Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குழந்தைகள் வித்யா யோகம் பெற என்ன செய்யலாம்?

பெற்றோர்கள் அனைவரும் நம் குழந்தை அதிக மதிபெண் பெற்று அறிவாளியாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. படிப்பிற்காக குழந்தைகளுக்கு என்ன செய்யலாம் என்ற சிந்தனை உங்களை சிந்திக்க வைத்துக் கொண்டே இருக்கும்.கல்வியை ஆரம்பக் கல்வி, உயர்கல்வி, சிறப்புக்கல்வி எனச் சொல்லலாம். ஆரம்பக் கல்வியே சிலருக்கு தடைப்படும் அமைப்புகள் உண்டு.இரண்டாம் பாவத்தில் ராகு - கேது என்ற சர்ப்ப கிரகமோ சனி கிரகமோ இருந்தாலும் பார்த்தாலும் ஆரம்பக் கல்வி தடைபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ராகு - கேது இரண்டாம் பாவத்தில் இருந்தால் ராகு - கேது பரிகாரத் தலங்களுக்கு சென்று நான்கு வருடங்களுக்கு ஒரு முறை சென்று சர்ப்ப பரிகாரம் செய்து கொள்ளுங்கள்.

இரண்டில் சனி இருந்தால் பேச்சில் தடித்த வார்த்தைகளும் அமங்களமான வார்த்தைகளும் கண்டிப்பாக வரும். ஆகவே, அவர்களை நல்வழிப்படுத்தி படிக்க முடியாத ஏழை குழந்தைகளுக்கு உங்கள் குழந்தைகள் மூலம் உதவி செய்யுங்கள். இப்படி செய்வதால் சனி பகவானால் ஏற்பட்ட தடைகள் விலகும். பொதுவாகவே, இரண்டில் சனி பகவான் இருந்தாலும், ராகு - கேது தோஷம் இருந்தாலும் பிள்ளைகளுக்கு படிப்பை விட விளையாட்டில் கவனம் அதிகமாக இருக்கும். ஆகவே, பெற்றோர்கள் குழந்தைகளை கவனித்து அவர்களுக்கு தேவையானதை ஆவண செய்வது கடமையாகும்.

குழந்தைகள் படிக்க என்ன செய்யலாம்?

கடலூர் மாவட்டம், திருவந்திபுரம் என்ற ஊர் உள்ளது. இங்கு தேவநாத சுவாமி ஆலயம் உள்ளது. இங்கு திருவோணம் நட்சத்திரத்தன்று புத்தகம், பேனா, ஏலக்காய் மாலை, தேன் போன்றவைகளை சமர்பித்து வழிபாடு செய்துவர, மாணவர்களுக்கு கல்வியில் சிறந்து விளங்குவதற்கான வழிகள் உண்டாகும். ஹயக்ரீவர், சரஸ்வதியின் குருவாக இருந்தவர். அவரிடம் உங்கள் கல்விக்கான விண்ணப்பங்களை வையுங்கள்.

ஞாபக சக்தி பெருக என்ன செய்யலாம்?

ஒவ்வொரு குடும்பத்திற்கும் குலதெய்வம் என்று இருக்கும். அந்த தெய்வத்தின் பெயரை தினமும் 27 முறை உச்சரித்தோ அல்லது 27 முறை பேப்பரில் எழுதியோ வழிபாடு செய்து அந்தப் பேப்பரை உங்களின் குலதெய்வம் கோயிலில் சமர்பிக்கலாம். குழந்தைகளின் பெயருக்கு உள்ள தெய்வத்தை தினமும் வழிபடுதலும் நன்மைகள் உண்டாகும்.

ராசியின் அடிப்படையில் குழந்தையின் கல்விக்காக யாரை வழிபாடு செய்யலாம்?

மேஷம்: ராகு பகவானை ராகு காலத்தில் வழிபட தடைகள் விலகி கல்வியை பெறலாம்.

ரிஷபம்: வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபட கல்வி சிறக்க வழிகள் உண்டாகும்.

மிதுனம்: விநாயகரை அறுகம்புல் கொண்டு வழிபட தடைகள் விலகும்.

கடகம்: ஹயக்ரீவரை புதன்கிழமை தோறும் வழிபட கல்வி சிறக்க வாய்ப்புகள் அதிகம்.

சிம்மம்: பெருமாளையும் பத்மாவதி தாயாரையும் வழிபட கல்வியில் நாட்டம் அதிகரிக்கும்.

கன்னி: நவகிரகங்களில் சூரியனுக்கும் சனிக்கும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆகிய இரு தினங்களில் சனிக்கிழமை அர்ச்சனை செய்ய கல்வி சிறப்புறும்.

துலாம்: சரஸ்வதியை வழிபட நற்கல்வி உண்டாகும்.

விருச்சிகம்: வியாழன் தோறும் நவகிரகத்தில் உள்ள வியாழனை வழிபட கல்வி சிறக்கும்.

தனுசு: மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட கல்வியில் கவனம் உண்டாகும்.

மகரம்: குரு ஹோரையில் நவ கிரகங்களில் சர்ப்பங்களை வழிபட கல்வியில் ஈர்ப்பு உண்டாகும்.

கும்பம்: மாரியம்மனை வழிபாடு செய்ய கல்வி பெற வழிகள் உண்டாகும்.

மீனம்: கபாலீஸ்வரரை அல்லது பிரகதீஸ்வரரை அல்லது தட்சிணாமூர்த்தியை வழிபட கல்வியில் முன்னேற்றம் உண்டு.