ஒரு ஜாதகத்தில் ஒன்பது கிரகங்களில் 2 கிரகங்கள் மட்டும் எதிர்திசையில் சுற்றும் கிரகங்கள். அவைகள் ராகு மற்றும் கேது. ராகு கேது கிரக அந்தஸ்து அடைந்த கதை சுவாரஸ்யமானது. பாம்பின் உடலும், மனிதனின் தலையும் கொண்டது ராகு. பாம்பின் தலையும் மனித உடலும் கொண்டது கேது. ஸ்வர்பானு என்ற ஒரு அசுரனே ராகு - கேதுவானவர். பாற்கடலில் அமுதம் கிடைத்தது. அதை மோகினி வடிவத்தில் மஹாவிஷ்ணு பிரித்துக் கொடுத்தார். அசுரர்களுக்கு அமிர்தத்தைத் தருவது ஆபத்தானது என்று எண்ணிய மோகினி, தேவர்களுக்கு மட்டும் அமிர்தம் கிடைக்கும்படி செய்து கொண்டிருந்தார்.
அசுரர்களில் ஸ்வர்பானு என்ற ஒரு அசுரன் மட்டும் மோகினியின் சூழ்ச்சியை உணர்ந்து, உடனே தேவர்களைப் போல தனது உருவத்தை மாற்றிக் கொண்டு சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் அமர்ந்தான். அவனை கவனிக்காத மோகினி, ஸ்வர்பானுவிற்கும் அமிர்தத்தை வழங்க, அவனும் அதை உடனடியாகப் பருகிவிட்டான். இதை அறிந்து கொண்ட சூரியனும் சந்திரனும் ஸ்வர்பானு ஒரு அசுரன் என்பதை உடனடியாக மோகினிக்கு உணர்த்தினர். உடனே மகாவிஷ்ணு உருவத்தில் இருந்த மோகினி அமிர்தம் வழங்குவதற்காக வைத்திருந்த அகப்பையைக் கொண்டு ஸ்வர்பானுவின் தலையைத் துண்டித்தார்.
உடல் வேறு, தலை வேறாகப் பிரிந்தாலும் அமிர்தத்தை உண்ட காரணத்தினால் உயிர் பிரியாமல் இருந்தது. அமிர்தத்தை உண்டதால் தலையும் அழியவில்லை. உடலும் அழியவில்லை. துண்டான தலைக்கு பாம்பின் உடலும், உடலுக்கு பாம்பின் தலையும் உருவாகின. பாம்பின் உடலும், மனிதனின் தலையும் கொண்டது ராகுவானது. பாம்பின் தலையும் மனித உடலும் கேது வானது. இப்படிப்பட்ட ராகுவும், கேதுவும், ‘சாயா கிரகங்கள்’ என்றும், ‘நிழல் கிரகங்கள்’ என்றும் வர்ணிக்கப்படுகின்றன. அசுரனாக பிறந்தாலும் இறையருளால் இவர்களுக்கு கிரக அந்தஸ்து கிடைத்தது.
ஒரு ஜாதகத்தில் சனி இருந்தால் தோஷம் என்று பயப்படுபவர்கள், அடுத்து பயப் படுவது சர்ப்பதோஷம் என்று சொல்லப்படும் ராகு-கேது தோஷங்களைத்தான். இன்றைக்கு ஜாதக ரீதியாக திருமணத் தடைகளைச் சொல்லுகின்ற ஜோதிடர்கள் அதிகம் பயன்படுத்துவது ராகு தோஷம், கேது தோஷம், அல்லது ஒரே சொல்லாக சர்ப்ப தோஷம் என்பார்கள். ஆனால், நுட்பமான ஜோதிட விதிகளைத் தெரிந்த ஜோதிடர்கள் இந்த ராகு- கேது தோஷத்தைப் பொருட்படுத்த மாட்டார்கள். எந்த தோஷமும், எந்த அளவிற்கு இருக்கிறது, அது எப்பொழுது வேலை செய்யும் என்ற எந்த கணக்கீடுகளும் இல்லாமல் அதனுடைய பலா பலன்களையும் தெரிந்து கொள்ளாமல், பொதுவாக ராகு தோஷம், கேது தோஷம் என்று தள்ளி விட்டுவிடுகிறார்கள்.
இதைப் பற்றிப் பிறகு பார்ப்போம். சாயா கிரகங்கள் என்று சொல்லப்படும் ராகு- கேது உண்மையில் வானியல் மண்டலத்தில் இல்லை. காரணம் இது நிழல் கிரகங்கள். இவைகள் இரண்டு கிரகங்களாகச் சொல்லப்பட்டாலும், இந்த இரண்டு கிரகங்களுக்கும் காரகங்களும் பலாபலன்களும்கூட சற்று வித்தியாசமாகச் சொல்லப்பட்டாலும் இவைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடைய கிரகங்கள் என்பதை மறந்து விடக்கூடாது. ராகுவைச் சொல்லும் பொழுது, கேதுவையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். காரணம், கேது எப்பொழுதுமே ராகுவுக்கு நேர் எதிரில் 180 பாகையில் இருக்கும். ஜோதிட நூல்களில் ராகுவை கரும்பாம்பு என்றும், கேதுவை செம்பாம்பு என்றும் குறிப்பிட்டிருப்பார்கள்.
ராகு சனியைப் போல செயல்படுவார். கேது செவ்வாயைப் போலச் செயல்படுவார் என்றும் சொல்வார்கள். ஆனால், சனிக்கு இல்லாத குணம் ராகுவுக்கு உண்டு. எந்த விஷயமும் பிரமாண்டமாகவும் பெரிய அளவிலும் இருக்க வேண்டும் என்று நினைக்கும் குணம் ராகுவுக்கு உண்டு. அதைப் போலவே செவ்வாய்க்கு இல்லாத ஞான குணம் கேதுவுக்கு உண்டு. ராகு நான்காம் இடத்தோடு சம்பந்தப்பட்டு சுப பலம் பெற்று, ஒருவர் வீடு கட்டினால், அவர் சாதாரண வீடு கட்ட மாட்டார், மிகப் பிரமாண்டமான வீட்டைக் கட்டுவார். வித்தியாசமாக அலங்காரம் செய்வார். ராகு-கேதுவுக்கு 12 ராசிகளில் சொந்த வீடு கொடுக்கப்படவில்லை.
அதனால் அது எந்த ராசியில் இருக்கிறதோ அந்த வீட்டையே சொந்த வீடாக எடுத்துக் கொள்ளும்.உதாரணமாக, ஒரு ஜாதகத்தில் ராகு சிம்ம ராசியில் இருந்தால், அது சிம்ம ராசிக்கு உரியதாகச் செயல்படும். சூரியனோடு இணைந்து இருந்தால், சூரியனின் காரகத்துவத்தை தானே வாங்கிச் செயல்பட ஆரம்பிக்கும்.வேறு பாஷை, அந்நிய நாடு, சிறை தண்டனை, நாடு கடத்தப்படுதல், தவறான வழியில் அதாவது சட்டத்திற்கு புறம்பான வழியில் செயல்படுதல், போதைப் பொருட்களுக்கு அடிமையாகுதல், வட்டி தொழில், அடகு பிடித்தல், சினிமா போன்ற நிழல் தொழில்கள், ஆகாய விமானம், ஆராய்ச்சி, மின்சாரம் சம்பந்தமான தொழில்கள்,
அலைந்து செய்யும் தொழில்கள், மந்திர வித்தை, ஏமாற்றுதல், விஷத்தோடு தொடர்பு, கண்ணாடி, பீங்கான் தொடர்புடைய தொழில்கள், ஏற்றுமதி இறக்குமதி, வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சி என்று பல காரகங்களும் தொழில்களும் ராகுக்குச் சொல்லப்பட்டிருக்கின்றன.
பொதுவாக எல்லா விதமான விஷங்கள், உடலைக் கெடுக்கும் விஷ உணவுகள் ராகுவின் காரகத்தில் வரும். மலட்டுத் தன்மைக்கு ராகு காரகராக இருப்பதால், ஐந்தாம் இடத்தில் ஒரு ஜாதகத்தில் ராகு இருக்கும்பொழுது புத்திர தோஷம் என்று சொல்லுகின்றார்கள்.
ஆனால், ஐந்தாம் இடத்தில் ராகு இருப்பதை மட்டும் வைத்துக் கொண்டு நாம் முடிவுக்கு வந்துவிட முடியாது. திசாபுத்தி நடைமுறைக்கு வராமல் எந்த செயலும் நடைபெறாது. திசை புத்தி அந்தர கோசாரங்களையும் இணைத்து தோஷங்கள் செயல்படுவதை கவனிக்க வேண்டும். அடுத்து, ராகுவுக்கு வீடு கொடுத்த கிரகத்தினுடைய நிலை, சாரம் கொடுத்த கிரகத்தின் நிலையையும் நாம் கணித்துத்தான் பலனைச் சொல்ல முடியும். ஐந்தில் ராகு அமர்ந்து அற்புதமான குழந்தைகள் அமைந்திருக்கும் ஜாதகங்களைப் பார்த்திருக்கிறேன். சனியைப் போல செயல்படுபவர் ராகு என்றாலும்கூட, சனியைவிட வித்தியாசமானவர். உதாரணமாக, சனி கெட்டால் அதன் பலனாக குண தோஷத்தால் சிறிய அளவில் திருட்டுத்தனங்களில் ஈடுபடும் ஜாதகர், ராகுவால் மிகப்பெரிய மோசடியில் ஈடுபடுவார்.
தொழில்முறை ஏமாற்றுதல், கொள்ளையடித்தல், பிறர் பொருளை அபகரித்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடச் செய்வார். பொதுவாக விமான விபத்து, பூகம்பம், சுனாமி போன்ற பேரழிவுகளின் போது நிகழும் கூட்டு மரணங்களில் ராகுவின் கை ஓங்கி இருக்கும். கொரோனா காலத்தில் உலகம் முழுக்க பலர் துன்பப்பட்ட போது, ஜோதிட ரீதியாக ராகுவின் அமைப்பைத் தான் பலரும் காரணமாகச் சொன்னார்கள். சுவாசக் கோளாறுகளுக்கும் ராகு காரணமாகிறது.
காரணம், அது காற்றுக்கு உரிய கிரகம். அது நான்காம் இடத்தோடு சம்பந்தப்பட்டு நான்காம் இடத்ததிபதி கெட்டுப்போய், அஷ்டமாதிபதி பார்வை, சேர்க்கை முதலியவற்றைப் பெற்றிருந்தால், அந்த தசா புத்திகள் நடக்கும் பொழுது செயற்கை சுவாசம் முதலிய நெருக்கடிகள் ஜாதகருக்கு ஏற்படும்.இனி... சில அசல் ஜாதகங்களில் ராகு எப்படி எல்லாம் அள்ளிக் கொடுத்திருக்கிறார் அல்லது எப்படியெல்லாம் ஆட்டிப் படைத்திருக்கிறார் என்பதை பார்த்து விடுவோம்.
பராசரன்


