இந்து மதம் என்பது பெரும் புராணங்களாகவும், கதைகளாகவும், தத்துவங்களாகவும் மூன்று அடுக்குகளை கொண்டது. இந்த மூன்றையும் நடைமுறை வாழ்வில் பின்பற்றத் தக்க வகையில் ஆசாரங்களாகவும், அனுஷ்டானங்களாகவும், சம்பிரதாயங்களாகவும் பிரித்து வைத்துக் கொண்டன. எப்போதுமே ஒரு புராணம் மூன்று விஷயங்களை கொண்டிருக்கும். முதல் அடுக்கில் குழந்தைகளுக்கும் புரியும் விதத்தில் எளிய கதைகளாக இருக்கும். இரண்டாவது அடுக்கில் உரையாடல்கள் மூலமாக பெரும் அறங்களை நுட்பமான கதைகளின் ஊடே சொல்லிச் செல்லும். மூன்றாவதான அடுக்கில்தான் வேதங்களின் அடிநாதமாக உள்ள வேதாந்த தத்துவங்களினூடே ஒரு ஜீவனின் முக்தியை குறித்த விஷயங்கள் இருக்கும். மகாபாரதம் எனும் பெருங் கதையாடலின் மத்தியில் வேதாந்த பொக்கிஷமான பகவத் கீதை இடம் பெற்றிருப்பதைப்போல அமைந்திருக்கும். இதுபோல பெரிய புராணம், கந்த புராணம், தேவி மகாத்மியம்... என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்த மூன்றாவது அடுக்குகளில் தத்துவ வேதாந்த அடுக்கே மிகவும் முக்கியமானது. உண்மையில் பார்த்தால் இந்து மதமே வேதாந்தத்தை பீடமாகக் கொண்டு கட்டப்பட்ட உயர்ந்த கோபுரமாகும். அதனால் அதை அறிவதே இந்து மதத்தின் இலக்கும் ஆகும். இந்து மதம் இந்த ஞான மரபினூடாகவே பல கிளைகளாக பிரிந்து செழித்தோங்கி வளர்ந்து கொண்டிருக்கின்றது. ஜீவன் முக்தி, தன்னை அறிதல், ஆத்ம சாட்சாத்காரம் என்று மீண்டும் மீண்டும் இதையே முன்வைக்கின்றது. இதை நோக்கிய பயணத்திற்காகவே இத்தனை பூஜைகளையும், புனஸ்காரங்களையும், தெய்வங்களையும், அந்தந்த தெய்வங்களுக்கு உரித்தான உபாசனா மூர்த்திகளையும், அந்த தேவதா மூர்த்திகளுக்குரிய மந்திரங்களையும், நிவேதனங்கள் முதற்கொண்டு சகலத்தையும் வகுத்துக் கொடுக்கின்றன.
மிக ஆச்சரியமாக இந்த சம்பிரதாயங்கள் தன் பாதையை தவறவிட்டு சாதாரண லௌகீக தளங்களில் பயணிக்கும்போது ஞானியர்கள் மீண்டும் அவதரித்து அந்தப்பாதையை செப்பம் செய்வார்கள். உதாரணமாக ஸ்ரீராமகிருஷ்ணர், விவேகானந்தர், வள்ளலார், நாராயணகுரு, சிதாநந்தநாதர், ஸ்ரீ ரமண மகரிஷி, ஜெ. கிருஷ்ணமூர்த்தி என்று கடந்த நூறு வருடங்களில் உதித்த மகான்களை சொல்லலாம். இதுபோல இத்தனை நூற்றாண்டுகளில் எத்தனையோ மகான்கள் வந்து இந்த ஞானப் பாதையை சரி செய்து சென்றிருக்கின்றனர். மெதுவாக அவர்களின் வாழ்க்கையையும், அவர்களால் இயற்றப்பட்ட நூல்களையும் உற்று நோக்கும்போது துண்டுபட்டு இரண்டாகியிருந்த இந்த பாரத தேசத்தின் ரிஷி பரம்பரையையும், அவர்களின் மேலான தத்துவ தரிசனங்களையும் இவர்கள் எப்படி மீண்டும் நமக்காக இணைத்து பொலிவூட்டி அளித்திருக்கிறார்கள் என்பது புரியும். எனவே, மகத்தான ஞானியரின் நூல் களின் உபதேசங்களை மெல்ல மெல்ல நம் அகத்திற்குள் புரிகிறதோ புரியவில்லையோ ஏற்றிக்கொண்டே செல்வோம். ஏனெனில், ஞானியரின் வாக்கு என்பது பாறையிடுக்குகளின் வழியே சேர்ந்து சேர்ந்து நல்ல கோடையில் வெளிவரும் சுனைநீர் போலானது.
எனவே, நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் சொத்து சேர்ப்பதற்கு முன்னால், பெருஞ் சொத்தான ஞானியரின் புத்தகங்களை குறைந்த பட்சம் அவர்களின் கண்பார்வையில் வைப்பதுதான். ஏதேனும் ஒருநாள் அதை அவர்கள் பிரித்துப் பார்த்து படிக்கும்போது உள்ளே வேறொன்று திறந்து கொள்ளும். இதைத்தான் பெரியோர்கள் அனுக்கிரகம் என்று சொன்னார்கள்.