Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சகல சௌபாக்கியம் தரும் வெள்ளிக்கிழமை வழிபாடு!

வெள்ளிக்கிழமை என்பது மங்கலகரமான நாளாகவும், மகாலட்சுமிக்கு உரிய தினமாகவும் கருதப்படுகிறது. பிற நாட்களைக் காட்டிலும் இந்த நாள் புனிதம் நிறைந்ததாகும். எனவே, இந்த நாளில் ஒரு செயலைத் தொடங்கினால் அது வெற்றியாகவே அமையும். நல்லதொரு தொடக்கத்திற்கு உகந்த கிழமைதான் வெள்ளிக்கிழமை. செல்வத்திற்கு உரிய மகாலட்சுமியை 24 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து வழிபட்டு வந்தால் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும்.

வெள்ளிக்கிழமையின் சிறப்பு: வெள்ளிக்கிழமைகளில் பெருமாள் கோயிலில் உள்ள தாயாருக்கு, அபிஷேகத்திற்குத் தேவையான பசும்பாலை வழங்கினால் பண வரவு உண்டாகும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட, செல்வம் பெருகும். வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டு அர்ச்சிக்க தனலாபம் கிடைக்கும். வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்கு உணவளிக்க செல்வம் சேரும். இன்று மாலை வேளையில் சாம்பிராணி கொண்டு வீடு முழுக்க புகை போடுவதன் மூலம் வீட்டில் ஏதேனும் துர்சக்திகள் இருந்தால் விலகி விடும். அதோடு வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். இதன் மூலம் வீட்டில் உள்ள அனைவருக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

அரசமரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு வெள்ளிக்கிழமை அன்று 11 தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் பண வரவு அதிகரிக்கும். இதேபோல் அரசமரத்தை 11 முறை சுற்றி வருவதும் மிகச் சிறந்த நற்பலன்களைத் தரும். இன்று குபேர விளக்கில் தாமரை திரி இட்டு விளக்கேற்றி வந்தால் குபேரனின் அருள் கிடைக்கும். அதேபோல், இன்று விரதம் இருப்பது மிகவும் விசேஷமானது. தொடர்ந்து ஒருவர் வெள்ளிக்கிழமை விரதத்தை கடைபிடித்து வந்தால் லட்சுமி, முருகன், சுக்ரன் ஆகிய மூவரின் அருளையும் ஒருங்கே பெறலாம்.

மகாலட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமை அன்று தாயாரின் அம்சமாக விளங்கும் உப்பை நாம் வாங்கினால், நமக்கு இரட்டிப்புப் பலன் கிடைப்பதோடு, நமது வீட்டிலும் லட்சுமி கடாட்சம் எப்போதும் நிறைந்து இருக்கும் என்பது நம்பிக்கை. செல்வத்தின் கடவுளும் பல்வேறு இன்னல்களைப் போக்கக்கூடிய, காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவின் துணைவியான மகாலட்சுமியை வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி வழிபட, சகல செளபாக்கியங்களும் உண்டாகும்.