கிரகங்களே தெய்வங்களாக
பாண்டிய மன்னன் ஒருவன் சிவதல யாத்திரை சென்றபொழுது இந்த தலத்தின் அருகே அச்சு முறிந்தது. அதனால் இவ்விடத்திற்கு அச்சு + இறு + பாக்கம் என்ற பெயர் பெற்றது. அச்சு முறிந்த இடத்தில் காவலர்கள் சக்கரத்தை சரி செய்து கொண்டிருந்த போது தங்க நிறமான உடும்பு ஒன்று வந்தது. அதனை பிடிக்க மன்னன் துரத்திச் சென்ற பொழுது அது சரக்கொன்றை மரத்தினுள் புகுந்து கொண்டது. காவலர்கள் மரத்தினை வெட்டிய போது மரத்திலிருந்து ரத்தம் வெளிப்பட்டது.
உடும்பு வெட்டுப்பட்டதாக நினைத்த மன்னன் மரத்தை வேரோடு அகற்றி தோண்டிப் பார்த்தான். எங்கு தேடியும் உடும்பு அகப்படவில்லை. அன்றிரவு கனவில் மன்னனுக்கு காட்சி தந்த சிவன் உடும்பு மூலமாக தான் திருவிளையாடல் புரிந்ததை வெளிக்காட்டி இவ்விடத்தில் சுயம்புவாக எழுந்தருளியிருப்பதை உணர்த்தினார். சிவபக்தரான மன்னன் இங்கு கோயில் கட்ட விருப்பம் கொண்டான். அச்சமயம் திரிநேத்ரதாரி எனும் மூன்று கண்களைக் கொண்ட முனிவர் ஒருவர் வந்தார். அவரிடம் சிவாலயம் கட்டித்தரும்படி கூறிவிட்டு யாத்திரையை தொடர்ந்தான் மன்னன்.
நெடுநாள் கழித்து இங்கு வந்த போது கோயில், மத்தியில் நந்தி, கொடி மரத்துடன் ஆட்சிபுரீஸ்வரருக்கு ஒரு கருவறையும் அவருக்கு வலது பின்புறம் பிராகாரத்தில் ராஜகோபுரத்தின் நேரே உமை ஆட்சீஸ்வரருக்கு ஒரு மூலஸ்தானமுமாக கட்டி வைத்திருந்தார். (இக்கருவறை லிங்கத்திற்கு பின்புறம் பார்வதி சிவன் திருமணக்கோலத்தில் காட்சி தருகிறார்.) புரியாத மன்னன் முனிவரிடம் விளக்கம் கேட்டான். “எமை ஆட்சி செய்த பிரதான கருவறையும் வைத்து கோயில் கட்டினேன்'' என்றார். மன்னனும் ஏற்றுக்கொண்டான். பிராகாரத்தில் சரக்கொன்றை மரத்தின் அடியில் ெகான்றையடீஸ்வரர் சந்நதியில் திரிநேத்ரதாரி சிவனை வணங்கிய கோலத்தில் இருக்கிறார்.
கண்ணுவ முனிவரும், கவுதம முனிவரும் இங்கு வழிபட்டனர். அருணகிரி நாதர் இந்த விநாயகரை தரிசித்து விட்டு ``அச்சிறு பொடி செய்த'' என்ற சிறப்புகளை பாடி திருப்புகழை தொடங்கியுள்ளார். இங்கு இளங்கிளி அம்மை, உமையாம்பிகை ஆகிய இருவர் அன்னையர் அருள் செய்கின்றார்கள்.
இங்குள்ள தெய்வங்களுக்கு ராகு - கேது தவிர மற்ற கிரகங்கள் நாமகரணம் செய்துள்ளன.
* கோளறு பதிகம் இக்கோயிலில் பாடினால் அனைத்து நவகிரக தோஷங்களும் விலகும்.
* புனர்பூசம் நட்சத்திர நாளில் பிள்ளை வரம் வேண்டி சரக்கொன்றை மரத்தில் மஞ்சள் பட்டில் தொட்டில் கட்டி வழிபட்டால் பிள்ளை வரம் கிடைக்கும்.
* அனுஷ நட்சத்திர நாளில் சங்கு தீர்த்தத்தில் நீர் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்த அந்த நீரைப்பருகி குளிக்கும் நீரில் கலந்து குளித்தால் எப்பேர்ப்பட்ட நோயும் குணமடையும். தோல்வியாதி இருந்தாலும் சரியாகும்.
* கிருத்திகை நட்சத்திர நாளில் சிம்ம தீர்த்ததில் நீர் எடுத்து அதில் பன்னீரும் குங்குமமும் கலந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை சொத்து பிரச்னை உள்ள இடத்தில் தெளித்தால் பிரச்னைகளுக்கு தீர்வுகள் உண்டாகும்.
* பூர நட்சத்திர நாளில் கோயில் அருகில் தொட்டாச் சிணுங்கிச் செடி நடவு செய்து சுவாமி தரிசனம் செய்தால் திருமண தோஷம் விலகி சுபகாரியங்கள் வீட்டில் நடந்தேறும்.
* சூரியன் - சனி சேர்க்கை பார்வை உள்ளவர்கள் உத்திரம் அல்லது அனுஷ நட்சத்திர நாளில் மாம்பழ சாறில் அபிஷேகம் செய்து அதனை அங்கு வருபவர்களுக்கு கொடுத்தால் பாதிப்புகள் குறையும்.
* மகா வில்வச்செடியை திருத்தலத்தில் நட்டு சுவாமியை தரிசனம் செய்தால் தொழில் முன்னேற்றம் உண்டாகும். மேலும், வீட்டில் வில்வ செடி வளர்த்தால் தொழில் மிகுந்த வளர்ச்சி உண்டாகும்.