ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் தொடர்பு கொள்ளும் நபர்கள் நம்மை வியக்க வைப்பார்கள். சில நேரங்களில் நாம் அவர்களை வியக்க வைப்போம். அதுபோலவே, சிலருக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளும் ஆற்றல்களும் அளப்பரியது. அதில் காரண காரியமின்றி எப்படி மாற்றம் நிகழ்கிறது என்பதே ஆச்சர்யம்தான். ஒருவர் ஒரு துறையில் சாதிப்பதற்கான எந்த பயிற்சியும் இல்லாமல் இருப்பார். ஆனால், அவர் அந்த துறையில் எளிதாகவும் நேர்த்தியாகவும் திறமையாகவும் கையாளும் திறமை படைத்தவராக இருப்பார். அவ்வாறு எப்படி சாத்தியம் என்ற சிந்தனை நமக்கு தோன்றும். எந்தத் தொடர்பும் இல்லாமல் எப்படி இவருக்குள் இத்தனை திறமைகள் வந்தது என்ற சிந்தனை ஆச்சர்யத்தையும் அதிசயத்தையும் கொடுக்கும். இவ்வாறு சில விஷயங்கள் நிகழ்வதைதான் நாம் பூர்வ புண்ணிய பாக்கிய யோகம் என்கிறோம்.
பூர்வ புண்ணிய - பாக்கிய யோகம் என்பது என்ன?
ஒரு மனிதன் செய்த புண்ணியங்கள் கண்டிப்பாக ஒருநாள் அவனை வழிநடத்தும் அல்லது அவனை காப்பாற்றும். புண்ணியங்கள் அதிகமானால் அவை பாக்கியங்களாக மாற்றம் அடைகின்றன. பாக்கியங்கள் என்பவை இவனுக்கு இது கிடைத்தே தீரும் என ஜோதிட சாஸ்திரம் வலியுறுத்துவதாக உள்ளது. அவ்வாறே, புண்ணியம் என்பது ஜாதகத்தில் 5ம் பாவகத்தை சொல்கிறது. பாக்கியம் என்பது ஜாதகத்தில் 9ம் பாவகத்தை சொல்கிறது. இந்த ஐந்தாம் (5ம்) பாவகாதிபதியும் ஒன்பதாம் (9ம்) பாவகாதிபதியும் இணைந்து செய்யும் யோகம் பூர்வ புண்ணிய - பாக்கிய யோகம்.
இந்த யோகம் அபரிமிதமானது, ஆச்சர்யமானது, சில நேரங்களில் ஆபத்தானதாகவும் உள்ளது. ஏனெனில், இரண்டு கிரகங்கள் ஒருவருக்கொருவர் நட்பாகவும் சுபராகவும் இருந்தால் ஆச்சர்யத்தையும் நன்மையையும் தருகிறது. அதே இரண்டு கிரகங்கள் ஒருவருக்கொருவர் பகையாகவும் அசுபமாகவும் இருந்தால் ஆபத்தையும் தருகிறது.
இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது, சுபமாக கிரக இணைவு இருப்பது நல்ல விஷயங்களை நோக்கி ஜாதகரை பயணிக்க வைக்கும். அசுபமாக கிரக இணைவு இருப்பது ஆபத்தான விஷயங்களை நோக்கி ஜாதகர் பயணிக்கிறார் என்பதாகும். நாம் இப்பிறவியில் பிறப்பெடுக்கும் தாய் - தந்தை மற்றும் பல உறவுகள் அதுபோலவே. நாம் சந்திக்கும் நபர்கள் மற்றும் நம்மை சந்திக்கும் நபர்கள் யாவரும் சென்ற பிறவியின் தொடர்ச்சிதான்.
பூர்வ புண்ணிய - பாக்கிய யோகப் பலன்கள்
*உங்களின் சிந்தனைகள், எண்ணங்கள் மற்றும் பல விஷயங்கள் சுப கிரகங்களாக வலிமை பெற்று இருப்பின் நன்மையை நோக்கி ஒரு மனிதனை பயணிக்க வைக்கின்றன.
*உங்களுக்கு உண்டாகும் பிரச்னைகளுக்கான தீர்வுகளை செய்வதற்கு மூன்றாம் நபர் ஒருவர் உங்களுக்கு வந்து உதவுவார்.
*பூர்வ புண்ணிய - பாக்கிய கிரகங்கள் சுபமாக வலிமையாக இருப்பின் மகன் - மகள் வழியில் பேரன், பேத்திகள் மற்றும் கொள்ளு பேத்திகள் வரை சந்திக்கும் யோகத்தை பெற்றவராக இருப்பார்.
*இதே, பூர்வ புண்ணிய - பாக்கிய யோகம் (12ம்) பாவகத்தோடு தொடர்பு உண்டாகும் எனில், ஒரு குருவே இவரைத் தேடி வந்து முக்திக்கான வழியை போதிப்பார். முக்திக்கான யோகத்தை கொடுப்பார். இல்லாவிடில் இவர் வெளிநாடு சென்ற பின் இவருக்கு நிறைய பொருள் ஈட்டும் யோகமும் குடும்ப பாக்கியத்தையும் ஏற்படுத்தும்.
*ஐந்தாம் (5ம்), ஒன்பதாம் (9ம்) கிரக அதிபதிகள் பதினோராம் (11ம்) பாவகத்தில் இருப்பின் அவர் பொதுச் சேவைகள்செய்து சமுதாயத்திற்கு நன்மைகள் செய்பவராகவும் இருப்பார். அதாவது, டிரஸ்ட் மற்றும் கோயில்களை நிர்வாகம் செய்பவராக மக்களுக்கு நன்மைகள் செய்வார்.
*குலதெய்வத்தின் மூலம் சிறப்பான எதிர்காலத்தின் பலன்களை பெறுவார்கள். இவர்களை காப்பதற்கு குலதெய்வமே நிழலாக தொடரும்.
லக்னத்தின் பூர்வ புண்ணிய - பாக்கிய யோகங்கள்
*மேஷம் - சூரியன் மற்றும் வியாழன் இணைந்து சிவராஜ யோகத்தை ஏற்படுத்தும். அரசாங்கம் மூலம் கோயில்களை நிர்வாகம் செய்பவராகவும் சமூகத்தில் அந்தஸ்தை
பெற்றவராகவும் இருப்பார்.
*ரிஷபம் / துலாம் - புதன் மற்றும் சனி இணைந்து நீதிமன்றங்களில் பெரிய வழக்கறிஞராகவும் நீதிபதியாகவும் இருப்பதோடு சமூகத்திற்கு நல்ல நீதி மற்றும் தர்மங்களை
எடுத்துரைப்பவராக இருப்பார்.
*மிதுனம் / கன்னி - சுக்ரன் மற்றும் சனி இணைந்து ெபரிய வேலையாட்களை கொண்ட படையை நிர்வகித்து அதனால் பொருள் ஈட்டும் அமைப்பை உடையவராக இருப்பார். வியாபாரம் செய்யும் தன்மை உடையவராகவும் அதன் மூலம் பெரிய பொருளாதாரத்தை பெறுவார்.
*கடகம் / சிம்மம் - செவ்வாய் மற்றும் வியாழன் இணைந்து பெரிய நிலங்களை பெற்றிருப்பவராகவும் அதன் மூலம் வேலையாட்கள் மற்றும் விவசாயம் மூலம் பொருள் ஈட்டும் அமைப்பை உடையவராக இருப்பார். அரசோடு இணைந்து செயல்படுபவராகவும் அரசின் பெரிய பொறுப்புகளை பெற்றவராகவும் அதிகாரம் செய்யும் பதவியை உடையவராக இருப்பார்.
*விருச்சிகம் - வியாழன் மற்றும் சந்திரன் இணைந்து கஜகேசரி யோகத்தை கொண்டவராக இருப்பார். எதிரிகள் இவர்களை கண்டு கொஞ்சம் அச்சம் பெறுவார்கள்.
*தனுசு - செவ்வாய் மற்றும் சூரியன் இணைந்து பெரிய மருத்துவ யோகத்தை பெற்றவராக இருப்பார். மருத்துவ துறையில் ஏராளமான வெற்றிகளை பெறுவார்.
*மகரம் / கும்பம் - சுக்ரன் மற்றும் புதன் இணைந்து வணிக நிர்வாகத்திலும் கல்வியிலும் பெரிய சாதனைகளை செய்வார்.
*மீனம் - சந்திரன் மற்றும் செவ்வாய் இணைந்து நிலபுலன்கள் மூலம் மற்றும் பள்ளிகள் மூலம் பெரிய நிறுவனத்தை நிர்வாகம் செய்யும் அமைப்பில் இருப்பார்.

