Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தெளிவு பெறுவோம்

?மகான்களின் சமாதியை எப்படி வணங்க வேண்டும்?

- வண்ணை கணேசன், சென்னை.

இறைவனின் திருத்தலங்களை வணங்குவது போலவே பக்திச் சிரத்தையுடன் அமைதியாக வழிபட வேண்டும். சமாதி என்று நாம் சொன்னாலும், சமய மரபில் இந்த இடங்களை பிருந்தாவனம் என்றும் திருவரசு என்றும் சொல்வார்கள். இந்த இடங்களில் அந்த மகான்களின் அதிர்வலைகள் இருக்கும். தியானம் செய்யும் பொழுது மனம் லயிக்கும். பிரார்த்தனைகள் பலிக்கும்.

?பிராதுகட்டுதல் என்ற ஒரு மரபு சில கோயில்களில் உள்ளதே?.

- மணிகண்டன், வேலூர்.

ஆம். நம்முடைய கோரிக்கைகளை ஒரு தாளில் எழுதி அங்கு அதற்கென உள்ள ஒரு மரத்திலோ, வேல் அல்லது சூலத்திலோ கட்டுகின்ற பழக்கம் சில கோயில்களில் உண்டு. உதாரணமாக, திருச்சி வெக்காளியம்மன் கோயில், விருத்தாச்சலம் கொளஞ்சியப்பர் கோயில் முதலிய இடங்களில் பிராது சீட்டு கட்டுதல் என்கிற வழிமுறை உண்டு. நம்முடைய கோரிக்கையை பகவானிடம் ஒரு மனுவாகக் கொடுப்பது போலக் கொடுக்கிறோம். பலருக்கும் அது நிறைவேறவே செய்கிறது. நிஜமான பத்தியும் கோரிக்கையும் எல்லாவற்றையும் பெற்றுத் தரும்.

?பேசும்போது எப்படி பேச வேண்டும்?

- இராம.கண்ணன், திருச்சி.

முகத்தைப் பார்த்துப் பேச வேண்டும். அப்படிப் பேசுவதன் மூலம் உங்களுடைய பேச்சு மிகச் சரியாக போய்ச் சேரும். ஒருவருடைய கண்களின் கவனத்தை நம் பக்கம் ஈர்த்து விட்டால் நம் பேச்சுக்கு பாதி வெற்றி கிடைத்ததுபோல. அதைப்போல பேசுபவர்களின் கண்களையும் நாம் பார்க்க வேண்டும். அதன் மூலம் அவர் மனதில் உள்ளதைப் பேசுகிறாரா, உதட்டில் மேலோட்டமாகப் பேசுகிறாரா என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

?முகூர்த்த ஜாதகம் என்று ஒன்று இருக்கிறதா?

- காசி, கோவை.

ஆமாம். முகூர்த்த ஜாதகம் என்பது ஒரு காலத்தில் மிக முக்கியமாகக் கருதப்பட்டது. காரணம் பிறப்பு ஜாதகம் என்பது நம் கையில் இல்லை. ஒருவன் முன் ஜென்ம வினைப்படி பிறக்கின்றான். ஆனால், அவனுக்கு சுபச் சடங்குகளை நடத்துகின்ற பொழுது சரியான முகூர்த்தத்தில் நடத்துவது முக்கியம் என்று பெரியவர்கள் கருதினார்கள். ஒரு குழந்தைக்கு ஜாதகம் கணிப்பது போலவே முகூர்த்த நேரத்துக்கு ஒரு ஜாதகச் சக்கரம் போட்டு அதில் சுபமான லக்கினத்தைத் தேர்ந்தெடுத்து நடத்தினார்கள். அதனுடைய அங்கங்களான விஷயங்களை அதாவது மாப்பிள்ளை அழைப்பு, பெண்ணை அழைப்பு இதைப் போன்ற சடங்குகளுக்கு ஹோரை சாத்திரம் பார்த்தார்கள். முன் காலத்தில் பத்திரிகை எழுதும் பொழுது திதி, லக்னம், நட்சத்திரம் எழுதிவிட்டு நல்லோரையில் என்று எழுதும் வழக்கம் இருந்தது இப்பொழுது ஹோரையை ஒரு சிலரைத்தவிர யாரும் பார்ப்பது போல் தெரியவில்லை.

?ஏன் தியானத்தை அதிகம் வற்புறுத்துகிறார்கள்?

- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

ஆர்ப்பாட்டமான நிலையில் எதுவுமே சரியாகப் புரியாது. உதாரணமாக கலங்கிய தண்ணீரில் எதுவுமே செய்ய முடியாது. குளிக்க முடியாது. குடிக்க முடியாது. எதற்கும் பயன்படாது. அதே தண்ணீரை கொஞ்சம் அப்படியே விட்டோம் என்று சொன்னால் கலக்கிய விஷயங்கள் அடியில் போய் மேலாகத் தெளிவான தண்ணீர் கிடைக்கும். அந்தத் தண்ணீரை நீங்கள் பயன்படுத்த முடியும். மனமும் அப்படித்தான். புற உலக ஆர்ப்பாட்டங்களினால் கலங்கிப் போய் கிடக்கிறது. அப்பொழுது நமக்கு ஏற்படுகின்ற எந்த முடிவுகளும் நன்மை செய்யாது பயன் தராது. அதை அப்படியே அமைதியாக விட்டோம் என்று சொன்னால் தேவையற்ற எண்ணங்கள் கீழே படியும். மனம் தெளிந்த நீர் போல இருக்கும். இந்த அமைதியான மனதில் பல உயர்ந்த எண்ணங்களும் சிந்தனைகளும் ஏற்படும். இந்த அமைதிக்கு காரணமாக அமைவது தியானம். அதனால்தான் ஆன்மிகத்தில் தியானம் என்ற ஒன்றை வைத்தார்கள்.

?திருநெல்வேலி அருகே உள்ள வைணவ நவ திருப்பதிகளை நவகிரகங்களுக்கானதாக சொல்லுகின்றார்களே சரியா?

- துரை.இராமகிருஷ்ணன், எரகுடி.

வைணவத்தில் நவகிரக வழிபாடு இல்லை. இறைவனுக்கு கட்டுப்பட்டது நவகிரகங்கள் என்பதால் நவகிரகங்களைத் தனியாக வணங்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறது வைணவ நெறி. ஆனாலும் இப்பொழுது வைணவத்துக்கு நவகிரகத் தலங்கள் இல்லை என்பதை குறையாகக் கருதிய ஒரு சிலரால் திருநெல்வேலிக்கு அருகே உள்ள ஆழ்வார் நவதிருப்பதிகளை 9 கிரகங்களோடு தொடர்புப்படுத்திச் சொல்லும் வழக்கம் உண்டாகி இருக்கிறது. இதை வைணவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்றாலும், தகவலுக்காகச் சொல்லுகின்றேன். வரகுண மங்கை - சூரியன்; திருப்புளிங்குடி - சந்திரன்; பெருங்குளம் - செவ்வாய்; ஆழ்வார் திருநகரி - புதன்; திருக்கோளூர் - வியாழன்; வைகுண்டம் - சுக்கிரன்; தென்திருப்பேரை - சனி; திருத்தொலை வில்லிமங்கலம் எனும் இரட்டை திருப்பதிகள் ராகு கேதுவுக்கு உரியதாகச் சிலர் சொல்லுகின்றனர்.

?எதற்கு மனத் துணிவு வேண்டும்?

- டி.மாணிக்கம், மதுரை.

பிறரை அடக்குவதும் மற்றவர்களை ஜெயிப்பதும், பிறர் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்பதும் மனத்துணிவு என்று நாம் சொல்கிறோம். ``ம்... என்ன துணிச்சலாகப் பேசுகிறான் பார்’’ என்று பாராட்டுகிறோம். ஆனால் உண்மையில் அதுவல்ல மனத் துணிவு. நம் தவறுகளை நாமே உணர்ந்து ஒத்துக் கொள்வதற்கு பெயர்தான் மனத்துணிவு. மற்றவர்களைக் கேள்வி கேட்பதைவிட தன் தவறை ஏற்றுக் கொள்வதற்கு அதிகமான துணிச்சல் தேவைப்படும்.

?எத்தனையோ நற்பண்புகள் இருந்தாலும் ஒரு சின்ன கெட்ட பழக்கம் இருந்தால் அவனை இகழ்கிறார்களே?

- எஸ். தியாகராஜன், சென்னை.

நம்மிடத்தில் உள்ள தீய பழக்கங்களை அது ஒரே ஒரு தீய பழக்கமாக இருந்தாலும், அதை நீக்கிக் கொள்ள வேண்டும். காரணம், நூறு நல்ல பழங்களில் ஒரே ஒரு அழுகிய பழம் வைத்து விட்டால், அது 100 நல்ல பழங்களையும் அழுகிய பழங்களாக மாற்றிவிடும் அல்லவா! நூறு நல்ல பழக்கங்கள் இருந்தாலும் ஒரு கெட்ட பழக்கம் இருந்தால், கொஞ்சம் கொஞ்சமாக மற்ற நல்ல பழக்கங்களையும் கெட்ட பழக்கங்களாக மாற்றிவிடும் என்பதால் கவனம் தேவை.

?கந்த சஷ்டி கவசம் போல மற்ற தெய்வங்களுக்கும் கவசம் உண்டா?

- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

கந்தசஷ்டி கவசம் பிரபலமானது. கவசம், என்றாலே காப்பாற்றுவது என்று அர்த்தம். எல்லா தெய்வங்களுக்கும் கவச நூல்கள் உண்டு. சண்முக கவசம், நாராயண கவசம், சக்தி கவசம், சிவகவசம் போன்றவையும் தெய்வங்களுக்குரிய கவச நூல்களாகும்.