Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தெளிவு பெறுஓம்

?சந்திராஷ்டம நாள் குறித்து எல்லோரும் பயப்படுகிறார்கள் அது அத்தனை மோசமான நாளா?

- சூரிய பிரகாஷ், பண்ரூட்டி.

சந்திராஷ்டமம் என்பது, சந்திரன் ஒருவருடைய ராசிக்கு எட்டாவது ராசியில் பிரவேசிக்கும் நாளாகும். உதாரணமாக நீங்கள் மேஷ ராசி என்றால் விருச்சிக ராசியில் சந்திரன் இருக்கும் நாள் சந்திராஷ்டம நாள். ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் எந்தக் கிரகமாக இருந்தாலும் எட்டாவது ராசியில் இருக்கும் காலம் அந்த ஜாதகருக்கு சிரமங்களைத் தரும் என்பது விதி. சனி எட்டாவது ராசிக்கு வந்தால் அஷ்டமச் சனி என்பார்கள்.

குரு எட்டாவது ராசிக்கு வந்தால் அஷ்டம குரு என்பார்கள். அவைகள் எல்லாம் வருடக் கோள்கள். ஆனால், ஒவ்வொரு மாதமும் சந்திரன் அஷ்டம ராசியில் வரும்போது சந்திராஷ்டம தினமாகச் சொல்வார்கள். சந்திரன் மனோகாரகன் என்பதால், இந்த சந்திராஷ்டம நாளில் மனது சற்று சஞ்சலமாக இருக்கும்.

அதற்கு தகுந்தாற் போல் சில காரியங்கள் நடக்கும். எல்லா சந்திராஷ்டம நாளும் பெரிய அளவில் பாதிப்பைத் தராது என்றாலும், பாதிப்பைத் தருகின்ற நாளில் சந்திராஷ்டமம் இருக்கும். ராகுகாலம், எமகண்டத்தில் புதிய செயல்களை நாம் எப்படிச் செய்வதில்லையோ, அதைப் போல சந்திராஷ்டம தினங்களைத் தள்ளிவிட்டு, சுப தினங்களாகப் பார்த்து சுபச் செயலைச் செய்வது உத்தமம்.

?நாம் ஏதாவது ஒன்றை வேண்டித்தான் கோயிலுக்குச் செல்கின்றோம். ஆனால் நாம் முயற்சி செய்து பெறக்கூடிய, சாதாரண விஷயங்களுக்காக கடவுளை வேண்டுகின்ற வழிபாடு குறையுடையது என்று சொல்கிறார்களே?

- பரத் சங்கரன், திருவண்ணாமலை.

ஒரு பக்குவ நிலையில் வழிபாடு என்பது இறைவனிடம் எதுவும் வேண்டாம் என்பது. காரணம், நமக்குத் தேவையான எல்லாவற்றையும் இறைவன் தந்து விடுவான் என்கின்ற நம்பிக்கை நிலை அது. வழிபாட்டின் பூரண நிலை வந்துவிட்டால், அவனிடம் எதையாவது வேண்டி பிரார்த்திக்க வேண்டியது இல்லை. ஆனால், அத்தனைப் பக்குவம் எல்லோரிடமும் ஏற்படுமா? அதனால், தங்களுக்கு வேண்டியதை அந்த தயாளனிடம் வேண்டுகிறார்கள். ஒரு குழந்தை, தனக்கு வேண்டிய பொருளை தாய் தந்தையரிடம் கேட்பதால், தாய் தந்தையர்களுக்கு குழந்தையின் மீது அன்பு குறையாது. அதைப் போல, நாம் இறைவனிடம் நமக்கு வேண்டுவதைக் கேட்கும் வழிபாடு குறை உடையதாக ஆகாது.

?பேசும்போது எப்படி பேச வேண்டும்?

- சிவராமன், தூத்துக்குடி.

முகத்தைப் பார்த்துப் பேச வேண்டும். அப்படிப் பேசுவதன் மூலம் உங்களுடைய பேச்சு மிகச் சரியாக போய்ச் சேரும். ஒருவருடைய கண்களின் கவனத்தை நம் பக்கம் ஈர்த்துவிட்டால், நம் பேச்சுக்கு பாதி வெற்றி கிடைத்தது போல. அதைப் போல, பேசுபவர்களின் கண்களையும் நாம் பார்க்க வேண்டும். அதன் மூலம் அவர் மனதில் உள்ளதைப் பேசுகிறாரா, உதட்டில் மேலோட்டமாகப் பேசுகிறாரா என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

?நம்முடைய அருளாளர்கள் இசையால் இறைவனைப் போற்றி

இருப்பதற்குக் காரணம் என்ன?

- பச்சையப்பன், மதுரை.

இசை என்பதற்கு சங்கீதம் என்று ஒரு பொருள் இருக்கிறது. இசை என்பதற்குப் புகழ் என்று பொருள் இருக்கிறது. ‘‘ஈதல் இசைபட வாழ்தல்’’ என்ற குறளில் புகழோடு வாழ்தல் என்பதுதான் இசைபட வாழுதல் என்று வருகிறது. மூன்றாவதாக, இசை என்றால் ஏற்றுக் கொள்ளல், இசைந்து விடுதல் என்று ஒரு பொருளும் இருக்கிறது. இசையால் (சங்கீதத்தால்) இசைபாடி (புகழ்பாடி) இசைவிக்க (ஏற்றுக் கொள்ள வைக்க) பெருந்துணையாக இருப்பதால், அருளாளர்கள் இசை பாடினார்கள். இசையால் வசமாக இதயம் எது, இறைவனே இசை வடிவம் எனும் போது என்பதை

அறிந்தவர்கள் அருளாளர்கள்.

?நல்லவர்கள் தீயவர்களோடு சேருவதற்கும், தீயவர்கள் நல்லவர்களோடு சேர்வதற்கும் என்ன வேறுபாடு?- சுரேஷ்குமார், வத்தலகுண்டு - திண்டுக்கல்.

சுத்தமான பாலும், சுத்தமில்லாத பாத்திரத்தில் ஊற்றும்போது கெட்டுவிடும் என்பதால் நல்லவர்கள் தீயவர்களோடு பழக்கம் வைத்துக்கொள்வதில்லை.

``தீய கந்தம் உள்ளதொன்றைச் சேர்ந்து இருப்பதொன்றுக்குத்

தீய கந்தம் ஏறும் திறம் அது போல் - தீய

குணம் உடையோர் தங்களுடன் கூடி இருப்பார்க்குக்

குணம் அதுவேயாம் செறிவு கொண்டு’’

என்று இதனை உபதேச ரத்தினமாலையில் மணவாள மாமுனிகள் விளக்குகிறார்.

ஆனால், தீயவர்கள் நல்லவர்களோடு தொடர்பு கொள்ளுகின்ற பொழுது அவர்கள் நல்லவர்களாக மாறுகின்ற வாய்ப்பு அதிகம். நல்லவர்கள் நெருப்பு போல. தீயவர்கள் அவர்களோடு பழகும் பொழுது ஒன்று புடம்போட்டு வெளியே வந்து விடுவார்கள். அல்லது பஞ்சுபோல பொசுங்கிப்போய் விடுவார்கள். இதற்கும் பாடல் உண்டு.

``நல்ல மணம் உள்ளதொன்றை நண்ணி இருப்பதற்கு

நல்ல மணம் உண்டாம் நலம் அது போல் - நல்ல

குணம் உடையோர் தங்களுடன் கூடி இருப்பார்க்குக்குணம் அதுவேயாம் சேர்த்தி கொண்டு’’ நல்ல மணத்துடன் கூடியிருக்கும் ஒரு பொருளுடன் கூடினால், அந்த நல்ல மணத்தைத் தானும் பெறுவதைப்போலே, சாத்வீக குணம் கொண்டவர்களுடன் கூடியிருந்தால், அந்தச் சேர்க்கையினாலேயே நல்ல குணமானது ஏற்படும் என்பது பாடலின் பொருள்.

?மனிதர்களை மதிப்பிடுவதில் நாம் ஏன் தவறிப்போய் விடுகிறோம்? மிகச் சரியாக மதிப்பீடு செய்ய

முடிவதில்லையே?

- ஹரிணி சுந்தரம், சென்னை.

இதற்கு தாகூர் ஓர் அருமையான பதிலைத் தந்திருக்கிறார். ஒரு மலரோ பூச்சியோ, அதன் தோற்றத்தைக் கண்டு மதிப்பிட்டு விடலாம். ஆனால், மனிதர்களுடைய முகங்கள் ஒன்றாக இருப்பதால் அவ்வாறு மதிப்பிட முடிவதில்லை. எனவே பெரும்பாலும் ஏமாந்துவிடுகிறோம்.

?சீர்காழியில் உள்ள இறைவனுக்கு தோணியப்பர் என்ற பெயர் எப்படி வந்தது?

- பவானி, சென்னை.

தோணி என்பது சிறிய படகு ஆழமான நீர்நிலையைக் கடந்து செல்ல உதவும். இக்கரையில் இருந்து அக்கரையை அடைய உதவுவதுதான் படகு (தோணி) சாதாரண நீர் நிலையை இப்படி ஒரு தோணியால் கடந்துவிட முடியும். ஆனால், தொடர்ந்து வருகின்ற பிறவி என்னும் பெருங்கடலைக் கடப்பதற்கு ஒரு தோணி வேண்டுமல்லவா. துணை வேண்டுமல்லவா. தோணியாக விளங்கும் துணைதான் சீர்காழியில் உள்ள ஈசன். பிறவிப் பெருங்கடலை கடக்க வைக்கும் திருவடியை உடையவர் என்பதால் அவரை தோணியப்பர் என்று அழைக்கிறார்கள்.

?ஒரே வாசகம் இரண்டு விதமான பொருள் தருமா?

- பி.பாலு, சேலம்.

தரும். ஒரு வாசகம் என்றில்லை. ஒரு சொல்லை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு எத்தனைப் பொருள் தெரியுமா? அம்பரம் என்ற சொல்லுக்கு ஆடை, வானம், கடல், துயிலிடம், திசை, சித்திரை நாள், மஞ்சள், ஆகாயம் என் வரிசையாக பொருளைச் சொல்லிக்கொண்டே செல்லலாம்.

ஆண்டாள் ஆழி என்ற சொல்லையும், அம்பரம் என்ற சொல்லையும் திரும்பத் திரும்ப வந்து, வெவ்வேறு பொருள்களைத் தரும்படி திருப்பாவையில் பாடியிருக்கிறாள். இப்பொழுது ஒரு வாசகம்

சொல்கிறேன். இரண்டு பொருளில் வரும்.

முதியோர்கள் இல்லத்தில் இருக்கிறார்கள். யோசித்துப் பாருங்கள். இரண்டு பொருள்

1. முதியோர்கள், ‘‘இல்லத்தில்” (வீட்டில்) இருக்கிறார்கள்.

2. ‘‘முதியோர்கள் இல்லத்தில்’’ இருக்கிறார்கள்.

?‘‘ஷோடச நாமா’’ என்றால் என்ன?

- வித்யா, திருப்பூர்.

இறைவனின் நாமங்களை எண்ணிக்கையில் சொல்லி வழிபடும் மரபு அதாவது அர்ச்சனை செய்யும் மரபு உண்டு. 12 நாமாக்களை துவாதச நாமாக்கள் என்றும், 16 நாமங்களை ஷோடச நாமாக்கள் என்றும், 108 நாமங்களை அஷ்தோத்திர நாமாக்கள் என்றும், 300 நாமங்களை த்ரிசதி நாமாக்கள் என்றும், 1008 நாமங்களை சகஸ்ரநாமாக்கள் என்றும் சொல்கிறார்கள். லட்சம் நாமாக்கள் சொல்லி இறைவனை அர்ச்சனை செய்வதை லட்சார்ச்சனை என்பார்கள். இது ரொம்ப விசேஷமானது.

?ஆசி பெறும் வழிகளிலே மிகவும் சிறந்த ஆசி பெறும் முறை எது?

- பத்ரிசேஷாத்ரி, ஸ்ரீரங்கம்.

பெற்றவர்களிடம் ஆசி பெறுவதுதான் மிகச் சிறந்த ஆசி. அதற்குப் பிறகுதான் மற்ற ஆசிர்வாதங்கள் எல்லாம். பண்டரிபுரத்தில் விட்டலன் என்கின்ற பாண்டுரங்கன் இடுப்பில் கையை வைத்துக் கொண்டு ஒரு செங்கல் மீது நிற்கிறான். அந்தச் செங்கல் யார் போட்ட செங்கல் தெரியுமா? புண்டரீகன் போட்ட செங்கல். புண்டரீகன் தன்னுடைய தாய் தந்தையர்களுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த பொழுது, பகவான் கிருஷ்ணரே வந்து நிற்க. ஒரு செங்கல்லைத் தூக்கிப்போட்டு, என்னுடைய தாய் தந்தையர்களுக்கு பணிவிடை செய்து கொண்டிருக்கிறேன், நீ இந்தச் செங்கல் மீது சற்று நேரம் நின்றுகொண்டிரு. வந்து விடுகிறேன் என்று சொல்ல, பகவான் நின்றுகொண்டிருந்தான்.

நம்முடைய இந்திய சமய முறை பெற்றவர்களுக்கு எத்தகைய மதிப்பு தர வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக இந்தச் சம்பவத்தைச் சொல்கிறது. இலை மீது எவ்வளவு மழை பெய்தாலும் வேரின் உதவியில்லாமல் ஒரு சொட்டு நீரைக் கூட குடிக்க முடியாது. அது போலவே நீங்கள் மற்றவர்களிடமும் எத்தனை ஆசிகள் பெற்றாலும், பெற்றவர்கள் மனம் வருந்தும் படி நடந்து கொண்டுவிட்டு, ஆசிகள் பெறுவதால் அந்த ஆசிகள் பலன் தராது.

?நம் மீது யாராவது குறை சொன்னால் கோபம் வருகிறதே?

- கலையரசி, ஆடுதுறை.

நாம் அவர்கள் சுட்டிக்காட்டும் குறைகளை ஏற்றுக் கொள்வதற்கு தயங்குகிறோம் என்பதால்தான் கோபம் வருகிறது. நம்முடைய சட்டையில் நம்மை அறியாமலேயே ஒரு அழுக்கு படிந்துவிட்டால், சார் உங்கள் சட்டையில் அழுக்கு என்று சுட்டிக் காட்டினால், அவருக்கு நன்றி தெரிவிப்போம். அதைப் போலவே, நம்முடைய குற்றங்கள் எனும் அழுக்குகளை சுட்டிக்காட்டுப வரிடம் நன்றிதான் தெரிவிக்க வேண்டும். ஒரு உதாரணம், கண்ணாடி நம் முகத்தின் அழுக்கைக் காட்டினால் கண்ணாடியை உடைக்க மாட்டோம், மாறாக முகத்தைச் சுத்தம் செய்வோம். அதுபோலவே, நம் குறைகளைச் சுட்டிக்காட்டுபவர்களிடம் கோபப்படுவதைவிட குறைகளைச் சரி செய்து கொண்டால், சிறந்து வாழலாம்.

?பணத்திற்கும் நிம்மதிக்கும் தொடர்பு உண்டா?

- வைஷ்ணவி, திருச்சி.

நிம்மதியாக வாழ்வதற்கு பணம் நிச்சயம் தேவை என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், பணம் உள்ளவர்கள் எல்லோராலும் நிம்மதியாக இருந்துவிட முடிந்தால், பணம்தான் நிம்மதிக்கு காரணம் என்ற முடிவுக்கு வந்துவிடலாம். எத்தனையோ பணக்காரர்கள் நிம்மதி இல்லாமல்தான் இருக்கிறார்கள். அவர்கள் வைத்திருக்கக்கூடிய ஏராளமான பணம் நிம்மதியைத் தரவில்லை என்பதையும் பார்க்கிறோம். எனவே, நிம்மதிக்கு காரணம் பணம் மட்டுமல்ல. வேண்டுமானால் பணமும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.

தேஜஸ்வி