Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தீயோர்க்கு அஞ்சேல்

அருள் நபியவர்கள் ஒருமுறை கூறினார்கள்: “ஒரு தீமை நடப்பதைக் கண்டால் அதைக் கைகளால் தடுங்கள்; இயலாவிட்டால் நாவினால் தடுங்கள்; அதுவும் இயலாவிட்டால் மனத்தளவிலாவது அந்தத் தீமையை வெறுத்து ஒதுக்குங்கள். இது இறைநம்பிக்கையின் மிகக் கடைசித் தரமாகும்.’’ தீமைகள் நடப்பதைக் கண்டும் காணாமல் போய்க் கொண்டிருந்தால் நாளை அதே தீமைக்கு நாமும் பலியாகிவிடுவோம். யூத சமுதாயத்தின் நிலைமை குறித்து ஒருமுறை நபியவர்கள், “தொடக்கத்தில் யூத மத அறிஞர்கள் தீமைகளை எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள். பிறகு நாளடைவில் தீமைகள் நடப்பதை சகித்துக் கொள்ளத் தொடங்கினர். கொஞ்ச காலம் சென்ற பிறகு தீமைகளுக்கு ஆதரவாகவே செயல்படத் தொடங்கினர்’’ என்றார்.

நபியவர்கள் தம் தோழர்களை நோக்கி, “நீங்கள் அக்கிரமக்காரனுக்கும் அக்கிரமம் இழைக்கப்பட்டவனுக்கும் உதவி செய்யுங்கள்’’ என்றார். தோழர்களுக்கு வியப்பு…! அக்கிரமம் இழைக்கப்பட்டவனுக்கு உதவி செய்யலாம். அக்கிரமக்காரனுக்கு எப்படி உதவ முடியும்? நபிகளார், “அக்கிரமக்காரனின் கையைப் பிடித்துத் தடுப்பதன் மூலம்’’ என்றார். எகிப்தில் பிர்அவ்ன் எனும் கொடூர மன்னன் ஆட்சி செய்து கொண்டிருந்தான்.இஸ்ரவேலர்களை அவன் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல. அவனுடைய கொடுமையிலிருந்து இஸ்ரவேல் மக்களைக் காப்பாற்றவும் அவனுக்கு நேர்வழி காட்டவும் இறைவன் தீர்மானித்தான்.

மூஸாவை (மோசஸ்) தன் தூதராக பிர்அவ்னிடம் அனுப்பி வைத்தான். ஆனால், மூஸா முதலில் தயங்கினார். அஞ்சினார். ஒரு தீய சக்தியாக எகிப்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் ஒரு பயங்கர சர்வாதிகாரியிடம் சரியான பேச்சாற்றல்கூட இல்லாத தாம் போய் சத்தியத்தை எடுத்துரைத்தால் அவன் ஏற்றுக்கொள்வானா? தம்மை உயிரோடு திருப்பி அனுப்புவானா என்றெல்லாம் அஞ்சினார்.

அப்போது இறைவன், “மூஸாவே, பிர்அவ்னுக்கு அஞ்ச வேண்டாம். நான் உம்முடன் இருப்பேன். தக்க ஆதாரங்களையும் உமக்கு வழங்குவேன். துணிந்து செல்க’’ என்று ஆணையிட்டான். அதேபோல் மூஸாவும் பிர்அவ்னின் அவைக்குச் சென்று அவனுடைய ஆணவப் போக்கைக் கண்டித்துத் திருத்த முயன்றார் என்பது வேதம் கூறும் வரலாறு. தீயோர்க்கு அஞ்சாமல் நாம் செயல்படும்போது இறைவனின் உதவியும் அருளும் நமக்குப் பக்க பலமாய் இருக்கும் என்பது உறுதியான உண்மை.

- சிராஜுல் ஹஸன்.

இந்த வார சிந்தனை

“நன்மையின் பக்கம் அழைக்கக் கூடிய ஒரு குழுவினர் உங்களிடையே அவசியம் இருந்திட வேண்டும். அவர்களோ நன்மை புரியும்படி ஏவ வேண்டும். தீயவற்றிலிருந்து தடுத்த வண்ணம் இருக்க வேண்டும். எவர்கள் இந்தப் பணியைப் புரிகின்றார்களோ அவர்களே வெற்றியாளர்கள்.’’

(குர்ஆன் 3:104).