சிற்பமும் சிறப்பும்
காலம்: இன்று நாம் காணும் வடிவிலுள்ள கோவில்களும், ஏராளமான மண்டபங்களும் 14-15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர அரசர்களால் கட்டப்பட்டவை.
அமைவிடம்: கோட்டை - கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
குளங்கள் மற்றும் ஏரிகள் பண்டைய பாரதத்தின் பாரம்பரிய நீர் மேலாண்மையின் ஒருங்கிணைந்த அமைப்பாகும். மேலும் ஒவ்வொரு நகர அமைப்பிலும் கோயில் மற்றும் குளங்கள் ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு பெற்றிருந்தது.ஒவ்வொரு ஊர் மக்களின் மத வழிபாடு, அழகியல் மற்றும் நீர் பயன்பாடு போன்ற அம்சங்களைத் தவிர, நீர் சேகரிப்பில் குளங்கள் குறிப்பிடத்தக்க பங்கை வகித்து நிலத்தடி நீரூட்டலுக்கான முக்கிய காரணிகளாக அமைகின்றன.
இந்தியாவில் உள்ள பல பழங்கால நகரங்கள், கோயில்கள் மற்றும் குளங்களுக்குப் புகழ் பெற்றவை. திருநாராயணபுரம் என்று அழைக்கப்படும் மேலக்கோட்டையில் (கன்னடத்தில் ‘மேலுகோட்’) உள்ள குளம் அவற்றில் மிகச்சிறந்த ஒன்றாகும்.‘கல்யாணி’ என்றழைக்கப்படும் இவ்வழகிய குளம் நான்கு புறமும் படிகளுடன் கூடிய நீண்ட நடைபாதைகள் கொண்டு பெரும் விஸ்தீரணத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
குளக்கரையைச் சுற்றிலும் சிறு மண்டபங்கள் உள்ளன. அறுங்கோண வடிவத்தில் அமைந்த ‘புவனேஸ்வரி மண்டபம்’ ராமாயணம் மற்றும் தசாவதாரக்காட்சி புடைப்புச் சிற்பங்களுடன் அனைவரையும் ஈர்க்கிறது.இந்த அழகிய அறுங்கோண மண்டபம் ரஜினி காந்த்தின் பிரபலமான திரைப்படங்களான ராஜாதி ராஜா, தளபதி, முத்து மற்றும் படையப்பா உட்பட பல தென்னிந்தியப் படங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அருகில் உள்ள செலுவநாராயணசுவாமி கோயிலும், மலை உச்சியில் உள்ள யோக நரசிம்ம கோயிலும் மேலக்கோட்டையில் எப்போதும் தவறவிடாத வழிபாட்டுத் தலங்களாகும். வைஷ்ணவத்தின் முதல் ஆச்சார்யாரான ஸ்ரீ ராமானுஜாச்சாரியார் 12 ஆம் நூற்றாண்டில் 14 ஆண்டுகள் இங்கு தங்கியிருந்தார். இதனால் மேலக்கோட்டை ஸ்ரீவைஷ்ணவ பிரிவினரின் முக்கிய புனிதத் தலமாக விளங்குகிறது.மேலக்கோட்டைக்கும் தமிழகத்தும் மற்றொரு முக்கிய தொடர்புமுண்டு. இவ்வூர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த ஊராகும்.
மது ஜெகதீஷ்