Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இயற்கையும் இறைவனும் ஒன்றா?

?தனி வழிபாடு, கூட்டு வழிபாடு இரண்டிற்கும் என்ன வேறுபாடு?

- ஆர்.ஜெ.கல்யாணி, நெல்லை.

தனி வழிபாடு என்பது தனிப்பட்ட முறையில், தான், தனது குடும்பத்தினர் என தனக்காகவும், தன் குடும்பத்தினரின் நலனுக்காகவும் வேண்டுதல் வைத்து பூஜை செய்வது. கூட்டுப் பிரார்த்தனை என்பது பொதுமக்கள் நலன் வேண்டியும், நாட்டு நலன் கருதியும் இறைவனிடம் வேண்டுவது. நமது ஆலயங்களில் நடக்கும் ஒவ்வொரு கால பூஜையுமே உலக நன்மை வேண்டி நடத்துப்படுவதுதான். ``லோகா சமஸ்தா சுகினோ பவந்து’’ என்ற பிரார்த்தனையுடன் ஆலய அர்ச்சகர் பொதுமக்கள் ஆகிய நமக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வார். ஆக ஒவ்வொரு கால பூஜையின்போதும் தீபாராதனை நடக்கின்ற நேரத்தில் நாம் தரிசனம் செய்ய நேரிடும்போது, அந்த நேரத்தில் எல்லோரும் ஒருமித்த மனதுடன் நாட்டுநலன் கருதி கூட்டுப் பிரார்த்தனையை மேற்கொள்ள வேண்டும். தனிநபராக வேண்டுவதைவிட கூட்டுப் பிரார்த்தனைக்கு மகத்துவம் அதிகம்.

?திருநல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சிவலிங்கம் ஆறு நாழிகைக்கு ஒரு தடவை நிறம் மாறுகிறது என்கிறார்களே?

- தெய்வீகம், திருப்பூர்.

அதனால்தானே அவருக்கு பஞ்சவர்ணேஸ்வரர் என்ற பெயர் தோன்றியது. இந்த ஆலய மூலவர் சுயம்பு மூர்த்தி. ஒவ்வொரு நாளும் ஐந்து நிறங்களில் வெவ்வேறு வேளைகளில் காட்சி தருகிறார். தாமிரம், இளஞ்சிவப்பு, பொன்னிறம், உருகிய தங்கம் மற்றும் நவரத்தின பச்சை என மாறி மாறி காட்சியளிப்பதால் இவரை பஞ்சவர்ணேஸ்வரர் என்று அழைப்பார்கள். இந்த ஆலயம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் என்ற ஊரிலிருந்து வலங்கைமான் செல்லும் சாலையில், ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

?இயற்கையும் இறைவனும் ஒன்றா?

- சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.

இல்லை. இறைவனின் அற்புதமான படைப்புகளில் ஒன்றுதான் இயற்கை. அந்த இயற்கையையும் நாம் இறைவனின் ஸ்வரூபமாக வணங்குகிறோம். உதாரணத்திற்கு சூரியன், சந்திரன், மலைகள், ஆறுகள் போன்றவை இறைவனின் படைப்பினில் உண்டானவைதானே. இவைகளை நாம் இயற்கை என்ற பெயரில் அழைத்தாலும், அவற்றையும் வணங்குகிறோம். இவ்வுலகில் உள்ள அனைத்துமே இறைவனின் படைப்புகள்தான் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

?சிலர் ஆயுள் முழுவதும் கடன் தொல்லையால் அவதிப்படுகிறார்களே? இதற்கும் ஜாதகத்திற்கும் தொடர்பு உண்டா?

- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

நிச்சயமாக தொடர்பு உண்டு. ஒருவருடைய ஜாதகத்தில் ஆறாம் இடம் என்பது கடனைப் பற்றிச் சொல்கிறது. லக்னாதிபதி ஆறாம் பாவகத்தில் இருந்தாலும் அல்லது ஆறாம் பாவக அதிபதி லக்னத்தில் இருந்தாலும் ஆறாம் பாவகமும் லக்னபாவகமும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருந்தாலும் இதுபோல கடன் தொல்லையால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பார்கள். கடன்தொல்லைக்கும் ஜாதகத்திற்கும் நிச்சயமாகத் தொடர்பு உண்டு.

?தேய்பிறை நாட்களில் சந்திரனை பார்க்கலாமா? மற்றும் 4ம்பிறை சந்திரனைப் பார்க்கலாமா?

- ம.ஸ்ரீகிருஷ்ணா, வழுவூர்.

தேய்பிறை நாட்களில் தாராளமாக சந்திரனைப் பார்க்கலாம். வளர்பிறையில் நான்காம்பிறை சந்திரனைப் பார்ப்பதற்கு முன்பாக, அமாவாசை கழிந்த இரண்டாவது நாள் அதாவது துவிதியை திதி நாளன்று பஞ்சாங்கத்தில் சந்திர தரிசனம் என்று கொடுத்திருப்பார்கள். சந்திர தரிசனம் என்று கொடுக்கப்பட்டிருக்கும் அந்த நாளில் மாலைப் பொழுதில் சந்திரனை தரிசித்துவிட்டால், மற்ற நாட்களில் அதாவது நான்காம்பிறை உட்பட எந்த நாளில் சந்திரனை தரிசித்தாலும் எந்தவிதமான தோஷமும் வந்து சேராது.

?திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதியின் சிறப்பு என்ன?

- பொன்விழி, அன்னூர்.

திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் ஆலயத்தில் பன்னீர் இலையில் வைத்து வழங்கப்படும் விபூதி, நோய்களை தீர்க்கக்கூடிய அருமருந்து என ஆன்றோர்கள் சொல்வார்கள். சுப்ரமண்ய ஸ்வாமிக்கு எப்படி பன்னிரு கரங்கள் உள்ளனவோ அதே போல பன்னீர் இலையில் பன்னிரண்டு நரம்புகள் உள்ளன. பன்னிரு இலை என்பது மருவி பன்னீர் இலை என்று அழைக்கப்படுகிறது. இந்த பன்னீர் இலை காண்பதற்கு முருகப் பெருமானின் வேல் போலவே காட்சி அளிக்கும். இதுபோக திருச்செந்தூர் ஆலயத்தின் மேலகோபுரத்தை 350 ஆண்டுகளுக்கு முன்பு திருவாவடுதுறை ஆதீனம் நிர்மாணிக்கும்போது பணியில் ஈடுபட்டவர்களுக்கு கூலி தர இயலாமல் போகவே அவர்களுக்கு இலையில் விபூதியை வைத்து கூலியாகக் கொடுத்ததாகவும் கோயிலைத் தாண்டி வெளியே சென்று அதனை பிரித்துப் பார்க்கும்படி கூறியதாகவும், அப்படி திறந்து பார்த்தபோது அவரவர் செய்த வேலைக்குத் தகுந்தவாறு அதில் கூலி இருந்ததாகவும் சொல்வார்கள். இத்தனை மகத்துவம் வாய்ந்த இந்த பன்னீர் இலை விபூதியை உடலில் பூசிக் கொள்ளும்போது தீராத வினைகள் மற்றும் நோய்கள் அனைத்தும் நீங்கும் என்பதுதான் அதன் தனிச் சிறப்பு ஆகும்.

?காகம் அடிக்கடி தலையை எத்திவிட்டு செல்கிறதே?

- தே.நேரு, வெண்கரும்பூர்.

ஏதேனும் ஒரு வேளையில் காகம் அவ்வாறு தலையில் கொத்திவிட்டுச் சென்றாலோ அல்லது காகத்தின் பாதம் தலையின் மீது பட்டிருந்தாலோ உடனடியாக அன்றைய தினமே தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்ய வேண்டும். அவ்வாறு தலைக்கு ஸ்நானம் செய்தபின்பும் தொடர்ந்து இதுபோல நடக்கிறது என்றால் உடனடியாக உங்கள் குடும்ப ஜோதிடரிடம் ஜாதகத்தை காண்பித்து உரிய பிராயச்சித்தத்தை அவசியம் செய்ய வேண்டும்.

?தற்கொலை நிகழ்ந்த வீட்டில் குடிபோகக் கூடாது என்று சொல்வது ஏன்? இதற்கு பரிகாரம் செய்ய வேண்டுமா?

- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

தற்கொலை செய்துகொண்டவரின் ஆத்மா அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும் என்ற நம்பிக்கையில் அவ்வாறு சொல்கிறார்கள். தற்கொலை செய்து கொண்டவருடைய வாரிசுகள் முறைப்படி அதற்குரிய பிராயச்சித்தங்களைச் செய்து முறையாக கருமகாரியத்தை செய்திருந்தால், அந்த ஆத்மாவானது பித்ருலோகத்தை நோக்கி தனது பயணத்தைத் துவக்கிவிடும். அவ்வாறு வாரிசுகள் யாரும் முறையாக கருமகாரியத்தைச் செய்யாத பட்சத்தில், அந்த வீட்டின் உரிமையாளர் தனிப்பட்ட முறையில் அதற்குரிய பரிகார ஹோமங்களைச் செய்து அந்த ஆத்மாவினை அந்த வீட்டில் இருந்து வெளியேற வைக்க இயலும். அதர்வண வேத முறைப்படி அந்தப் பூஜைகள் அமைந்திருக்கும்.