Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அம்பல், அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்

திருமால், பிரம்மன் ஆகிய இருவருக்கும் தாமே பிரம்மம் என்ற எண்ணம் ஏற்பட்டபோது இருவரிடையே அழல் உருவாய் ஓங்கி நின்ற இறைவன். இந்த பிழம்பின் அடியையோ, முடியையோ காண்பவரே உலகின் முழுமுதல்வர் என்று கூறினார். திருமால் வராஹ அவதாரம் கொண்டு அடியை காண பயணித்தார். பிரம்மா அன்னமாகி முடியை காண புறப்பட்டார், முடியை காணாமலே முடியை கண்டதாக பொய்யுரைத்தார். இறைவன் பிரம்மனை அன்னமாகும்படி சபித்தார். பிரம்மன் இறைவனை வேண்டி நின்றார். இறை பெருமானும் புன்னாகவனம் என்னும் தலத்தில் தவம் செய்யுமாறு கூறினார். பிரம்மனும் இத்தலத்தை அடைந்து பொய்கையை உருவாக்கி தினமும் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தார். அவரின் தவத்தின் பயனாக அவரின் உருவம் மாறி படைப்புத் தொழிலை மேற்கொண்டார்.

துர்வாச முனிவருக்கும் மதலோலா என்ற தேவகன்னிகையின் மூலம் அம்பரன், ஆம்பரன் என்ற அரக்கர்கள் பிறந்தனர். இவர்கள் தவம்செய்யும் முனிவர்களை எல்லாம் தொந்தரவு செய்து எல்லோருக்கும் துன்பம் விளைவித்தனர். சிவபெருமான் பார்வதி தேவியை பூலோகத்திற்கு அனுப்பி வைக்கவே, இங்கு காளி கன்னி உருவாக இங்கு பிரவேசித்தாள். சாதாரண பெண் என நினைத்து அவளை அடைய நினைத்து சண்டையிடவே காளிரூபம் கொண்டு இருவரையும் சம்ஹாரம் செய்தாள். அந்த இடமே அம்பரத்தூர் என்றழைக்கப்படுகிறது.

விஸ்வாமித்திரரின் தவத்தை கலைக்க முயன்றதால் மன்மதன் முனிவரால் சாபம் பெற்றான். அதனால், அவனுடைய அம்புகள் யாவும் வலுவிழந்து போயின. மன்மதன் இங்கு வழிபட்டு சாப விமோச்சனம் அடைந்தார் என புராணங்கள் சொல்கின்றன. இந்த கோயிலுக்கு ஒரு தனிச்சிறப்புண்டு. சோமாசிமாற நாயனார் பிறந்த திருத்தலம். யானையேறாதவாறு படிக்கட்டுகள் அமைத்து குன்றுகள் போல் உள்ள மாடக்கோயிலாகும். தேவாரம் பாடப் பெற்ற திருத்தலமாகும். இங்கு படிக்காசு விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்றவர். இத்தனை சிறப்புகள் கொண்ட திருத்தலம் என்பது சிறப்பின் மேல் சிறப்புகள் கொண்டது. இங்குள்ள தெய்வங்களுக்கு சூரியன், வியாழன், சுக்ரன், ராகு, கேது கிரகங்கள் நாமாகரணம் செய்து உள்ளன.

*கிருத்திகை நட்சத்திர நாளில் ஒரு புல்லாங்குழலில் நாட்டுச் சர்க்கரை முழுவதுமாக அடைத்து இத்தலத்தில் வைத்து வழிபாடு செய்தால் மருத்துவத் துறையில் உள்ளவர்கள் வெற்றி பெறுவார்கள்.

*ஆறாம் பாவகத்தில் சனி உள்ளவர்கள் அனுஷத்திற்கு முதல் நாள் இரவு தூங்குவதற்கு முன் பார்லி தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் அனுஷத்தன்று இங்குள்ள ஸ்தல விருட்சமான புன்னை மரத்திற்கு ஊற்றி வழிபாடு செய்தால் நீண்ட நாள் தூக்கம் இல்லாமல் துன்பப்படுகிறவர்கள் நிவா்த்தி பெறுவார்கள் மற்றும் முதலீடுகளில் மூலம் அதிக லாபங்களை பெறுவதற்கும் நல்ல வழிவகை செய்யும்.

*சுவாதி நட்சத்திர நாளில் அல்லது ஞாயிற்றுக் கிழமை ராகு காலத்தில் கறுப்பு உளுந்தில் சுண்டல் போல சமைத்து அதனை நைவேத்தியமாக படைத்து வழிபட்டால் திருமண தோஷம் விலகி விரைவில் திருமணம் நடைபெறும்.

*புனர்பூசம் நட்சத்திர நாளில் அத்தி மரத்தில் செய்த சிறிய தொட்டிலை இங்குள்ள ஸ்தல விருட்சமான புன்னை மரத்தில் பட்டு நூலில் கட்டி வழிபாடு செய்தால் புத்திரப்பேறு உண்டாகும்.

எப்படிச் செல்வது? கும்பகோணத்தில் இருந்து அம்பாள் சாலை வழியாக நாச்சியார்கோயில் அல்லது பேரளம், கூத்தனூர்/குத்தனூர் வழியாக கோயிலை அடையலாம் அல்லது மயிலாடுதுறை பேருந்து வழித்தடத்தில் அம்பர் மாகாளம் என்ற ஊருக்கு வந்து, அங்கிருந்து சுமார் 4.4 கி.மீ தொலைவில் அம்பல் பிரம்மபுரீஸ்வரர் கோயிலை அடையலாம்.