5-11-2025- அன்னாபிஷேகம்
12-11-2025- காலபைரவாஷ்டமி
1. முன்னுரை
உலகில் ஒளி தரும் கிரகங்கள் இரண்டு. ஒன்று சூரியன். இன்னொன்று சந்திரன் . சூரியனை கிரகம் என்று சொல்லலாமா? என்ற கேள்வி எழலாம். ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் நட்சத்திரமாக இருந்தாலும் கிரகமாகத் தான் கருதப்படுகிறார். சூரியனின் ஒளி அடிப்படையில் தான் ஜாதக பலன்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. சூரியனிடம் இருந்து ஒளி பெறும் பூமியின் துணைக்கோளான சந்திரனும் ஒரு கிரகமாகத் தான் கருதப்படுகின்றார்.
இரண்டும் பூமிக்கு பூரண ஒளி தரும் கிரகங்கள். பகலில் சூரியனும், இரவில் சூரியன் ஒளிபெற்ற சந்திரனும் இந்த உலகைக் காப்பாற்றுகின்றன. சூரிய சந்திரனை கருத்தில் கொண்டுதான் பல்வேறு விழாக்களும் நடைபெறுகின்றன. வாரத்தின் ஏழு நாட்கள், 12 மாதங்கள், திதிகள் என அனைத்தும் சூரிய சந்திர சஞ்சாரத்தை ஒட்டித்தான் நிர்ணயிக்கப் படுகின்றன.
2. அமாவாசையும் பௌர்ணமியும்
இந்த அடிப்படையில் சூரியன் சந்திரனும் இணைந்திருக்கும் நாளை அமாவாசையாகவும், பார்வையால் இணைந்திருக்கும் நாளை பௌர்ணமியாகவும் கொண்டாடுகின்றோம். இந்த இரண்டு கிரகங்களின் தூரங்களில் அடிப்படையில் தான் பிரதமை, துவிதியை என வரிசையாக மற்ற திதிகள் இருக்கின்றன. இதில் அமாவாசையை தென்புலத்தார்க்குரிய நாளாகவும், பௌர்ணமியை தெய்வ பூஜைக்கு உரிய நாளாகவும் நாம் கருதுகின்றோம். சூரியன் ஐப்பசி மாதத்தில் கால புருஷனின் ஏழாவது ராசியான துலா ராசியில் நீசமடைவார்.
இதற்கு நேர் எதிர் ராசியான சூரியன் உச்சம் அடையும் மேஷ ராசியில் சந்திரன் அமர்ந்து சூரியனுக்கு நேர்பார்வையில் இணையும் நாள் ஐப்பசி மாத பௌர்ணமி. இப்படிப்பட்ட அற்புதமான நாளில் எல்லா சிவன் கோயில்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. அன்னாபிஷேகத்தின் சிறப்பையும், அதனை ஒட்டி வரும் கால பைரவரவாஷ்டமி சிறப்பையும் இந்த முத்துக்கள் முப்பது தொகுப்பில் காண்போம்.
3. அன்னத்தின் சிறப்பு
அன்னம் என்பதற்கு இரண்டு பொருள் உண்டு. ஒன்று அன்னப் பறவை. இன்னொன்று உணவு. சோறு. இந்த இரண்டினாலும் செய்யப்படும் அபிஷேகம்தான் அன்னாபிஷேகம். உணவு என்பது ஒரு வருக்கு உயிர் காக்கும் பொருளாக இருக்கிறது. அந்த உணவை எல்லோருக்கும் வழங்குபவன் ஈசன். கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயர்க்கும் புல்லுணவே தந்து போற்றும் தயாபரன் என்று அவனைச் சொல்லுவார்கள் இறைவா!
இது நீ தந்த உணவு! நீ தந்த அன்னம் என வருடத்தின் ஒரு நாள், ஐப்பசி மாதத்தில், பௌர்ணமி அன்று, சிவபெருமானுக்குச் சமர்ப்பிக்கின்றனர். அன்னத்தால் இறைவனுக்கு அபிஷேகம் செய்கின்ற பொழுது வேத கோஷம் உண்டு. அந்த வேதத்தின் பிரதிநிதியாக அன்னப்பறவையை உருவகப்படுத்துவர். உற்சவ காலங்களில் பகவான் அன்ன வாகனத்தில் உலா வருவதுண்டு. இரண்டு அன்னமும் இறைவனோடு தொடர்புடையது தான்.
4. நீரும் பாலும்
நாலடியாரின் ஒரு பாட்டு.
கல்வி கரையில கற்பவர் நாள்சில
மெல்ல நினைக்கின் பிணிபல -
தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து - நாலடியார் 135
ஒருவன் எப்படி கல்வியைக் கற்க வேண்டும் என்பதைப் பற்றி சொல்லுகின்ற பாடல். பாலையும் நீரையும் இணைத்து வைத்தால் நீரை விலக்கிவிட்டு பாலை மட்டும் எப்படி அன்னப்பறவை பிரிக்குமோ, அப்படி நல்லவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து, கெட்டவற்றை ஒதுக்கிவிட்டு படிக்க வேண்டும் என்பது இந்தப் பாடலின் கருத்து. அன்னப்பறவை பாலையும் நீரையும் பிரிக்கிறதோ, இலையோ அன்னம் (சோறு) பிரிக்கும் என்பார்கள். சோற்றிலே நீர் கலந்த பாலை ஊற்றினால், பாலை இழுத்துக் கொண்டு, நீரை தனியாக ஒதுக்கி வைத்து விடும். தீயதை விலக்கி, நல்லதை வைத்துக் கொள்ளும் அன்னத்தால் ஈசனுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பு தானே.
5. அன்னம் என்றால் வெறும் சோறுதானா?
அன்னத்தை சோறு என்று சொல்லுகிறோம். அன்னத்திற்கு முக்தி எனும் ஒரு மறைபொருளும் உண்டு. அப்பர் பெருமான் தில்லைத் திருத்தலத்தினைப் பாடுகின்ற பொழுது ‘‘அன்னம் பாலிக்கும் தில்லை” என்று பாடுவது நோக்க வேண்டும். ‘‘அதென்ன, சிதம்பரத்தில் மட்டும் தான் சாப்பாடு கிடைக்குமா? மற்ற ஊர்களில் கிடைக்காதா?” என்று ஒரு கேள்வி வரும் அல்லவா. என்ன பொருள் என்று சொன்னால், இங்கே உடலுக்கு தேவையான அனைத்தையும் ஈசன் தருவார். உயிருக்குத் தேவையான முத்தியையும் தருவார். காரணம் முக்தி தரும் திருத்தலம் தில்லை. உடலுக்கு சோறும், உயிருக்கு பேறும் (நற்கதி) தரும் திருத்தலம் தில்லை என்பதால் அன்னம் என்பது முக்தி எனும் பொருளிலும் எடுத்துக் கொள்ளலாம். எனவே, பிறவாப்பேறு பெற அன்னாபிஷேகம் செய்கிறோம்.
6. அபிஷேகப் பிரியனுக்கு அன்னாபிஷேகம்
சிவபெருமான் அபிஷேகங்களை மிகவும் விரும்புவதால், அவரை “அபிஷேகப் பிரியர்” என்று அழைக்கிறார்கள். திருஞானசம்பந்தர் திருமஞ்சனத்தைப்பற்றி அழகான ஒரு தேவாரத்தில் பாடுகின்றார்.
ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர்
அந்தணர் பிரியாத சிற்றம்பலம்
நாடினாய் இடமா நறுங்
கொன்றை நயந்தவனே
பாடினாய் மறையோடு பல் கீதமும்
பல் சடை பனிக்கால்
கதிர் வெண் திங்கள்
சூடினாய் அருளாய் சுருங்க எம தொல்வினையே சிவபெருமான் அபிஷேகங்கள் மூலம் மனம் குளிர்ந்து வேண்டிய வரங்களைத் தருவார்.
7. சிவ அபிஷேக பலன்கள்
ஒவ்வொரு சிவ ஆலயங்களிலும் சிவனுக்கு பரிமள திரவியங்களால் அபிஷேகம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவ்வாறு சிவனுக்கு திரவியங்களைக் கொண்டு செய்யப்படும் ஒவ்வொரு திரவியங்களுக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது. அதைப்பற்றி தெரிந்து கொள்வோம்.
* இளநீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால் பேரானந்தம் கிடைக்கும்.
* சர்க்கரையினால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் மனநிறைவு உண்டாகும்.
* தீர்க்க ஆயுள் கிடைக்க, பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
* இனிய குரல் கிடைக்க, சுத்தமான தேனை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.
* தயிரால் சிவனுக்கு அபிஷேகம் செய்ய சகல சம்பத்தும் கிடைக்கும்.
* தூய நல்லெண்ணையில் வாசனை திரவியங்கள் கலந்து சிவனுக்கு அபிஷேகம் செய்தால் நோயற்ற வாழ்வு கிடைக்கும்.
8. அன்னாபிஷேகமே சிறந்தது
கரும்புச்சாற்றால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால் உடல் வலிமை பெறும். சிவனுக்கு பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும். சிவனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்தால் அரசனின் அன்பிற்கு பாத்திரமாகலாம்.
ஒவ்வொரு அபிஷேகத்தின் போதும் வகை வகையான மலர்களை சிவன் தலையில் வைத்து வணங்குவது சிறப்பானப் பலன்களைத் தரும். இவ்வாது அபிஷேகம் செய்வதால் நம் மனமும் உடலும் எதிர்மறை எண்ணங்களை வெல்லும் சிவபெருமானுக்குப் பொதுவாக பதினொரு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்வது வழக்கம். அவை தூய நீர், பசும்பால், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள், அன்னம் ஆகியன. இவற்றுள் மிகச் சிறப்பானது அன்னாபிஷேகமே.
9. பஞ்ச பூதங்களும் அன்னமும்
நம் உடல் பஞ்சபூதங்களால் ஆனது. அன்னமும் பஞ்ச பூதங்களால் ஆனது. இறைவன் பஞ்ச பூதங்களுக்கு நாயகன். அன்னத்தை அன்னத்தால் பரிபாலிக்கிறோம். அன்னம் எப்படி பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உண்டாகிறது என்பதைப் பார்ப்போம். நிலத்தில் விழும் நெல், ஆகாயத்திலிருந்து பெய்யும் மழை நீரின் உதவியால் வளர்ந்து, காற்றினால் கதிர்பிடித்து, சூரியனின் வெப்பத்தீயினால் பால் இறுகி விளைச்சலைத் தருகிறது. காற்றின் உதவியுடன் கதிரடித்து எடுக்கப்படும் நெல், உமி நீக்கப்பட்டு அரிசியான பிறகு, மண்ணால் ஆன பானையில் நீரில் இடப்பட்டு, காற்றின் துணையால் எரியும் நெருப்பில் வெந்து, அன்னமாகி ஆகாயத்தின் கீழேயுள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவாகிறது. அந்த அன்னத்தினால் செய்யப்படுவதால்தான், அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது.
10. இந்த ஆண்டு ஐப்பசி அன்னாபிஷேகம்
இந்த ஆண்டு ஐப்பசி அன்னாபிஷேகம் நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி புதன்கிழமை வருகிறது. காலை அஸ்வினி நட்சத்திரம், தொடர்ந்து, பரணி நட்சத்திரம் இருக்கிறது. இரவு ஏழு முப்பது வரை பௌர்ணமி இருக்கிறது. இன்று சிவாலயங்களில் இன்னும் ஒரு விசேஷமும் உண்டு. 63 நாயன்மார்களில் ஒருவரான நின்ற சீர் நெடுமாறன் குருபூஜை தினமாகவும் அமைந்திருக்கிறது. கூன் பாண்டியனாக இருந்த நெடுமாறன், சமணர்களின் மந்திரங்களால் நோய் குணமாகாதபோது, அவரது மனைவி மங்கையர்க்கரசியார் மற்றும் அமைச்சர் குலச்சிறையார் ஆகியோரின் வேண்டுகோளின்படி மதுரையில் தங்கியிருந்த திருஞானசம்பந்தரை அழைத்தார்.
சம்பந்தரின் அருளால் மன்னரின் கூன் மற்றும் வெப்பு நோய் நீங்கியது. நெடுமாறன் நீதி தவறாமல் ஆட்சி செய்தார், உயிர்களிடத்தில் அன்பு காட்டினார், மேலும், சைவ சமயத்திற்கும் சிவடியார்களுக்கும் பெரும் தொண்டு செய்தார். இவர் வட புலத்து மன்னர்களை நெல்வேலிப் போரில் தோற்கடித்தார். சுந்தரர் இவரை ‘‘நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்” என்று குறிப்பிடுகிறார்.
11. எப்படி நடைபெறும் அன்னாபிஷேகம்?
ஐப்பசி மாத பெளர்ணமியில் சிவபெருமானுக்கு சுத்த அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுவது மிக மிக விசேஷமானதாகும். சுத்தமான பச்சரிசியை குழைவாக வடித்து, அதை நன்கு ஆற வைத்து, பிறகு அந்த அன்னத்தைக் கொண்டு, சிவ பெருமானின் லிங்கத் திருமேனி முழுவதையும் மூடி விடுவார்கள். வெண்மையான திருமேனியாய், அன்னத்தைப் போர்த்திக்கொண்டு அழகுடன் காட்சி தருவார் சிவபெருமான்.
அதோடு காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைக் கொண்டு சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். ஐப்பசி மாத பெளர்ணமியில் நடைபெறும் இந்த அபிஷேகத்திற்கு மகா அன்னாபிஷேகம் என்று பெயர். அன்னாபிஷேகம் அன்று சிவ பெருமானுக்கு சாத்தப்படும் ஒவ்வொரு அன்னத்திலும் ஒரு சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம். இதனால் ஒரு அன்னாபிஷேகம் தரிசனம் கண்டால், கோடி சிவ லிங்கங்களை ஒரே நேரத்தில் தரிசித்த மகா புண்ணியம் கிடைக்கும். அதோடு அவரின் தலைமுறைக்கே அன்ன தரித்திரம் என்பது ஏற்படாது.
12. புண்ணியம் சேரும்
பெரும்பாலும் அன்னாபிஷேகம், அனைத்து சிவன் கோயில்களிலும் மாலை நேரத்திலேயே நடைபெறும். ஆனால், சில கோயில்களில் காலையில் நடத்தப்படுவது உண்டு. இந்த ஆண்டு சுக்கிரனுக்குரிய பரணி நட்சத்திரம் வரும் நாளில் அன்னாபிஷேகம் நடத்தப்படுவது மிகமிக விசேஷமானதாகும். இதனை கண்குளிர தரிசிப்போருக்கு பாவங்கள் தொலைந்து, புண்ணியங்கள் சேரும். தரித்திரம் நீங்கி, செல்வங்கள் செழிக்கும். குடும்பத்தில் அமைதியும், அன்பும் கிடைக்கும். இந்த நாளில் அன்னாபிஷேகத்திற்கு பொருட்கள் வாங்கிக் கொடுத்தாலும், அன்னாபிஷேகத்தை தரிசித்தாலும் மிகப் பெரிய புண்ணியம் வந்து சேரும்.
13. பிட்சாடனராக சிவபெருமான்
அன்னாபிஷேகம் தோன்றியதற்கு ஒரு புராணக் கதை உண்டு. ஒருமுறை நான்முகனின் ஐந்து தலைகளில் ஒன்றை சிவபெருமான் கொய்து விட்டார். அந்தத் தலை சிவபெருமான் கையோடு ஒட்டிக் கொண்டு கபாலமாக மாறியது. கபாலம் என்ன செய்தும் அவரை விட்டு நீங்கவில்லை. அவர் நான்முகனின் தலையைக் கொய்த பழிக்கு ஆளானார். கையை விட்டு கபாலம் நீங்க வேண்டும் என்று சொன்னால், அந்தக் கபாலம் பிச்சையால் நிரம்ப வேண்டும். எனவே, அவர் பிச்சாடனர் கோலத்தில் கையில் கபாலத்தோடு இருந்தார். இறைவனாக இருந்தாலும் சில நேரங்களில் இப்படிப்பட்ட பிரம்மஹத்தி தோஷங்கள் பிடித்துக் கொள்ளும். ஊர் ஊராக கபாலத்தோடு திரிந்த பிச்சாடனர் புண்ணியத்தலமான காசிக்குச் சென்றார்..
14. அன்னபூரணியும் அன்னாபிஷேகமும்
காசியில் அன்னபூரணியாக அம்பாள் சிவபெருமானின் வருகைக்காக கையில் அன்ன பாத்திரத்தோடு காத்திருந்தாள். சிவபெருமான் தன்னுடைய கபாலத்தை அன்னபூரணியிடம் நீட்ட, உலகத் தாயான அன்னபூரணி, அன்பால், நிறைந்த மனதோடு, அன்னத்தை கபாலத்தில் இட, கபாலம் பூரணம் ஆகியது. அன்னத்தால் கபாலத்தை பூரணம் செய்தவள் என்பதால் அவளுக்கு அன்னபூரணி என்ற திருநாமம்.
அன்னபூரணியைத் தரிசித்தாலும், அன்னாபிஷேகத்தைத் தரிசித்தாலும் அவர்களுக்கு உணவுப்பஞ்சம், பசி, பட்டினி என்பது வருவதில்லை. உலகுக்கு படி அளந்த ஈசனுக்கு, அவருடைய ஒரு பாகமான உமையம்மை அன்னமிட்டாள். பிரம்மனின் கபாலமும் கீழே விழுந்ததோடு சிவபெருமானை பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது. அன்னபூரணி சிவபெருமானுக்கு அன்னமிட்ட தினம் ஐப்பசி மாதம் பௌர்ணமி ஆகும். எனவே, அன்றைய தினம் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படு வதாக ஐதீகம்.
15. எப்படி நடக்கும்?
முதலில் ஐந்து வகைப் பொருட்களைக் கொண்டு லிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பின்பு நிறைவாக அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. பொதுவாக வெறும் அன்னத்தால் மட்டும் அபிஷேகம் செய்வது வழக்கம். இப்போது அப்பம், வடை உள்ளிட்ட பலகாரங்களையும் காய்கறிகள் கொண்டும் அலங்காரம் செய்கிறார்கள்.அன்னத்தை அபிஷேகம் செய்யும்போது, சிவலிங்கத் திருமேனியில் மேலிருந்து அன்னத்தை வைத்துக் கொண்டே வருவார்கள். சிவலிங்கத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறார்கள். கீழ் பகுதி பிரம்ம பாகம், நடுப்பகுதி விஷ்ணு பாகம், மேற்பகுதி சிவ பாகம். அன்னாபிஷேகம் சிவலிங்கத் திருமேனியில் எல்லா பாகங்களுக்குமாக முழுமையாக செய்யப்படுகிறது.
16. ஒவ்வொரு அன்னமும் லிங்கமே
ஒவ்வொரு அன்னப் பருக்கையும் சிவலிங்கம் என்கிறது சிவபுராணம். அன்னத்தின் வடிவில் லிங்கம், நம் உள்ளே சென்று நம் ஆத்மாவையும் உடலையும் ஒருசேரக் காக்கின்றது என்பது இதில் உள்ள ஐதீகம். அன்னாபிஷேகம் பிரசாதத்தின் ஒரு பகுதி கோயில் குளத்தில் போடப்படுகிறது.
இதன் மூலம் நீரில் வாழும் புழு, பூச்சிகள் மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் என அனைத்திற்கும் உணவு கிடைக்கிறது. சாஸ்திரப்படி வெறும் அன்னத்தை சாப்பிடக்கூடாது என்பதால், சாதத்துடன் தயிர் அல்லது சாம்பார் சேர்த்து பிரசாதமாக எல்லோருக்கும் கொடுக்கிறார்கள். ஊரெல்லாம் கூடி ஒருநாள் சிவலிங்கத் திருமேனியில் அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை, தங்களுடைய பிரசாதமாக (உணவாக) எந்த ஏற்றத்தாழ்வும் இல்லாமல் உண்ண வேண்டும் என்கின்ற சமூக சித்தாந்தமும் இந்த விழாவில் கலந்து இருக்கிறது.
17. என்ன பலன்?
அன்னாபிஷேகத்தைக் கண்டவர் வாழ்வில் இன்பமும் நிம்மதியும் உண்டாகும். அதனால்தான், ‘சோறு கண்ட இடம் சொர்க்கம்’ என்ற சொல் வழக்கு உண்டானது. அன்னாபிஷேகத்தைக் கண்டாலோ, அன்று ஆலயத்துக்கு அரிசி தானம் அளித்தாலோ அவர்கள் ஈரேழு தலைமுறைகளும் பசியின்றி வாழ்வாங்கு வாழ்வார்கள் அன்னாபிஷேகத்தின்போது உங்களால் முடிந்த அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள் என எதை வேண்டுமானாலும் கோயிலுக்கு வழங்கலாம். இந்த அன்னப் பருக்கையில் ஒன்றை மட்டும் உட்கொண்டாலே தீராத நோயும் தீரும், ஆரோக்கியம் கூடும், குழந்தைப் பேறு கிடைக்கும். உணவால் உண்டான நோய்கள் தீரும். தேகம் வலிமை பெற்று ஆரோக்கியம் வளரும்.
18. அன்ன தோஷம் ஏன் ஏற்படுகிறது.?
அன்ன தோஷம் என்பது கடுமையான தோஷம். அது ஏன் ஏற்படுகிறது ?
* அன்னத்தின் அருமையை உணராததால் ஏற்படுகிறது.
* அன்னத்தை அலட்சியம் செய்வதால் ஏற்படுகிறது.
* அன்னத்தை வீசியெறிதல், வீணாக்குதல், சாக்கடையில் போடுதல், பிறருக்குத் தராமல் கெட வைத்து யாருக்கும் பயனில்லாதபடி செய்வதால் ஏற்படுகிறது.
* பசியுள்ளவர்களுக்கு சாப்பாடு போடாமல் செய்வதால் ஏற்படுகிறது.
* பசிக்கப் பசிக்க வேலை வாங்குபவர்கள் சாப்பிடக் கூட விடாமல் செய்வதால் ஏற்படுகிறது.
* பந்தியில் உணவு சாப்பிட அமர்ந்தவர்களை சாப்பிட விடாமல் சண்டை போட்டு விரட்டி அடிப்பதால் ஏற்படுகிறது.
இப்படி பல காரணங்களால் அன்ன தோஷம் ஏற்படும்.
19. அன்ன தோஷம் என்ன செய்யும்?
* பசியிருந்தும் சாப்பிட முடியாது.
* ஒரு வாய் உணவுக்காக அலைய வேண்டியிருக்கும்.
* எதுவும் சாப்பிட முடியாதபடி நோய்கள் குடிகொள்ளும்.
* வீட்டில் சாப்பிட உட்காரும் நேரம் சண்டை நடந்து சாப்பிட முடியாதபடி அன்னம் வீணாகும்.
* வீட்டில் நிம்மதி, அமைதி இருக்காது.
அன்ன தோஷத்திற்கு ஏழை, பணக்காரன் வித்தியாசம் தெரியாது. இந்த தோஷம் ஒருவருக்கு வந்து விட்டால் வயிறு எப்போது மே வாடிய நிலையில் தான் காணப்படும். முகம் பொலிவிழந்து விடும். மனதில் எப்போதும் சோகம் குடிக்கொண்டிருக்கும். அன்ன தோஷத்திலிருந்து விடுபட அன்னாபிஷேகம் தரிசிக்க வேண்டும். உதவ வேண்டும். அன்னாபிஷேக அன்னத்தை
பிரசாதமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
20. கங்கைகொண்ட சோழபுரத்தில் அன்னாபிஷேகம்
தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம் கொண்ட கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில். இங்குள்ள லிங்கம் 13.5 அடி உயரம், 62 அடி சுற்றளவு கொண்டது.இங்குள்ள நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்த்தப்பட்டுள்ளது. இந்த சுண்ணாம்பு கல் நந்தியில் விழும் சூரிய ஒளி கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதிபலிக்கும்.
இங்குள்ள சிவனுக்கு முதலில் மகா அபிஷேகம் நடந்த நிலையில் அன்ன அபிஷேகம் தொடங்கும்.மகா அபிஷேகத்தை ஒட்டி பிரகதீஸ்வரருக்கு ருத்ர ஹோமம், மகா அபிஷேகம்
நடைபெறும்.இந்த அபிஷேகத்தில் கோயிலில் உள்ள பிரகன்நாயகி, மகிஷாசுரமர்த்தினி, சண்டிகேஸ்வர் ஆகியோருக்கு சந்தனம், பால், தயிர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், விபூதி, பழங்கள் உள்ளிட்ட
21 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. அதன் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படும்.
21. ஆயிரம் கிலோ அன்னம்
மிகவும் பிரமாண்டமாக இந்த கோயிலில் இன்று 100 மூட்டை அரிசி அதாவது 1000 கிலோ சாதம் வடித்து அன்ன அபிஷேகம் செய்யப்படும். பின்னர், லிங்கத்தின் மீது சாற்றப்பட்ட சாதத்தைக் களைந்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவர். தஞ்சாவூர் பெரிய கோயிலிலும் 1,000 கிலோ அரிசியைக் கொண்டுசமைத்த சாதம் மற்றும் வெண்டைக்காய், புடலங்காய், கேரட், கத்திரிக்காய், முட்டைகோஸ், முள்ளங்கி, உருளைக்கிழங்கு,பீட்ருட், அவரைக்காய் உள்ளிட்டகாய்கள், ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசிப்பழம் உள்ளிட்ட பழங்கள் ஆகியவற்றைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு, ஆராதனைகள் நடைபெறும்.
கோவை கோட்டை சங்கமேஸ்வரசுவாமி கோயிலில் ஐப்பசி மாத பெளர்ணமி மாலை 6 மணிக்கு நூறு கிலோ அரிசியில் நெய்வேத்தியம் செய்து அன்னத்தினாலும், காய்கறிகள், பழவகைகளாலும், இனிப்புகளாலும் சங்கமேஸ்வரர் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் பெய்து தீபாராதனை நடத்துவார்கள். பின்னர், இரவு 8 மணிக்கு சங்கமேசுவர பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்ட அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. அனைத்து சிவன் கோயிலும் சிறப்பு வழிபாடு நடக்கும். இனி இதே மாதம் வரும் காலபைரவாஷ்டமி குறித்து சில சிறப்புக்களைக் காண்போம்.
22. கால பைரவாஷ்டமி
பெருமாளுக்கு உரிய அஷ்டமி திதியை கோகுலாஷ்டமி என்று கொண்டாடுகிறோம். துர்க்கைக்கு உரிய அஷ்டமி திதியை துர்காஷ்டமி என்று கொண்டாடுகின்றோம். அதுபோல் சிவ பெருமானுக்கு உரிய அஷ்டமி திதியை கால பைரவ அஷ்டமி என்று மிகச் சிறப்பாக அனுசரிக்கிறோம். இந்த நாளில் விரதம் இருந்து சிவபெருமானை வணங்குவது சாலச் சிறந்த நன்மையைத் தரும்.
இந்த நாட்களில் காலையில் சிவபெருமானையும் மாலையில் சூரிய அஸ்தமன வேளையில் பைரவரையும் சென்று வழிபட வேண்டும். அங்கு நடக்கும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொள்ள வேண்டும். இப்படி தரிசனம் செய்வதன் மூலமாக நமக்கு மிகச்சிறந்த நன்மைகள் கிடைக்கும். சனியினுடைய தோஷங்கள் விலகும். ஆயுள் தோஷங்களும் விலகும். ஆயுள் விருத்தி உண்டாகும். சுபகாரியத் தடைகள் தூள் தூளாகும். கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமியை கால பைரவ அஷ்டமி என்று அழைக்கின்றோம். கால பைரவ அஷ்டமி, பாவங்களை எல்லாம் தீர்ந்து விடும்.
23. கால பைரவர்
சிவபெருமான் உருவத்திலும், அருவத்திலும்,அருஉருவத்திலும் காட்சி தருவார். இதனை அருவம், உருவம், அருவுருவம் என்றும், பலவாறாக சைவர்கள் அழைக்கின்றனர். அவருடைய திருமேனி வடிவங்கள் 64 என்பர். 64 திருமேனி வடிவங்களில் ஒன்று வைரவர் எனப்படும் பைரவர். ஆனந்த பைரவராக உலகைப் படைக்கிறார். கால பைரவர் ஆக உலகைக் காக்கிறார். காலாக்கினி பைரவராக உலகை பிரளய காலத்தில் ஒடுக்குகின்றார்.
கால பைரவர், சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர்; சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர்; பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் திகம்பர ரூபமாய்க் காட்சி தருபவர். கால பைரவர் சனியின் குருவாகவும், பன்னிரண்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் கூறப்படுகிறார். கார்த்திகை மாதத்தில் வரும் அஷ்டமிதான் காலபைரவாஷ்டமி. சிவனுக்கு ரிஷப வாஹனம் இருப்பது போல பைரவருடைய வாகனமாக நாய் அமைந்திருக்கிறது. அதனால் நாய்களுக்கு பைரவர் என்ற பெயர் உண்டு.
24. எட்டு திசைகளுக்கு அஷ்ட பைரவர்கள்
அட்ட பைரவர்கள் என்பவர்கள் எண் திசைகளுக்கு ஒன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் ஆவார். சில கோயில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும் இந்த பைரவர்கள் காட்சிதருகிறார்கள்.
யார் யார் இந்த பைரவர்கள். அவர்கள் பெயர் என்னென்ன...
* அசிதாங்க பைரவர்
* ருரு பைரவர்
* சண்ட பைரவர்
* குரோதன பைரவர்
* உன்மத்த பைரவர்
* கபால பைரவர்
* பீக்ஷன பைரவர்
* சம்ஹார பைரவர்
சிவனுக்கு அட்ட வீரட்ட தலங்கள் உண்டு. அதைப்போல அஷ்ட பைரவ தலங்களும் தமிழ்நாட்டில் பிள்ளையார்பட்டி அருகில் உண்டு.
25. பைரவர்களின் திருநாமங்கள்
கங்கைக் கரையில் 64 கட்டங்களில் 64 பைரவர்கள் உள்ளனர்.
1. நீலகண்ட பைரவர் , 2. விசாலாக்ஷ பைரவர், 3. மார்த்தாண்ட பைரவர், 4. முண்டனப்பிரபு பைரவர், 5. ஸ்வஸ்சந்த பைரவர், 6. அதிசந்துஷ்ட பைரவர், 7. கேர பைரவர், 8. ஸம்ஹார பைரவர், 9. விஸ்வரூப பைரவர், 10. நானாரூப பைரவர்,11. பரம பைரவர், 12. தண்டகர்ண பைரவர், 13. ஸ்தாபாத்ர பைரவர், 14. சீரீட பைரவர், 15. உன்மத்த பைரவர், 16. மேகநாத பைரவர், 17. மனோவேக பைரவர் 18. க்ஷத்ர பாலக பைரவர், 19. விருபாக்ஷ பைரவர், 20. கராள பைரவர்,21. நிர்பய பைரவர், 22. ஆகர்ஷண பைரவர், 23. ப்ரேக்ஷத பைரவர், 24. லோகபால பைரவர், 25. கதாதர பைரவர், 26. வஞ்ரஹஸ்த பைரவர், 27. மகாகால பைரவர், 28. பிரகண்ட பைரவர், 29. ப்ரளய பைரவர், 30. அந்தக பைரவர், 31. பூமிகர்ப்ப பைரவர்,26. வெவ்வேறு பெயர்கள்
32. பீஷ்ண பைரவர், 33. ஸம்ஹார பைரவர், 34. குலபால பைரவர், 35. ருண்டமாலா பைரவர், 36. ரத்தாங்க பைரவர், 37. பிங்களேஷ்ண பைரவர், 38. அப்ரரூப பைரவர், 39. தாரபாலன பைரவர், 40. ப்ரஜா பாலன பைரவர், 41. குல பைரவர், 42. மந்திர நாயக பைரவர், 43. ருத்ர பைரவர், 44. பிதாமஹ பைரவர், 45. விஷ்ணு பைரவர், 46. வடுகநாத பைரவர், 47. கபால பைரவர், 48. பூதவேதாள பைரவர், 49. த்ரிநேத்ர பைரவர், 50. திரிபுராந்தக பைரவர், 51. வரத பைரவர், 52. பர்வத வாகன பைரவர், 53. சசிவாகன பைரவர், 54. கபால பூஷண பைரவர், 55. ஸர்வவேத பைரவர், 56. ஈசான பைரவர், 57. ஸர்வபூத பைரவர், 58. ஸர்வ பூதபைரவர், 59. கோரநாத பைரவர், 60. பயங்க பைரவர்,61. புத்திமுக்தி பயப்த பைரவர், 62. காலாக்னி பைரவர், 63. மகாரௌத்ர பைரவர், 64. தக்ஷிணா பிஸ்திதி பைரவர்.
27. பைரவர் என்ற பெயர் ஏன் வந்தது?
பைரவர் என்ற பெயர் ஏன் வந்தது என்று பார்க்க வேண்டும். பைரவர் என்கிற பெயர் பீரு என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டது. பீரு என்றால் பீதி, அச்சம் என்று பொருள். எதிரிகளுக்கு பீதியைத் தரக்கூடியவர். ஆனால் அதே நேரம் தன்னை அண்டிய பக்தர்களுக்கு அபயம் தந்து அருள் பாலிப்பவர். மேலும் பைரவர் என்ற சொல்லுக்கு படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலையும் ஆற்றுபவர் என்ற பொருளும் இருக்கிறது.
உலகத்தை எல்லாம் அழித்து, தன்னுள் ஒடுக்கிக் கொள்பவர் என்கிற பொருளும் உண்டு. இந்த முத்தொழிலையும் முறையே பரணம், ரமணம், வமனம் என்று சொன்னார்கள். பரணம் என்பது படைப்பு. ரமணம் என்பது காத்தல் .வமனம் என்பது அழித்தல். அசுர சக்திகள் வேறு எந்த சக்தியாலும் கட்டுப்படுத்த முடியாதபடி ஓங்கி நிற்கும் போது சிவபெருமானே பைரவராக வந்து அவற்றையெல்லாம் அழித்து மக்களை காக்கிறார். வஜ்ரம்போல மக்களுக்கு பாதுகாப்பாக விளங்குகிறார் என்பதால் அவரை வஜ்ரமூர்த்தி அல்லது வைரவ மூர்த்தி என்றும் அழைப்பதுண்டு.
28. பைரவ தீபம்
சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் நிறைவு வழிபாடு பைரவருக்கு நடைபெறும் ஒவ்வொரு மாதமும் வருகின்ற தேய்பிறை அஷ்டமி தினத்தில் பைரவர் கோயிலுக்கு (அதாவது சிவாலயத்தில் உள்ள பைரவர் சந்நதிக்குச் சென்று) வணங்கி வழிபாடு நடத்துவதன் மூலமாக எல்லையில்லாத நன்மைகளைப் பெறலாம். அன்று பைரவர் சந்நதியில் பிரத்தியேகமாக தீபம் ஏற்ற வேண்டும்.
அந்த தீபத்துக்கு பைரவ தீபம் என்றே பெயர். சிறு துணியில் மிளகை சிறு மூட்டையாகக் கட்டி நல்லெண்ணெய் அகல் தீபத்தை ஏற்றி வழிபட எல்லா வளமும் பெருகும். தேங்காய் மூடியில் நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம். அதேபோல் பூசணிக்காயை மத்தியில் இரண்டாகப் பிளந்து அதனுள் எண்ணெய் அல்லது நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம். இதை முறையாக பெரியோர்களிடம் கேட்டுச் செய்ய வேண்டும். இந்த தீபத்தின் வெளிச்சத்தில் அச்சம் விலகி ஓடும் மனதில் தெளிவும் தைரியமும் பிறக்கும் பிறகு வெற்றி தானே வந்தடையும்.
29. காயத்ரி மந்திரங்கள்
ஜாதகத்தில் 6ம் இடம் கெட்டுவிட்டால் பகையும் நோயும் கடனும் வளரும். எட்டாம் இடம் கெட்டுவிட்டால் ஆயுள் தோஷம் ஏற்படும். சனி - செவ்வாயின் தீய ஆதிக்கம் அந்த இடங்களுக்கு இருந்தால் வெட்டு, குத்து, என்று பயங்கரமாக இருக்கும். எதிரிகளிடம் இருந்து காத்துக்கொள்ள, தினமும் பைரவர் காயத்ரி மந்திரங்களை சொல்லி வரலாம். பைரவரை முறைப்படி பக்தி சிரத்தையுடன் வணங்கி வர, தீராத வினைகள் எல்லாம் தீர்ந்து விடும்.
1. ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே !
சூல ஹஸ்தாய தீமஹி !
தன்னோ பைரவ : ப்ரசோதயாத் !!
2.ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்
3.ஓம் திகம்பராய வித்மஹே
தீர்கதிஷணாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்
இந்த மந்திரங்களை ஜெபிப்பதாலும், அஷ்டமியில் பைரவரை வழிபடுவதாலும் சகல கிரக தோஷங்களும் நீங்கும். தடைகள் விலகும். பொய் சொல்லுதல், அடுத்தவர் குடும்பத்தைக் கெடுத்தல், பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளுதல், ஒழுக்கக் குறைவாக இருத்தல், பிறர் சொத்துக்களை அபகரிக்க நினைத்தல், முதலிய குற்றங்களோடு பைரவ வழிபாடு செய்தால், அது செய்பவர்களுக்கே வினையாக முடியும். பைரவரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். எனவே, பைரவ வழிபாடு என்பது எச்சரிக்கையோடும், ஒழுக்கத்தோடும் செய்ய வேண்டிய வழிபாடு ஆகும்.
30. காலபைரவாஷ்டமி என்ன செய்ய வேண்டும்?
காலபைரவாஷ்டமி நாளில் சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த பூஜைகளில் கலந்து கொண்டால் மன அழுத்தம், பயம் நீங்கி, தைரியமும் தன்னம்பிக்கையும், வீரியமும் வேகமும், உண்டாகி, சகல சௌபாக்கியங்களும் அடைவார்கள். சிவபெருமான் அபிசேகப்பிரியன். பைரவர் சிவ அம்சம் என்பதால், கால பைரவருக்கு சந்தன அபிஷேகம் சிறப்பானது. உக்கிர மூர்த்தியான இவரின் கோபம் தணிக்க சந்தனம் அபிஷேகம் செய்ய வேண்டும் என்பார்கள். கருப்பு அல்லது சிவப்பு வஸ்திரம் சாத்தி, சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடலாம். மிளகு தீபமும் நல்லெண்ணெய் தீபமும் சிறப்பானது.
எஸ். கோகுலாச்சாரி
 
 
 
   