இந்த தொகுப்பில் நாம் காணவிருக்கும் அனுமன், மிக முக்கியமான அனுமன். சாந்நித்யம் நிறைந்த கோயிலாகும். திருச்சியில் இருந்து 41 கி.மீ., தொலைவில் இருக்கும் ஊர் முசிறி. இவ்வூருக்கென்று தனி சிறப்புகள் இருக்கின்றன. முசிறியில் இருந்து குளித்தலை வழியாக 20 கிலோ மீட்டர் பயணித்தால் ``சிந்தலவாடி’’ என்னும் ஊரை அடையலாம். இங்கு பிரசித்தி பெற்ற ``யோக நரசிம்மர்’’ வீற்றுயிருக்கிறார். அதே போல், முசிறியில் இருந்து 15 கி.மீ., தூரம்பயணித்தால், ``குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி’’ திருக்கோயில்.அங்கிருந்து 15 கி.மீ., பயணித்தால், ``உத்தமர் கோயில்’’ என்னும் திருத்தலத்தை அடையலாம். இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் ஒரே இடத்தில் தரிசிக்கலாம். முசிறியில் இருந்து சுமார் 46 கி.மீ., பயணம் மேற்கொண்டால், கரூரை அடைந்து விடலாம். இங்கு ``தான்தோன்றி ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் உள்ளது. முசிறிக்கும் - கரூருக்கும் நடுவில் காவேரி ஆறு ஓடுகிறது. அதே 46 கிலோ மீட்டரில் நாமக்கல் மாவட்டத்தை அடைந்துவிடலாம். இங்கு ``நாமக்கல் ஆஞ்சநேயர் ஸ்வாமி’’ வீற்றிருக்கிறார். அதற்கு நேர்எதிர் புறத்தில் ``நாமக்கல் நாமகிரி தாயார் சமேத ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்’’ அருள்கிறார்.இதையெல்லாம்விட, முசிறியில் இருந்து 35 கி.மீ., பயணித்தால் போதும் ஸ்ரீ ரங்கம் வந்துவிடும். இங்கு ``ரங்க
நாதஸ்வாமி’’ பள்ளிக் கொண்டிருக்கிறார். ஆக, முசிறியை சுற்றி பெருமைவாய்ந்த பல ஊர்களும், திருத்தலங்களும் இருக்கின்றன. இத்தகைய சிறப்பு மிக்க ஊரில், ``மகான் ஸ்ரீ வியாசராஜர்’’ பிரதிஷ்டை செய்த பால அனுமனை நாம் இந்த தொகுப்பில் தரிசிப்பது நமக்கு கிடைத்த பெரும் பாக்கியமே!
அழகான அக்ரஹாரம்
முசிறியில் இருக்கும் அனுமனை காண நமது பயணம் ஸ்ரீ ரங்கத்தில் இருந்து தொடங்கியது. ஸ்ரீ ரங்கத்தில் இருந்து நம்பர் ஒன் டோல்கேட் (No.1 Tollgate) என்னும் பகுதியை அடைந்து, அங்கிருந்து முசிறி செல்லும் பேருந்தில் ஏறி பயணித்தோம். செல்லும் வழியில், உத்தமர் கோயில், குணசீலம் ஆகிய இடங்கள் வரும்போது, பேருந்து உள்ளேயே மனதில் அந்தந்த ஸ்வாமியை வேண்டினோம். முசிறி கைகாட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கினோம். அங்கிருந்து சுமார் 2 கி.மீட்டரில் நடந்து சென்றால், அனுமன் கோயிலுக்கு சென்றுவிடலாம். கைகாட்டியில் இருந்து போகும் வழியில், ``ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் கோயில்’’ மற்றும் ``ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோயில்’’ ஆகிய கோயில்களை தரிசிக்கலாம். இங்கு இருக்கும் ஒவ்வொரு வீடுகளும் பழமையை பேசுகிறது. லட்சுமி நாராயண பெருமாள் கோயிலுக்கு எதிரில், அக்ரஹாரம் தென்படுகிறது. மிக அழகாக ஒரே மாதிரியான வீடுகள் வரிசையாக காணப்படுகின்றன. இதையெல்லாம் கடந்து சென்றோமேயானால், சற்று தூரத்தில் முசிறி பால அனுமன் கோயில் தெரிகிறது. தென்னை மரங்களுக்கு நடுவில் அமைதியான சூழலில், காதில் காற்றின் சப்தங்கள் மட்டும் கேட்கிறது. அருகில் காவேரி ஆறு ஓடுகிறது. இக்காட்சியினை கற்பனை செய்துபாருங்கள்! எத்தகைய அருமையான சூழல் என்று..!முசிறி என்னும் இந்த ஊர், முன்பு ``முசுகுந்தபுரி’’ என்று அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. காரணம் என்னவென்றால், முசுகுந்தமகாராஜன் என்னும் அரசன் இந்த இடத்தை ஆண்டு வந்தமையால் இப்பெயர் ஏற்பட்டது. முசுகுந்தபுரி, காலப் போக்கில் ``முசிறி’’ என்று மறுவிவிட்டது.தூரத்தில் இருந்து கோயிலை பார்க்கும் போதே அதன் பழமை நமக்கு நன்கு தெரிகிறது. கோயிலின் உள்ளே சென்றதும், தெய்வீக மணம் கமழும் வாசம். பால அனுமன் கோயிலை சுற்றிலும் தூண்களால் ஆன மண்டபம், அதன் நடுவில் அனுமன் சந்நதி. அனுமன் கோயில் பக்கத்தில், விநாயக பெருமானும் காட்சியளிக்கிறார். விநாயகர் சந்நதி அருகில் நாகர் பிரதிஷ்டை ஆகியிருக்கிறார். கோயிலை பற்றி அறிய, கோயிலின் அர்ச்சகர் ஸ்ரீ ராம் என்பவரிடத்தில் செய்திகளை சேகரித்தோம். அவர் இன்னும் பல சுவாரஸ்ய கதைகளை நம்மிடையே பகிர்ந்துக் கொண்டார். அதன் சாராம்சம் என்னவென்றால்;
பொங்கல் கேட்கும் அனுமன்
மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த ஆஞ்சநேயர்களிலே மிகவும் விசேஷமான ஆஞ்சநேயர், நம் பால ஆஞ்சநேயர். அப்படி என்ன விசேஷம் என்றால், அனுமன் ``தட்க்ஷிணாபிமுகம்’’ அதாவது தெற்கு திசையை நோக்கியவாறு அருளாசியை வழங்குகிறார். அதே போல், காவேரி ஆற்றை பார்த்தவாறே காட்சிதருகிறார், பால அனுமன்.வியாசராஜர் பிரதிஷ்டை செய்த பிற மத்வ ஆஞ்சநேயர் கோயில்களில், அன்னம் முதலானவற்றைதான் நிவேதனம் செய்வார்கள். ஆனால் இங்கு, பால அனுமனுக்கு தினமும் சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும். அதைத்தான் அனுமன் ஏற்றுக் கொள்கிறார். ஒரு நாள் தப்பினாலும், இன்றும் அனுமன், குரங்கு ரூபத்தில் இக்கோயிலுக்கு வந்திருந்து வெல்லத்தையும் அரிசியையும் எடுத்துக் கொண்டு சென்றுவிடுகிறார். ஆகையால், தினமும் பால அனுமனுக்கு சர்க்கரை பொங்கல்தான் நிவேதனம். ``சர்க்கரை பொங்கலை நிவேதனம் வைக்கிறேன், எனக்கு இக்காரியத்தை நிறைவேற்று கொடு’’ என்று பால அனுமனை வேண்டிக் கொண்டால், மிக விரைவாகவே பக்தர்கள் நினைத்த காரியங்களை நிறைவேற்றித்தருகிறார். இக்கோயில், ஏறக்குறைய 600 முதல் 800 - ஆண்டுகள் வரை மிகவும் பழமைவாய்ந்த கோயிலாக இருக்கலாம் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.முசிறியை ஆண்ட முசுகுந்தமகாராஜன் முன்னொரு காலத்தில் தேவர்களுக்காக முசுகுந்த அரசன் எதிரிகளுடன் கடும் போர் சண்டைகளை புரிகிறான். சண்டையில் அரசன் வெற்றி பெறுகிறான். இதல், மகிழ்ந்த தேவர்கள்; ``உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்’’ என்கிறார்கள். ``ஸ்வாமி... நீண்ட நாட்களாக யுத்த களத்தில் ஈடுபட்டுவந்ததால், துளிக்கூட தூக்கமே இல்லை.ஆகையால், நல்ல நிம்மதியான தூக்கம் வேண்டும்’’ என்று வரம் கேட்டான், அரசன். தேவர்களும், முசுகுந்தமகாராஜன் கேட்ட வரத்தை அளித்து, ``நீ.. தூக்கத்தில் இருந்து எழும் நேரம், இந்த ஊருக்கு நல்ல நேரமாக அமையும்’’ என்று கூடுதலாக ஒரு வரத்தையும் சேர்த்து அளிக்கிறார்கள், தேவர்கள். முசுகுந்தமகாராஜன், திரேதா மற்றும் துவாபர யுகத்தின் நடுவில் இருந்து, தனது தூக்கத்தினை தொடங்குகிறார். தூக்கம் முடிந்து அவர் எழுந்து பார்க்கும்போது, கலியுகம் ஆரம்பித்த நேரம் வந்துவிட்டது. திரேதா யுகத்தில் மனிதர்கள் சராசரியாக 10 அடி உயரத்தில் 10,000 ஆண்டுகள் வரை வாழ்வார்கள். கலியுகத்தில் மனிதர்கள், 6 அடி உயரம் மட்டுமே காணப்படுவார்கள். இத்தகைய வித்தியாசங்களால், தனது வாழ்நாள் முடிந்துவிட்டதை அறிந்து கொண்ட முசுகுந்த மன்னன், ஐந்து அந்தணர்களுக்கு தனது முசுகுந்தபுரியை (முசிறி) தானமாக வழங்கிவிட்டு சென்றுவிட்டார். அந்த சமயத்தில்தான் மகான் ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர், இந்த முசிறி அக்ரஹாரத்தில் பால அனுமனை பிரதிஷ்டை செய்திருக்கிறார். கொடுத்த இடமும் காலப் போக்கில் விற்று..விற்று கைமாற்றப்பட்டுவிட்டது. அப்படி இக்கோயிலின் இடமானது ராயப்பாளையம் ஜமீனின் குடும்பத்தினர் கைக்கு வந்திருக்கிறது. அப்போது இக்கோயிலின் இடம், ஒரு அன்ன சத்திரமாக இருந்திருக்கிறது. அப்போதெல்லாம், ஸ்ரீ ரங்கத்திற்கும் - முசிறிக்கும் வரவேண்டும் என்று சொன்னால், காவேரி ஆற்றை கடந்தாக வேண்டும். அப்போது, பரிசலில்தான் கடக்க வேண்டும். அப்படி வரும் மக்களுக்கு உண்ண உணவு வேண்டி, இக்கோயிலில் அன்ன சத்திரம் அமைக்கப்பட்டது. இரண்டு - மூன்று நாட்கள்கூட இங்கு தங்கிருந்து, உணவருந்திவிட்டு அனுமனையும் வேண்டிக்கொண்டு செல்வார்கள்.ஒரு கட்டத்தில், இவர்களாலும் பராமரிக்க முடியாது பல இடங்களை விற்றுவிட்டு, அருகில் உள்ள ஊரான ஸ்ரீ ரங்கத்திற்கு குடியேறிச் சென்றுவிட்டனர். கோயிலின் இடம் மட்டுமே இவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்திருக்கிறது.
உடுப்பி மகானுக்கு தாகம்
இப்படி இருக்க, ஒரு நாள்... உடுப்பி பெஜாவர் மடாதிபதி, ``ஸ்ரீ விஸ்வேஷ தீர்த்தர்’’ (தற்போது இவர் பிருந்தாவனம் ஆகிவிட்டார்) பெங்களூரில் இருந்து ஸ்ரீ ரங்கத்திற்கு வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். முசிறிக்கு அருகில் வரும் சமயத்தில், அவருக்கு மிகவும் தண்ணீர் தாகம் எடுத்துள்ளது. நமக்கு தாகம் எடுத்தால், உடனே ஒரு வாட்டர் பாட்டில்லை எடுத்து தண்ணீர் குடிப்போம். ஆனால், மடாதிபதிகளுக்கென்று ஒரு நியமம் (விதிமுறைகள்) இருக்கிறது. தண்ணீர் குடிப்பதற்கே நியமங்களா..? என்று கேட்கலாம். ஆம்.. அடிக்கடியெல்லாம் தண்ணீர் குடிக்க முடியாது. குளித்துவிட்டு மடியாக, குறிப்பிட்ட பிரணவ மந்திரங்களை ஜெபித்து, அதன் பின்னர்தான் தண்ணீர் பருக வேண்டும் என்கின்ற நியமம் இருக்கிறது. அதன்படி, ஸ்ரீ விஸ்வேஷ தீர்த்தருக்கு தண்ணீர் தாகம் எடுக்க, இங்கு அருகில் எங்கேயாவது, தான் ஸ்நாணம் செய்துக் கொண்டு தண்ணீர் அருந்த இடம் கிடைக்குமா? என்று ஓட்டுனரிடம் வினவியிருக்கிறார்.ஓட்டுனருக்கு முசிறியில் உள்ள இந்த பால ஆஞ்சநேயர் கோயில் நினைவில் வர, வாகனத்தை நேராக அனுமன் கோயிலுக்கு திருப்பியுள்ளார். அந்த சமயத்தில், கோயிலில் ஆனந்ததீர்த்தன் என்பவர் கோயிலை நிர்வகித்து வந்திருக்கின்றார். உடுப்பி ஸ்வாமிகள் வருவதை அறிந்ததும், அவருக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார். ஸ்ரீ ரங்கம் - முசிறி பகுதியில் பாய்ந்து ஓடும் நதியினை ``அகண்ட காவேரி’’ என்று சொல்லுவார்கள். இக்கரையில் இருந்து - அக்கரைவரையிலும் தண்ணீர் பாய்ந்தோடும். கோயில் அருகில் வரை முழுவதுமாக தண்ணீர் ஓடும். ஸ்வாமிஜி வந்தபோதும், தண்ணீரானது முழுவதுமாக ஓடிக் கொண்டிருந்தது. அங்கு ஸ்நானம் செய்துவிட்டு, பால ஆஞ்சநேயரையும் தரிசித்துவிட்டு, சில ஜெபங்களையெல்லாம் ஜெபித்த பிறகு, தண்ணீரை குடித்தார், ஸ்ரீ விஸ்வேஷ தீர்த்தர்.முசிறியில் இருந்து கிளம்பும் முன்னர், ஆனந்ததீர்த்தரை அழைத்தார் ``நான் தமிழ்நாட்டில் ஒரு வித்யா பீடத்தை (குருகுலம்) ஆரம்பிக்கலாம் என்று உத்தேசித்துள்ளேன். எனக்கு இந்த கோயிலின் இடம் கிடைக்குமா?’’ என்று ஸ்வாமிஜி கேட்க;``ஸ்வாமி... இது என்னுடைய இடமில்லை. என் உறவினரின் இடமிது. நான் இந்த இடத்தை மேற்பார்வையாளராக மட்டுமே கவனித்து வருகிறேன். எப்படியும் நீங்கள் ஸ்ரீ ரங்கம்தான் செல்ல இருக்கிறீர்கள். அங்கு, கோயிலின் உரிமையாளர் இருக்கிறார், அவரிடத்தில் கேளுங்கள்’’ என்கிறார். அதன்படி, அவரின் விலாசத்தை பெற்று, ஸ்ரீ ரங்கத்திற்கு வந்தவுடனே அவரை நேரில் அழைத்து, பராமரிப்பு இல்லாமல் இருக்கும் பால ஆஞ்சநேயர் கோயில், தனக்கு வேண்டும் என்றும், இங்கு ஒரு வித்யா பீடத்தை உருவாக்கப்போகிறேன் என்றும் விண்ணப்பம் செய்திருக்கிறார்.(அவர் இடம் கொடுத்தாரா?அடுத்த இதழில்...)
ரா.ரெங்கராஜன்