Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அனுஷம் நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்...

கால புருஷனுக்கு பதினேழாவது (17) வரக்கூடிய நட்சத்திரம் அனுஷம் நட்சத்திரமாகும். பதினேழு என்றவுடன் அதன் கூட்டுத் தொகையானது எட்டாம் (8ம்) எண்ணைக் குறிக்கிறது. இந்த எட்டாம் எண் என்பது சனி பகவானின் ஆதிக்க நட்சத்திரம். கடின உழைப்பிற்கு பெயர் போன நட்சத்திரம். இது ஒரு முழுமையான நட்சத்திரம் என்பது சிறப்பு. மேலும், ஸ்திர ராசியில் உள்ளதால் வலிமை பெறுகிறது என்றே சொல்ல வேண்டும்.

அனுஷம் நட்சத்திரத்தின் வேறு பெயர்கள் புல், தாளி, தேள், பெண்ணை ஆகியவை ஆகும். சமஸ்கிருதத்தில் இந்த நட்சத்திரத்தை அனுராதா என்றும் மருதுதாரா என்றும் அழைக்கின்றனர்.

அனுஷம் என்றால் வெற்றி என்ற பொருளுண்டு. இந்த நட்சத்திரம் சுறுசுறுப்பு மற்றும் சோம்பல் இரண்டும் கலந்த நட்சத்திரம்தான்.

சனி பகவான் சோம்பலைத் தருவான். செவ்வாய் பகவான் சுறுசுறுப்பைத் தருவான். இந்த நட்சத்திரம் இடம் ெபறும் ராசியானது போராட்டமானதுதான். சந்திரன் இந்த அனுஷத்தில் பயணிக்கும் நாளை வெள்ளை நாள் என்று

அழைக்கின்றனர்.

அனுஷ நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வம் மித்ரன் ஆவார். அனுஷத்தை தமிழில் பனை என்று குறிப்பிடுவார்கள். பனைமரம் என்பதும் அனுஷத்தோடு தொடர்புடையதாக உள்ளது. மேலும், அனுஷத்தில் சந்திரன் நீசம் ஆகிறது. அதுபோலவே, பனைமரம் அதிக அளவு தண்ணீரை உட்கிரகித்துக் கொள்ளும் ஒரு மரமாகும். வளர்வதற்குத்தான் மிகுந்த சிரமமாகும். வளர்ந்துவிட்டால் நீண்ட நாள் பலன் தரக்கூடியதாக உள்ளது. மேலும், நம் நாட்டில் முனிக்கு வழிபாடு செய்வார்கள். குறிப்பிடும்படியாக தனித்த பனைமரம் இருந்தால் அதில், முனி தங்கும் என்பது பெரியோர்களின் வார்த்தையாக உள்ளது. ஆகவே, தனித்த பனைமரத்திற்கு அருகில் உச்சி காலப் பொழுதில் செல்லக்கூடாது என்ற பழக்க வழக்கம் நம் முன்னோர்களிடையே உள்ளது. அந்த முனிக்கு உச்சிப் பொழுதில்தான் வழிபாடு நடக்கும்.

முனி என்ற தெய்வம் நவக்கிரகங்களில் சனியோடு தொடர்புடையது. மேலும், அனுஷம் - பனைமரம் - முனி - சனி என்பது எப்படி தொடர்பில் உள்ளது என்பதை புரிந்துகொள்ளுங்கள். சைவத்தை சேர்ந்த நாயன்மார்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் குலச்சிறையார். இவர் அனுஷத்தில் அவதரித்தவர்.

இவரைப் போலவே, மற்றொரு நாயன்மார்களில் ஒருவர் பூசலார் என்ற அந்தணர் குலத்தை சேர்ந்தவர். இவரும் அனுஷத்தில் அவதரித்த மகான். திருக்குறளை எழுதிய திருவள்ளுவரும் வைகாசி மாதம் அனுஷத்தில் அவதரித்ததாக நம்புகிறார்கள். காஞ்சி மகா பெரியவர் அவதரித்த நட்சத்திரம். இது மகான்களின் நட்சத்திரம்.

அனுஷம் என்பது தோஷமில்லாத நட்சத்திரங்கள் வரிசையில் இதுவும் ஒன்று. இந்த நட்சத்திரமானது வானில் மன்னனுக்கு விரிக்கப்படுவது போன்று வெண்குடை போல் காட்சி அளிப்பதாக உள்ளது.

இந்த நட்சத்திரம் முழுமையான சனி அதிபதியின் நட்சத்திரம் என்பதால் கொண்ட கொள்கையில் ஒரு நாளும் பின்வாங்க மாட்டார்கள். பிடிவாதமான நட்சத்திரம் என்று சொன்னால் நிச்சயம் மிகையில்லை.

அனுஷம் என்பது விருச்சிகத்தில் அமர்ந்த சந்திரனின் அம்சம். ஆகவே, அந்த ராசிநாதன் உச்சம் பெற்றிருந்தால் தனத்தை வாரி வழங்கும் தன்மை அமைப்பாக இருக்கும். குறிப்பாக பௌர்ணமி அன்று பிறந்து செவ்வாய் வலிமை பெற்றால் லெட்சுமி கடாட்ஷம் பொருந்தியவாராக இருப்பர்.

பொதுப்பலன்கள்

இது முழுமையான நட்சத்திரம். மேலும், சனி ஆதிக்கத்தில் இருப்பதால். பிடிவாத குணம் கொண்டவர்கள். ஒரு கொள்கையை இறுக்கமாக பற்றிக் கொண்டால் அதை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

ஆன்மிகத்தை தனது உயிர் முச்சாக கொண்டிருப்பார்கள். சிவ வழிபாடு மீது அதிக நம்பிக்கை உடையவர்கள். கோபம் என்பது இவர்களுக்கு சடாரென வந்து விடும். அது எவ்வாறு வந்ததோ, அவ்வாறே மறைந்துவிடும் தன்மை கொண்டவர்கள்.

இவர்களின் தாய்மீது அதிக அன்பு வைத்திருப்பார்கள். ஆனால், இவர்கள் தாயை பிரிந்து சிலரும், இன்னும் சிலருக்கு தாய் அதிக நோய்த் தொந்தரவுகள் உண்டாக்கும்.

ஆரோக்கியம்

சந்திரன் பலவீனம் அடையும் என்பதால், சில நேரம் கிடைத்ததை உண்ணும் பழக்கம் கொண்டவர்களாவும் சில நேரம் போஜனத்தை ராஜா போன்று ஏராளமாக எடுத்துக் கொள்பவராகவும் இருப்பர். இது இரண்டுமே இவர்களுக்கு பிரச்னையைத் தரும். ஆகவே, நேரத்திற்கு உடலுக்கு தேவையானதை எடுத்துக் கொண்டால் சிறப்பு.

இவர்கள் சிறுநீர் உபாதைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. நீர் அதிகம் அருந்த வேண்டும். சிலர் தவிர்த்து கொண்டே இருப்பர்.

ஆரோக்கியம் மேம்பட கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணியை வழிபட்டால் சிறப்பை தரும்.

அனுஷத்திற்குரிய வேதை நட்சத்திரம்...

வேதை என்பது தொந்தரவுகளையும் மனஸ்தாபங்களையும் ஏற்படுத்தக் கூடிய நட்சத்திரமாகும். பரணி என்பது வேதை நட்சத்திரமாக உள்ளது. இந்த நட்சத்திர நாளில் புதிய காரியங்களை தொடங்குவது வேண்டாம்.

பரிகாரம்

உங்களுக்குரிய ஜென்ம நட்சத்திர நாளில் மகிழ மரத்திற்கு அருகில் உள்ள சித்தரை வழிபாடு செய்வது நன்மை தரும். தென்காசிக்கு அருகில் உள்ள சங்கர நாரயணரை வழிபட்டு வருவது எல்லா பிரச்னைகளுக்கும் ஒரு நல்ல தீர்வை கொடுக்கும். மனத்தில் நீண்ட நாளாக உள்ள கேள்விற்கான விடையை அங்கு சென்று வந்தால் பெறலாம்.