Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அன்னாபிஷேகம்

அன்னாபிஷேகம் என்பது சிவாலய விழாக்களில் ஒன்றாகும். சோற்றை வடித்து ஆறவைத்து அதனை தெய்வத்திருமேனியில் சாற்றி, அதன் மீது அதிரசம், வடை போன்றவற்றைக் கொண்டு அலங்கரித்து, வழிபடுவதே அன்னாபிஷேகம் ஆகும். சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யும்போது பால், தயிர், தேன், கரும்புச்சாறு போன்ற பொருட்களின் வரிசையில், அன்னத்தையும் அபிஷேகம் செய்வர். சிதம்பரத்தில், ஸ்படிக லிங்க மூர்த்திக்கு தினமும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.அன்னாபிஷேகத்திற்கென்றே ஐப்பசி மாத பௌர்ணமியை ஒட்டி வரும்அஸ்வினி திருநாளை குறித்து வைத்துள்ளனர். இந்த நாளில், பிற்பகலில் சிறப்பாக அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.சிவலிங்க மூர்த்திக்கு பால், தயிர், போன்றவற்றில் அபிஷேகம் செய்து நன்கு ஒற்றாடை சாற்றி அதன்பின் அன்னத்தை முழுவதும் மூடும்படி அபிஷேகம் செய்து, அதன் மீது அதிரசம், அப்பம், முறுக்கு, வடை, தேன்குழல் போன்றவற்றால் அலங்கரித்து, எதிரே அடுக்கு இலைகள் இட்டு, அதில் வாழைக்காய் கறி, வெண்டைக்காய் கறி போன்ற கறி வகைகள், சுண்டல், புளியோதரை, வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் போன்ற அன்னங்கள், பாயசங்கள் போன்றவற்றை அலங்காரமாக வைத்து வழிபாடு செய்யப்படும். பெருமானுக்கு சகல தீபாராதனைகளும் வேத, தேவார திருமுறை பாராயணங்களும் நடத்தப்படும்.

அன்பர்கள், அன்னக் குவியலில் அமர்ந்திருக்கும் பெருமானைக் கண்ணாரக் கண்டுகளித்த பின் திரையிட்டு, அலங்காரங்களைக் களைவர். பெருமானின் உச்சியில் வைக்கப்படும் சோற்றுத் திரளையும் படைக்கப்பட்ட பட்சணங்கள், கறிகள் ஆகியவற்றில் சிறுபகுதி அகன்ற தட்டில் வைக்கப்படும். அதை பரிசாரகன் தலை மீது வைத்து குடை, தீவட்டியுடன் மேள தாளங்கள் முழங்க ஆலயத்தையும், திருவீதிகளிலும் வலம் வந்து தீர்த்தக் குளத்தில் கரைத்துவிடுவர். பின்னர், கோயிலுக்கு வந்து பெருமானுக்கு அபிஷேகம், தீபாராதனை செய்து, பெருமான் மீது அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை எடுத்து குழம்பு, தயிர் போன்றவற்றுடன் கலந்து அன்பர்களுக்குப் பிரசாதமாக அளிக்கப்படும். பெருமான், உயிர்களுக்கு வாழ்வின் ஆதாரமாக இருக்கும் உணவாகவும், நீராகவும் இருப்பதைக் குறிப்பதாகும். அன்னாபிஷேக விழாவைக் காண்பதும், அதில் அளிக்கப்படும் நிவேதனங்களை உண்பதும் பெரும்புண்ணியமாக கருதப்படுகிறது. அன்னாபிஷேகப் படையல் உணவை உண்பவர்களுக்கு, வாழ்வில் உணவுத் தட்டுப்பாடு வராது என்று நம்புகின்றனர்.

அன்னாபிஷேகம் என்பது, சிவபெருமானுக்கு மட்டுமே உரியதாகச் சொல்லப்பட்டுள்ள விழாவாகும். ஆனாலும், முருகன் கோயில்களிலும் கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூரில், ஷண்முகருக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அன்னத்துடன், வெண்ணெயைக் கலந்து ஷண்முகர் மீது சாற்றி, பட்சணப் பலகாரங்களால் அலங்கரித்து வழிபாடு செய்கின்றனர். இது இந்த தலத்திற்கே உரிய சிறப்பு வழிபாடாகும்.மாமன்னன் இராஜேந்திர சோழன், கங்கை வரை தனது படையெடுத்து வென்று வந்ததை நினைவூட்டும் வகையில் கட்டியதே கங்கை கொண்ட சோழபுரம் கோயிலாகும். இதன் லிங்கம் பெரியதாகும். ஐப்பசி பௌர்ணமியன்று, 1000 கிலோ அன்னத்தை பெருமானுக்கு அபிஷேகித்து, நிவேதனமாக அளிக்கின்றனர். இத்தகைய பெரிய அன்னதானத்தை வேறெங்கும் பார்க்க முடியாது.

குழித்தளிகை

பெரிய சிவாலயங்களில், உச்சி வேளையில் நிவேதிக்கப்படும் பூரணமான உணவை, குழித்தளிகை என்று அழைக்கப்படும். இதில், நடுவில் அன்னத்தை பட்டையாக அடித்து, சாற்றி வைக்கப்படும். அந்த அன்னத்தினை, உச்சியில் இருக்கும் குழியில் நெய்யை விட்டு இருப்பர். அன்னத்தைச் சுற்றி சிறுசிறு கிண்ணங்களில் பருப்பு, சாம்பார், மோர்குழம்பு, ரசம், தயிர், கூட்டு, பச்சடி, காரக்கறி, பொரியல், அப்பளம், பாயசம், வடை, பணியாரம் ஆகியவை வைக்கப்பட்டிருக்கும்.இது முழுமையாக உணவாக இருக்கும்.கோத்தளிகை என்பதே குழித்தளிகை ஆனதென்பர். அரச உணவாக இருப்பதை ஒட்டி இந்த பெயர் பெற்றது. அண்மைக் காலம் வரை குழித்தளிகை நிவேதனம் செய்யப்பட்டு வந்தது. இப்போது, ஆட்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால், குழித்தளிகை நிவேதனம் செய்யும் வழக்கம் அதிகம் இல்லாமல் போய்விட்டது.

குழித்தளிகை நிவேதனம் பற்றி நமது நல்லாதரவாளர் சிவ சபாரத்ன சிவாச்சாரியர் அவர்கள் தனது அனுபவத்தை பகிர்ந்தார். சென்னை மல்லீஸ்வரர் கோயிலில் நடைபெற்று வந்த பௌர்ணமி தினத்தன்று நிவேதனத்தைப் பற்றி அவர் சொல்வதாவது; அகன்ற மூங்கில் தட்டு, அதன் நடுவில் சற்று சிறிய தட்டு, அதில் வாழை இலையை வட்டமாக வெட்டிப் போட்டு பெரிய பட்டையாக அன்னம், அதன் மீது பருப்பை வைத்து, அதில் சற்று நெய் விட்டு, அதன் மீது பூ ஒன்றை வைப்பர். இந்த தட்டைச் சுற்றி வாழை இலையில், தைத்த பத்து முதல் பதினாறு வரையிலான தொன்னைகள், அதில் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வாழைக்காய் கறி, குழம்பு, ரசம், கூட்டு, தாளித்த தயிர்வடை, அப்பம், அரிசி முறுக்கு போன்றவை இடம் பெற்றிருக்கும். இவை ஒவ்வொன்றிற்கும் ஒரு பூ வைக்கப்பட்டிருக்கும்.

இதுபோல் மூன்று தட்டுக்கள். பரிசாரகர்கள் மூவர், இந்த தட்டுக்களை தலையில் சும்மாடு வைத்து, அதன் மீது வைத்துக் கொள்ள, குடை, தீவட்டியுடன் மடைப் பள்ளியில் இருந்து புறப்பட்டு, பிராகாரத்தை வலம் வந்து, கொடி மரத்திற்கு எதிரிலுள்ள வாயில் வழியாக உள்ளே செல்வர்.ஐந்து நிமிடங்கள் வரை திரையிட்டு நிவேதன மந்திரங்கள் சொல்லப்படும். நிவேதனம் முடிந்ததும், திரும்பவும் தட்டுக்கள் தலைவாயில் வழியாக வெளிவந்து, பிராகாரத்தை வலம் வந்து, மீண்டும் மடைப் பள்ளியில் கொண்டு சென்றுவைக்கப்படும். நிவேதிக்கச் செல்லும்போது, மேள, தாள, குடை, தீவட்டியும் இப்போதும் உடன் வரும். நிவேதனத்திற்குச் செல்லும்போது தளிகை மல்லாரியும், திரும்பும்போது எச்சரிக்கை மல்லாரியும் வாசிக்கப்படும்.

மடைப்பள்ளி (பசனாலயம்)

தெய்வங்களுக்குச் செய்யப்படும் நிவேதனங்களுக்குரிய பெயர்களில், மடைப்பள்ளியும் ஒன்றாகும். பழைய காலத்தில், தெய்வங்களுக்கு இடப்படும் உயர்ந்த உணவு `மடை’ என்னும் சொல்லால் குறிக்கப்பட்டது. மாடை என்பது செல்வத்தையும் மடை என்பது உணவையும் குறிப்பதாகும். இலக்கியங்களில், தெய்வங்களுக்கு படைக்கப்படும் உணவு மடை எனப்பட்டது.ஆலயங்களில், தெய்வங்களுக்குரிய மடையைச் செய்வதற்கான இடம் மடைபள்ளி எனப்பட்டது. வடமொழியில், பசனாலயம் என்று கூறுவார்கள். பசனம் என்றால் சமைப்பது. எனவே, இதனை பசனாலயம் எனவும் அழைத்தனர். ஆலயங்களில், பெருமளவு உணவு நிவேதனமாகத் தயாரிக்கப்பட்டதால், மடைப் பள்ளியினை பெரியதாக அமைத்தனர். சமைக்கவும், பாத்திரங்களைக் கழுவித் தூய்மை செய்யவும், தேவையான நீரைப் பெற மடைப்பள்ளிக்குள்ளேயே கிணறு அமைக்கப்பட்டது. பெரிய பாத்திரங்களை வைத்து சமைக்கும் வகையில், கோட்டை அடுப்புக்கள் கட்டப்பட்டன. சமைத்த அன்னத்தை, ஆறவைக்கவும், அதனுடன் குழம்பு முதலியவற்றைச் சேர்த்துக் கிளறுவதற்காகவும் பெரிய பலகைக் கற்களால் அமைக்கப்பட்டது.

ஒருபுறம் பொருட்களை வைக்க அலமாரிகள் கட்டப்பட்டிருந்தன. அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகியவற்றைச் சேமித்து வைக்க பெரியமண்பானைகள், சால்கள், எண்ணெய் குடங்கள் வைக்கப்பட்டிருந்தன. சமையலை தொடங்குமுன், விநாயகரை வணங்க, சிறிய வடிவிலான விநாயகர் செய்து வைக்கப்பட்டது.மடைப்பள்ளிக்குள் இருக்கும் கிணறுகளில், மழைநீர் நேரடியாக சேர, இடைவெளி விட்டிருந்தனர். அடுப்பின் புகை வெளியேறவும், வெளிச்சம் வரவும், புகைக் கூண்டுகளும், ஜன்னல்களும் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு துறைக்கும் தலைவன் இருப்பது போல, சமையல் கலையில் தேர்ந்தவர்களுக்குத் தலைவனாக இருப்பவன், மடையடுவோர் தலைவன் எனப்பட்டான்.

இந்த மடைத்தலைவன் என்பவன், சமையலுக்குப் பயன்படுத்தும் பொருட்களின் சுத்தம் - அசுத்தம் பற்றியும், எந்த வகை எதற்குப் பகை என்பதையும், அறுசுவைகளின் கலப்புகளால் உண்டாகும் சுவை வேறுபாடு, குணவேறுபாடு பற்றி, நன்கு அறிந்திருக்க வேண்டும் என்கிறது சுக்கிரநீதி. நடைமுறையில் பாகம் செய்பவன் எனப்படுகிறான். கோயில்களில், `சுயம்பாகி’ என்று அழைக்கின்றனர்.

உப்பும் வழிபாடும்

உணவிற்கு சுவைசேர்ப்பது உப்பாகும். உப்பு உணவின் தன்மையை, சுவையை மேம்படுத்துகிறது. உப்புதல் மேம்படுதல் வடிவம். ஆறுவகை சுவையுமே, உப்பால் உண்டாகிறது. இன்+உப்பு=இனிப்பு; கரித்தல்+உப்பு=கரிப்பு; காரம்+உப்பு=கார்ப்பு; புளித்தல்+உப்பு=புளிப்பு. ‘‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’’ என்பது பழமொழியாகும். வடமொழியில், உப்பை `லவணம்’ என்பர். உப்பினால் லிங்கம் செய்து வழிபடும் வழக்கம் உள்ளது. உப்பாலான லிங்கம், லவணலிங்கம் எனப்படும். அவருடைய தேவி, லவணேஸ்வரி என்று அழைக்கப்படுகிறாள். இராமேஸ்வரத்தில், மேற்குப் பிராகாரத்தில் செய்து வைத்து வழிபட்ட லவணலிங்கம், லவணேஸ்வரியோடு காட்சிதருகிறார். உப்பு எளிதில் கரைந்து விடும் தன்மை கொண்டது. ஆனால், இந்த உப்புலிங்கம் பல நூற்றாண்டுகளாக கரையாது உறுதியாக உள்ளது.

கௌரி விரதங்களில் `லவணகௌரி விரதம்’ என்பதும் ஒன்றாகும். உப்பைக் குவித்து வைத்து, ஆடை ஆபரணங்களால் அலங்கரித்து, கௌரி தேவியாக வழிபடுகின்றனர். கல்வெட்டுக்கள், கோயிலுக்குக் கொடுக்கும் உப்பை `உப்பமுது’ என்றே குறிக்கின்றன. கோயில்களில் உப்பு சேர்த்தே சமைக்கின்றனர். தானம் அளிப்பதற்குரிய பொருள்களில், உப்பும் ஒன்றாகும். இதனை, `லவணதானம்’ என்பர். உப்பை வைக்க மரத்தாலான பாத்திரங்களைப் பயன்படுத்தினர். உப்பு எளிதில் நீர்த்துவிடும். உலோகங்களை அரித்துவிடும். அதனால், அதனை மரத்தில் சேமித்துவைப்பர்.உப்பு என்றதும், கடலிலிருந்து பெறப்படும் உப்பே நினைவுக்கு வந்துவிடுகிறது. உப்பு கடலில் இருந்து தோன்றுவதால், அதை லட்சுமியின் அவதாரமாகச் சொல்வர். உப்பு கடலில் இருந்து மட்டும் தோன்றுவதில்லை. பூமியில் விளையும் உப்பு, மலைகளில் பாறையில் விளையும் உப்பு, ஆற்றின் உவர் மண்ணில் இருந்து பெறப்படும் உப்பு என்று உப்பு பலவகைப்படும். கடல் நீரைக் காய்ச்சி எடுக்கும் முறை எளிது என்பதாலும், விலை குறைவு என்பதாலும் கடலுப்பை பயன்படுத்துகின்றனர்.

நெய் விரவு கறிசோறு முப்போதும் வேண்டும்

சோற்றுடன் குழம்பு, ரசம், தயிர் ஆகியவற்றைச் சேர்த்துப் பிசைந்து உண்பதே பெரு வழக்கம். குழம்பில் தான்கள் எனப்படும் கத்தரிக்காய், முருங்கைக்காய் போன்ற அனேக காய்கறிகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் கறிகள், கூட்டு, அவியல், பொரியல், போன்றவற்றில் காய்கறிகள் பயன்படுத்தப்படுகின்றன. இப்படியன்றி அரிசியுடன் காய்கறிகளைச் சேர்த்து ஏலம், லவங்கம், பட்டை போன்ற முதலிய சுவையூட்டிகளைச் சேர்த்து உணவு தயாரிப்பர். இதையே நெய் விரவு கறிசோறு என்று அழைக்கின்றனர். சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருநாகை தோரணத்தில் அருளிய பதிகத்தில் பெருமானிடம் நெய் விரவு கறிசோறு முப்போதும் வேண்டும் என்று வேண்டுகின்றனர்.