Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மகாபரணியில் மகிமைபுரிந்த அக்னீஸ்வரர்

பரணி நட்சத்திரக்காரர்கள் தம் வாழ்நாளில் அடிக்கடிச்சென்று விசேஷ வழிபாடு செய்யவேண்டிய தலம் நாகப்பட்டினம் நல்லாடை அக்னீஸ்வரர் திருக்கோயிலாகும். இத்தல இறைவன் மேற்கு நோக்கியும் அம்மன் சுந்தர நாயகி தெற்கு நோக்கியும் அருட்பாலிக்கிறார்கள். சுவாமி அக்னி சொரூபமாக உள்ளதால் அதனை தணிக்கும் வகையில் மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தை சுற்றி தண்ணீர் ஊற்றப்பட்டு இருப்பது தலத்தின் முக்கிய சிறப்பம்சமாகும்.

ஒரு முறை மிருகண்ட மகரிஷி இத்தல இறைவனுக்கு யாகம் நடத்த ஏற்பாடு செய்தார். இந்த யாகத்திற்கான பொருட்களை மன்னனும், பொதுமக்களும் வழங்கலாம் என்றும் அறிவித்தார். மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்கம் கலந்த பட்டாடையை நெய்து, இறைவனுக்கும், சோழ மன்னனுக்கும், மிருகண்ட மகரிஷிக்கும் வழங்கினார்கள். யாக முடிவில் மகரிஷி தனக்கு கொடுத்ததையும், இறைவனுக்கு கொடுத்த பட்டாடையையும் யாகத்தில் போட்டு விட்டார்.

இதற்கான காரணத்தை மகரிஷியிடம் கேட்டதற்கு, யானும் சிவனும் வேறு அன்று என கூறினார். அதாவது அர்ச்சக மூல லிங்கம் என்பார்கள். நான் யாக குண்டத்தில் போட்ட இரண்டு பட்டாடைகளை கோயில் மூலஸ்தானத்தில் உள்ள சிவனின் மேல் போர்த்தப்பட்டிருப்பதை பாருங்கள் என்றார். அனைவரும் ஆலயத்திற்குள் சென்று பார்த்தபோது, சிவனின் மீது யாகத்தில் போட்ட பட்டாடைகள் போர்த்தப்பட்டிருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டனர்.

இதையறிந்த இறைவன் மக்களின் சந்தேகத்தை தீர்க்கும் வகையில், அக்னி சொரூபமாக தோன்றி, அக்னியின் பல வகைகளில், பரணி என்பது ஒரு வகை ருத்ராக்னி. இன்று முதல் ஹோமத்தில் முதலில் எழும் அக்னி, பரணி ருத்ராக்னி என வழங்கப்படும் என கூறி அருளினார். இதனால்தான் இத்தலம் பரணி நட்சத்திரத்திற்குரிய கோயிலாக திகழ்கிறது. இதன் அடிப்படையில்தான் கார்த்திகை தீப பெரும் விழாவில் திருவண்ணாமலை அருணாச்சலம் கோயிலில் அதிகாலையில் மகா பரணி தீபம் ஏற்றப்படுகிறது.

பரணியில் பிறந்தோர் தரணி ஆள்வர் என்பது பழமொழி. இங்கு சிவன் அக்னி சொரூபமாக திகழ்வதால், பரணி நட்சத்திரக்காரர்கள் அடிக்கடியோ அல்லது பரணி நட்சத்திரத்தன்றோ ஹோமம் செய்து வழிபடுவது சிறப்பு. அதிலும் குறிப்பாக ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தன்று இக்கோயிலுக்கு சென்று ஹோமம் செய்து, சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் வாழ்வு சிறக்கும் என்பது ஐதீகம். பரணி நட்சத்திரக்காரர்கள் இறைவனை வழிபடும் போது தீபம் காட்டுதல், விளக்கு பூஜை செய்தல், பத்தி, சாம்பிராணி காட்டுதல் சிறப்பு.

இறைவனுக்கே ஆடை நெய்து கொடுத்த காரணத்தினால் இத்தலம் நெய்தலாடை என வழங்கப்பட்டு, நாளடைவில் மருவி நல்லாடை ஆனது.இத்தலத்தில் ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், ஆருத்திரா தரிசனம், கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில் பஞ்சமூர்த்தி புறப்பாடு முதலான வைபவங்கள் மிக விமர்சையாக நடத்தப்படுகிறது.கோயில் நடை காலை 8 மணி முதல் - பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் - இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.மயிலாடுதுறையிலிருந்து (15 கி.மீ.) நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் அமைந்துள்ள கிராமம் நல்லாடை.- ச. சுடலைகுமார்