வையத்து வாழ்வீர்காள்: பகுதி-4
தொடர்ச்சி தொடங்குகிறது
இன்றுகூட, நம்பெருமாள்தானே உங்களை, என்னை நெறிப்படுத்த இங்கு எழுந்தருளச் செய்திருக்கிறார். என்னிடம் இருந்த ஒரு பெரிய, அரிய பொருளை, நான் தொலைத்து விட்டதாக எண்ணியிருந்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். அந்தப் பரம்பொருள் எவ்வளவு கருணை நிறைந்தது! என் நெஞ்சையே உறைவிடமாய்க் கொண்டு இருப்பதை எனக்கு எடுத்துக் காட்டியவர் நீங்கள்தானே!
நீங்கள் நம் பெருமாளின் நேரடி ஆசி பெற்றவர். ஒரு குருவின் தீண்டல் போதும், இறைவன் வந்து சேர! என்னை ஆசீர்வதியுங்கள்!” என்றபடி பேயாழ்வாரின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். “நீ வைணவனாக இருந்தவன். உன்னைத் தொலைத்து மீண்டும் உன்னை அடைந்து விட்டாய்! நான் நம்பெருமாளின் திருவுள்ளப்படி, மீண்டும் உன்னை வைணவனாக ஆக்குகிறேன். ஐந்து பூதங்களும் உன்னை ஆசீர்வதிக்கட்டும்! என் எதிரில் அமர்ந்து கொள். உனக்கு நான் பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைக்கப் போகிறேன். முதலில் தாபசம்ஸ்காரம். இதோ இந்தச் சுடுகின்ற உலோகக் குச்சியினால், உன் வலது தோளில் எம்பெருமானின் சின்னமான சக்கரத்தைப் பொறிக்கிறேன்.
நீயே நம் சக்கரத்தாரின் சொரூபம். உனக்கு இந்தச் சின்னத்தைப் பொறிப்பது எனக்கும் பெரும்பாக்கியம்தான். இடது தோளில் சங்கு சின்னத்தைப் பொறிக்கிறேன்.” பேயாழ்வார் ஒவ்வொன்றாய்ச் செய்ய செய்யக் கைகளைக் கூப்பி, நம்மவர் வணங்கி ஏற்றுக் கொண்டார். அடுத்து, பேயாழ்வார் திருமண்காப்பை எடுத்தார். நீரில் குழைத்தார். ஒரு மெல்லிய வெள்ளிக் குச்சியால், நம் பெருமாளைத் தியானித்தபடி, உடலின் பன்னிரு இடங்களிலும் கேசவா... நாராயணா.. என பன்னிரு நாமங்கள் சொல்லியபடி திருமண் இட்டார். ‘அடுத்து உனக்கு நான் நாம சம்ஸ்காரம் செய்யப் போகிறேன். இன்று முதல் உன் நாமம் ‘திருமழிசை ஆழ்வார்’ என்பதாக இருக்கட்டும்.’ அவரின் வலது காதில் மூன்று முறை பெயர்கூறி அழைத்தார்.
நம்மவருக்கு மேனி சிலிர்த்தது. மீண்டும் ஒரு முறை பெருமாள் உயிர் கொடுத்ததாக எண்ணினார். இரண்டாம் முறை, தான் பிறந்ததாக உணர்ந்தார். ‘அடுத்ததாக உனக்கு மந்திர சம்ஸ்காரம் செய்யவிருக்கிறேன். உன் வலது காதில் எட்டெழுத்து மந்திரத்தை உபதேசிக்க இருக்கிறேன். உன் உயிரோடு இது கலந்துவிட நான் ஆசிர்வதிக்கிறேன். உன் குருவாய் நான் இருந்து, நம்பெருமானின் இந்தப் பணியைச் செய்தது எனக்கு பெரிய பாக்கியம். ஒரு கோயிலுக்கு மங்களாசாசனம் செய்வது போலத்தான் எனக்குத் தோன்றுகிறது. இறுதியாக யாகசம்ஸ்காரம் மற்றும் திருவாராதனை செய்ய இருக்கிறோம். இன்று முதல், உன் உடல், மனம், சொல், செயல், சிந்தனை என அனைத்திலும் வைணவ நெறி பதியட்டும்! ஒளிரட்டும்! மிளிரட்டும்!’ என்றார்.
திருமழிசை ஆழ்வாருக்கு மனம் நிறைந்தது. பேயாழ்வாரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார். “தாங்கள் தயை கூர்ந்து துளசிச் செடிகளை நேராக நடவேண்டும். உங்களின் ஆசி எனக்கு இருப்பதை அவைகள் உணர்த்திக்கொண்டே இருக்கும்.” மகிழ்வுடன் பேயாழ்வார் துளசிச் செடிகளை நட்டார். செடிகள் மலர்ந்து வாசம் வீசின, திருமழிசை ஆழ்வார் மனதும்தான். எல்லாத் தேடல்களுக்கும் ஒரு நிறைவான முடிவு வந்ததில் அவர் மனது அமைதியாயிற்று. வந்த பணி நிறைவானதில் பேயாழ்வருக்கு மிகுந்த மகிழ்ச்சி.
ஆசிகள் வழங்கி அவர் புறப்பட்டார். இனி நம் ஜீயர் உபன்யாசத்தைத் தொடர்வார்.” எனக்கூறி நம்பிள்ளை முடித்தார். ஜீயர், “எம் குருவிற்கு என் மேல் உள்ள கருணையும் பேயாழ்வாரின் கருணை போலத்தான். கொஞ்சம் இங்கே இடைவெளி விடுவோம். மீண்டும் தொடர்வோம். திருமழிசை ஆழ்வார் சரிதம் இன்னமும் உள்ளது” என்று கூறினார்.
அடுத்த நாள்...
ஜீயர் திருமழிசை ஆழ்வார் பற்றிய உபன்யாசத்தைத் தொடர்ந்தார். தான் எப்படியெல்லாம் ஒவ்வொரு சமயத்திலும் தன்னை இணைத்துக் கொண்டார், என்பதைப் பற்றி திருமழிசை ஆழ்வாரே குறிப்பிடுகையில்,
‘`சாக்கியம் கற்றோம், சமணம் கற்றோம்,
சங்கரனார் ஆக்கிய ஆகமநூல் ஆராய்ந்தோம்;
பாக்கியத்தால் வெங்கட்கரியனை சேர்ந்தோம்”,
- என்கிறார்.
எல்லாமும் உணர்ந்த பின், `‘நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான் - யான்
அந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை
சிந்தாமல் கொண்மின்நீர் தேர்ந்து’’
பிரம்மனை நாராயணன் படைத்தான்; பிரம்மன் சங்கரனைப் படைத்தான். எனவே நாராயணனே முதற்பொருள் என்பதை நான் இவ்வந்தாதியின் மூலம் அறிவிக்கிறேன்; நீங்கள் இதனைக் குறைவற மனத்தில் கொள்ளுங்கள் எனத் தன் நோக்கத்தை விளக்கி, நான்முகன் திருவந்தாதியைத் தொடங்கினார் நம்மவர். பிறகு, தீவிர வைணவராக வைணவத் திருத்தலங்களுக்கு விஜயம் செய்தார். ஒரு முறை அவர் எம்பெருமாளின் திவ்ய கல்யாண குணங்களைச் சிந்தித்திருந்து, பிருந்தாரண்ய க்ஷேத்ரம் எனப்படும் பரம பவித்ரமான திருவல்லிக்கேணியில் எழுந்தருளியிருந்தார். அங்கே அவர் அஷ்ட சித்த யோகத்தில் ஆழ்ந்திருந்தார். அவரின், நாராயணன் மீதான பக்தியை மெச்சிய சிவன், ஒரு நாள் உமையுடன் தோன்றினார். அவரை ஆசீர்வதித்து ‘பக்திசாரர்’ என்று பட்டம் சூட்டினார்.
நம்மவரின் திருத்தொண்டு தொடர்ந்தது. காஞ்சிபுரம் நகரை ஒட்டிய ஒரு குகையில் நம்மவர் அழ்ந்த யோகத்தில் ஆழ்ந்திருந்தார். அவரின் குகையிலிருந்து மாபெரும் ஒளி வெள்ளம் பெருகியிருந்தது. அச்சமயம் நம் பெருமாளுக்கு ஒரு இனிய எண்ணம் உதித்தது. நான்கு ஆழ்வார்களும் ஒரே இடத்தில் சந்தித்தால் எப்படி இருக்கும்! நினைத்ததை நிறைவேற்றும் பெருமாள் அல்லவா! அதே எண்ணம் முதல் மூன்று ஆழ்வார்கள் மனதிலும் உதித்தது.
மூவரும் ஒரே நேரத்தில் ஒளி சூழ்ந்த அந்த குகைக்குள் நுழைந்தார்கள். குகையின் உள்ளே அஷ்ட சித்தி மகா யோகத்தில் ஆழ்ந்திருந்த நம்மவர் கண் திறந்தார். எதிரில் மூன்று ஆழ்வார்கள் நின்று இருப்பதைக் கண்டார். ஆச்சரியம் அடைந்தார். ஆனந்தக் கண்ணீர் மல்க கைகூப்பி வரவேற்றார். அவர்களின் கால்களில் விழுந்து வணங்கினார். உரையாடலை பொய்கையாழ்வார் துவக்கினார்.
``இந்த இடம் திருக்கோவிலூர் ஆசிரமத்து இடைக்கழியா!’’
பதிலளிக்கும் வண்ணம் பூதத்தாழ்வார் புன்னகைத்தபடி, ``திருக்கோவிலூரின் இடைக்கழி எனக்கும் நினைவுக்கு வருகிறது. நாம் மூவரும் முதலில் சந்தித்த இடமல்லவா! நம்மை நாராயணன் ஆழ்வார்களாக்கிய முக்கிய நிகழ்வு அங்குதானே!’’ பேயாழ்வார்,
``அங்கே நம்மை இருளில் நெருக்கி கொண்டு நான்காவதாக நின்றவர் நம் நாராயணன். ஆனால், இன்று இந்த ஒளி வெள்ளத்தில் நம் அருகில் நெருங்கி நிற்பவர் திருமழிசை ஆழ்வார்.’’ பேயாழ்வார் இப்படிக் குறிப்பிட்டதும் பூதத்தாழ்வார், ``தன்னுடைய நேரடி சிஷ்யன் மேல் என்றைக்குமே எல்லோருக்கும் ஒரு தனி பாசமும் பரிவும் உண்டுதான். உங்களுக்கு இவர் மேல் இருக்கும் பிரியம் நாங்கள் அறிந்ததே!”நால்வரும் நாராயணின் பெருமை களைப் பேசி மகிழ்ந்தார்கள்.
திருமழிசை ஆழ்வார், ``அடியேன் என் பொருட்டு நீங்கள் மூவரும் இங்கு எழுந்தருளி ஆசி அளித்தது என் பாக்யம். நாராயணனுக்கு என் மேல் எவ்வளவு கரிசனம்.’’ பேயாழ்வார்,
“நீ எழுதிய நான்முகன் திருவந்தாதியில் ‘எல்லாப் பொருள்களுக்கும் சொல்லாகி நின்றவனைத் தொகுத்துச் சொல்வேன்’ என்று சொல்லியிருப்பாயே! நம்பெருமாளை நீ அறிந்தது போல் யாரும் அறியவில்லை என்று கூறியிருப்பது உண்மை.” எனக்கூறிவிட்டு,
`‘பாலிற் கிடந்ததுவும் பண் டரங்கம் மேயதுவும்
ஆலில் துயின்றதும் ஆரறிவார் - ஞாலத்
தொருபொருளை வானவர்தம் மெய்ப்பொருளைஅப்பில்
அருபொருளை யானறிந்த வாறு?’’
- என நம்மவர் எழுதிய பாசுரத்தைப் பாடினார்.
முதல் மூன்று ஆழ்வார்களின் அருகாமையும் அவர்களின் ஆசியும் பெற்றதில் நம்மவர் நெகிழ்ந்தார். ``ஒரு விஞ்ஞாபனம். நம் முதலாம் ஆழ்வாரின் பாசுரத்தை நாம் எல்லோரும் பாடலாமா?’’
``சென்றநாள் செல்லாத செங்கண்மால் எங்கள்மால்
என்றநாள், எந்நாளும் நாளாகும் - என்றும்
இறவாத எந்தை இணையடிக்கே யாளாய்
மறவாது வாழ்த்துகஎன் வாய்’’
- பாடல் முடிந்தது.
இறைவனை வாழ்த்திய நாட்களே நல்ல நாட்கள். கழிந்த நாட்கள் மட்டுமல்ல, வர இருக்கின்ற நாளும் நல்ல நாளாகும். எனவே இறைவனை, வாய் வாழ்த்திக் கொண்டே இருக்கவேண்டும் என்ற பொருள் பொதிந்த அந்தப் பாசுரம் நால்வரின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீரைப் பெருக்கியது. மூவரும் விடை பெற்றார்கள். மெல்லிய மழைச்சாரல் அங்கே வீசியது. நம்மவருக்கு நெஞ்சு நிறைந்திருந்தது. சில நூறு ஆண்டுகள் கழிந்தன.
நம்மவர், பொய்கையாழ்வாரின் அவதார திருத்தலமான திருவெக்காவில் வசித்து வந்த காலமது. பிரம்மன் யாகம் செய்வதைத் தடுக்க, சரஸ்வதி தேவி, வேகவதி எனும் நதியாக உருவெடுத்தாள். பெருவெள்ளமாய்ப் பாய்ந்தாள். வெள்ளத்தைத் தடுக்க நம்பெருமாள் ஆற்றின் குறுக்கே அணையாகப் படுத்தார். வேகவதி எனும் நதி பாய்ந்ததால் ‘திருவெக்கா’ என்றழைக்கப்பட்டது.
நம்மவர் அங்குள்ள திருக்கோயிலின் மூலஸ்தானத்தில் அமர்ந்து யோகத்தில் ஆழ்ந்திருப்பார். அவரின் சீடன் கணிகண்ணன் அவருடனே இருந்து வந்தார். இவர், நாள்தோறும் தனக்கும் தன் குருவுக்கும் உஞ்சவிருத்தி எடுத்துவந்து சேவை செய்தார்.
அந்தக்கோயிலின் ஒரு மூலையில், ஆஸ்ரமம் போன்ற குடிலில்தான் அவர்களின் வாசம். ஒரு வயதான மூதாட்டி இவர்களின் ஆசிரமத்தை நாள்தோறும் தூய்மை செய்துவந்தார். ராமாயண காலத்திய சபரி பாட்டியை போன்றவர். பூக்கள் பறித்து மாலையாகத் தொடுத்து வைப்பார். விளக்குகள் ஏற்றி வைத்து, நறுமண புகைகள் இடுவார். பழங்கள் கொணர்வார். கோலமிடுவார். எழில் கொஞ்சும் இடமாகவே மாற்றியிருந்தார். வயது மூப்பின் காரணமாக சிறிது அயற்சி ஏற்படுவதுண்டு.
அப்போதெல்லாம், மனதிற்குள், “நாராயணா! எனக்கு வயதே ஆகாமல் இளமையாகவே இருந்துவிட்டால் இன்னும் புத்துணர்வுடன் நிறைய சேவைகள் செய்வேனே! அருளக்கூடாதா!” என
பிரார்த்திப்பார்.வேண்டுதலை நாராயணனுக்கு முன், நம்மவர் உணர்ந்துகொண்டார். அவரின் அருட்பார்வை அந்த மூதாட்டியின் மீது விழுந்தது. அடுத்த கணமே அவள் ஒரு யுவதி ஆகிவிட்டாள். அதுவும் உலகின் ஒட்டு மொத்த பேரழகும் ஒன்று சேர்ந்த ரூபவதியானாள். அவள் ஒரு நாள் ராஜவீதியில் நடந்து வர, அவளழகில் மயங்கிய பல்லவ மன்னன் அவளை மணமுடித்தான்.
அவள் அழகில் மயங்கிய மன்னனுக்கு, அவள் வயதைப் பற்றிக் கேட்கத் தோன்றவில்லை. வருடங்கள் கடந்தன. மன்னனுக்கு மூப்பு வர, அவளின் இளமையின் காரணம் அறிய முற்பட்டான். விவரம் அறிந்தான். ‘ஆழ்வார் நினைத்தால் நான் அழகாகி விடுவேனா! இளைஞனாக என்றுமே நானிருப்பேனா!’ மன்னனைச் சுற்றியிருந்த ஒரு கூட்டம்,
“மன்னர் தாங்கள் நேராக ஆழ்வாரிடத்தில் செல்ல வேண்டாம். அவரின் சீடன் கணிகண்ணனை அழைத்துவரச் செய்வோம். அவன் ஒரு சாதாரண உஞ்சவிருத்தி.
சொம்பில் விழும் அரிசிக்கும் நாணயத்திற்கும் தெருவில் பிச்சை எடுப்பவன். அவன் சொன்னால் போதும் ஆழ்வார் எதையும் செய்வார். ஒரு பார்வை ஆழ்வார் பார்த்தால் போதும், அரசர் இளவரசர் ஆகிவிடுவார், தோற்றத்தில்!” அவர்கள் பற்ற வைத்தார்கள். மன்னனின் மனதில் ஆசைத்தீ கொழுந்துவிட்டது.
அரண்மனை வந்த கணிகண்ணனிடம் மன்னன், ‘`எனக்கு இளமை திரும்புமாறு உங்கள் குருநாதரிடம் சொல்லவேண்டும்’’என்று கேட்டார். கணிகண்ணனோ, “குருவின் கருணையை சேவையின் மூலம் பெறலாமே ஒழிய உத்தரவின் வழியாகப் பெறமுடியாது. ஆசியென்பது அதிகாரத்தால் வருவதல்லவே!” என்று சொல்லி மறுத்தார். மன்னன் கோபம் கொண்டு கணிகண்ணனை நாடு கடத்துமாறு உத்தரவிட்டார். இதைக் கேள்விப்பட்டதும் மனம் வருந்திய கணிகண்ணன், தன் குருவிடம் விடைபெற்றுக்கொள்ள வந்தார். தன் சேவையைத் தொடர முடியாத நிலையைச் சொல்லி, அந்த ஊரிலிருந்து வெளியேறுவதாகக் கூறினார். சொல்லும்போதே கணிகண்ணனுக்கு கண்கள் கலங்கின. இதைக் கேட்ட திருமழிசையாழ்வார்;
“அப்படியா!. நீ இங்கு இல்லையென்றால் நான் மட்டும் இங்கு எதற்கு? பக்தர்கள் நாமிருவரும் இல்லையென்றால் நம் பெருமாள் மட்டும் இங்கு எதற்கு?” என வினவினார்.
கணிகண்ணனை அழைத்துக்கொண்டு நேராக நம்பெருமாளிடம் சென்றார். மனதில் பாசுரம் பொங்கியது. ‘கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்கவேண்டா - துணிவுடைய செந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன் பைந்நாகப்பாய்சுருட்டிக்கொள்!’ ஒவ்வொரு சொல்லும் உயர்ந்த பக்தியின் வெளிப்பாடு.
‘என் சீடன் இல்லாத ஊரில் நான் இருக்க மாட்டேன். பக்தர்கள் இல்லாத ஊரில் உனக்கு என்ன வேலை? நீயும் உன் பாம்புப் பாயைச் சுருட்டிக்கொண்டு என் பின்னாலேயே வா’ பெருமாளுக்கு வியர்த்தது. ஆழ்வார் சொல்வதைக் கேட்பதே தனக்கு பிரதானம் என்பது புரிந்தது.சீடன் ‘நாராயணா! நாராயணா!’ என்று சொல்லியபடி முன்னே செல்ல, ஆழ்வார் ‘நாராயணா! நாராயணா!’ என்று சொல்லியபடி பின்னே செல்ல, அவர்களைத் தொடர்ந்து நாராயணனும் தன் பாம்புப் பாயைச் சுருட்டித் தலையில் வைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்துவிட்டார்! இப்படி ஒரு காட்சி எங்குமே நிகழ்ந்ததில்லை என வானவர்கள் வியந்தார்கள்.
அவர்கள் மூவரும் ஊர் எல்லையைக் கடந்து ஓர் ஊரில் அந்த இரவு தங்கினர். அதனாலேயே அவ்வூருக்கு ‘ஓரிருக்கை’ எனப் பெயர் வந்தது. நாராயணன் வெளியேறியதும், அவர் மார்பிலே வாசம் செய்யும் திருமகளும் அவரே இல்லாத இடத்தில் எனக்கு என்ன? என காஞ்சிமாநகரை விட்டு நீங்கினாள். திருவும் இறையும் இல்லாத ஊரை விட்டு அனைத்து தேவர்களும் நீங்கினர். காஞ்சிபுரம் தன் தெய்வீகத் தன்மையை இழந்தது.
மறுநாள் பூஜை செய்ய வந்த அர்ச்சகர்கள் கோயிலின் கருவறையில் பெருமாள் இல்லாதது கண்டு பதறினர். இந்தத் தகவல் மன்னனுக்குப் போனது. மன்னன் தன் தவறை உணர்ந்தான். ஓடோடி வந்து ஆழ்வாரின் காலடியில் வீழ்ந்து பணிந்து தன் பிழையைப் பொறுக்குமாறு வேண்டினான். ஆழ்வாரும் அவனை மன்னித்தருளினார். பெருமாளிடம் சென்றார். மீண்டும் பாசுரம் பாடினார்.
“கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் - துணிவுடைய செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன் பைந்நாகப் பாய்படுத்துக்கொள்” என்றார்.
உடனே பெருமாள் மீண்டும் தன் பைந்நாகப் பாயை சுருட்டிக்கொண்டு திருவெக்கா வந்து மீண்டும் படுத்துக்கொண்டார். எல்லோருக்கும் மனதில் நிம்மதி. பக்தனின் சொல்லைக் கேட்டு செயல் புரிந்ததினால் பெருமாளுக்கு ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’ என்று திருநாமம் ஏற்பட்டது. மற்ற தலங்களில் எல்லாம் பெருமாள் இடமிருந்து வலமாகச் சயனித்திருக்க, திருவெஃகாவிலோ வலமிருந்து இடமாகச் சயனித்திருப்பார். ஆழ்வாரின் சொல் கேட்டு எழுந்து நடந்து மீண்டும் வந்து படுத்ததால் திசைமாறி சயனித்திருப்பார். காஞ்சி நகரம் மீண்டும் புத்துயிர் பெற்றது.
(இன்னும் இருக்கிறது அடுத்த இதழில்...)
கோதண்டராமன்