திருமண யோகத்தைத் தரும் கேது
கேது அற்புதமான கிரகம். அதிதேவதை விநாயகர். மனித முகமில்லாத தெய்வங் களில் வாலுள்ள தெய்வங்களைக் குறிக்கும்.எந்த ஜாதகத்திலும் கேது வலிமையாக இருந்தால், அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் அருள் ஞான அனுபவம் பெற்றவர்களாக, தெய்வத் தின் அருளைப் பெற்றவர்களாக, பிறருக்குப் புத்திமதி சொல்லக் கூடியவர்களாக இருப்பார்கள். நல்ல அனுபவ அறிவு அவர்களுக்கு இருக்கும்.
காரணம் ஜோதிடத்தில் கேதுவை ஞான காரகன் என்று சொல்வார்கள். ஆனால் அதே நேரம் சில ஜாதகங்களில் கேதுவினுடைய அமைப்பினால் ஜாதகர்கள் படாத அவஸ்தைப் படுவார்கள். அதனால் தான் ராகுவுக்கு 18 ஆண்டுகள் தசாபுத்தி கொடுத்த நம்முடைய ஞானிகள் கேதுவுக்கு ஏழு வருடம் தான் கொடுத்தார்கள்.
சுக்கிர திசையிலோ, சூரிய திசையிலோ பிறந்தவர்களுக்கு அவர்கள் வாழ்நாளில் பெரும்பாலும் கேது திசை வருவதில்லை. ஆனால் ராகு திசையில் பிறந்தவர்களுக்கு வயோதிகத்தில், அதாவது 60 வயதுக்கு மேல் கேது திசை வருவதற்கான வாய்ப்பு உண்டு. இனி, கேது எப்படி எல்லாம் ஒரு ஜாதகத்தில் தன்னுடைய பலனை தருவார் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் கேதுவின் சில காரகத்துவங்களைத் தெரிந்து கொள்வோம்.தாய்வழி தாத்தா, முடி, பிறப்புறுப்புகள், நரம்புகள், குறுகிய பாதை (அல்லது) அறை, குளியலறை, ஜோதிடம், மதம், மறைபொருள் ஆய்வு, காவி துணி, மருத்துவமனைகள், பிரார்த்தனைக் கூடங்கள், பாம்பு, கயிறு, சங்கிலி, வலை, பள்ளம், காய்ந்த புல், மூலிகைகள், வஞ்சனையான முகம். சட்டம். கடுமையான தண்டனைகள். நெருக்கடிகள். பூர்வீகச் சொத்துக்களை பறிக்கக்கூடிய தன்மைகள்.
உடம்பில் திடீரென்று கொப்பளங்கள். கண்டுபிடிக்க முடியாத குறை, நோய்கள். அமிலம். பிளாக் மெய்லர்கள், வாழ்க்கையை வெறுத் தவர்கள். தரித்திரர்கள். வாழ்வை வென்ற ஞானிகள் கேதுவின் காரகங்களில் அடங்கும். சட்டத்திற்கு புறம்பான அனைத்திலும் கேதுவின் பங்கு இருக்கும். கொடிய போதைகள், நூல், மெலிதான கம்பிகள், துறவு, பிரம்மச்சர்ய தெய்வங்கள். திருமணத் தடை. கயிறுகள். எல்லாவித நெருக்கடிகள். மன அழுத்தம். தாலிக் கயிறு. சிறிய கயிறு. விஷம். பிரிவினை. விபச்சார நிலை. சிதைத்தல். உடைப்பது. நெருக்கடி தருவது எனப் பல விஷயங்கள் கேதுவின் காரகங்களில் அடங்கும்.
நெசவு, தையல், வக்கீல், பஞ்சாயத்து செய்தல், வைண்டிங் செய்தல், வயரிங் செய்தல், டைப்பிஸ்ட். அறுவைசிகிச்சையாளர், புகையிலை, பருத்தி, காப்பிக் கொட்டை தேயிலை வியாபாரம், மருந்து வியாபாரம், ஆன்மிக, தெய்வீக வைதீக சம்பந்தப்பட்ட தொழில்கள், மேலும் இராகுவிற்கு சொல்லப்பட்டவைகளும் பொருந்தும். மாந்திரீகம், சிமெண்ட், ரப்பர் சம்பந்தப்பட்ட தொழில்கள் அன்னிய தேசவாசம் ஆகிய தொழில்களைக் கேது குறிக்கும்.இனி கேது ஒரு ஜாதகத்தில் தன்னுடைய பலனை எப்படியெல்லாம் தருவார் என்பதைப் பார்ப்போம்.
ஜாதகம் 1
கும்ப லக்னம். கேது இரண்டாம் இடத்தில் அதாவது வாக்கு ஸ்தானத்தில். குரு ஆட்சி பெற்று தனுசு லக்னத்தில் இருக்கிறார். கேது வாங்கிய சாரம் பூரட்டாதி அதாவது குருவின் நட்சத்திரம். கேட்டையில் பிறந்த ஜாதகருக்கு புதன் திசை 10 வருடம் நடந்து கேது திசை ஏழு வருடம் நடந்தது. அவருடைய முக்கியமான பள்ளிப்படிப்பு காலத்தில் கேது திசை வந்தது.
இரண்டாம் இடத்தில் கேது அமர்ந்து, வீடு மற்றும் சாரம் கொடுத்த குரு ஆட்சி பெற்று பதினொன்றில் பலமாக இருந்ததால் கேது திசை சிக்கல் இல்லாமல் நல்ல முறையில் சென்றது.
படிக்கும் காலம் என்பதால் நல்ல முறையில் ஜாதகருக்குப் படிப்பைத் தந்தது. அதுமட்டுமின்றி உயர்நிலைப் பள்ளியில் ஜாதகர் முடிக்கும் பொழுது நல்ல மதிப்பெண்களைப் பெற்றார்.
இத்தனையும் கேது தந்தது. ஆனால் கும்ப லக்கினத்திற்கு, தந்தைக்குரிய ஒன்பதாம் இடத்திற்கு ஆறாம் இடத்தில் கேது அமர்ந்ததால், தந்தைக்கு நோயைத் தந்தது. கேதுவுக்கு சாரம் கொடுத்த குரு ஒன்பதாம் இடத்திற்கு மூன்றாம் இடத்தில் அதாவது மாரக ஸ்தானத்தில் அமர்ந்ததால் தந்தைக்கு மாரகத்தையும் தந்தது.
ஜாதகம் 2
இன்னொரு ஜாதகம். கன்னி லக்கனம். லக்னத்தில் செவ்வாய் கேது. கேது சந்திர சாரம் பெற்றது. வீடு கொடுத்த புதன் ஐந்தாம் இடத்தில். இவருக்கு கேது திசை 27 வயது முதல் 34 வயது வரை நடைபெற்றது.
இந்த ஏழு வருடத்தில் தான் இவர் வேலை மாற்றம் நடந்தது. பதவி உயர்வு கிடைத்தது. திருமணம், குழந்தைகள் என அனைத்து செல்வங்களையும் அடைந்தார். லக்னத்தில் கேது அமர்ந்து அவருடைய திசை நடந்தால் அவர் நிச்சயம் திருமணத்தைத் தருகின்றார். லக்னபாவம் இயங்கும் போது ஐந்தாமிடமும் ஒன்பதாமிடமும் இயங்க ஆரம்பிக்கும் என்பதால் பெரும்பாலும் குழந்தை செல்வத்தையும் அவரே தந்து விடுகிறார். கேது கன்னியில் அமர்ந்ததால் புதனை போலவே இயங்குவார். கேதுவுக்கு வீடு கொடுத்த புதன் ஐந்தாம் வீட்டின் மகரத்தில் குருவோடு இணைந்த ஜாதகமாக இருந்ததால் குழந்தைச் செல்வத்தையும் தந்துவிட்டார். எனவே இவருக்கு கேது திசை ஏழு வருடமும் யோக திசையாகவே அமைந்தது.
ஜாதகம் 3
ஆனால், இதே கன்னி லக்கனத்தில் இன்னொரு ஜாதகம். லக்னத்தில் கேது. ஏழில் ராகு. கேது திசையில் திருமணத்தைத் தந்தது. மேலே உள்ள ஜாதகத்தைப் போலவே குழந்தையையும் தந்தது. ஆனால் குழந்தையைத் தந்து விட்டு திருமண உறவை பிரித்து வைத்தது. காரணம், கேதுவுக்கு நேர் எதிரில் ராகு 6ம் அதிபதி, சனி சாரம் பெற்று, அஷ்டமாதி செவ்வாயோடு அமர்ந்ததால் இந்த விளைவு. கேது சற்று தடம் மாறி இருந்தால் பிரச்னையைத் தராமல் விட மாட்டார். பெண்களுக்கு செவ்வாயோடு கேது சேர்ந்திருந்தாலும் ஆண்களுக்கு சுக்கிரனோடு கேது சேர்ந்திருந்தாலும் அந்தந்த தசா புத்திகள் நடக்கும் பொழுது குடும்பத்தில் பிரச்னைகள் வருவதையும் அதை அவர்கள் சமாளிக்காமல் விட்டுவிட்டால், அந்த திசையே அவர்களைப் பிரித்து வைத்து விடுவதையும் பார்த்திருக்கின்றேன். காரணம் சேர்த்து வைப்பது போலவே பிரித்து வைக்கும் குணமும் இயல்பாகவே கேதுவுக்கு உண்டு.
ஜாதகம் 4
இன்னொரு ஜாதகம். சிம்ம லக்கனம். லக்னத்தில் சனி ராகு. ஏழாம் வீடாகிய கும்பத்தில் கேது. இவருக்கு ஏழாம் வீட்டில் இருந்து கேது திசை நடைபெற்றது. பூச நட்சத்திரத்தில் பிறந்த இவருக்கு இரண்டு வருடம் சனி திசை நடந்து 17 வருடம் புதன் திசை நடந்து 19 ஆம் வயதில் ஆரம்பித்து 26ம் வயது வரை கேது திசை நடந்தது. ஏழாம் இடத்தில் கேது அமர்ந்து லக்னத்தைப் பார்த்ததாலும் அந்த லக்னத்தில் ஏழாம் இடத்து அதிபதி சனியும் இருந்ததாலும் திருமணத்தைத் தந்து விட்டது. அதுவும் காதல் திருமணத்தைத் தந்தது. அதோடு இதே கேது திசை ஒரு வருடத்தில் ஒரு குழந்தையையும் தந்தது. ஏழாம் இடத்தில் அமர்ந்த கேது மூன்றாம் பார்வையாக ஐந்தாம் இடத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதால் ஐந்தாம் இடத்துக்குரிய குழந்தையையும் தந்தது. இங்கே கேது யோகமாகவே வேலை செய்தது.
பராசரன்


