Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜோதிட ரகசியங்கள்

உங்கள் வேலை ஒரே இடத்தில் அமர்ந்து செய்யக்கூடிய வேலையா? இல்லை ஊர் ஊராக ஓடக்கூடிய வேலையா?

ஒருவருடைய ஜாதகத்தில் பத்தாம் இடம் என்பது அவர் செய்யும் தொழிலைக் குறிப்பது. இதனை “கர்ம ஸ்தானம்” என்று சொல்வார்கள். இதனுடைய வலிமையைப் பொருத்து ஒருவருக்கு தொழில் அமையும். ஜாதகத்தில் லக்கினத்துக்கு பத்தாமிடத்தில் சனி இருந்தாலே ஜாதகர் சொந்தத்தொழில் செய்து மேலான நிலைக்கு வருவார்.

அதிலும், குறிப்பாக பத்தாம் வீடு, சனியின் ஆட்சி வீடுகளான மகரம், கும்பம் மற்றும் உச்ச வீடான துலாமாக அமைந்துவிட்டால், ஜாதகர் சொந்தத் தொழில் செய்பவராக இருப்பார்.

ராசிகளை சர, ஸ்திர, உபய ராசிகள் என்று பிரித்து இருக்கிறார்கள். உதாரணமாக மேஷம், கடகம், துலாம், மகரம் இவை நான்கும் சர ராசிகள். ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் இவை நான்கும் ஸ்திர ராசிகள். மிதுனம், கன்னி, தனுசு, மீனம் இவை மூன்றும் உபய ராசிகள்.

ஒருவருடைய தொழில் ஸ்தானம் சர ராசியாக இருந்தால், அவர்கள் பெரும்பாலும் வெவ்வேறு ஊர்களுக்கு பயணப்பட்டு தொழில் செய்பவராக இருப்பார்கள். ஏஜென்சி தொழில் எடுத்து செய்பவர்கள், மருந்து பிரதிநிதிகளாக (Medical representative) தொழில் செய்பவர்கள், ரியல் எஸ்டேட், கட்டிட தொழில் செய்பவர்கள் போன்றவர்களாக இருப்பார்கள். ஏன் ஊர் ஊராகச் சென்று பேசும் பேச்சாளர்களாகவோ கலைஞர்களாகவோ இருப்பார்கள். கிருபானந்த வாரியார் சர லக்கினம். கடக லக்கினம். 10-ம் இடம் மேஷம். சர ராசி. இறுதிவரை ஊர் ஊராகப் போய் சமயப்பிரசாரம் செய்துகொண்டிருந்தார்.

அதே ஸ்திர ராசியாக அமைந்து விட்டால் அவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து தொழில் பார்ப்பவர்களாக இருப்பார்கள். வெளியூர் போனாலும் உள்ளூரில் வேலை மாற்றம் கிடைத்து வந்து விடுவார்கள். நான் கும்பம். ஸ்திர ராசி. 10ம் இடம் விருச்சிகம். ஸ்திர ராசி.

36 ஆண்டுகாலம் சொந்த ஊரிலேயே உத்தியோகம் பார்த்தேன். ஆனாலும் இதற்கு இன்னும் சில கிரக நிலைகள் துணை செய்ய வேண்டும். பொதுவாக பத்தாம் இடமான கர்மஸ்தானத்தில் ஏதாவது ஒரு கிரகம் இருக்க வேண்டும். பத்தில் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் என்று சொல்வார்கள் அதில் ராகு கேது அமைவதும் சிறப்பு தான். அது மட்டும் இல்லை. 10 ல், நல்ல கிரகங்களை விட பாப கிரகங்கள் அமைவது சிறப்பு.

10-ம் இடம் உபய ராசியாக இருந்தால், ‘‘நாடாறு மாசம், காடாறு மாசம்” நிலைதான். உள்ளூரில் கொஞ்ச நாள், வெளியூரில் கொஞ்ச நாள் இருப்பார்கள்.

சூரியன் உங்கள் ஜாதகத்தில் எங்கே இருக்கிறார்?

சூரிய பகவான் உங்கள் ஜாதகத்தில் அமையும் இடத்தைப் பொறுத்து பலன்கள் உண்டு. அவர் உங்கள் லக்னத்தில் அமர்ந் திருந்தால் உஷ்ண நோய்கள் ஏற்படும். மார்பில் வலி ஏற்படும். அவ்வப்பொழுது உடல்நல குறைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். லக்கினத்திற்கு இரண்டில் சூரியன் இருந்தால் பெரும்பாலும் கண் பார்வைகுறை போன்ற பிரச்னைகள் வரலாம். சனி தொடர்பு இருந்தால் பிரச்சினை தீவிரமாகும். கண்ணில் கண்ணாடி அணிய வேண்டியிருக்கும்.

செலவுகள் அதிகரிக்கும். மூன்றில் சூரியன் இருப்பது நல்லது. பல நற்பலன்கள் உண்டு. தைரியம் உண்டு. பண வரவு உண்டு. அரசாங்க ஆதரவு உண்டு. அரசியல் வெற்றி உண்டு. நாலில் சூரியன் இருக்கும் பொழுது தேவையில்லாத வம்பு வழக்குகளும் வயிற்று வலி போன்ற ஆரோக்கிய குறைவுகளும் ஏற்படும். ஐந்தில் சூரியன் இருக்கும் பொழுது பெரிய கெடுபலன்கள் இல்லா விட்டாலும் நற்பலன்கள் குறைவாகவே நடக்கும். ஆறில் சூரியன் இருக்கின்ற பொழுது வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். அரசாங்க காரியங்கள் சாதகமாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். உடல் பலம் அதிகமாகும். ஏழில் சூரியன் இருக்கும் பொழுது படபடப்பும், கோபமும் டென்ஷனும் ஏற்படும்.

எட்டில் சூரியன் இருக்கின்ற பொழுது, ரத்த கொதிப்பு நோய், தந்தையுடன் பிரச்சனை முதலிய சிரமங்கள் ஏற்படலாம். ஒன்பதில் சூரியன் இருக்கின்ற பொழுது காரியத் தடைகளும், தந்தையிடம் அவப் பெயரும் கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். பத்தில் சூரியன் அமைவது நல்லது. அரசாங்க காரியங்கள் அனுகூலமாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். 11ஆம் இடமான லாப ஸ்தானத்தில் சூரியன் அமைவது நல்லது தான். பல நன்மைகளும் தன வரவும் உண்டு. 12ல் சூரியன் அமையும் பொழுது அடிக்கடி இடமாற்றம் ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும்.

சூரிய காயத்ரி

1.ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி

தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்

2.ஓம் பாஸ்கராய வித்மஹே திவாகராய தீமஹி

தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

இதன் மூலமாக சூரியனால் ஏற்படும் கெடு பலன்களைக் குறைத்துக் கொள்ளலாம்.

கனவில் தேள் கடித்தால் நல்லதா?

கனவில் தேள் மட்டுமல்ல, பாம்பு கடித்தாலும் நல்லது தான். அதுவும் வெள்ளை நிற பாம்பு கடித்தால் சிரமங்கள் நீங்கி விட்டது என்று பொருள். (ஆனால் பாம்பு துரத்தக்கூடாது என்பார்கள்) சொப்பன சாஸ்திரத்தில் சில ஆபத்துக்கள் நமக்கு வரக்கூடிய தன வரவுகளைக் காட்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். குறிப்பாக விஷக்கடிகள், நெருப்பில் மாட்டிக் கொள்வது, சமுத்திரத்தைத் தாண்டுவது, என கனவில் வந்தால் நமக்கு தனவரவு உண்டு. அதைப்போலவே மல ஜலங்களைப் பார்த்தாலும் பணவரவு உண்டு என்று கனவு சாத்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதத்தில் இதைக் குறித்து தனது அனுபவங்களையும் எழுதி இருக்கின்றார்.

சூரியன் மூலம் நன்மை பெற என்ன செய்ய வேண்டும்?

1.ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்தின் போது எழுந்து சூரிய நமஸ் காரம் செய்ய வேண்டும்.

2.ஆண்டுக்கு ஒரு முறை ஆடுதுறைக்கு பக்கத்தில் உள்ள சூரியனார் கோயிலுக்கு அல்லது கும்பகோணம் சக்ரபாணி கோயிலுக்குச் சென்று வர வேண்டும்.

3.பூஜை அறையில் மாலை வேலைகளில் ஆதித்ய ஹிருதயம் பாராயணம் பண்ணலாம்.

4.ஏழைகளுக்கு கோதுமை வாங்கி தானம் செய்யலாம்.

5.குறிப்பாக சூரிய தசை அல்லது சூரிய புத்தி நடைபெறும் போது, தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்யலாம். சூரிய நமஸ்காரம் செய்யும் போது 24 முறை சூரிய காயத்ரி சொல்ல வேண்டும்.

தொகுப்பு: பராசரன்