Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஆடிக்கூழும் அறிவியலும்

ஆடிமாதம் என்றாலேயே நம் நினைவுக்கு வருபவை அம்மன் வழிபாடும் ஆடிக்கூழும்தான். ஆடிமாதம் முழுவதும் அனைத்து அம்மன் கோயில்களிலும் கூழ் ஊற்றுவது வழக்கம். இந்தக் கூழ் ஊற்றுவதில் மாபெரும் விஞ்ஞான விழுமியம் அடங்கியுள்ளது. ஆடி மாதம் மழைக்காலம் தொடங்கும் காலம் என்பதால், அப்போது நுண்கிருமிகளால் நோய்கள் அதிகளவில் பரவும். அம்மாதத்தில் ஈக்களும் கொசுக்களும்கூட அதிகமாகக் காணப்படும்.

வெப்பம் அதிகமாகவும், ஈரப்பதம் நிறைந்த குளிர்க்காற்று அதிகமாகவும் ஆடிமாதம் இருப்பதால் பலருக்கும் நோய் ஏற்படும். மற்ற மாதங்களைக் காட்டிலும் ஆடி மாதத்தில்தான் நோயாளிகள் அதிகளவில் பரவி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். முற்காலத்தில் அம்மை நோய் ஆடிமாதத்தில்தான் அதிகமாகப் பரவியது. காரணம், ஆடி மாதத்தில் காற்றும் அதிக விசையுடன் வீசும். ஆகவே, அந்தக் காற்றில் கிருமிகள் கலந்து நோய் பரவும். அதைத்தான் ‘‘ஆடிக் காற்றில் அம்மையும் பரவும்’’ என்றார்கள்.

அப்பழமொழி, ‘‘ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்’’ என்று மருவிவிட்டது.பல நோய்கள் பரவுவதற்கு ஏற்ற பருவ நிலையுடையதாக ஆடிமாதம் விளங்கியதால் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்து, நோய் வருமுன் காக்க வேண்டும் என்று கருதியே, நம்முன்னோர் ஆடிமாத்தில் கூழ் ஊற்றினர். கூழில் பயன்படுத்தப்படும் கேழ்வரகில் இரும்புச்சத்தும், கால்சியம் சத்தும், நார்ச்சத்தும் நிறைந்துள்ளன. இச்சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தி நோயை வருமுன் காக்க உதவுகின்றன. கூழையும்கூட அவரவர் வீட்டில் வைத்துக் கொண்டு அவரவர் மட்டுமே குடிக்காமல் அனைவருக்கும் கொடுத்து அனைவரும் நோயின்றி வாழ வழி செய்தனர் நம் முன்னோர். அக்காலத்தில், ஆடி மாதத்தில்தான் அதிகமாகப் பஞ்சம் நிலவும். அப்பஞ்சத்தால் வரகுகூட வாங்க இயலாத மக்கள் இருந்தனர்.

செல்வச் செழிப்பு மிக்கவர்கள், அவர்களை தம் இல்லத்திற்கு அழைத்துக் கூழ் ஊற்றுவது அவர்களின் இல்லாமையை வெளிக்காட்டுவது போல் இருக்கும் என்று கருதி, ஆலயத்தில் அம்பாளின் பெயரில் அனைவரும் நோயின்றி வாழ வேண்டும் என்று கருதி கூழ் ஊற்றினர்.மேலும், தட்பவெப்பம் சரியாக இல்லாத நாட்களிலும் எளிதில் செரிக்கக் கூடிய உணவு இந்தக் கூழ். ஆடி மாதம் மழைக்காலம் மிக தட்பவெப்பம் குறைபாடாக இருப்பதால், உணவு செரிமானம் ஆகாமல் உடலுக்கு ஊறு விளையும் என்பதாலும் ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுவது வழக்கமாக வந்தது.

மேலும், இக்கூழில் இடப்படும் வேப்பிலையும், எலுமிச்சைப் பழமும் வெங்காயமும் இயற்கையான கிருமிநாசினிகள். இதனால் தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கப்படுகின்றன. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற வகையிலும் அனைவரும் அச்செல்வத்தைப் பெற ஆடிக் கூழ் ஊற்றப்பட்டது.இப்படி கூழில்கூட அறிவியலைக் கண்டு ஆன்மிகம் வளர்த்த நம் முன்னோரை எப்படிப் போற்றுவது!

சிவ.சதீஸ்குமார்