Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஆடிப்பெருக்கு

ஒவ்வொரு விழாவும் ஒவ்வொரு அமைப்பில் கொண்டாடப்படும். இந்த விழா எந்த நாள் எந்த திதியாக இருந்தாலும் ஆடி மாதத்தில் 18 வது நாள் என்று நாளை அடிப்படையாக வைத்துக் கொண்டு கொண்டாடப்படுகிறது. ஆடி பதினெட்டாம் பெருக்கு தமிழகப் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் பிரதிபிம்பமான விழா. உலகத்துக்கு அச்சாணியாக விளங்குகின்ற நீர் நிலைகளில் ஒன்றான ஆறுகளில் புதுநீர் பெருக்கெடுத்து ஓடும். அதனால் பச்சை பயிர்கள் நன்கு விளையும். அந்த ஆறுகளையும் ஆறுகளில் ஓடும் நீரையும் தெய்வமாக நினைத்துக் கொண்டாடி மகிழும் நாள் ஆடிப்பெருக்கு. ஆடியில் செய்யும் வழிபாடு கோடி பெறும். மிகப்பெரிய செல்வப் பெருக்கத்தையும், குடும்பத்தில் இன்ப பெருக்கையும் வழங்கும்.

ஆடிப்பெருக்கு திருநாளன்று பெண்கள் அனைவரும் தங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள ஆறு, கால்வாய் முதலில் நீர் நிலைகளுக்குச் சென்று, அந்த நீருக்கு முன்னால் விளக்கேற்றி வைத்து வாழை இலையில் படையல் இட்டு, தேங்காய் உடைத்து, கற்பூர தூப தீபங்கள் காட்டி,புது அரிசி வெல்லம் கலந்து வைத்து. சித்ரான்னங்களைப் படைத்து, குதூகலமாகக் கொண்டாடுவது உண்டு. அன்று நீர் நிலைகளுக்கு சீர் செய்வார்கள். வாழை மட்டையில் அகல் விளக்குகளை ஏற்றி நீரில் விடுவதும் சில இடங்களில் நடைபெறும். புதிதாகத் திருமணம் ஆனவர்கள் அன்று தாலிக் கயிறு மாற்றிக் கொள்வார்கள். திருமணம் ஆகாத பெண்களும் திருமண மான பெண்களிடம் இருந்து வாங்கி மஞ்சள் சரடு அணிவதன் மூலமாக அவர்களுக்கும் மிக விரைவில் திருமணம் ஆகும். ஆறு, குளம் முதலியன, அருகே இல்லாதவர்கள் தங்கள் வீட்டில் போர் வெல் அல்லது அடி பம்பு இருந்தால் அந்தக் குழாயடியிலும் பூஜையைச் செய்யலாம்.

அல்லது ஒரு சிறு குடத்தில் தண்ணீர் எடுத்து அதில் அரைத்த மஞ்சளைக் கரைத்து வைத்து படைக்கலாம். விளக்கேற்றி வைத்து, குடத்தண்ணீரில் பூக்களைப் போட வேண்டும். கற்பூர ஆரத்தி அல்லது நெய் தீபம் காட்ட வேண்டும். அந்த நீரையே புண்ணிய நதிகளாக நினைத்துக் கொண்டு மந்திரத்தைச் சொல்ல வேண்டும். பூஜை முடிந்தவுடன் அந்த நதி நீரை கால் படாத வண்ணம் செடி கொடிகளுக்கு ஊற்றி விட வேண்டும். திருவரங்கத்தின் புகழ்பெற்ற அம்மா மண்டபம் என்கின்ற படித்துறை உள்ளது. அங்கே காவிரிக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். அன்றைய தினம் பெரிய கோயிலில் இருந்து நம் பெருமாள் யானை மீது புறப்பாடாவார். அம்மா மண்டபம் படித்துறைக்கு வருவார். அங்கு காவிரி நீரால் சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெறும். அங்கே மாலை வரை பெருமாள் வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமான தாலிக் கயிறு, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.

பராசரன்