கும்.

* புதன் சாயா கிரகங்களான ராகு அல்லது கேதுவுடன் இணைந்திருப்பதும் அந்த கிரகங்களின் பார்வையில் இருப்பதும் பத்ர யோகத்தின் வலிமையை குறைக்கும்.

லக்னம் மற்றும் ராசியை அடிப்படையாக கொண்ட பலன்கள்

மற்ற யோகங்களை போல் இரண்டு மூன்று பாவங்கள் இல்லை. காரணம், புதன் தன்னுடைய சொந்த வீட்டில்தான் ஆட்சியும் பெறுகிறார் உச்சமும் அடைகிறார்.

* மிதுன லக்னத்திற்கு, லக்னத்திலும் (1ம்), நான்காம் (4ம்) பாவத்திலும் ஆட்சி உச்சம் பெறுபவர்கள் சிறந்த கல்வியாளராகவும் மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் நபராகவும் இருப்பர். சிறந்த எழுத்தாளராகவும் திறமைசாலியாகவும் இருப்பார்.

* கன்னி லக்னத்திற்கு, லக்னத்திலும் (1ம்), பத்தாம் (10ம்) அதிபதியாகவும் இருக்கும் பட்சத்தில், இந்த பத்ரயோகம் சிறந்த தொழில் விற்பன்னராகவும், சிறந்த வழக்கறிஞராகவும் இருப்பது சிறப்பை தரும். வளர்பிறை சந்திரனுடன் இணைந்திருப்பது இன்னும் சிறப்பே.

* கன்னி லக்னத்திற்கு, ஏழாம் பாவத்தில் (7ம்) சுக்ரனுடன் இணைந்துதான் நீச பங்கத்தை செய்யும் அமைப்பாக உள்ளது.

* தனுசு லக்னத்திற்கு, ஏழாம் வீடான (7ம்) மிதுனத்தில் அமர்வது தொழில், வியாபாரத்துறையிலும் சிறப்பான அமைப்பை தருகிறது. சமூகத்தில் பெரிய அந்தஸ்தை வாரி வழங்கும் அமைப்பாக உள்ளது.

* தனுசு லக்னத்திற்கு. பத்தாம் இடத்தில் (10ம்) கன்னி ராசியில் உச்ச பலம் பெறுகிறது புதன். தொழில், வியாபாரம் போன்றவற்றில் நினைத்து பார்க்க முடியாத வளர்ச்சியை தருகிறது.

* மீன லக்னத்திற்கு நான்காம் பாவத்திலும் (4ம்), கேந்திரம் என சொல்லக்கூடிய (7ம்) ஆட்சிப் பெற்றால் நன்கு திறமையுடையவராகவும் எழுத்தாளராகவும் இருப்பார். மேலும் நல்ல உயர்நிலை கல்வியை பெற்றிருப்பவராகவும் இருப்பார்.

ஜோதிடத்தில் சிறப்பு பெற

ஜோதிடத்தின் தந்தை எனப்படும் பராசர முனிவர், பூர நட்சத்திரத்தில் அவதரித்தார். ஜோதிடம் கற்க விருப்பம் உடையவர்கள் இந்த நட்சத்திரத்தில் ஜோதிடம் பயில தொடங்கினால், ஜோதிடம் எளிதில் சித்திக்கும். இந்த நட்சத்திரம் காலப்புருஷ வீடான சிம்மத்தில் அமைந்துள்ளது. ஐந்தாம் பாவம் ஆத்மாவையும் அதன் விருப்பத்தையும் கலையையும் குறிக்கிறது. விருட்சம் போல ஜோதிடக் கலைவளரும்.