Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வையத்து வாழ்வீர்காள் அடியார்க்கும் அடியாரான ஆழ்வாரின் கதை

பகுதி-8

பின்பழகிய பெருமாள் ஜீயர் உபன்யாசத்தைத் தொடர்ந்தார்.“இன்று நாம் காணவிருக்கும் ஆழ்வார் தொண்டரடிப் பொடியாழ்வார். பெயரைக்கேட்டதுமே விளங்கிப்போகும் இவரின் பெருமை. வைணவ மரபில் மிகப்பெரிய நம்பிக்கை எது தெரியுமா? அடியார்களின் திருவடித்தூசுகூடப் புனிதமானது என்று உளமார நினைப்பது, மதிப்பது, வணங்கு வதுதான். அந்த உயர்குணத்தில் முதன்மை வாய்ந்தவர் நம் ஆழ்வார்.

சோழநாட்டில் தஞ்சையின் அருகிலுள்ள மண்டங்குடி என்ற கிராமத்தில் பிறந்தவர். இவரின் தந்தை வேத விசாரதர் ``குடுமி சோழிய பிராமணர்’’ எனும் வகுப்பைச் சார்ந்தவர். பிரபவ வருடம், மார்கழி மாதம், கிருஷ்ண சதுர்த்தி, கேட்டை நட்சத்திரத்தில் செவ்வாய்க்கிழமையன்று பிறந்தார். இக்குலத்தோர்கள், கடவுள் விஷ்ணுவைப் புகழ்ந்து பாடுவதையே தொழிலாகக் கொண்டதனால் ‘விப்ர மக்கள்’ என அழைக்கப்பட்டனர். தொண்டரடிப் பொடியாழ்வார் ‘விப்ர நாராயணர்’ என்று பெயர் சூட்டப்பட்டார். அவருக்கு தெரிந்தது எல்லாமும் விஷ்ணு மட்டுமே.

அதுவும் அரங்கன் மேல் அவர் கொண்ட பக்தி அலாதியானது. இளவயதில் தனக்கென்று ஸ்ரீரங்கம் அருகில் ஒரு குடில் அமைத்துக்கொண்டார். அழகிய ஒரு நந்தவனம் அமைத்தார். தானே பூஞ்செடிகள் நட்டு பராமரித்து வந்தார். பாசுரங்கள் பாடுவார். பாமாலையுடன் பூமாலைகளை அரங்கனுக்கு சேர்ப்பிப்பார். அரங்கனும் சூரியனும் அவர் பாசுரம் கேட்ட பின்புதான் விழிப்பார்கள் என்றே சொல்லலாம்.

``கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்!

கனைஇருள் அகன்றது, காலை அம்பொழுதாய்,

மது விரிந்து ஒழுகின மாமலர் எல்லாம்,

வானவர், அரசர்கள் வந்து வந்து ஈண்டி

எதிர்த்திசை நிறைந்தனர், இவரொடும் புகுந்த

இரும் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்

அதிர்தலில் அலைகடல் போன்று உளது எங்கும்,

அரங்கத்து அம்மா, பள்ளி எழுந்தருளாயே!’’

எனக்குத் தெரிந்து தமிழில் முதலில் அரங்கனுக்குப் பாடிய திருப்பள்ளியெழுச்சி நம்மவர் இயற்றியதுதான். அவருடைய பாசுரங்கள் ஒவ்வொன்றும் மிகவும் எளிமையாக அமைந்திருப்பது சிறப்பு. தினமும் அதிகாலையில் எழுந்து குடிலிலுள்ள அரங்கன் விக்ரகத்திற்கு நெய்தீபம் ஏற்றுவார். பின்னர் மாலைகள் சூட்டுவார். அதன் பின் கோயிலுக்குச் சென்று அரங்கனுக்கு மாலைகள் சாற்றி பாசுரங்கள் பாடுவார். மூச்சுவிடும் நேரம் முழுவதும் ‘ரங்கா...! ரங்கா..!’ என்ற தேவதேவனின் நாமத்தை உச்சரிப்பார். நாம ஜபம் மட்டுமே கலியுகத்தில் நம்மைக் காக்கும் என்று உணர்ந்தவர்.

``ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை

பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரமமூர்த்தி

காரொளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன்

ஆருளர்க் களைகண் அம்மா அரங்க மாநகருளானே’’.

- என்ற இந்த ஒற்றைப் பாசுரம் ஒன்று போதும் அவர் நிலையைச் சொல்ல. அவருக்குச் சுற்றமும், சூழலும் நட்பு என எல்லாமுமாக அரங்கனே இருந்தார். அவர் ஒரு சத்தியவான். அவர் எழுத்துகளும் சத்தியமாகவே இருந்தது. இப்படியே விப்ர நாராயணர் இருந்திருக்கலாம். ஆனால் அரங்கனுக்கு அவர் அப்படியிருப்பது கொஞ்சம் அலுத்துப் போனதோ என்னவோ? ஒருநாள் அவரின் நந்தவனத்தையொட்டிய சாலையில் தேவதேவி என்னும் மங்கையும் அவள் மூத்த சகோதரியும் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். தேவதேவியின் விதியோ அன்றி, விப்ர நாராயணரின் விதியோ, அவர்களை நந்தவனத்தினுள் வரவழைத்தது. பொதுவாகவே அழகிய மலர்கள் மேல் பெண்களுக்கு நாட்டமுண்டு. அதுபோலவே தேவதேவிக்கு அந்த மலர்வனத்தை பார்த்ததும் நிறையவே உற்சாகத்தைக் கொடுத்தது.

தான் அழகி என்பதை அவள் உணர்ந்திருந்ததனால், அவளுக்குக் கர்வம் கூடுதலாகவேயிருந்தது. அங்கு மலர்ந்திருந்த மலர்களின் வண்ணமும் வாசனையும் தேவதேவியை கவர்ந்தது. அதே சமயம், குடிலிலிருந்து வெளியே மலர்கள் பறிக்க வந்த விப்ரர், அங்கு பேரழகியாக நின்றுருக்கும் தேவதேவியை கொஞ்சம்கூடப் பொருட்படுத்தவேயில்லை. சகோதரிகள் இருவரும் கைகூப்பி வணங்கினார்கள். தேவதேவியின் மனதில் தன் கூந்தலில் சூடிக்கொள்ள மலர்கள் அவரிடம் கேட்க வேண்டும் என்ற ஆவல் பிறந்தது.

விப்ரர், தான் பூமியில் அவதரித்ததே அரங்கன் சேவை செய்யவே என்பதுபோல கடந்து சென்றார். வீதியில், தான் நடந்துபோகையில் தன் அழகு எப்படிப்பட்ட ஆடவரையும் மீண்டும் ஒரு முறை பார்க்க வைக்கும் என்று அறிந்தவள் தேவதேவி. தன் அழகு முதன்முதலில் ஒரு ஆடவனிடம் தோற்றுவிட்டதாக நினைத்தாள். அவளால் அந்த உதாசீனத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

`‘இவர் என்ன முற்றும் துறந்த முனிவரா? தான் என்னும் அகந்தையா? இருபெண்டிர் வணங்குவதைப் பார்த்தும் ஒரு புன்னகையோ, அன்றி ஒரு ஆசியோ கூறுவதற்குத் தோன்றாத இவரெல்லாம் ஒரு மனிதரா? தன்னை எதுவும் கவர்ந்திடாது என்கிற ஒரு இறுமாப்பா?’’ என்று கடுமையாக பேசினாள், தேவதேவி. இதைக் கேட்ட அவளது சகோதரி;`‘போதும் தேவதேவி! அவர் ஒரு தவசி. அவருடைய நந்தவனத்தினில் அனுமதியின்றி நுழைந்துள்ளோம். மலர்களைப் பார்த்துவிட்டோம். அவரை வணங்கியது நம் பண்பு. அவ்வளவுதான். அவர் அரங்கன் நாமத்தை உச்சரித்தபடியே செல்வதைப் பார்த்தாய் அல்லவா? அவருடைய இறைப்பணியில் நாம் குறுக்கிட வேண்டாம். கிளம்புவோம்.’’ என கண்டித்தாள்.

`‘நான் ஒரு முறையாவது ஆடவர்களை பார்த்தால் போதும் என்று நம் வீட்டு வாசலில் காத்திருக்கும் ஆடவர் கூட்டங்களை நீ பார்க்காததா? இல்லை அறியாததா? இப்படிப்பட்ட ஆண் மகனை என் காலில் விழவைத்தால்தான் என் மனம் ஆறும். எனக்கு ஒரு மலர் தராத அவரும், அவரின் இந்த மலர்வனமும் அலங்கோலமாகப் போவதை நீ விரைவில் பார்க்கத்தான் போகிறாய்’’ என்று ஆணவத்தோடு தேவதேவி கூறினாள். உடனே அவளது சகோதரி;

‘`தேவையில்லை. ஏன் காலவிரயம் செய்ய வேண்டும்? அவர் ஒரு விவேகி. அவர் ஒரு தூயவர். உன் அழகினால் ஆகாததும் இவ்வுலகில் உண்டு’’ என அறிவுரை கூறினாள்

`‘அவருடைய செயல் என்னை அவமதித்து விட்டது.. நீ அதற்கு எண்ணெய் ஊற்றுகிறாயா? ஒரு மாதம் அவகாசம் போதும். இந்த தவசியார் என் காலில் விழுந்துகிடப்பார். நீ அதைப் பார்க்கத்தான் போகிறாய்? மறுமொழி தேவையில்லை’’ என கூறி இருவரும் சென்றுவிட, உள்ளே அரங்கன் சிரித்தான். பூப்பறித்துக்கொண்டிருந்த விப்ரர் கையிலிருந்து குடலை மண்ணில் சரிந்தன. மனதில் ஒரு இனம்புரியாத கலக்கம் விப்ரருக்கு வந்துபோனது.

``பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்,

இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்,

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே’’

- என பாசுரம் பாடினார்.

இந்திரலோகமே ஆனாலும் வேண்டேன் என்று பாடியவர், அச்சுவை பெறினும் வேண்டேன் என்று பாடியவர், என்னவாக ஆகப்போகிறார் என்பது போல அரங்கன் பார்த்தான். அரங்கனுக்குள்ளும் உள்ள கண்ணனுக்கு இதுபோன்ற விளையாட்டு ஒன்றும் புதிதல்லவே! மறுநாள் அதிகாலைப் பொழுது, தேவதேவி அவர் குடிலின் வாயிலில் காத்திருந்தாள்.

விப்ரர் பூக்குடலையுடன் கதவைத் திறந்து வெளியே வந்ததும், ‘`என் குடிலின் வாசலில் ஒரு பெண்ணா?’’ என்பதுபோல அவளைப் பார்த்தார். தூய வெள்ளை ஆடையில் நின்றிருந்த தேவதேவி, விப்ரரை குனிந்து வணங்கி;“அரங்கனின் அருளால் நாம் நன்றாகயிருப்போம்” என்றாள். அரங்கன் பெயரைக்கேட்ட மாத்திரத்தில் விப்ரருக்கு முகம் மலர்ந்தது.

“அரங்கன் என் கனவில் வந்தார். இங்கே மலர்வனம் அமைத்து, பாமாலையும் பூமாலையும் தினமும் சமர்ப்பிக்கும் தங்களிடம் செல்லச் சொன்னார். தங்களுக்கு உதவியாக இருந்து தொண்டு செய்ய என்னைப் பணித்தார்’’ என்று பொய் வார்த்தைகளை வீசினாள்.

“உன் கனவிலா? என் ரங்கனா? என்னைப் பற்றிச் சொன்னாரா?” என அப்பாவியாக கேட்டார் விப்ரர்.“ஆமாம்! ஆமாம்!” என வேகவேகமாகத் தலையாட்டினாள். தேவதேவி பொய்யாகத்தான் சொன்னாள். ஆனால் அதை நம்பும்படி சொன்னாள். அவளின் பார்வை, விப்ரருக்கு ஏதோ ஒரு ஈர்ப்பு அவளின் மீது தோன்ற வைத்தது. அதே கணம் இது தவறோ என்று அறிவு வினவியது. வார்த்தைகள் கோர்வையாக வராமல், “நான்.. இங்கே... தனியே... எப்படி நீ தங்க..” என்று விப்ரர் முடிக்கும் முன்பே, அவள், “தங்களுக்கு எந்த தொந்தரவும் தராமல் இதோ..

இந்த மரத்தினடியில் தங்கிக்கொள்கிறேன். அரங்கன் ஆசியில் எல்லாம் இனிதே நடக்கும். நான் குடிலின் உள்ளே வரவேண்டிய அவசியமிருக்காது. தங்கள் மகிழ்வே என் லட்சியம்” என மூளைச் சலவை செய்து, விப்ரரின் அனுமதிக்குக் கூடக் காத்திருக்காமல், அவர் கையிலிருந்த குடலையை வாங்கிக் கொண்டு பூக்கள் பறிக்கத் தொடங்கிவிட்டாள். அவளின் பணிவும், அவள் மலர்கள் கொய்கின்ற பாங்கும், அவள் அரங்கனின் பக்தை என்கின்ற தோற்றத்தை அவருக்கு அளித்தது.

தேவதேவிக்கு அறிமுகம் சுவையாய் அமைந்ததில் மகிழ்ச்சி. பூக்களைப் பறித்தபடியே குரலை உயர்த்தி, “சுவாமி! என்னைத் தாங்கள் தேவியென்றே அழைக்கலாம்” என மனதில், விப்ரரை கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேற முதல் புள்ளியை வைத்தாள். “நல்லது! தேவி!” என்றார், விப்ரர். முதன்முறையாக அவர் அப்படிக் கூப்பிட்டது தேவதேவிக்கு மிகவும் பிடித்திருந்தது.

சில நாட்கள் கழிந்தன. தனியாகத்தான் இருந்த பொழுது, விப்ரர் மிக இயல்பாக இருப்பார். ஒரு புதிய நபர், அதுவும் ஒரு இளம்பெண்ணின் வரவு, அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியது.

முகத்தைப் பல முறைக் கழுவினார். தன்னுடைய ஆடைகளை அடிக்கடி திருத்திக்கொண்டார். நொடிக்கு நூறு முறை ‘தேவி! தேவி! என்று விளித்தபடியிருந்தார். அரங்கன் பெயர் அபூர்வமாகத்தான் அவர் வாயிலிருந்து வெளிப்பட்டது. தன் இயல்பு மாறியதைத் தான் உணர்ந்த போதும், அதைப் பொருட் படுத்தாதுபோல நடந்து கொண்டார். குடிலின் உள்ளே இருக்கும் நேரத்தைவிட மலர்வனத்தில் அதிக நேரம் செலவிட்டார். உலகமே ஒரு பெரிய மலர்வனம் என்பதுபோல மனம் குதூகலித்தது.

ஒரு நாள் பின்னிரவு. பலத்த மழை. உள்ளே படுத்துக்கொண்டிருந்த விப்ரர், தேவதேவியின் நினைவு வர, அவளை அழைத்தபடியே குடிலைவிட்டு வெளியே வந்தார். பலத்த காற்றினால் கிளைகள் முறிந்து விழுந்திருந்தன. ஆடைகள் நனைந்திருந்த நிலையில், அவள் நின்றிருந்தாள். விப்ரர் வேறு வழியின்றி அவளை உள்ளே அழைத்தார்.

ஒப்புக்கு மறுத்தபடி உள்ளே நுழைந்தாள், தேவதேவி. அரங்கன் இருந்த அவர் மனதில் காமம் நுழைந்தது. அவள் தன் எண்ணத்திற்கு வடிவமைத்தாள். முதன் முதலில் பெண்ணின் அருகாமையை அவர் உணர்ந்தார். அவளிடம் தன்னை இழந்தார். எங்கோ பலத்த இடி இடித்தது. தீபம் அணைந்தது. அரங்கன் கண்ணை மூடிக் கொண்டான். எல்லோருக்கும் வருவதுபோல அவருக்கும் குற்ற உணர்ச்சி தோன்றியது. எல்லாம் அரங்கன் செயல் என்பதுபோல மனதைத் தேற்றிக்கொள்ள முயற்சித்தார்.

முதல் முறை தவறு செய்யும் முன்பு விழித்துக் கொள்ள வேண்டும். அப்படித் தவறினால், தவறுகள் தொடராகத்தான் அமைந்துபோகும். அப்படித்தான் அவருக்கும் அமைந்தது. இதுதான் இறுதி முறை என்று நினைப்பது வழக்கமாகிப் போனது. என்றாவது ஒரு நாள் அரங்கனைச் சேவிக்கும்பொழுது மன்னிப்புக் கேட்டுக் கொண்டுவிடலாம் என்று ஒரு சமாதானத்தை அவருக்குள் சொல்லிக்கொண்டார்.

மலர்வனத்தில் பறிக்கப்படும் வாசனை மலர்கள் எல்லாம் தேவதேவியின் கூந்தலுக்கு என்றானது. துளசிச் செடிகள் மட்டும் வாடியிருந்தன. தேவதேவன் அரங்கன் வசித்த இடம் தேவதேவியின் அந்தரங்க இடமாகிப்போனது. நாட்கள் கழிவது தெரியாமல் விப்ரர் மோகமுற்றுக் கிடந்தார். எடுத்த சபதம் முடித்த மமதையில் ஒருநாள் தேவதேவி அவரிடமிருந்து வெளியேறினாள். விப்ரர் அவளைப் பின் தொடர்ந்தார். ஊர் கைகொட்டிச் சிரித்தது. அரங்கனைத் தவிர மற்ற தெய்வங்களைத் தொழாதவர் இப்பொழுது தேவதேவியைத் தவிர யாரையும் தொழ மாட்டார் எனக் கேலி பேசியது. விப்ரருக்கு தன் நிலை புரிந்தது. ஆனாலும் அவர் பக்தியை, அவரின் காதல் என்று நினைத்துக்கொண்ட காமம் வென்றது.

தேவதேவியின் அருகில் விப்ரர் வரும்போதெல்லாம்,`‘நான் ஒரு கணிகை. எனக்குப் பொருள் தந்தாலொழிய என்னைத் தொடக்கூட முடியாது’’ என அறுதியிட்டுச் சொல்லிவிட்டாள், தேவதேவி. ஆகையால், தன்னிடமிருந்த பொருட்களை எல்லாம் ஒவ்வொன்றாக அவளிடம் கொடுத்தார், விப்ரர். இனி கொடுக்கப் பொருள் எதுவுமில்லையென்ற நிலையும் வந்தது. விப்ரர், தேவதேவியின் வீடு தேடிச் சென்றார். மன்றாடினார். பொருளில்லாருக்கு எங்கும் இடமில்லை என்று சொல்லி கதவைத் தாழிட்டுச் சென்றுவிட்டாள். அங்கு நின்றிருந்த பணிப்பெண் அவரை விரட்டினாள். தேவதேவியின் இல்லத்தின் வெளியில் திண்ணையில், கன்னத்தில் கைவைத்தபடி அமர்ந்திருந்தார்.

`‘பாரில்நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி,காரொளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன்’’ - என்று கண்ணனைப் பார்த்து கதறியவர், இன்று கண்ணே! என் கண் பாரேன் என்று கதறும் கதியைப்பாரேன்.! தெருவில் சென்ற ஒருவன் இப்படி ஏளனம் செய்தபடி சென்றான். ஒருவரைப் பற்றிய நல்ல விஷயங்களைவிட எதிர்மறை விஷயங்கள் தீயாய்ப் பரவும். விப்ரருக்கு இதிலிருந்து எப்படி வெளியேறி தன்மானத்தைக் காத்துக்கொள்வது என்பதைவிட, இப்பொழுது தேவதேவியைப் பார்க்க பொருள் எப்படி கிடைக்கும் என்ற திசையில்தான் அவர் சிந்தனை இருந்தது.

அன்று சித்திரை மாதம் பதினொன்றாம் திருநாள். தேரில் எம்பெருமானும் தாயாரும் அந்த வீதியில் எழுந்தருளினார்கள். ஒவ்வொருவர் வீட்டின் முன்பும் பூஜைகள் நிகழ்த்தப்பட்டன. இசைக் கருவிகள் இசைக்கப்பட்டன. விப்ரரின் கவனம் மட்டும் தேவதேவியின் வீட்டுக் கதவுகளை நோக்கியபடியிருந்தன.தன் பக்தன் இப்படியிருப்பதைப் பார்க்க எந்தத் தெய்வத்திற்குத்தான் பொறுக்கும்? தாயார், பெருமாளைத் தொட்டுத் திருப்பினாள்.

`‘அங்கே பாருங்கள்.. நம் விப்ர நாராயணனை! எப்படி வாடிப் போய்விட்டான்!’’ என தாயார் சொல்ல...`‘நமக்கு மலர்மாலைகள் சூட்டிய காலத்தில் அவன் வாழ்க்கை மணத்தது. இன்று அவன் மனம் நம்மைவிட்டு போனதால், அவன் வாழ்க்கை மணமும் போய்விட்டது. இது அவனாகத் தேடிக்கொண்டது!’’ என பெருமாள் மெல்லிய புன்னகையுடன் கூறினார்.

(அடுத்த இதழில்...)

கோதண்டராமன்