Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜோதிட ரகசியங்கள்: காதல் திருமணம் யாருக்கு?

காதல் திருமணம் யாருக்கு?

சுக்கிரன் அல்லது ஏழாம் இடத்து அதிபதியுடன் கேது சேர்ந்திருந்தால் காதல் திருமணம்தான். இந்த அமைப்பை உடையவர்கள் தங்களின் காதல் விஷயத்தை மிகவும் ரகசியமாக வைத்திருப்பார்கள். இவர்களின் திருமணமும் ரகசியமான திருமணமாகவே பெரும்பாலும் அமைந்து விடும். லக்னாதிபதியும், ஏழாம் இடத்து அதிபதியும் பார்த்தாலோ, சேர்ந்தாலோ பரிவர்த்தனை பெற்றாலோ காதல் திருமணம்தான். ஒன்பதாம் பாவம், ஒன்பதாம் அதிபதி பாபகர்த்தாரி யோகம் பெறுவது (அதாவது இருபுறமும் சனி, ராகு, கேது, செவ்வாய் போன்ற கிரகங்கள் இருப்பது) கேது ஏழில் இருப்பது போன்ற கிரக அமைப்பில் உள்ளவர்களுக்கு காதல் திருமணம் கலப்பு திருமணமாக அமையும்.

ஜோதிட வருடங்கள்

ஜோதிட சாஸ்திரத்தில் பலவிதமான ஜோதிட வருடங்கள் இருக்கின்றன. அதில் மிக முக்கியமான வருடங்கள் `சௌரமானம்’ என்னும் வருடமும் `சாந்தரமானம்’ என்னும் வருடமும். பெரும்பாலான பண்டிகைகள் விழாக்கள் அனைத்தும் சாந்திரமான முறையில்தான் கொண்டாடப்படுகின்றன. சௌரமான முறை என்பது சூரியனை அடிப்படையாகக் கொண்ட முறை. சூரியனின் உதயம் முதல், மறுநாள் உதயம் வரை ஒரு பாகை அடிப்படையில் 360 டிகிரி கொண்டது சௌரமான வருடமாகும். சூரியன் சஞ்சாரம்தான் இதன் அடிப்படை.

சாந்தரமான வருடம் என்பது சந்திரனை அடிப்படையாகக் கொண்டது. திதியின் அடிப்படையில் சந்திரனின் நாட்கள் அமையும். வளர்பிறை பிரதமை திதி முதல் அமாவாசை வரை ஒரு சந்திர மாதமாகும். 12 சந்திர மாதங்கள் கொண்டது ஒரு சந்திர வருடமாகும். இது சூரிய வருடத்தைவிட கொஞ்சம் குறைவாக வரும். 354 நாட்கள் வரும். அதனால்தான் சில பண்டிகைகள் மாதத்தின் முன்னாலோ இல்லை பின்னாலோ வந்துவிடுகிறது. உதாரணமாக ஆவணி அவிட்டம் சில வருடங்களில் ஆடி மாதம் கடைசியில் வந்துவிடும். தீபாவளி சில நேரங்களில் முன்கூட்டியே வந்துவிடும். கிருஷ்ண ஜெயந்தி சில நேரங்களில் ஆவணி மாதத்தில் வராது. அதற்கு முன் மாதத்திலோ, பின் மாதத்தின் ஆரம்பத்திலோ வரும்.

எந்த கிரகம் எதற்கு பொறுப்பு?

ஜோதிட சாத்திரத்தில் கிரகங்களின் காரகத்துவம் சொல்லப்பட்டிருக்கிறது.

1. சூரியன் - தந்தை, உயிர், ஜீவன், தலை.

2. சந்திரன் - தாய், மனம், உடல்.

3. செவ்வாய் - சகோதரன், வீரம், செயல்பாடு, ரத்தம்.

4. புதன் - மாமா, சாதுரியம், வாக்கு.

5. குரு - பணம், பொன், அறிவு.

6. சுக்கிரன் - திருமணம், இன்பங்கள், சுகம்.

7. சனி - துன்பம், துயரம்.

8. ராகு - மூதாதையர், சிறை, நிழல், பிரம்மாண்டம்.

9. கேது - ஞானம், தனிமை.

இந்த காரகங்களின் அடிப்படையில்தான் அந்தந்த கிரகங்கள் செயலாற்றும் என்பதால், இந்த காரகத்துவத்தை தெரிந்து கொள்ளாமல் ஜோதிட பலனைச் சொல்ல முடியாது.

நட்சத்திர விஷக்காலத்தில்

சுபகாரியம் வேண்டாம்

ஒவ்வொரு நட்சத்திரத்திலும் குறிப்பிட்ட நாழிகை முதல் குறிப்பிட்ட நாழிகை வரை விஷக்காலம் அல்லது விஷக்கடிகை என்று கூறப்படும். இதை நாம் பஞ்சாங்கங்களின் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம். இந்த கால அளவில் நாம் எந்த சுபகாரியங்களும் செய்யக்கூடாது. அந்த நட்சத்திரம் சுபநட்சத்திரமாகவே இருந்தாலும்கூட விஷநேரத்தில் செய்யக் கூடாது. உதாரணமாக, அஸ்வினி நட்சத்திரம் என்று எடுத்துக் கொண்டால், அந்த நாள், வளர்பிறையாக இருந்தால் நட்சத்திரம் துவங்கிய எட்டாவது நாழிகை முதல் பத்தாவது நாழிகை வரை விஷக்கடிகை காலமாகும். அந்த நேரத்தில் நாம் சுபகாரியம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இதையெல்லாம் கவனித்து ஒரு சுப நாளை ஜோதிடர்கள் குறித்து கொடுக்க வேண்டும்.

இறை வழிப்பாட்டில்

எல்லையற்ற ஈடுபாடா?

குரு பகவான் தரும் சிந்தனைகளில் ஆன்மிகமும், பக்தியும் முக்கியமானது. ஜாதகத்தில் ஐந்தாம் வீடு, ஒன்பதாம் வீடு 12-ஆம் வீடுகளில் குரு அமைந்திருந்தால், அந்த ஜாதகருக்கு ஒழுக்கமும் பக்தியும் தியானமும் அதிகமாகவே இருக்கும். குறிப்பாக, 40 வயதுக்கு மேல் அவர் இறை வழிபாட்டில் மிகுந்த நாட்டம் கொண்டு இருப்பவராக இருப்பார்.

புதன் தரும் நிபுணயோகம்

ஒரு ஜாதகத்தில், புதன் வலிமையாக இருந்தால், நிச்சயம் அவன் அறிவில் சிறந்தவனாக இருப்பான். அந்த புதனோடு சூரியனும் இணைந்தால், அது மிகப்பெரிய யோகம். புத ஆதித்ய யோகம் அல்லது நிபுணயோகம் என்று சாத்திரத்தில் சொல்லுகின்றார்கள். காரணம், சூரியன் தலைப்பகுதியில் குறிப்பாக மூளையைக் குறிக்கிறது. புதன் புத்தியைக் குறிக்கிறது. இது இரண்டும் இணைந்து செயல்படுகின்ற பொழுது அறிவும் திறனும் அதிகரிக்கிறது. புதனுக்கு மட்டும்தான், வித்தியாகாரகன் என்ற சிறப்பு பெயர் உள்ளது.

புதன் பலம் பெற்றவர்கள் எப்படி இருந்தாலும், கல்வி கற்பதில் ஊக்கம் உடையவர்களாகவும், அதிக பட்டங்கள் வாங்கியவர்களாகவும் இருப்பார்கள். பையன் படிக்கவில்லையே என்று வருத்தப்படுவதைவிட, அவனுக்கு ஜாதகத்தில் புதனும் சூரியனும் எப்படி அமைந்திருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். சரியாக அமையவில்லை என்று சொன்னால், அதற்குத் தகுந்த பரிகாரங்களை செய்ய வேண்டும். முயற்சிகளை அதிகரிக்க வேண்டும். அப்படிச் செய்தால் ஜாதகத்தின் தன்மையை மீறி இறையருளால் அந்த ஜாதகன் கல்வியிலும் மேம்படுவார்.

எப்போது திருமணம் நடக்கும்?

பிறப்பு ஜாதகத்தில், திருமண வீட்டை எந்த விதமான பாபகிரகங்களும் பார்க்காமல், சம்மந்தப்படாமல் இருந்தால், இளம் வயதில் திருமணம் நடக்கும். சூரியன், கேது, சனி, செவ்வாய் ஆகிய நான்கு கிரகங்களும் ஏழாம் வீட்டோடு எந்த விதமான தொடர்பும் இல்லாமல் இருந்தால், விரைவில் திருமணம் நடக்கும். ஜாதகப்படி, 5 ஆம் வீடு, 7 ஆம் வீடு மற்றும் 9 ஆம் வீடு ஆகிய மூன்றுவீடுகளும் (அல்லது இதில் உள்ள கிரகங்களும்) ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டிருந்தால், இளம் வயதில் திருமணம் நடக்கும்.

ஒருவருக்குத் திருமணம் நடைபெறும் காலம் இப்படி வரையறுக்கலாம்.

1. ஏழாம் இடத்தில் உள்ள கிரகத்தின் தசாபுத்தியில்

2. ஏழாம் பாவத்தை பார்க்கும் கிரகத்தின் புத்தியில்

3. சுக்கிரனின் நட்சத்திராதிபதியின் புத்தியில்

4. லக்னாதிபதி இருக்கும் நவாம் சாதிபதியின் புத்தியில்

5. ராகு தசா புத்தி அந்தரத்தில் இவற்றில் அந்த வயதுக்குரிய காலம் வந்தால், நிச்சயம் திருமணம் நடக்கும்.