Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

இசைக்காகவே ஊத்துக்காடு

அந்த இளைஞருக்கு சங்கீதத்தின் மீது அளவு கடந்த ஆர்வம். ஒரு சமயம்... அவர் போய்க் கொண்டிருந்த போது, மனதை மயக்கும் குரல் ஒன்று கேட்டது.‘‘ஹா! யாரோ பாடுகிறார்கள். என்ன காம்பீர்யம்! எடுப்பு, தொடுப்பு, விடுப்பு என எல்லாமே அற்புதமாக இருக்கின்றன. இப்படிப்பட்ட இசையை இதுவரையில் கேட்டதில்லை.  யார் பாடுகிறார்கள்? ம்...!’’ என்று எண்ணிய படியே குரல் வந்த திசை நோக்கி நடந்தார். அங்கு பார்த்தால், இதயத்தை வருடும் அப்பாடல், இடுகாட்டில் இருந்து வந்து கொண்டிருந்தது. இளைஞர் விடவில்லை. உள்ளே எட்டிப் பார்த்தார். இடுகாட்டின் உள்ளே, அக்னி யோகத்தில் அமர்ந்தபடி, கிருஷ்ணயோகி என்பவர் பாடிக்  கொண்டிருந்தார்.

தூரத்தில் இருந்தபோது செவிகளில் விழுந்து வரவழைத்த பாடல், இப்போது அருகில்வந்து கேட்டதும், அப்படியே கட்டிப் போட்டது. தன்னை மறந்து, கண்களை மூடி இசை அமுதத்தை முழுமையாக அனுபவித்துக் கொண்டிருந்த வேளையில், மின் தடங்கல் ஏற்பட்டு குளிர்சாதனம் (ஏ.சி.) வேலை நிறுத்தம் செய்வதைப் போல, திடீரென்று பாடல் நின்றது. ஒரு சில விநாடிகள் கழித்து, தன் நிலைக்கு வந்த இளைஞர், ‘‘திடீர்னு பாட்டு ஏன் நின்னு போயிடுத்து?’’ என எண்ணியபடியே கண்களைத் திறந்து, இடுகாட்டின் உள்ளே எட்டிப் பார்த்தார். பாட்டு மட்டும் நின்றுபோக வில்லை, பாடிக் கொண்டிருந்த கிருஷ்ணயோகியையும் காணவில்லை. திடுக்கிட்ட இளைஞர் திரும்பிப் பார்த்தார். இடுகாட்டின் வெளியே, கிருஷ்ணயோகி நடந்து போய்க் கொண்டிருந்தார்.

கிருஷ்ணயோகியின் நடை அவர் பாட்டைப் போலவே ஒரே சீராக இருந்தாலும், சற்று வேகமாகவே இருந்தது. ஓடினார் இளைஞர்; குப்பைகளும் புழுதியும் படிந்திருந்த அந்த நடைபாதையில் அப்படியே, கிருஷ்ணயோகியின் திருவடிகளில் விழுந்து எழுந்து, கைகளைக் கூப்பி, ‘‘அடியேனை சீடனாக ஏற்று, அடியேனுக்கு இசைப்பிச்சை அளிக்க வேண்டும்’’ எனப் பணிவோடு வேண்டினார். என்ன வேண்டி என்ன பயன்? கிருஷ்ணயோகி, அவர் பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தார்.

இளைஞர் விடவில்லை. பின்னாலேயே தொடர்ந்து சென்று, கண்ணீர் சிந்திப் பலவிதமாகவும் வேண்டினார். ஊஹூம்! எதுவும் பலிக்கவில்லை. நடந்தபடியே தலையை மென்மையாக அசைத்துத் தன் மறுப்பைத் தெரிவித்துவிட்டு, கிருஷ்ணயோகி போய்விட்டார். பசியிருந்தும், எதிரில் அற்புதமான உணவு இருந்தும், அதை உண்ணமுடியாத நிலையில் இருந்தால் எப்படி இருக்கும்? அந்த நிலையில் மிகுந்த வருத்தத்தோடு வீடு திரும்பினார் இளைஞர்.

அந்த இளைஞர்தான் ‘ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்’. (இவரை இனி ‘ஊத்துக்காடு’ எனும் பொதுப் பெயரிலேயே பார்க்கலாம்) உரலில் கட்டப்பட்டு, ‘உலூக பந்தனன்’ எனப் பெயர் பெற்ற கண்ணனைப் பலமுறை நேருக்குநேராகத் தரிசித்தவர் ஊத்துக்காடு. அப்படிப்பட்ட பாக்கியம் கொண்ட ஊத்துக்காட்டுக்கு, கிருஷ்ணயோகி சங்கீதம் சொல்லிக் கொடுக்கவில்லை. ஏன் கிருஷ்ணயோகி மறுத்தார்? ஊத்துக்காடு என்ன செய்தார்? இவற்றையெல்லாம் பார்ப்பதற்கு முன், ஊத்துக்காடின் முன்னோர்களைப் பார்க்கலாம். தெய்வ அருள் கிடைக்கும் வழி முறைகள் தெளிவாகப் புரியும்.

திருவாரூர் மாவட்டத்தில் `நீடா மங்கலம்’ எனும் ஊர். நீடு ஆம் மங்கலம் - நீண்ட மங்கலங்களை அளிக்கக் கூடிய திருத்தலம் எனும் பொருளில், ‘நீடா மங்கலம்’ என அழைக்கப்பட்டது. நீடாமங்கலத்தின் அருகில் உள்ள ஊத்துக்காடு முதலான சிற்றூர்களும் காட்டுப் பகுதிகளும், ராமசந்திர வாதூலர் என்பவரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. (இவரை, ‘வாதூலர்’ எனும் பொதுப் பெயரிலேயே பார்க்கலாம்) வாதூலர் - அறிவாற்றல், அஞ்சாமை, நேர்மை, ஒழுக்கம் ஆகியவற்றில் தலை சிறந்தவர். இப்படிப்பட்ட அவரது நற்குணங்களைக் கண்ட அரசர், முன் சொன்ன ஊத்துக்காடு முதலான பகுதிகளை ஆளும் உரிமையை, வாதூலருக்கு அளித்திருந்தார்.

நீர் வளமும் நில வளமும் நிறைந்த அப்பகுதிகளுக்கு உரிமையாளர் என்றால் கேட்கவா வேண்டும்? ஓர் ஐந்நூறு ரூபாய் நோட்டு பையில் இருந்தாலே, கையில்பிடிக்க முடியவில்லையே! அப்படி இருக்கும்போது, வளமை மிகுந்த பகுதிகளுக்கு உரிமையாளராக இருந்த, வாதூலர் எப்படி இருந்திருப்பார்? நம்ப முடியாது. நம்மால் நம்ப முடியவில்லை என்பதால், உண்மை மாறிப்போய் விடுமா என்ன? வாதூலர் நாள்தோறும் காலையில் நீராடி, அனுஷ்டானங்களை முடித்தபின், வாசல் திண்ணையில் வந்து அமர்ந்து கொள்வார்; அருகில் ஒரு பெட்டி இருக்கும். அதில் தங்கத் தாலிகளும் வெள்ளிக் காசுகளும் இருக்கும்.

ஊர்க்குடி மக்கள் யார் வீட்டிலாவது, திருமணம் முதலான வைபவங்கள் ஏற்பாடானால், அவர்கள் வாதூலரைப் பார்க்க வருவார்கள்; வந்ததும், தாங்கள் கொண்டுவந்த வெற்றிலை - பாக்கு ஆகியவைகளுடன், தங்கள் வீட்டில் நடக்கும் வைபவ ஓலையையும் ஒரு தட்டில் வைத்து, வாதூலர் முன்னால் வைத்து வணங்குவார்கள். அவர்கள் கொண்டு வந்தவைகளில் இருந்து இரண்டு வெற்றிலைகள், பாக்கு, வைபவ ஓலை ஆகியவற்றை எடுத்துக் கொள்வார்.

பின் பெட்டியில் இருந்து ஒரு தங்கத்தாலியும் வெள்ளிக் காசுகளையும் எடுத்து, அவர்கள் கொண்டு வந்த தட்டில் வைத்து, ஆசிகூறி அளிப்பார். வாதூலரின் வாழ்நாள் முழுதும் நடந்து வந்த நிகழ்ச்சி இது. அது சரி! வாதூலரின் இந்தச் செயலுக்கும் ஊத்துக்காட்டுக்கும் என்ன சம்பந்தம்? இந்த ராமசந்திர வாதூலரின் பேரன்தான் ‘ஊத்துக்காடு’. அதைப் பிறகு பார்க்கலாம்.  ஒரு தலைமுறை ‘ஓஹோ’ என்று இருந்தால், அடுத்த தலை முறை சற்றாவது கீழே இறங்கிப்போகும்.

வாதூலர் பரம்பரை மட்டும் விதிவிலக்கா என்ன? தாத்தா காலத்தில் தொடர்ந்து வந்த சொத்து உரிமை, தந்தையார் காலத்தில் பறிபோனது. ஆம்! ஊத்துக்காடின் தந்தை காலத்தில், அவர்களுக்கு இருந்த சொத்துரிமை அரசாங்கத்தால் பறிக்கப்பட்டது. ஊத்துக்காடின் தந்தை முத்துகிருஷ்ண ஐயர்; தாயார் செங்கமலத்தம்மாள் இவர்களுக்கு ஊத்துக்காடு பிறப்பதற்கு முன், ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்கை்கு ‘கிருஷ்ணன்’ என்று பெயரிட்டார்கள்.

சங்கீதத்தில் மகா நிபுணராக இருந்த கிருஷ்ணன், அரசவையில் பாடி அனைவரையும் மகிழ்வித்தார். மனம் மகிழ்ந்த அரசர், கேட்பது எதுவாக இருந்தாலும் தருவதாக உறுதிமொழி கூறினார். பாட்டனார் காலத்தில் இருந்த சொத்துரிமையை, தந்தையார் காலத்தில் அரசால் பறிக்கப்பட்ட சொத்துரிமையைக் கேட்டு, அவற்றை மீட்டார் தனயர். காடு - கரைகள் முதலான அந்தச் சொத்துக்களை மீட்டதன் காரணமாக, அவருக்கு ‘காட்டு கிருஷ்ணையர்’ என்ற பெயர் உண்டானது.

காட்டுக் கிருஷ்ணையரின் இளைய சகோதரர்தான் - ஊத்துக்காடு வேங்கடசுப்பையர்.ஊத்துக்காடு சிறுவயது முதலே, சங்கீதத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்ததால், நீடாமங்கலத்தில் இருந்த சங்கீத நிபுணரான ராஜா பாகவதர் என்பவரிடம் சங்கீதம் கற்கத் தொடங்கினார். சங்கீதப் பயிற்சி வேகமாக நடந்தது. ராஜா பாகவதர் ஒருநாள், ‘‘அப்பா! வேங்கடசுப்பா! எனக்குத் தெரிந்ததை எல்லாம் சொல்லிக் கொடுத்து விட்டேன். இதற்குமேலும் சங்கீதம் கற்கவேண்டும் என்ற ஆர்வமிருந்தால், வேறு ஆசிரியரிடம்தான் நீ கற்க வேண்டும்’’ என்றார்.‘‘எங்கே போய், யாரிடம் கற்பது? ம்!...’’ என்று கவலையில் ஆழ்ந்தார் ஊத்துக்காடு. இந்த நேரத்தில்தான், தொடக்கத்தில் நாம் பார்த்த கிருஷ்ணயோகி, நிகழ்ச்சி நடைபெற்றது.

சுடுகாட்டில் அக்னியோகத்தில் இருந்தபடி பாடிக் கொண்டிருந்தவரிடம் ஊத்துக்காடு போய், தனக்கு சங்கீதம் சொல்லிக் கொடுக்கும்படி வேண்ட, யோகி மறுத்ததாகப் பார்த்தோம் அல்லவா? அந்தக் கிருஷ்ணயோகி என்பவர், ஊர் எல்லையில் இருந்த சாவடியில் (அறச்சாலை - ஊர்ப்பொதுக் கட்டிடம்) வந்து தங்கி இருந்தார். துறவியான அவரை ஊத்துக்காடு அங்கே தரிசித்து இருக்கிறார்.

ஊர் மக்கள் பலரும் அந்த யோகியைப் பற்றி உயர்வாகவே சொல்வார்கள். அதையும் கேட்டிருக்கிறார் ஊத்துக்காடு. (அதனால்தான் அவரிடம் போய், தனக்கு சங்கீதம் சொல்லிக் கொடுக்கும்படிக் கேட்டார் போலும்). யோகியார் ‘அக்கினி’ யோகம் செய்பவர். கனல் கங்குகளைத் தரையில் பரப்பி, அவற்றின் மேல் ஒரு பலகையைப்போட்டு, அப்பலகை மேல் அமர்ந்து மனதை ஒருநிலைப் படுத்தித் தவம் செய்வார். பல நேரங்களில் அக்கனல் கங்குகள் சாம்பலாகி, நீண்ட நேரம் ஆன பிறகும்கூட, யோகியாரின் தவம் கலையாது.

தவம் கலைந்து அவர் எழுந்திருக்கையில், மக்கள் பலர் தங்கள் நோய் - கஷ்டம் முதலானவை தீர வேண்டி, யோகியாரின் திருவடிகளில் விழுந்து வணங்கி வேண்டுவார்கள்.அவர்களுக்கு எல்லாம் யோகியார், தவம் செய்யும் போது அணைந்துபோன கரித்துண்டு ஒன்றை எடுத்து, தெய்வத்தைப் பிரார்த்தனை செய்து அளிப்பார்.வந்தவர்களின் நோய் - நொடிகள் எதுவாக இருந்தாலும், அவை சரியாகிவிடும். இவ்வளவு தவமும் நற்குணமும் கொண்ட யோகியார் ஏன், ஊத்துக்காடு சங்கீதம் சொல்லிக் கொடுக்க வேண்டிய போது மறுத்தார் என்ற கேள்வி எழும். என்ன அவசரம்? சற்று நேரத்தில் புரிந்துவிடும். கிருஷ்ணயோகியால் மறுக்கப்பட்ட ஊத்துக்காடு, மனம் கலங்கி வீடுதிரும்பினார். வீட்டிற்குள் நுழைந்த பிள்ளையின் வாடிய முகமும் குனிந்த தலையும், தாயார் செங்கமலத்தம்மாள் மனதை என்னவோ செய்தன;

‘‘என்னப்பா? என்னாச்சு? மொகம் கலங்கி வாடிப்போய் இருக்கே!’’ எனப் பரிவோடு கேட்டார். ஆறுதலாக யாராவது பேசினால், மனதில் இருப்பதை எல்லாம் மறைக்காமல் கொட்டிவிடுவோம் அல்லவா? ஊத்துக் காடும் அதைத்தான் செய்தார். வந்து கொண்டிருந்த வழியில் கிருஷ்ணயோகியின் அபாரமான - அபூர்வமான சங்கீதத்தைக் கேட்டு மெய்மறந்தது; அவரிடம் போய், தன்னை சீடனாக ஏற்கும்படி வேண்டியது; யோகி மறுத்தது என அனைத்தையும் விரிவாக ஆதியோடு அந்தமாகச் சொல்லி, மனம் வருந்தினார் ஊத்துக்காடு.

மகன் தலையை மென்மையாகத் தடவிக்கொடுத்த செங்கமலத்தம்மாள், ‘‘அட! இதுக்கா போயி இத்தன வருத்தப் பட்ற? தலமொற தலமொறயா நம்ம குடும்பத்துல, நாம பூஜ பண்ணிண்டு வர தெய்வம் - கிருஷ்ணபகவான். மனசார அவர பிரார்த்தன பண்ணிக்கோ! ஒரே மனசா, அவர பூஜ பண்ணு! நீ நெனக்கற நல்லது எல்லாம் கெடைக்கும்’’ என்று சொல்லி, வழி காட்டினார் தாய். ஊத்துக்காடு உள்ளம் குளிர்ந்தார்.

‘‘ஒருவன் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவர்களில், தாயார்தான் முதல் இடம் வகி்க்கிறார். மாதா பிதா குரு தெய்வம் என்று, தாயாரைத் தானே முதலில் சொல்லியிருக்கிறது? ஆகா! எவ்வளவு அழகான வழியைக்காட்டி விட்டாள் அம்மா!’’ என எண்ணிய ஊத்துக்காடு, அப்போதே தாயாரின் வாக்கை நிறைவேற்றத் தொடங்கினார்.தாயாரை நமஸ்காரம் செய்தார்; பரம்பரை பரம்பரையாகப் பூஜை செய்யப்பட்ட கிருஷ்ண விக்ரஹம், அழகாக மாடத்திலே இடம் பிடித்தது. மலர்கள் சாற்றி, நறுமணம் கமழ்ந்தது.தம்பூராவைக் கையில் ஏந்திய ஊத்துக்காடு, கண்ணன் முன்னால் உட்கார்ந்து பாட ஆரம்பித்தார்.

சராசரங்களை எல்லாம் புல்லாங்குழல் ஊதி மயக்கிய கண்ணன் முன்னால் உட்கார்ந்து பாடத்தொடங்கிய ஊத்துக்காடு, சாப்பிடும் நேரம் - தூங்கும் நேரம் தவிர, மற்றைய பொழுது எல்லாம், பாடிக்கொண்டே இருந்தார்.மனம் உருகி, உடல் உருகிப் பாடுவதைத் தவிர, வேறு எதுவுமே தெரியாத நிலையில் இருந்தார் ஊத்துக்காடு. ஆண்டுகள் சில கழிந்தன.

ஒருநாள், ஊத்துக்காடு மெய்மறந்த நிலையில் கண்களை மூடி, கண்ணனைக் கருத்தில் இருத்திப் பாடிக்கொண்டிருக்கும் போது, தொடையில் ஏதோ தீண்டுவதைப் போல இருந்தது.

கண்களைத் திறந்து பார்த்தார் ஊத்துக்காடு. அவரது தொடையில் அழகான ஒரு குழந்தை அமர்ந்து இருந்தது; அது அழகாக இருந்தாலும், உடம்பெல்லாம் புழுதியும் அழுக்கும் படிந்து, பார்ப்பவர் முகங்களைச் சுளிக்க வைக்கும்படியாகவும் இருந்தது.

மெள்...ள அக்குழந்தையைத் தூக்கி, சற்று தூரம் தள்ளி விட்டுவிட்டு, மீண்டும் கண்கணை மூடி, மறுபடியும் பாடத் தொடங்கினார் ஊத்துக்காடு.கொஞ்ச நேரம் ஆனது. மறுபடியும் அதே குழந்தை மடியில் வந்து உட்கார்ந்து, மன ஒருமைப்பாட்டைக் கலைத்தது. பழைய படியே அக்குழந்தையை மெள்...ளத் தூக்கி சற்று தூரத்தில் விட்டுவிட்டுக் கண்களை மூடினார்.

அதற்காகவே காத்திருந்ததைப் போல, எங்கிருந்தோ மென்மையான புல்லாங்குழலின் இனிமையான இசை வந்து, ஊத்துக்காடின் செவிகளை நிறைத்தது. கண்களைத் திறந்த அவர், நாலா பக்கங்களிலும் பார்த்தார்.அவரால் தூக்கி ஒதுக்கப்பட்ட குழந்தை, சற்று தொலைவில், தளர் நடை நடந்து சென்று கொண்டிருந்தது. பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அக்குழந்தையின் அழுக்குப் படிந்த உருவம் மெள்ள மாறியது. அங்கே, கண்ணனின் அழகுத் திருவடிவம், ‘பளிச்’சென்று தெரிந்தது.

திடுக்கிட்டு எழுந்த ஊத்துக்காடு, குழந்தையை நோக்கி வேகமாகப் போனார். அதற்குள் குழந்தை ஊத்துக்காடின் பார்வையில் இருந்து மறைந்தது.துடித்தார்; தன் அறிவை எண்ணி அலுத்துக்கொண்டார். ‘‘கண்ணா! கண்ணா!’’ என்று கதறினார்.இவ்வளவு அமர்க்களங்களுக்கும் நடுவில், அந்தப் புல்லாங்குழல் ஓசை மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது; ‘‘கண்ணா! கருணைக்கடலே! அடியேன் செயலைப் பெரிதாக எண்ணாமல், உன் அருளை உணர்த்துகின்றாயே!’’ என்று வாய்விட்டு மென்மையாகச் சொன்னார். கண்ணனின் குழலோசை அவர் காதுகளில் மட்டும் கேட்டுக் கொண்டேயிருந்தது.

அதன்பின் கண்ணனையே குருவாகக் கொண்டு சங்கீத சாதகம் செய்யத் தொடங்கினார் ஊத்துக்காடு. நாளாக நாளாக தெய்வீகமான இசை வெளிப்பட்டது. கவி புனையும் சக்தியும் வெளியானது. மனக்கண்களில் தோன்றும் கண்ணனின் திருவிளையாடல்களை அப்படியே பாடல்களாக வடித்தார்.நாட்கள் சில கடந்தன...

(இசை பயணம் தொடரும்...)

- பி.என்.பரசுராமன்