Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கஷ்டங்களை போக்கும் அஷ்ட பைரவ மந்திரம்

சிற்ப நூல்களும் சிவஆகமங்களும் பைரவ மூர்த்தத்தை விவரிக்கும் போது அறுபத்து நான்கு பைரவர்களை அறிமுகப்படுத்துகின்றன. இன்னும் சில சிற்ப நூல்களில் இவை நூற்றி எட்டு வடிவங்களாகவும் குறிக்கப்படுகின்றன. இந்த எல்லா வடிவங்களிலும் சிறப்பான எட்டு வடிவங்கள் ‘அஷ்ட பைரவர்’ என்று அழைக்கப்படுகின்றன.

1. அசிதாங்க பைரவர், 2. குரு பைரவர், 3. சண்ட பைரவர், 4. குரோத பைரவர், 5. கபால பைரவர், 6. உன்மத்த பைரவர், 7. பீஷ்ண பைரவர், 8. சம்ஹார பைரவர்.அஷ்ட பைரவர் ஒவ்வொருவரின் வண்ணம், ஆயுதம், வாகனம் இவைகள் மாறுபட்டுக் காணப்படும்.

சிவபெருமானானவர் வலிமைமிக்க ஞானமூர்த்தியாக ஸ்ரீபைரவரை உற்பத்தி செய்து அவரிடம் உலகினைக் காக்கும் பொறுப்பினை அளித்தார். அவர் உயிர்களுக்கும் அவர்களின் உடைமைகளுக்கும் பாதுகாவலாக இருப்பதுடன் எட்டு திசைகளிலும் அஷ்ட பைரவராக நின்று அவற்றையும் பாதுகாத்து வருகின்றார். அசுரர்களால் இந்த உலகம் துன்பமடையும் பொழுதெல்லாம் சிவபெருமான் தனது அம்சமாக பைரவரை தோற்றுவித்து அசுரர்களை வென்று உயிர்களுக்கு அமைதியளித்தார் என்று பைரவர் உற்பத்தியை புராணங்கள் தெரிவிக்கின்றன.

சிவமூர்த்தங்களுள் ஒருவராக பைரவரைக் குறிப்பிட்டிருந்தாலும் இவர் வீற்றிருப்பது ‘பைரவ புவனம்’ என்று கூறப்படுகிறது.

சிவலோகத்திலுள்ள சோதி மயமான இந்த கோட்டையில் எட்டு வாசல்களிலும் மகா பைரவர், உக்கிரபைரவர், கபால பைரவர், பீஷ்ண பைரவர், சாகர பைரவர் என்பவர்கள் காவல் செய்து கொண்டிருப்பதாக அபிதான சிந்தாமணி கூறுகிறது.ஸ்ரீபைரவருக்கு சேத்திரபாலக மூர்த்தி என்றும் ஒரு பெயர் வழங்குகிறது. சேத்திரம் என்றால் பூமி. பாலகர் என்றால் காப்பவர். சேத்திரமாகிய உலகிற்கு ஊழிக்காலத்தில் நேர்ந்த துயரத்தை நீக்கி காத்தருளினமையால் சிவனுக்கு சேத்திரபாலக மூர்த்தி என்னும் பெயர் விளங்குவதாயிற்று என்று புராண வரலாறு தெரிவிக்கிறது.சேத்திரம் என்றால் கோயில். பாலகர் என்றால் காப்பவர். சேத்திரமாகிய கோயிலைக் காப்பவர் பைரவர் என்றும் சொல்வார்கள்.

1. அசிதாங்க பைரவர்‬:

அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். இப்பைரவர் காசி மாநகரில் விருத்தகாலர் கோயிலில் அருள்செய்கிறார். அன்ன பறவையினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் ‪குருவின்‬ கிரக தோசத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள்.‬

“ஓம் ஞான தேவாய வித்மஹே

வித்யா ராஜாய தீமஹி

தந்நோ அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்.”

“ஓம் ஹம்சத் வஜாய வித்மஹே

கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி

தந்நோ பிராம்ஹி ப்ரசோதயாத்.”

2. ‪ஸ்ரீ குரு பைரவர்‬:‬

குரு பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோயிலில் அருள்செய்கிறார். ரிசபத்தினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் ஸ்ரீசுக்கிரனின்‬ கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான மகேஸ்வரி விளங்குகிறாள்.‬

“ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே

டங்கேஷாய தீமஹி

தந்நோ ருருபைரவ ப்ரசோதயாத்.”

“ஓம் வருஷத் வஜாய வித்மஹே

ம்ருக ஹஸ்தாயை தீமஹி

தந்நோ ரவுத்ரி ப்ரசோதயாத்.”

3. சண்ட பைரவர்:

சண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் துர்க்கை கோயிலில் அருள்செய்கிறார். மயிலை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் செவ்வாய் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான கௌமாரி விளங்குகிறாள்.

“ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே

மஹாவீராய தீமஹி

தந்நோ சண்ட பைரவ ப்ரசோதயாத்”

“ஓம் சிகித்வஜாயை வித்மஹே

வஜ்ர ஹஸ்தாயை தீமஹி

தந்நோ கவுமாரி ப்ரசோதயாத்.”

4. குரோதன பைரவர்:

குரோத பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோயிலில் அருள்செய்கிறார். கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சனி கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வைஷ்ணவி விளங்குகிறாள்.

“ஓம் க்ருஷ்ண வர்ணாய வித்மஹே

லட்சுமி தராய தீமஹி

தந்நோ குரோதன பைரவ ப்ரசோதயாத்”

“ஓம் தாக்ஷ்யாத் வஜாய வித்மஹே

சக்ர ஹஸ்தாயை தீமஹி

தந்நோ வைஷ்ணவி ப்ரசோதயாத்.”

5. உன்மத்த பைரவர்:

உன்மத்த பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பீம சண்டி கோயிலில் அருள்செய்கிறார். குதிரையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் புதன் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வராஹி விளங்குகிறாள்.

“ஓம் மஹா மந்த்ராய வித்மஹே

வராஹி மனோகராய தீமஹி

தந்நோ உன்மத்த பைரவ ப்ரசோதயாத்.”

“ஓம் மஹிஷத் வஜாயை வித்மஹே

தண்ட ஹஸ்தாயை தீமஹி

தந்நோ வராஹி ப்ரசோதயாத்.”

6. கபால பைரவர்:

கபால பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஆறாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் லாட் பசார் கோயிலில் அருள்செய்கிறார். யானையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சந்திர கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான இந்திராணி விளங்குகிறாள்.

“ஓம் கால தண்டாய வித்மஹே

வஜ்ர வீராய தீமஹி

தந்நோ கபால பைரவ ப்ரசோதயாத்.”

“ஒம் கஜத்வஜாய வித்மஹே

வஜ்ர ஹஸ்தாய தீமஹி

தந்நோ இந்திராணி ப்ரசோதயாத்.”

7. பீக்ஷண பைரவர்:

பீக்ஷண பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பூத பைரவ கோயிலில் அருள்செய்கிறார். சிங்கத்தை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் கேது கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.

“ஓம் சூலஹஸ்தாய வித்மஹே

ஸர்வானுக்ராய தீமஹி

தந்நோ பீஷண பைரவ ப்ரசோதயாத்”

“ஓம் பிசாசத் வஜாயை வித்மஹே

சூல ஹஸ்தாயை தீமஹி

தந்நோ காளி ப்ரசோதயாத்.”

8. சம்ஹார பைரவர்:

சம்ஹார பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோயிலில் அருள்செய்கிறார். நாயை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் ராகு கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சண்டிகை விளங்குகிறாள்.

“ஓம் மங்களேஷாய வித்மஹே

சண்டிகாப்ரியாய தீமஹி

தந்நோ ஸம்ஹார பைரவ ப்ரசோதயாத்”

ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே

மஹாதேவி ச தீமஹி

தந்நோ சண்டி ப்ரசோதயாத்.”

குடந்தை நடேசன்