செவ்வாய் தரும் வளமான வாழ்க்கை
ஒரு ஜாதகத்தில் ராஜ கிரகங்கள் என்று சொல்லப்படுகின்ற கிரகங்கள் உண்டு. ஒன்று சூரியன். இன்னொன்று குரு. மூன்றாவது செவ்வாய். சூரியன்தான் தலைமை கிரகம்.
ஆத்ம காரகன். அவர்தான் எல்லாவற்றையும் முடிவு செய்யும் ஆற்றலைப் பெற்றிருக்கிறார். அதற்கு அடுத்து செவ்வாய். செவ்வாய் ஒரு நாட்டின் சேனாதிபதி போலச் செயல்படக்கூடியவர். அதனால்தான் போருக்குரிய கிரகமாகவும் தைரியத்திற்குரிய கிரகமாகவும் செவ்வாயை வைத்திருக்கின்றார்கள். ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் வலுவடைந்துவிட்டால் அவர் எல்லா விஷயத்திலும் வலுப்பெற்றவராக இருப்பார். அவருடைய வார்த்தைதான் முன்னால் நிற்கும். அவர் சொல்வதுதான் நடக்கும் அல்லது நடக்கும் படியாக வைப்பார். இத்தனை ஆற்றலைப் பெற்றவர் செவ்வாய். பூமிக்கு காரகத்துவம் படைத்தவர் செவ்வாய். பூமியின் பிள்ளை. பௌமன் என்று பெயர்.
அங்காரகன் என்றும் பெயர். குஜன் என்ற பெயரும் ஜோதிடத்தில் உண்டு. பொதுவாக செல்வத்துக்கு குருவையும் சுக்கிரனையும் சொன்னாலும் செல்வத்துக்கு செவ்வாயையும் இணைத்துக் கொள்ள வேண்டும். அதிகப்படியான நிலம், வீடு முதலிய அசையாச் சொத்துக்களை வைத்திருப்பவர்களுக்கு செவ்வாய் பலமாக இருக்கும். அந்த காலத்து ஜமீன்தார்கள், மிராசுதார், பண்ணையார்கள் செவ்வாய் பலம் பெற்றவர்கள்.
நிலமும் இருக்கும். அதிகாரமும் இருக்கும். ஆற்றலுக்கு உரியவர் என்பதால் ஓயாத உழைப்புக்குச் சொந்தக்காரராக செவ்வாய் அமைந்திருப்பார். சூரியனை தந்தைக்கு காரகனாகவும், சந்திரனை தாய்க்குக் காரகராகவும் சொன்ன ஜோதிட சாஸ்திரம் செவ்வாயை சகோதர காரகமாக அமைத்திருக்கிறது. தம்பி உடையான் படைக்கு அஞ்சான், அண்ணன் உடையான் அவைக்கு அஞ்சான் என்பது போல சகோதரகாரகத்துவத்துக்கு செவ்வாயைச் சொல்லி வைத்தார்கள். மேற்கொண்டு செவ்வாய் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன் ஜோதிட சாஸ்திரத்தின் சிக்கல்களையும் புரிந்து கொள்ள வேண்டும். இளைய சகோதரன் என்றால் செவ்வாயைப் பார்க்க வேண்டும். நிலம், வீடு முதலிய அசையாச் சொத்துக்களைப் பார்க்க வேண்டும் என்றால் செவ்வாயைப் பார்க்க வேண்டும்.
இது கிரக காரகத்துவத்தை மட்டும் குறிக்கிறது. ஒரு ஜாதகத்தில் செவ்வாய் கெட்டுவிட்டால் இளைய சகோதரம் இருக்காதா என்று ஒரு கேள்வி வரும். அவர்களுக்கு நிச்சயம் இருக்கும். காரணம், கிரக காரகத்துவம் மட்டும் ஒரு விஷயத்தைத் தீர்மானம் செய்வது கிடையாது. பாவ காரகத்துவமும் பாவாதிபதியும் அந்த விஷயத்தைத் தீர்மானம் செய்ய வேண்டும். மூன்றாம் பாவம் இளைய சகோதரத்துவம், சிறு பிரயாணம், தகவல் தொடர்பு, நண்பர்கள், தைரியம், வீரியம் முதலிய பல விஷயங்களைக் குறிக்கிறது. மூன்றாம் பாவம் பலமடைந்து செவ்வாய் பலம் குறைந்து இருந்தாலும் இளைய சகோதரம் இருக்கும்.
ஜோதிட சாஸ்திரம் permutation Combination கணித சாஸ்திரம் போல இருக்கும். 12 பாவங்கள், 9 கிரகங்கள்தான். ஆனால், இவைகள் வெவ்வேறு அமைப்புகளுடன் வரிசையாகவோ மாறியோ சேருகின்ற பொழுது அந்தப் பலன்களை மிக நுட்பமாக கணித்துத் தான் சொல்ல முடியும். லக்னசந்தி, ராசி சந்தி, கிரகங்கள் நிற்கும் நட்சத்திர பாத சாரங்கள், அதனால் மாறுகின்ற கிரக பலன்கள், ஷட் பலம் என்று சொல்லக்கூடிய கிரகங்களின் பல்வேறு விதமான பலாபலன்கள், பார்வை பலன்கள் என ஏராளமான விஷயங்கள் இருப்பதால் இவ்வளவும் இணைத்துச் சொல்லுகின்ற பொழுது பலன்கள் தவறி விடவும் வாய்ப்புண்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு சிலர் பார்த்தவுடன் பலன் சொல்லுகின்றார்கள் என்றால் அது அவர்கள் அனுபவத்தைக் காட்டுகிறது என்பது மட்டுமல்ல, அவர்களுக்கும் 100 ஜாதகத்தில் 20 ஜாதகங்கள் பலம் தவறும். கட்டாயம் தவறு ஏற்படும்.
எனவே, ஜோதிட சாஸ்திரத்தை நாம் ஒரு வழிகாட்டி சாஸ்திரமாக எடுத்துக் கொண்டு நம்முடைய சொந்த புத்தியையும் பயன்படுத்தித் தான் செயல்பட வேண்டும் என்பதை வாசகர்கள் மறந்து விடக்கூடாது. சரி, இப்பொழுது செவ்வாய்க்கு வருவோம். செவ்வாய்க்கு ஏராளமான காரகத்துவங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதோடு வேறு கிரகங்கள் இணைகின்ற பொழுது அவை மாறுபடுகின்றன. உதாரணமாக, செவ்வாய் வலுத்தவர்கள் சீருடைப் பணி என்று சொல்லக்கூடிய ராணுவத்திலோ காவல்துறையிலோ பணிபுரிவார்கள். பொதுவாக செவ்வாய் சட்டம், ஒழுங்கு முதலிய விஷயங்களைக் குறிப்பிடுகிறது. அதே நேரத்தில் அதிகார நிலையும் குறிப்பிடுகிறது. இன்னும் ஒரு கோணத்தில் இதே செவ்வாய் மருத்துவத்தையும் குறிப்பிடுகிறது.
செவ்வாய் சூரியனோடு அல்லது கேதுவோடு அல்லது குருவோடு இணைகின்ற பொழுது ஒரு மாதிரியான பலனைத் தரும். சனி, ராகு, கேதுவோடு இணைகின்ற பொழுது ஒரு விதமான பலனைத் தரும். சுக்கிரனோடு இணைகின்ற பொழுது இன்னொரு விதமான பலனைத் தரும். செவ்வாயை மங்களகாரகன், மாங்கல்யகாரகன் என்றும் சொல்வார்கள்.
பொதுவாக சுக்கிரனை களத்திரகாரனாகச் சொன்னாலும் பெண்களுக்கு செவ்வாயை கணவனுக்கு உரிய காரக கிரகமாக வகுத்து வைத்திருக்கிறார்கள். இதற்கும் ஒரு அடிப்படை உண்டு. கால புருஷனின் முதல் ராசி மேஷம். அதிபதி செவ்வாய். இரண்டாவது ராசி ரிஷபம். குடும்ப ராசி. அதிபதி சுக்கிரன். செவ்வாய் ஆண் ராசி.
செவ்வாய் ஆண் கிரகம். இரண்டாவதான ரிஷப ராசி பெண் ராசி, சுக்கிரன் பெண் கிரகம். ஆணும் பெண்ணும் இணைந்தால் தானே இல்லறம், குடும்பம் எல்லாம் ஏற்படும்.
அதனால் பெண்ணுக்குக் கணவனாக செவ்வாயையும், ஆணுக்கு மனைவியாக சுக்கிரனையும் சொல்லி வைத்தார்கள். பொதுவாக ஏழாம் வீடு களத்திர வீடு அது துலாம் ராசி.
அதற்குரிய கிரகம் சுக்கிரன் என்பதால் பொது களத்திர காரகனாக சுக்கிரனைச் சொல்லி வைத்தார்கள். கால புருஷனுக்கு எட்டாவது ராசியாக விருச்சிக ராசி அமைகிறது.
எட்டாவது ராசி என்பது பெண்ணின் மாங்கல்ய பலத்தைக் குறிப்பிடுவதால் அந்த ராசிக்குரிய செவ்வாயை மாங்கல்யகாரகன் என்று குறிப்பிட்டார்கள்.
இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கிறது. இனி ஒரு ஜாதகத்தில் செவ்வாய் எப்படி செயல்படும் என்பதை தெரிந்து கொள்வதற்கு முன் அதனுடைய காரகத்துவங்கள் சிலவற்றைத் தெரிந்து கொள்வோம். செவ்வாய் ஒரு வேகமான கிரகம். செவ்வாய் பலம் பெற்றவர்கள் வேகமாக விறுவிறுப்பாகச் செயல்படுவார்கள். பேச்சிலும் செயலிலும் மிடுக்கும், முரட்டுத்தனமும், அதிகாரமும், சில நேரங்களில் ஆணவமும் இருக்கும்.
சுப கிரக பார்வை இல்லாவிட்டால் வீண் பிடிவாதம் இருக்கும். வீர தீர பராக்கிரமம், வெட்டு, காயம், ரத்தம், ரியல் எஸ்டேட், செங்கல் சூளை, பவள வியாபாரம், திருட்டு, விபத்துகள், தற்காப்பு கலைகள், பட்டறைகள், உணவு விடுதிகள், சுரங்கம், மின்சார வாரியம், விரோதிகள், பேராசை, அதீத காமம், நடத்தை தவறுதல், அவப்பெயர், ஆயுத பயிற்சி, கோபம், யுத்தம் நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில்கள், சாமர்த்தியம், தண்டனை அளித்தல், மண் சம்பந்தப்பட்ட பொருட்கள் இப்படி பல காரகங்கள் செவ்வாய்க்கு உண்டு.