எது தோஷமில்லாத பிரமாணம் என்றால் வேதம்தான். எத்தனைதான் சிறப்பாகச் செய்தாலும் மனிதரால் படைக்கப்பட்ட நூலோ, மந்திரங்களோ ஏதேனும் ஒரு சிறுகுறையுடன் திகழ வாய்ப்பு அதிகம். ஆனால், ``அபௌருஷேயம்’’ அதாவது மனிதனால் படைக்கப்படாத வேதமானது இக்குறைகளற்றது. நம்மைப் பிறப்பித்த தாய் தந்தையரைவிட நம்மை உயர்த்துவதில் பரிவு கொண்டது வேதம். வேதம் - அதிசூட்சுமமான பல உண்மைகளை நமக்கு உணர்த்துகிறது. இந்த வேதத்தின் அறிவை நாம் எப்படிப் பெறுவது? அதன் பலனை எப்படி அடைவது? அதற்குத்தான் சம்ஸ்காரங்களை ஏற்படுத்தி வேத மந்திரங்களை இணைத்து அதன் பலனை கிடைக்கும்படி செய்தார்கள். இதில் திருமண வைபவங்களில் ஒன்றான ``கங்கணதாரணம்’’ பற்றிப் பார்ப்போம்.
கங்கணம் என்றால் செய்தே தீருவதற்கான உறுதி. அதைச் செய்து முடித்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறான் என்று சொல்வதைப் பார்த்திருக்கிறோம். தாரணம் என்றால் அணிவது. திருமண வைபவத்தில் கங்கணத்திற்கு முன்னும், கங்கணம் அவிழ்ப்பதற்கு பின்னும் உள்ள வேலைகளை பூர்வாங்க, உத்தராங்க வேலைகள் எனலாம். இடையில் உள்ள விஷயங்களே கல்யாணத்திற்கான உள் விஷயங்கள். கையில் கங்கணம் கட்டிக் கொண்டு, திருமண மண்டபத்திற்கு வெளியே வருவதோ, நண்பர்களோடு கடைக்குப் போவதோ கூடாது. அவர்களைத் தொடும் அதிகாரம் யாருக்கும் இல்லை. கங்கணம் கட்டிவிட்டால், அந்தக் காரியம் தடைப்படாது நிறைவேறியே ஆக வேண்டும்.
அப்போது ஏற்படும் சுப, அசுபத் தீட்டுக்கள் அவரை ஒட்டாது. கங்கண தாரணத்திற்கு இன்னொரு பெயர் ``ரக்ஷா பந்தனம்’’ இதனை ``காப்பு கட்டுதல்’’ என்று தமிழில் சொல்கிறோம். உறுதியான மஞ்சள் சரட்டை எடுத்து பூஜை செய்து மந்திரப்பூர்வாக இதைக் கட்ட வேண்டும். தேங்காயில் வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து மேலே இரண்டு மஞ்சள் கயிற்றை வைத்து, மந்திரத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். மந்திரத்தால் அதன் புனிதத்தைக் கூட்ட வேண்டும். சர்வ உபசாரங்களும் செய்து தூபம், தீபம் சமர்ப்பிக்க வேண்டும். முதலில் மணமகனுக்கு “பிருஹத் சாம” என்ற மந்திரத்தால் வலது கையில் கட்ட வேண்டும்.
``தண்டுலைஹி பூரிதே பாத்ரே
ஸ்வர்ண கலச ஸ்திதம்
பத்னியாத் கங்கணம் ஹஸ்தே
பூயாத் ரக்ஷாம் ஸ்திரம் மம’’
இந்த மந்திரத்தை கங்கணக் கயிறு நிலையான பாதுகாப்பினைத் தரட்டும் என்பது மந்திரப் பொருள். பிறகு மணமகன்மணமகளுக்கு, இடது கையில் கட்ட வேண்டும். மங்கல வாத்தியம் முழங்க இந்தக் காப்பு நாண் நிகழ்ச்சி நடைபெற வேண்டும். இந்த காப்பு நாண் காட்டும் நிகழ்ச்சி பழமையானது. அதை தெரிவிக்கும் ஆண்டாள் பாசுரம்.
``நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்து நனிநல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லா
ரெ டுத்தேத்தி
பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை
காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான்’’
விளக்கம்: நால் திசை தீர்த்தம் கொணர்ந்து நனிநல்கி - நான்கு திசைகளில் இருந்தும் புனித நீர் கொண்டு வந்து அதை நன்றாகத் தெளித்து பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்து ஏத்தி - வேதம் ஓதும் அந்தணர்கள் பலர் மந்திரம் சொல்லி, பூப்புனை கண்ணிப் புனிதனோடு என் தன்னை - பல வித பூக்களை மாலைகளாக அணிந்த புனிதனான கண்ணனோடு என்னை இணைத்து, காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் - காப்புக்கயிறு கட்ட கனவு கண்டேன் தோழீ நான்.ஆயுரரசாஸ்தே, ஸுப்ரஜாஸ்த்வமாசாஸ்தே இத்யாதி வேதவாக்கி யங்களை உச்சைஸ்ஸ்வரமாக எடுத்து ஓதி ஆசீர்வாதங்கள் பண்ணிக் கங்கண நூல்கட்டும் நிகழ்ச்சியால் ஆயுள் தோஷங்கள் கழியும்.