கிரகங்களே தெய்வங்களாக
கோசெங்கண்ணன் என்ற மன்னனுக்கு குன்ம நோய் (அல்சர்) ஏற்படுகிறது. மிகுந்த அவதியுற்றான். மூன்று விருட்சங்கள் எங்கு இருக்கிறதோ அங்கு கோயில் கட்டினால் உன்னுடைய நோய் தீரும் என்ற அசரீரி கேட்கிறது. மன்னனும் பல கோயில்கள் கட்டுகிறான். ஆக்கூர் என்னும் இத்தலத்திற்கு வரும் கொன்றை, வில்வம், பாக்கு விருட்சங்களை மன்னன் பார்க்கிறார். உடனே, அந்த இடத்தில் ஒரு சிவாலயம் கட்டுகிறான் மன்னன். அவ்வாறு கோயில் கட்டும் இடத்தில் ஒரு சுவர் கிழே விழுந்துவிடுகிறது. அவ்வாறு விழுந்த இடத்தில் ஏன் விழுந்தது என சிவபெருமானிடம் கேட்டு மன்றாடுகிறான் மன்னன். சிவபெருமான் ஆயிரம் அந்தணர்களுக்கு அன்னதானம் செய்தால் குறைகள் நீங்கி சிறப்பாக கோயில் கட்டலாம் என்ற அசரீரி கேட்கிறது. அதன்படி, 48 நாட்கள் அன்னதானம் நடக்கிறது. இதில் ஒவ்வொரு நாளும் ஆயிரம் இலைகள் போட்டால் 999 பேர்தான் சாப்பிடுகிறார்கள். இதில் ஒரு இலை மீதமாகவே மன்னன் மிகுந்த வருத்தம் அடைந்தான். இறைவனிடம் சென்று மன்றாடுகிறான் மன்னன், “ஏன்? இந்த சோதனை'' என்று கேட்கிறான். மன்னனின் குரலுக்கு செவி சாய்த்த இறைவன், 48வது நாள் ஆயிரம் இலைகள் போடப்படுகிறது. ஆயிரம் இலைகளிலும் ஆட்கள் அமர்ந்திருக்கிறார்கள். அந்த ஆயிரத்தில் ஒருவராக வயதான அந்தணர் ஒருவரும் அமர்ந்திருக்கிறார். ஆயிரத்தில் ஒருவராக அமர்ந்த அந்தணரிடம் தாங்கள் எந்த ஊர்? என்று கேட்கப்படுகிறது. அதற்கு அந்த அந்தணர் “யாருக்கு ஊர்'' எனக் கேள்வி கேட்கிறார். (இதனால் இவ்வூருக்கு யாருக்கு ஊர் என்பது மருவி “ஆக்கூர்'' ஆனது) மன்னனை எதிர் கேள்வி கேட்ட அந்த வயதானவரை அடிப்பதற்காக சிப்பாய்கள் மிரட்டுகின்றனர். ஓடி சென்ற வயதானவர் அங்கிருந்த புற்றுக்குள் விழுந்துவிட்டார். புற்றை கடப்பாரையால் விலக்கி பார்த்த போது உள்ளேயிருந்து சுயம்பு மூர்த்தியாக “தான்தோன்றீசுவரர்'' காட்சி தருகிறார். கடப்பாரையால் புற்றை குத்தியபோது கடப்பாரை லிங்கத்தின் மீது பட்டு விடுகிறது. கடப்பாரை பட்டதின் அடையாளமாக இன்று லிங்கத்தின் தலைப்பகுதியில் பிளவு இருக்கிறது. அங்கிருந்த லிங்கத்தின் மீது ஆலயத்தை கட்டி மன்னன் குடமுழுக்கு நடத்தினான். அதற்குபிறகு அவன் நோய் தீர்ந்து விட்டது. இத்தலம் பாடல் பெற்ற தலமாக உள்ளது சிறப்பாகும். இந்த தெய்வத்திற்கு சூரியன், சந்திரன், செவ்வாய், குரு நாமாகரணம் செய்துள்ளது.
* பௌர்ணமி நாளில் இருந்து 48 நாட்கள் தொடர்ந்து இங்கு தரிசனம் செய்து யாருக்காவது அன்னதானம் செய்தால் தீராத பிணியும் தீரும் என்பது ஐதீகமாகும்.
* அனுஷம் நட்சத்திர நாளில் சுயம்பு மூர்த்திக்கு புனிதநீரால் அபிஷேகம் செய்து செண்பகப்பூ மாலை கொடுத்தால் கடன் பிரச்னை தீரும்.
* ஜாதகத்தில் 5ம் பாவகத்தில் சூரியன் உள்ளவர்கள் இங்கு தேனும் தினை மாவும் கொடுத்து நைவேத்தியம் செய்து வெள்ளைப்பசுவிற்கு உணவாக கொடுத்தால் முதலீடுகள் நல்ல லாபத்தை தரும்.
* புனர்பூசம் நட்சத்திர நாளில் மூன்று புனித நீர் எடுத்து தல விருட்சமான சரக்கொன்றை விருட்சத்திற்கு ஊற்றி சாமி தரிசனம் செய்தால் புத்திர சந்தானம் உண்டாகும். குபேர சம்பத்து உண்டாகும்.
மயிலாடுதுறையிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 16 கி.மீ தூரத்தில் ஆக்கூர் அமைந்துள்ளது.


