அனந்தகோடி கல்யாண குணங்கள் கொண்ட பரம்பொருளாகிய மஹாவிஷ்ணுவை, ஆழ்வார்களும், மகான்களும், ரிஷிகளும் நேரில் கண்டுகளித்தனர். நம்மைப் போன்றவர்கள் வணங்கி அருள் பெற இப்பூவுலகில் ஸ்ரீமன் நாராயணன் சில தலங்களில் அர்ச்சாரூபமாய் விளங்கி சேவை சாதிக்கின்றார். அதில் செந்தலை எனும் இத்தலமும் ஒன்று. கிருதயுகத்தில் பிரம்மாவும், துவாபரயுக ரிஷிகளும், பிருகத்தச்சனும், கலியுகத்தில் சந்திரலேகை என்ற தேவதாசியும் பூஜித்துள்ளனர். இது பிரம்மான்ய க்ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. ஆதிகாலத்தில் சந்திரலேகை சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் மருவி செந்தலை என்று மாறிவிட்டது. இக்கோயிலில் ஸ்ரீபரிமளவல்லி தாயார் சமேத ஸ்ரீ அனந்த பத்மநாப பெருமாள் அருள்பாலிக்கிறார். இங்கு ஒரு சமயம் ஸ்ரீ அனந்த பத்மநாப பெருமாள் தனக்கு தாகம் ஏற்பட்டபோது அதனை தீர்க்க ஆதிசேஷனை ஏவினார். பெருமாளின் மேற்குப் புறத்தில் ஆதிசேஷன் பூமியை கொத்தியபோது தண்ணீர் பொங்கி வந்தது. அதிலிருந்து தண்ணீர் கொண்டுவந்து பெருமாளின் தாகம் தீர்த்தார், ஆதிசேஷன். அந்த இடத்தில் இன்றும் தீர்த்தக் கிணறு உள்ளது. இது அனந்த கிணறு என்று வழங்கப்படுகிறது. இங்கு பெருமாள் அதிசேஷன் உடல்மீது இல்லாமல் ஜபக் கோலத்தில் தவம் மேற்கொண்டு அருள்பாலிக்கிறார்.
இக்கோயிலில் பெருமாள் 7 அடி 9 அங்குல உயரத்தில் அமர்ந்த கோலத்திலும், ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார் 5 அடி 11 அங்குல உயரத்திலும் அமைந்துள்ளனர். ஸ்ரீ பரிமளவல்லி தாயார் அமர்ந்த கோலத்தில் தனிச் சந்நதியில் அருள்பாலிக்கிறார். கோயிலின் ராஜகோபுரம் 25 அடி அகலமும், 60 அடி உயரமும் உடையது. மூலவரின் சந்நதி கிழக்கு முகமாக அமைந்துள்ளது. முதல் மண்டபத்தில் சொர்க்கவாசல், கருடாழ்வார், மகா மண்டபத்தில் ஆஞ்சநேயர், விஷ்வக்சேனர், மணவாளர், உடையவர் சந்நதிகளும், இரட்டை நாகம் கொண்ட சிவஸ்வரூபம், நர்த்தன கிருஷ்ணர் போன்றவையும் உள்ளன. பெருமாளின் திருத்தொண்டர்களில் ஒருவரான விஷ்வக்சேனர். சேனை முதலியார் என்று அழைக்கப்படுகிறார். சிவாலயங்களில் விநாயகருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் இவருக்கு இங்கு தரப்படுகிறது. இவரை வணங்கிவிட்டுதான் பெருமாளை வழிபடவேண்டும்.
இக்கோயிலில் அமைந்துள்ள அனந்த கிணற்றில் குளித்து பெருமாளை தரிசனம் செய்தால், நாகதோஷம் நீங்குகிறது. மழலை பாக்கியம் கிட்டுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு வைகுண்ட ஏகாதசி அன்று நாகம் ஒன்று கருடபகவான் மீது அமர்ந்து தரிசனம் தந்தது. அதனை விரட்ட கோயில் நிர்வாகிகள் முற்பட்ட போது ஒரு பெண்ணிற்கு அருள் வந்து ``நான் அர்த்தஜாம பூஜை வரை இங்கு இருப்பேன்’’ என்று கூறினார். இதனை ஏற்று இரவு பால்வைத்து வழிபட்டு கோயில் கதவை சாத்தி சென்றனர். மறுநாள் நாகம் சட்டை உரித்து சென்றது மட்டுமே காணப்பட்டது. இக்கோயிலில், ஆடிப்பூரம், நவராத்திரி, தனுர்மாத பூஜை, வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீ ராமநவமி, அட்சய திருதியை போன்ற வைபவங்கள் விசேஷமாக நடைபெறும். கி.பி. 6 மற்றும் 7ம் நூற்றாண்டுகளில் விஜயநகர மன்னர்களின் தலைநகரமாக இது திகழ்ந்துள்ளது. சமீபத்தில்தான் மிகச் சிறப்பான முறையில் கும்பாபிஷேகம் நிகழ்ந்தேறியது. ஆலயத் தொடர்புக்கு: 9443287288.
எப்படி செல்வது?: தஞ்சை மாவட்டம், திருவையாறு வட்டத்தில் திருக்கண்டியூர் - திருக்காட்டுப்பள்ளி சாலையில், குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் பசுமையான வயல்கள், தென்னந் தோப்புகளுக்கிடையே இத்தலம் அமைந்துள்ளது.