Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஜோதிட ரகசியங்கள் - யோகத்தையும் அவயோகத்தையும் எப்படித் தீர்மானிப்பது?

இந்த உலகில் ஒவ்வொரு ஜாதகத்தில் தோஷத்தை வரையறை செய்யும்பொழுது பல கோணங்களில் ஆய்வு செய்ய வேண்டும். லக்கினத்தை மட்டும் பார்த்து முடிவு செய்ய முடியாது. ராசியைப் பார்க்க வேண்டும். சில தோஷங்களுக்கு சுக்கிரனைப் பார்க்க வேண்டும். இப்படி பல வழிமுறைகள் உண்டு. நற்பலன்களோ தீய பலன்களோ ஒரு குறிப்பிட்ட கிரகத்தால் மட்டும் நடைபெறுவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். லக்ன ரீதியாக பலம் இல்லாத பல ஜாதகங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் வெற்றி பெற்றிருப்பதைப் பார்த்திருக்கிறேன். வியப்பாக இருக்கும். எப்படி இவர்கள் வெற்றி பெற்றார்கள்? எப்படி கிரகங்கள் இவர்களுக்கு உதவின? என்றெல்லாம் ஆராய்ச்சி செய்தால் புதிய விஷயங்கள் கிடைக்கும்.ஜோதிடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். இரண்டு ஜாதகங்களில் ஒரே நிலையில் கிரகங்கள் அமைந்திருந்தாலும்கூட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பலன் தருவதைப்பார்த்திருக்கிறேன். இது அடிப்படையில் கணித சாஸ்திரம் என்று எல்லோரும் சொன்னாலும், கணிதத்தின் அடிப்படையில் பலன்களை ஊகித்துச் சொல்லும் சாஸ்திரம் என்பதை மறக்கக் கூடாது.எப்பொழுது யூகித்துச் சொல்லுதல் என்று வந்துவிட்டதோ அப்பொழுதே பல முறைகள், பல பலன்கள் வந்துவிட்டன. எனவேதான், நான் அடிக்கடி என்னைத் தேடி வருகிறவர்களுக்கு சொல்லுவேன்; ‘‘நீங்கள் இதை முழுமையாக நம்பி உங்கள் வாழ்க்கையைத் தொலைக்க வேண்டாம். கடுமையான பலன்கள் என்று கவலைப்பட வேண்டாம். நன்மையான பலன்கள் என்று துள்ளிக் குதிக்க வேண்டாம். இரண்டும் பல சூட்சுமமான காரணங்களால் மாறிவிடும். எனவே, இது ஒரு ``வழிகாட்டும் சாஸ்திரம்’’ என்று மட்டும் நினைத்துக் கொண்டு, துன்பங்கள் வருவது போல் இருந்தால் சற்று எச்சரிக்கையோடு, அகலக்கால் வைக்காமல் நடந்து கொள்ளுங்கள். நன்மைகள் நடக்கும் காலம் என்றால் சில முடிவுகளைச் சற்று துணிச்சலோடு எடுத்துச் செயலாற்றுங்கள். அப்பொழுதும் ஒரேயடியாக இறங்க வேண்டாம்.

அதாவது மொத்த முதலையும் போட வேண்டாம். ரிஸ்க் எடுத்தாலும் calculated ரிஸ்க் எடுக்க வேண்டும். கடன் வாங்கி காரியத்தைச் செய்யக் கூடாது. ஜீவனாதிபதி ஆட்சி பெற்று திசை நடத்தினாலும், ஆறாம் அதிபதி அல்லது எட்டாம் அதிபதி சாரம் வாங்கி, சாரம் கொடுத்தவன் பலம் இழந்து இருக்கிறானா என்று பார்த்துவிட்டுச் சொல்ல வேண்டும். இந்த அடிப்படையில் ஒரு ஜாதகம் பாருங்கள். விருச்சிக லக்னம். லக்கினத்தில் கேது, சுக்கிரன். ஏழில் ராகு. பாக்கிய ஸ்தானத்தில் சனி. பதினொன்றாம் இடத்தில் சந்திரன். விரய ஸ்தானத்தில் செவ்வாய் புதன் சூரியன் குரு. முதலில் லக்கினத்தில் 7, 12க்கு உரிய சுக்கிரனும் கேதுவும் இணைந்து இருப்பதும், லக்கினத்திற்கு ஏழில் ராகு அமர்ந்திருப்பதும் மிக எளிதாக இவருடைய திருமண வாழ்க்கையைச் சொல்லிவிடும். சரி, லக்னத்தில் சுக்கிரன் கேது இருப்பதோ, ஏழில் ராகு இருப்பதோ பெரிய பிரச்னை தந்துவிடாது என்று ஒரு கணக்குக்கு எடுத்துக் கொண்டாலும், இரண்டாம் இடத்து குரு விரய ஸ்தானத்திற்கு வந்துவிட்டார். லக்னாதிபதி செவ்வாயும் விரய ஸ்தானத்துக்குப் போய்விட்டார். தொழில் ஜீவனாதிபதி சூரியன் விரயத்துக்குப் போய்விட்டார். விரயத்துக்கு போனது மட்டுமல்ல நீசமாகிவிட்டார். இரண்டு ஐந்துக்குரிய குரு அம்சத்திலும் நீசம் பெற்று சூரியனோடு மகரராசியில் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். லாபாதிபதி புதன். அவரும் விரயத்தில் இருக்கிறார்.விரயத்தில் இப்படி நான்கு கிரகங்கள் ஒன்று கூடி கும்மாளம் அடித்தால், ஒருவருக்கு மன நிம்மதி என்பது எப்படி இருக்கும்? அயன, சயன சுகங்கள் கிடைக்குமா? ஒன்பதுக்குரிய சந்திரன் சுயசாரம் வாங்கி ஹஸ்த நட்சத்திரத்தில் 11ல் இருக்கிறார். பதினொன்றாம் இடம் பலம் பெற்றிருக்கிறது. ஏழாம் இடம் பலவீனமாகி, பதினொன்றாம் இடம் பலம் பெற்று இருப்பது ஏதோ ஒன்றைக் காண்பிக்கவில்லையா? இரண்டு தாரத்துக்கான விதி அந்த இடத்தில் வேலை செய்கிறது என்று ஜோதிடர்கள் மிக எளிதாகக் கண்டுபிடித்து விடலாம்.

இவைகள் எல்லாம் போகட்டும். விரய ஸ்தானத்தில் இத்தனை கிரகங்கள் இருக்கின்றனவே. அதுவும் தன, பூர்வ புண்ணிய அதிபதி விரயத்துக்குப் போய்விட்டால் குடும்பமோ பூர்வ புண்ணியமோ எப்படி நிலைக்கும்?அடுத்து குரு புத்திரகாரகன் அல்லவா! அவர் விரயத்துக்குப் போய் அஷ்டமாதிபதி புதனோடும் இணைந்து இருக்கிறாரே. அப்படியானால் சந்ததி விருத்தி எப்படி இருக்கும்? சந்திரன் 11ல் இருக்கிறார். அவர் விருச்சிக லக்னத்திற்கு முதல் தர யோகாதிபதி. காரணம் அவருக்கு இரண்டு ஆதிபத்தியம் இல்லை. ஆனாலும் ஸ்திர லக்கணமாக இருப்பதால் அவருக்குக் கொடுக்கப்பட்ட பாதகாதிபதி பணியையும் கொஞ்சம் செய்தாக வேண்டும் அல்லவா. எல்லோரும் சொல்வார்கள். இரண்டு ஆதிபத்தியம் இருந்தால் அதில் ஒன்று வேலை செய்யாது. குறிப்பாக சுப, அசுப ஆதிபத்தியங்கள் இருந்தால் அசுப ஆதிபத்தியம் வேலை செய்யாது என்பார்கள். அவைகள் எல்லாம் புத்தகத்தில் இருக்கின்றன. ஆனால் நடைமுறையில் யோகத்தைக் கொடுத்த அதே கிரகம் அவயோகத்தையும் செய்துவிடுகிறது. அதுவும் உடனடியாகச் செய்து விடுகிறது. எனவே யோகம் செய்யும் கிரகம் அவயோகம் செய்யாது என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. எதிர்பார்த்து தயாராக இருக்க வேண்டியதுதான். நாம் எப்பொழுதுமே எதற்கும் தயாராக இருப்பதன் மூலமாகத் தான் கிரகங்களின் அவயோக நிலையை எதிர் கொள்ள முடியும். இப்பொழுது இந்த ஜாதகத்தின் அமைப்பைச் சொல்லிவிட்டேன். ஆயுள் காரகனான புதன்கூட 12ஆம் இடத்தில் சென்று படுத்துவிட்டார். எனவே ஆயுள் ஆரோக்கியம் குறித்து கவலைப்படுவதற்கும் இடம் இருக்கிறது. ருண சத்ரு ரோகாதிபதியும், லக்னாதி பதியுமான செவ்வாய் 12ல் போய்விட்டார். இதில் இரண்டு விதமாக பலன் நடக்கலாம். ஒன்று ஆறுக் குடையவன் 12ல் மறைந்ததால் ஆறுக்குடைய தீய பலன்கள் ஜாதகருக்கு நடக்காது என்று எடுத்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் அவர் லக்னாதிபதியாகவும் இருக்கிறாரே, அதனால் லக்கின பலனும் கெடுமே. இந்த ஜாதகத்தை பல்வேறு ஜோதிடர்களிடம் காட்டிய பொழுது அவர்கள் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கி தூக்கிப்போட்டு விடுவார்கள். பூர்வ பாபங்கள் எல்லாம் ஒன்றாகக்கூடி இந்த ஜாதகத்தில் இருக்கிறது. இப்படி ஒரு மோசமான ஜாதகத்திற்கு எப்படிப் பலன் சொல்வது என்று தயங்குவார்கள். சுபஸ்தானங்கள் கெட்டுப் போய் அசுபஸ்தானங்கள் பலம் பெற்ற ஒரு ஜாதகத்தை யாராக இருந்தாலும் இப்படித்தானே எடை போடுவார்கள். ஆனால், உண்மை, வேறு சில விஷயங்களை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. அதைப் பற்றிய ஒரு தெளிவு ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கட்டுரை.

பராசரன்