Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தெளிவு பெறுவோம்

?யாகங்கள் மூலமாக நாம் செலுத்தும் பொருட்கள் கடவுளை போய்ச் சேருமா?

- லலிதா சுப்பிரமணி, குடியாத்தம்.

நிச்சயம் போய்ச் சேரும். வெளிநாடுகளில் இருப்பவர்கள் இந்தியாவிலிருக்கும் தம் உறவினருக்குப் பணம் அனுப்புகிறார். அங்கே டாலரில் அவர் செலுத்தும் பணம் ரூபாயாக மாற்றப்பட்டு, இங்கே இந்தியாவில் இருப்பவருக்கு பட்டுவாடா செய்யப்படுகிறது. இதேபோலத்தான் யாகமும். யாககுண்டத்தில் நாம் இடும் பொருட்கள் யாகத் தீயால், புகையால் எடுத்துச் செல்லப்பட்டு கடவுளை அடைகிறது. இதேபோலத்தான் நாம் செலுத்தும் நீத்தார் கடனும். நம் மூதாதையரை நினைத்து நாம் கொடுக்கும் திதிப் பொருட்கள் வேறு ரூபத்தில் அவர்களைப் போய்ச் சேர்ந்து அவர்களுடைய ஆத்மாவை சாந்தப்படுத்தும் என்பது இந்துக்களின் ஆழமான நம்பிக்கை. ஆவிகளுடன் ‘பேசும்’ பயிற்சியை மேற்கொண்டவர்கள் மேலுலகில் ‘வாழும்’ தம் முன்னோர்களுக்குப் படைக்கும் நிவேதனங்கள் அவர்களை அடைவதாக உறுதியாகச் சொல்வார்கள். அவ்வாறு படைக்கப்படும் நிவேதனப் பொருட்களில் ருசி மாறியிருக்கும் என்பது அவர்களுடைய அனுபவம்.

?வில்வம், துளசி ஆகிய இலைகளை முந்தின நாள் பறித்து வைத்து மறுநாள் இறைவனுக்கு உதிரியாக அர்ச்சிக்கவோ, மாலையாக அணிவிக்கவோ செய்யலாமா?

- ஆ. ஞானகற்பகம், அருவங்காடு.

செய்யலாம். பொதுவாகவே வில்வமாகட்டும், துளசியாகட்டும் இரண்டுமே இரண்டு நாட்கள் வரை வாடாமல் இருக்கக்கூடிய தன்மை படைத்தவை. அவற்றை சுத்தமாக வைத்திருந்து இறைவனுக்கு அர்ப்பணிக்கலாம். ஆனால், வாடக்கூடிய பிற மலர்களைப் போலவே இவற்றையும் பயன்படுத்துவது எந்த சந்தேகத்திற்கும் இடமளிக்காது. அன்றலர்ந்த மலரை இறைவனுக்கு சமர்ப்பிப்பது போல வில்வம், துளசியையும் செய்வது நல்லது. ரொம்பவும் தவிர்க்க முடியாத காரணத்தால் ஓரிரு நாள் கடந்து அவ்வாறு அர்ப்பணிக்க வேண்டிய நிலைமை வந்தால் மட்டுமே ஒரு சலுகையாக அவ்வாறு செய்யலாம்.

?பெண்கள் ஆஞ்சநேயருக்குப் பொட்டு வைத்துப் பூஜிக்கலாமா?

- காஞ்சனா, குலசேகரபட்டினம்.

ஆஞ்சநேயர் பிரம்மச்சாரி என்பதால் அவரைப் பெண்கள் தொடக்கூடாது, அவருக்குப் பெண்கள் பொட்டு வைத்துப் பூஜிக்கக்கூடாது என்று சிலர் கருதலாம். ஆனால், அவர் தெய்வமாக இருப்பதால் அவரை வழிபடுவதில் ஆண்-பெண் என்ற வேற்றுமை உணர்ச்சியை விலக்கிவிட வேண்டும். ஆண்கள்அம்பிகைக்குப் பொட்டிட்டுப் பூஜிக்கவில்லையா?

?இரவு நேரங்களில் ‘நாராயணா’ என்ற நாமத்தையும் ‘ராமா’ என்ற நாமத்தையும் சொல்லக் கூடாது என்று சிலர் கூறுகிறார்கள். இது சரியா?

- சுதா, பட்டிஸ்வரம்.

இறைவன் நாமத்தைச் சொல்வதற்கு எல்லா நாளும் நல்ல நாள்தான், எல்லா நேரமும் நல்ல நேரம்தான். இஷ்ட தெய்வத்தின் எந்த நாமத்தையும் எக்காலத்திலும் ஓதலாம். இதற்கு நாராயணா, ராமா ஆகிய நாமங்கள் விதி விலக்கல்ல. ‘‘எந்தக் காலத்திலும் எந்த நிலையிலும் கவலை இல்லாமல் பகவானைத்தான் பூஜிக்க வேண்டும்’’ என்கிறார், தேவரிஷி நாரதர். ‘‘துஞ்சலும் துஞ்சலில்லாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தோறும்’’ என்பது திருஞானசம்பந்தர் வாக்கு. இதற்கு, ‘‘உறங்கும்போதும் உறக்கம் இல்லாதபோதும் மனமுருகி தினந்தோறும் (நமசிவாய என்ற ஐந்தெழுத்துக்களை) நினையுங்கள்’’ என்று பொருள். ‘‘இரவு நேரங்களில் ஆஞ்சநேயர் ராமரைத் தியானம் செய்துகொண்டிருப்பார். அத்தகைய நேரங்களில் நாம் ராமநாமம் சொன்னால், ஆஞ்சநேயரின் தியானம் கலைந்து ராமநாமம் சொல்லப்படும் இடத்திற்கு ஓடி வந்து விடுவார். அவரது தியானத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் இரவு நேரத்தில் நாம் ராமநாமம் சொல்லக்கூடாது’’ என்ற கருத்து சிலரிடையே நிலவுகிறது. இது அர்த்தமற்றது.

?எல்லா ஊர்களிலும் முருகன் இருக்கிறான். ஆனால் பழனி முருகன் மட்டும் சக்தி வாய்ந்தவனாகக் கருதப்படுவது ஏன்?

- முருகன், பாளையங்கோட்டை.

‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்’ என்று ஒரு பழமொழி கூறுகிறது. எந்த இடத்தில் தொன்றுதொட்டுச் சிறந்த பக்தர்கள் தெய்வத்தை வழிபட்டிருக்கிறார்களோ, அந்த இடத்தில் தெய்வ சாந்நித்தியம் (சக்தி) அதிகமாக வெளிப்படும். அப்படிப்பட்ட திருத்தலங்களில் பழனியும் ஒன்று.

?தீய கனவுகள் வருகின்றன. எப்படித் தவிர்ப்பது? அது ஏதேனும் அச்சானியத்தின் அறிகுறியா?

- எஸ்.பி.தளவாய் பூபதி, விழுப்புரம்.

மனதில் குழப்பங்கள் சேராமல் பார்த்துக்கொள்ளுங்கள். தினசரி நடவடிக்கைகளில் யாருக்கும் தீங்கு நினையாதிருக்கப் பழகுங்கள். முயற்சிகள் தோல்வியுற்றால், துவளாமல், வேதனையில் ஆழ்ந்துபோகாமல், அமைதியாக மேலும் நல்முயற்சிகளை மேற்கொள்ளப் பாருங்கள். வெற்றி கண்டுவிட்டால் அதனை ஆரவாரமாகக் கொண்டாடாதீர்கள். அது பிறர் பொறாமைக்கு வழிவகுக்கும். உங்கள் திறமைக்குக் கிடைத்த வெற்றிதான் என்றாலும், அதை எல்லோரும் சகித்துக் கொள்வார்கள், ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆகவே நல்லதோ, கெட்டதோ இரண்டையும் ஒரே மாதிரி பாவிக்கப் பழகுங்கள். இந்த மனப் பழக்கத்திற்கு பிராணாயாமம், தியானம், யோகா என்று பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. மனம் அமைதியுற்றால் தீய கனவுகள் கிட்டவே நெருங்காது. அமைதியுறும் மனம், பிறருக்குத் தீங்கு நினைக்காது என்பதால் எப்போதும் நற்சிந்தனைகளுடனேயே இருக்கும். ஆகவே கனவுகள் தூக்கத்தில் துன்புறுத்தாது. இத்தகைய மனநலப் பயிற்சிக்கு முதல்படியாக, இரவு உறங்குமுன் ஒருசில வினாடிகள் இறைவனை உளமார நினைத்துவிட்டு, சிறிது விபூதியை நெற்றியில் இட்டுக்கொண்டு, உறங்கப் போகலாம்.

?பெருமாள் கோயில்களில் உறியடி உற்சவம் கொண்டாடுகிறார்களே, அது எதைக் குறித்து?

- கோ.வே.தியாகபூபாலன், திருஇந்தளூர்.

இறைவனின் திருவிளையாடல்களை மீண்டும் நடத்திப் பார்த்து, அதை ஆன்மிகப்பூர்வமாக அனுபவித்து ரசிக்கும் பக்தர்களின் சம்பிரதாய நடவடிக்கை அது. பாலகிருஷ்ணன், கோபியர் வீடுகளில், உத்தரத்திலிருந்து தொங்கிக்கொண்டிருக்கும் உறியிலிருந்து வெண்ணெய், தயிர் திருடித் தின்றானே, அந்த சம்பவத்தை மறுபடி நிகழ்த்திப் பார்க்கும் வைபவம் அது. கண்ணன் காலத்தில், அவன் தம் வீடுகளிலிருந்து வெண்ணெய் திருடிச் செல்லமாட்டானா, அவனை மிரட்டுவதுபோல விரட்டிக்கொண்டு ஓடமாட்டோமா என்று கோபியர் ஏங்கியதுண்டு. இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் ஒரு நாடகமாக நிகழ்த்திக் காட்டினால் எவ்வளவு சுவையாக இருக்கும்? அப்படித்தான் பல வருடங்களுக்கு முன்புவரை பல வைணவக் கோயில்களில் நடைபெற்றுவந்தது. ஆனால், நாளாவட்டத்தில், நேரமின்மை காரணமாகவோ, ஆர்வக்குறைவு காரணமாகவோ, எல்லாம் சுருங்கி, வெறும் உறியடிக்கும் நிகழ்ச்சி மட்டுமே தங்கிவிட்டது.