Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜோதிட ரகசியங்கள்

ராகு எங்கிருந்தால் நன்மை?

பொதுவாக ராகு என்பது சர்ப்ப கிரகம். ஆனால், அந்த ராகு சில நல்ல யோகங்களையும் தரும். எதையும் பிரமாண்டமாக செய்ய வைக்கும். அந்த அடிப்படையில், ராகு உபஜெய ஸ்தானமான மூன்றாம் இடத்தில் வலிமை பெற்றிருந்தால், அந்த ஜாதகருக்கு மிகுந்த நன்மை ஏற்படும். அதே நேரத்திலே, ராகு, கேது ஆறாம் இடத்தில் இருந்தாலும்கூட நன்மையான பலனைத் தரும். கர்மஸ்தானம் எனப்படும் பத்தாம் இடத்தில் ராகு இருக்க, வலிமை பெற்றவர்கள் மிக நல்ல பலனை அடைவார்கள். உங்கள் ஜாதகத்தில் ராகுவும் கேதுவும் எங்கே இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அவர்கள் நற்பண்புகளைத் தருவார்களா? தீய பலன்களைத் தருவார்களா என்பதை கண்டுகொள்ள முடியும். லக்கினத்திலோ இல்லை, குடும்ப ஸ்தானமாகிய இரண்டாம் இடத்திலோ, எட்டாம் இடத்திலோ ராகு, கேது இருப்பது சுப பலனை தருவதாகச் சொல்லப்படவில்லை.அதே நேரத்தில், சுப கிரகங்களுடைய பார்வையோ, சாரமோ பெற்று தங்களுடைய தீமைகளை குறைத்துக் கொண்டு நன்மை செய்வதும் உண்டு. பதினோராம் வீட்டிலே ராகு, கேது இருப்பது நல்லது. லாபஸ்தானத்தில் ராகுவும் கேதுவும் நன்மைகளைச் செய்யும். வீண் செலவுகள் இருக்காது. தான தர்மங்கள் செய்வார்கள். செல்வம் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும். செய்யும் முதலீடுகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

இவ்வளவுதான் பரிகாரம்

சமீபத்தில் ஒரு பெண் ஜாதகத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இத்தனை நாட்களாக மாப்பிள்ளை தேடியும் அமையவில்லை என்று சொன்னார்கள். பல ஜோதிடர்களிடம் காண்பித்தும், அவர்கள் குறிப்பிட்ட சில பரிகாரங்களை (நிறைய செலவு செய்து) முடித்தும் காரியம் ஆகவில்லை என்றார்கள். நான் ஜாதகத்தைப் பார்த்தேன். ஜாதகத்தில் சாஸ்திர ரீதியான விதிகளின் படி சில தடைகள் இருந்தது உண்மைதான். ஏழுக்குரிய கிரகம் ஆறில் இருந்ததும், (அதாவது 7க்கு விரயத்தில்), லக்கினாதிபதி விரயத்தில் இருந்ததும், அஷ்டமாதிபதியின் பார்வையை சப்தமாதிபதி பெற்றிருந்ததும் கவனித்ததில் மிக எளிதாக திருமணத் தடையை கணிக்க முடிந்தது. அப்படியானால், இந்த பெண் திருமணமாகாமல் அப்படியே இருந்துவிட வேண்டியதுதானா? அப்படிச் சொல்லிவிடலாமா? காரணம், இதைப் போன்ற, ஏன் இதைவிட சில பாதகமான அமைப்பு உள்ள ஜாதகங்களுக்கு உரியவர்கள், திருமணமாகி

சந்தோஷமாக இருக்கிறார்கள்.இந்தப் பெண்ணுக்கு வயது 32க்கு மேல் ஆகிவிட்டது. பெண்ணின் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்தப் பெண்ணுக்கு திருமணம் ஆகுமா? ஆகாதா? என்கிற சந்தேகமே வந்துவிட்டது.

நான் பெண்ணின் அம்மாவிடம் கேட்டேன். ‘‘அம்மா, இந்தப் பெண்ணை நீங்கள் திருமணம் செய்து கொடுக்க மனப்பூர்வமாக நினைக்கிறீர்களா? இல்லை உங்கள் மனதிலே ஏதேனும் தடைகள் இருக்கிறதா?’’ அவருக்கு விளங்கவில்லை. அதாவது, அந்த பெண் ஒரு நல்ல வேலையில் இருந்து அந்த குடும்பத்தை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். அந்த வருமானத்தில் அவர்கள் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய பெற்றோர்களை கவனித்துக் கொண்டு, ஏதோ வேலையில் இருந்து கொண்டு, ஜாலியாக அவர் இஷ்டத்துக்கு வாழ்வதில் ஒரு பிரியம் இருப்பதும் தெரியவந்தது. அதனால், அவர்கள் வருகின்ற வரன்களை எல்லாம் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி (சம்பளம் பத்தவில்லை, படிப்பு போதவில்லை, பையன் பெண் வேலை செய்யும் இடத்தில் வேலை செய்யவில்லை) என்று சாக்கு போட்டு சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் சொன்னேன்;  “நீங்கள் இனி கோயிலில் பரிகாரம் செய்து ஒரு பிரயோஜனமும் இல்லை. உங்கள் மனதில்தான் இந்த பரிகாரம் நடக்க வேண்டும்”. இதுவரை, நீங்கள் பார்த்த ஜாதகங்களுக் கெல்லாம் நீங்கள்தான் ஏதோ ஒரு தடையைச் சொல்லி, வேண்டாம் என்று சொல்லி இருக்கிறீர்களே தவிர, மாப்பிள்ளை வீட்டார் யாரும் இந்தப் பெண்ணை கட்டிக் கொள்ள மறுத்ததாக இதுவரை நீங்கள் சொல்லவில்லை. இது வெறும் ஜாதகம் மட்டுமல்ல. உளவியல் ரீதியான பிரச்னையும் இதில் இருக்கிறது. உங்கள் பெண் மனோரீதியாக உங்களைப் பிரிய தன்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது அனுசரித்து வாழ வேண்டியது. அதிலே கொஞ்சம் சுதந்திரம் போகத்தான் செய்யும். அனுசரித்துத் தான் வாழ வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.நீங்களும், பெண்ணை நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்து அவள் வாழ்வதைப் பார்த்து சந்தோஷப்பட வேண்டும். அவளோடு காலம் முழுக்க இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. உங்களுக்கு அது சிரமமாகத்தான் இருக்கும். மன ரீதியாக அது சில சங்கடங்களைத் தரும். பெரும்பாலும் பலர் ஒரே குழந்தையோடு இருக்கின்றார்கள். அவர்களுக்கு இந்தச் சங்கடம் அதிகமாகவே இருக்கிறது. நீங்களும் உங்கள் பெண்ணும் மனரீதியாக ஒரு நல்ல வரனைப் பார்த்து கட்டி கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் போடுகின்ற கண்டிஷனுக்கு எல்லாம் இருக்கக்கூடிய ஆண் பிள்ளைகள் அனேகமாக இந்த உலகத்தில் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஆகையினால், இல்லாததை நினைத்து நீங்கள் ஏங்குவதைவிட இருப்பதில் எது சரியோ அதை எடுத்துக்கொண்டு, அதிலுள்ள குறைகளையும் ஏற்றுக்கொண்டு, ஒரு நல்ல மணவாழ்க்கையை அனுசரித்து வாழ்வதற்கு நீங்கள் கற்றுத்தர வேண்டும். அந்த வாழ்க்கையை மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி இருந்தால்தான் திருமணம் என்பது, இந்த பாதகமான கிரக நிலைகளைத் தாண்டி நடக்குமே தவிர, நீங்கள் வெறும் கிரகங்களைப் பார்த்து, ஏழாம் இடத்தான் 6-ம் இடத்தில் இருப்பதால் திருமணமாகாது என்று நினைத்தால் அது சரியாக இருக்காது. கிரகங்கள் சில உளவியல் பிரச்னையைத் தான் தருமே தவிர, மாப்பிள்ளை வீட்டுக்குச் சென்று கல்யாணத்தை நிறுத்தாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.