Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

முருகனுக்கும் அன்னாபிஷேகம்

பாலமுருகன் திருக்கோயில், ரத்தினகிரி

மூலவர்: பாலமுருகன்

உற்சவர்: சண்முகர்

ரத்னகிரி பாலமுருகன் கோயில் இந்தியாவில் வேலூர் மாவட்டம், திருமணிக்குன்றம் அருகே உள்ள ஒரு பழமையான முருகன் கோயில். இது 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது ஒரு மலை உச்சியில் அமைந்துள்ளது. எங்கெல்லாம் குன்றுகள் உள்ளதோ அங்கெல்லாம் முருகன் கோயில் இருக்கும் என பண்டைய இந்து வேதங்கள் கூறுகின்றன. காலப் போக்கில் ஒரு சாதாரண மணல் அமைப்பானது பின்னர் கல் கோயிலாக மாற்றி அமைக்கப்பட்டது. 14 வது நூற்றாண்டு கவிஞர் அருணகிரிநாதர் இந்த கோயிலில் `ரத்தினிகரி வாழ் முருகனே இளைய வாராமாரர் பெருமாளே’ என்று பாடியுள்ளார். அதாவது `முருகன், தேவர்களின் கடவுள்’ ரத்தின கிரியில் வசிக்கிறார். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பது முதுமொழி. இவ்வாறு முற்காலத்தில் இங்குள்ள குன்றில் முருகன் கோயில் இருந்தது. சரியான வசதி இல்லாததால், சுவாமிக்கு முறையான பூஜை எதுவும் நடக்கவில்லை.

ஒருசமயம் இக்கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர், அர்ச்சகரிடம் சுவாமிக்கு தீபாராதனை காட்டும்படி கேட்டார். அர்ச்சகர் கற்பூரம் இல்லை என்றிருக்கிறார். பின்பு, பத்தி ஏற்றி வைக்கும்படி வேண்டினார் பக்தர். பத்தியும் இல்லை என்றார் அர்ச்சகர். பரிதாப நிலையில் இருக்கும் கோயிலை நினைத்து வருத்திய பக்தர், தீபாராதனைகூட செய்யப்படாத முருகனுக்கு கோயில் தேவைதானா? என்று சிந்தித்தார்.

உடன் அவரது மனதில் முருகன் பிரசன்னமாக தோன்றவே, மயக்கமானார் பக்தர். இதைக்கண்ட அர்ச்சகர் ஆட்களை அழைத்து வர, மலையடிவாரத்திற்கு சென்றார். இதனிடையே எழுந்த பக்தர், மணலில் ``இந்த முருகன் என்னை ஆட்கொண்டுவிட்டான். கோயில் திருப்பணி தவிர வேறு சிந்தனை எனக்கில்லை,’’ என மணலில் எழுதி வைத்துவிட்டு அமர்ந்து விட்டார். அதன்பின்பு அவர் யாரிடமும் பேசவும் இல்லை. அவர்தான் பாலமுருகனடிமை. பிற்காலத்தில் இங்கு குன்றிலேயே முருகனுக்கு தனிக் கோயில் கட்டப்பட்டது.

முருகப் பெருமானுக்காக இந்த ரத்னகிரி கோயில் கட்டப்பட்டிருக்கிறது. புராதன கோயிலான இது வேலூரில் ஒரு மலையுச்சியில் அமைந்துள்ளது. பாலமுருகன் அடிமைகள் என்பவரால் எழுப்பப்பட்ட இந்த கோயில் ஸ்தலத்தில் ஒரு மருத்துவமனை மற்றும் பள்ளி ஆகியவையும் இயங்கி வருகின்றன. இக்கோயிலின் ஆன்மிக சக்தியானது மூன்று ஆதாரங்களிலிருந்து ஒளிர்வதாக உள்ளூர் நம்பிக்கைகள் கூறுகின்றன. அதாவது, முருகப்பெருமானது அருள் முதலாவதாகவும், குரு ஸ்வாமி பாலமுருகன் அடிமை அவர்களது அருள் இரண்டாவதாகவும், முருகபக்தர்களின் பக்திவலிமை மூன்றாவதாகவும் இந்த தலத்தில் மையம் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இக்கோயிலுக்கு முருகனை தரிசிக்க விஜயம் செய்கின்றனர். உற்சவர் சண்முகர் சந்நதி, கல் தேர் போன்று அமைக்கப்பட்டிருக்கிறது. முன் மண்டபத்தில் கற்பக விநாயகர் எழுந்தருளியிருக்கிறார். அடிவாரத்தில் துர்க்கைக்கு தனிக்கோயில் இருக்கிறது.

நவராத்திரி, ஆடி, தை வெள்ளி மற்றும் ராகு காலத்தில் இவளுக்கு விசேஷ பூஜை நடத்தப் படுகிறது. இக்கோயிலில் வாராஹிக்கு சந்நதி உள்ளது. இவளுக்கு இருபுறமும் நந்தி, சிம்ம வாகனங்கள் இருக்கிறது. இத்தல விநாயகர் கற்பக விநாயகர் என வழிபடப்படுகிறார். இங்குள்ள கோபுரம் 5 நிலைகளைக் கொண்டது. திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு முருகனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். திருமணத்தடை உள்ளவர்கள் வளர்பிறை பஞ்சமியில் இங்குள்ள வாராஹியிடம் வாழை இலையில் அரிசி, தேங்காய், வெற்றிலை, பழம் வைத்து நெய் தீபம் ஏற்றி வேண்டிக் கொள்கிறார்கள். முருகனை வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் முருகனுக்கு பாலபிஷேகம் செய்தும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்து கிறார்கள்.

இத்தலத்து முருகனுக்கு பூஜையின் போது மலர்கள், நைவேத்யம், தீபாராதனை, பூஜை செய்யும் அர்ச்சகர் என அனைத்தும் 6 என்ற எண்ணிக்கையில் இருப்பது சிறப்பு. ஐப்பசி பவுர்ணமியில் சிவனுக்குத் தான், அன்னத்தால் அபிஷேகம் செய்வர். ஆனால் இங்கு முருகனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

முருகன், சிவனிலிருந்து தோன்றியவர் என்பதால் சிவ அம்சமாகிறார். இதன் அடிப்படையில் இங்கு முருகனுக்கு அன்னாபிஷேகம் செய்வதாக சொல்கின்றனர். அருணகிரியார் இத்தல முருகனைப் பற்றி திருப்புகழில், ``ஒப்பில்லாத மாமணி, வித்தகர்’’ எனச் சொல்லி பாடியிருக்கிறார். ஆடி கிருத்திகையன்று சுவாமி, ரத்தினங்களால் ஆன ஆடையால் அலங்காரம் செய்யப்பட்டு காட்சி தருவது விசேஷம். இங்கு முருகன் பால வடிவில் இருப்பதால், தினமும் அர்த்தஜாம பூஜையில் பால் நிவேதனம் செய்கின்றனர். கந்த சஷ்டியின் போது சூரசம்ஹாரமும் நடப்பதில்லை.கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6.30 மணி முதல் 1.00 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

இருப்பிடம்: வேலூரில் இருந்து சென்னை செல்லும் வழியில் 14 கி.மீ., தூரத்தில் இத்தலம் இருக்கிறது. நிறைய பஸ் வசதி உண்டு.