Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உங்கள் ஜாதகத்தில் இந்த யோகம் இருக்கிறதா?

ஜாதக யோகங்கள் என்பது, உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்திருக்கும் இடங்கள், கிரகங்களின் சேர்க்கைகள் முதலானவற்றை அடிப்படையாகக் கொண்டது. நூற்றுக்கணக்கான ஜாதக யோகங்களை ஜோதிட சாஸ்திர புத்தகங்கள் விவரிக்கின்றன. செல்வம், செல்வாக்கு, பதவி, புகழ் கிடைக்க எப்படிப்பட்ட கிரக அமைப்புக்கள் இருக்க வேண்டும் என்பதை மிகச் சிறந்த ஜோதிட நூல் களான ஜாதக அலங்காரம், பல தீபிகை, சந்திரகாவியம், பிருகத் ஜாதகம் ஆகிய நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. மகாராஜா யோகம், சக்கரவர்த்தி யோகம், சிங்காதனயோகம் என பல நூற்றுக் கணக்கான யோக அமைப்புகள் பற்றி ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக, ஜாதக யோகங்கள் எனும் போது அவை நன்மைகளை மட்டும் குறிப்பன என்று நினைக்க வேண்டாம். கெட்ட பலன்களையும் கொடுக்கும் விதிகளும் யோகங்கள் என்றே அழைக்கப்படுகின்றன. 3600 யோகங்கள் இருப்பதாக பழைய மூல நூல்களில் குறிப்புகள், காணப்படுகின்றன. இதில் முதலாவதாக வருவது ``பஞ்ச மஹா புருஷ யோகம்’’. இந்த யோகம், பஞ்ச மஹா புருஷர்களால் ஏற்படக் கூடியது.

நவகிரகங்களில் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இவ்வைந்து கிரகங்களுக்கும் பஞ்ச மஹா புருஷர்கள். இந்த யோகத்தை, செவ்வாயால் ஏற்படக் கூடிய ருச்சிக யோகம். புதனால் ஏற்படக் கூடிய பத்திரயோகம். குருவால் ஏற்படக் கூடிய ஹம்சயோகம், சுக்கிரனால் ஏற்படக்கூடிய மாளவியாயோகம். சனியால் ஏற்படக் கூடிய சசயோகம் என்று 5 வகையாக பிரிக்கலாம். யோகங்கள் அமைவது பெரிது இல்லை. அவை நடக்கும் திசா புக்திகள் சரியான காலத்தில் வரவேண்டும். இரண்டாவதாக, யோக பங்கம் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் யோகங்கள் வேலை செய்யாது. சில நேரத்தில் யோகங்கள், அவயோகங்களாக மாறும். ஜோதிட சாஸ்திரத்தில், சூரியனுக்கு வாசியோகம், உபயாச்சாரி யோகம் என்ற இரண்டு யோகங்கள் குறிப்பிடத்தக்கவை.

ஆனால், சந்திரனை வைத்து மட்டுமே 3000 - த்துக்கும் மேற்பட்ட யோகங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளன. அதில் மிகவும் முக்கியமாக ``குரு சந்திர யோகமும்’’, ``கஜ கேசரி யோகமும்’’ கருதப்படுகிறது.

முதல்நிலை யோகமாக கருதப்படுவது;

1. தர்மகர்மாபதி யோகம்.

2. அம்ச யோகம்.

3. சச யோகம்.

4. பத்ர யோகம்.

5. ருச்சிக யோகம்.

6. கஜகேசரி யோகம்.

7. விபரீத ராஜயோகம்.

8. சதுரஸ்ர யோகம்.

9. சந்திர மங்கள யோகம்.

10. குரு சந்திர யோகம்.

11. நீச பங்க ராஜ யோகம்.

12. அகண்ட சாம்ராஜ்ய யோகம்.

13. பரிவர்தனா யோகம்.

14. மாளவியா யோகம்.

15. புஷ்கல யோகம்.

கிரகமாலிகா யோகம் தெரியுமா?

`கிரகம்’ என்றால் நவகிரகங்களைக் குறிக்கும். ‘மாலிகா’ என்றால் ‘மாலை’ என்று பொருள். கிரகங்கள் மாலை தொடுப்பதைப் போல வரிசையாக ராசி வீடுகளில் தொடுக்கப்பட்டிருந்தால் (அமர்ந்திருந்தால்) அது, ‘கிரகமாலிகா யோகம்’ எனப்படும். நவகிரகங்களில் ராகு, கேது ஆகிய இரு கிரகங்களைத் தவிர மற்ற ஏழு கிரகங்கள் ஏழு வீடுகளில் தொடர்ச்சியாக நிற்குமானால், அதற்கு ஜோதிடத்தில் கிரகமாலிகா யோகம் என்று பெயர். இந்த யோகத்தைப் பெற்றவர்கள், தங்களின் வாழ்வில் பேரும், புகழும், வசதிகள் நிரம்பியவராகவும், உயர்ந்த பதவி, அந்தஸ்துடன் வாழ்வார்கள். லக்னத்திற்கு 4,5,6,7,8,9 என்றும்கூட கிரகங்கள் தொடர்ச்சியாக இருக்கலாம்.

லக்னத்திற்கு எந்த இடத்தில் இருந்து கிரகம் ஆரம்பமாகிறதோ, அந்த வீட்டிலிருந்து தொடர்ச்சியாக கிரகங்கள் இருப்பது ``சிங்காதன யோகம்’’ என்றும் அழைக்கப்படும். இதனால் ஜாதகரின் வாழ்க்கையில் சகல சம்பத்துக்களும் கிடைக்கப்பெறும். எந்த யோகத்தின் பலனும் முழுமையாகப் பெற லக்கினமும் லக்கினாதிபதியும் பலம் பெறவேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரசயோகம்

ஒருவரின் ஜாதகத்தில் மேஷத்தில் சூரியன் அல்லது மகரத்தில் செவ்வாய் உச்சம் பெற்று கடகத்தில் சந்திரன் ஆட்சி பெற்று இருந்தால், பூமியோகம், அரசயோகம் கிடைக்கும். குரு உச்சம் பெற்றும், சந்திரன் ஆட்சி பெற்றும் கடக ராசியில் இருந்தால், மந்திரியாகும் யோகம், நாடாளும்யோகம் தேடி வரும். இந்த யோகத்தின் வீரியம், செயல்படும் தசாபுக்தி அமைப்பைப் பொறுத்து, மந்திரியாகலாம். குறைந்த பட்சம் வார்டு கவுன்சிலராகவாவது சில காலம் இருக்கலாம்.

ரியல் எஸ்டேட் கொடி கட்டிப் பறக்க ஜாதகத்தில், கேந்திரம் என்பது லக்னம், நான்கு, ஏழு, பத்து, த்ரிகோணம் என்பது லக்னம், ஐந்து, ஒன்பது. கேந்திரங்களுக்குரிய கிரகங்களும், த்ரிகோணத்திற்குரிய கிரகங்களும் பார்வை, சேர்க்கை, பரிவர்த்தனை பெற்றால் லட்சுமியோகம் என்பார்கள். ஜாதகத்தில் புதன், சுக்கிரன் பலமாக அமைந்து, இரண்டாம் இடம், மூன்றாம் இடம் பலமாக இருந்தால் வித்வான், கலை, இயல், இசை, நாடகம், நாட்டியம், நடனத்தில் பாண்டித்யம் உண்டாகும். சந்திரனுக்கு கேந்திரமான 7-ஆம் இடத்தில் சமசப்தம பார்வையுடன் சுக்கிரன் இருப்பது, சௌந்தர்ய யோகம், வசிய யோகம். பெண்கள் மூலம் பணம் சேரும்.வளர்பிறை சந்திரனும், செவ்வாயும் சேர்ந்து பூமி பாக்யஸ்தானமான நான்காம் இடத்தில் இருந்தால், ரியல் எஸ்டேட், செங்கல், மணல், கட்டிட கட்டுமான பணிகள், விவசாய வருமானம் என பூமி மூலம் லாபம் அடைவார்கள். 6-க்குடையவன் 12ல், 12க்குடையவன் 6-ல் இருந்தாலும், 12-ஆம் அதிபதி. 12-ல் இருந்தாலும் விமலயோகம். கணக்கிட முடியாத செல்வ வளங்கள் வந்து சேரும்.