Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சித்தர்களை வணங்கும் முறை பற்றி?

?முச்சந்தியில் தேங்காய் விடலை உடைத்து வழிபடுவதன் பலன் என்ன?

- பி.கனகராஜ், மதுரை.

சாதாரண நாட்களில் அதுபோல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒரு பிரயாணத்தின்போதோ அல்லது திருமணத்திற்கு முன்னதாக செய்யப்படும் மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு ஊர்வலத்தின்போதோ, ஸ்வாமி திருவீதி உலா வரும்போதோ அவ்வாறு முச்சந்தியில் தேங்காய் உடைப்பது என்பது வழக்கம். சந்தி என்றாலே அதாவது இரண்டு பகுதிகள் இணைகின்ற இடத்திலே தோஷம் என்பது இருக்கும். அந்த இடத்திலே துர்தேவதைகள் எளிதில் வந்து சேர்ந்துவிடுவார்கள். உதாரணத்திற்கு, நம் வீடுகளில் உள்ள தலைவாயில்படியை எடுத்துக் கொள்ளலாம். தலைவாயில்படி என்பது வீட்டையும் தெருவையும் இணைக்கின்ற ஒரு சந்தி ஆகும். அந்த இடத்திலே துர்தேவதைகள் வந்து தங்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான், வாயில்படியில் மஞ்சள் பூசி குங்குமப் பொட்டுவைத்து அங்கே விளக்கேற்றி வழிபடுகிறார்கள். துர்தேவதைகளுக்கான பலியாக எலுமிச்சம்பழம், பூசணிக்காய் போன்றவற்றை அறுத்து வாயிற்படிக்கு இருபுறமும் வைக்கிறார்கள். அதே போலத்தான் முச்சந்தியில் ஊர்வலத்தின்போதும் பிரயாணத்தின்போதும் தேங்காய் உடைத்து வழிபடும்போது, அது துர்தேவதைகளுக்கான ப்ரீத்தி ஆக அமைந்துவிடுகிறது. பிரயாணமும் நல்லபடியாக அமைகிறது. இதனை முன்னிட்டே நம்முடைய முன்னோர்கள் இந்த சம்பிரதாயத்தை பின்பற்றி வந்துள்ளார்கள்.

?சித்தர்களை வணங்கும் முறை பற்றி?

- ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.

சிவவழிபாட்டு முறையே சித்தர்களை வணங்கும் முறை ஆகும். சித்தர்களின் சந்நதியில் நமசிவாய என்ற பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி ஜபம் செய்வதும் கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்வதுமே போதுமானது.

?குலதெய்வம், குலதேவதை இதற்கான வேறுபாடுகள் என்ன? இரண்டும் ஒன்றா?

- ஹரிணி, திருப்பதி.

குலதெய்வம் - குலதேவதை இரண்டும் ஒன்றுதான். குல தெய்வம் - பார்வையில் படாமல் மறைந்திருந்து அருள் செய்வது; கனவில் வந்து வழிகாட்டி அருள் செய்வது. குலதேவதை - முன்பின் அறியாத யார் மூலமாவது நம் குறைகளைத் தீர்க்கும்போது வீடு தேடி வந்து நம் துயர் தீர்க்கும்போது - அது குலதேவதை.

?சக்ரானிக்கே என்று ஒருவகையான கற்கள் இருக்கிறதே, அது என்ன?

- ஆர். ரெங்கநாதன், பரமக்குடி.

சக்ரானிக்கே கற்கள் என்பதும் சாளக்ராமக் கற்கள் என்பதும் ஒன்றுதான். இந்த கற்கள், பகவான் ஸ்ரீமந் நாராயணனின் அம்சமாகப் பார்க்கப்படுபவை. கண்டகி நதியில் இந்த கற்கள் கிடைக்கிறது. இந்த கற்களின் வடிவங்களைப் பொறுத்து மகாவிஷ்ணுவின் பல்வேறு அம்சங்களைக் குறிப்பிடுவார்கள். உதாரணத்திற்கு, ஸ்ரீகிருஷ்ண சாளக்ராமம், சுதர்ஸன சாளக்ராமம், நரசிம்ம சாளக்ராமம் என்று நிறைய வகைகள் என்பதும் உண்டு. பொதுவாக இந்த கற்கள் இறை அம்சம் பொருந்தியவை என்பதால் இந்தக் கற்களை பூஜை அறையில் வைத்து வழிபடுவது வழக்கத்தில் உள்ளது.

?நந்தி, ஆஞ்சநேயர், சங்கு, சக்கரம் போன்ற பல உருவங்களைத் தாங்கிய பூஜை மணிகள் இருக்கின்றன. வீட்டில் எந்த மணியை வாங்கி பூஜைக்கு பயன்படுத்துவது?

- எஸ்.டி.ரவிசங்கர், சாத்தூர்.

இது அவரவர் குடும்ப சம்பிரதாயத்தைப் பொறுத்தது. பரமேஸ்வரனைப் பிரதானமாக மையப்படுத்தி வணங்குபவர்கள், இல்லத்தில் நந்தி உருவம் பொறித்த மணியும், வைஷ்ணவ சம்பிரதாயத்தைப் பின்பற்றுபவர்கள் இல்லத்தில், மற்ற மூன்று வகையான மணிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஹரியும் சிவனும் ஒன்று என எண்ணுபவர்கள், எந்த மணியை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

?அருளை அள்ளி வழங்கும் ஆலயங்கள் பல இருக்கும்போது, சில கோயில்களை மட்டும் ‘பரிகாரக் கோயில்கள்’ என்று கூறுவது ஏன்?

- ஆர்.கே.லிங்கேசன். மேல கருஷ்ணன் புதூர்.

சூரியன் முதலான நவகிரகங்கள், நட்சத்திரத் தேவதைகள், முனிவர்கள், தேவர்கள், தேவதைகள் - என்போர் எல்லாம் வந்து, திருத்தலங்களில் வழிபாடுசெய்து, தங்கள் துயர் நீங்கப் பெற்றார்கள். சூரியன் முதலான அவர்கள் துயர் தீர்த்த திருத்தலங்கள் ‘பரிகாரத் தலங்கள்’ எனப்படுகின்றன.

?பெண்களுக்கு ருது ஜாதகம் என்று ஒன்று எழுதி வைக்கின்றார்கள், அது அவசியம்தானா?

- ஸ்ரீலேகா, கோவை.

அவசியமா இல்லையா என்பது அவரவர்கள் குல வழக்கத்தைப் பொறுத்தது. இன்றைக்கும் பல குடும்பங்களில் ருது ஜாதகம் எழுதி வைக்கிறார்கள். ஆனால், ஜன்ம ஜாதகம் பார்த்துதான் பலன்களைச் சரியாக எடுக்க முடியும். நடைமுறை வாழ்க்கையில் ஜன்ம ஜாதகம் போதும்.

?ஆலயங்களில் உள்ள கொடிமரம் - துவஜ ஸ்தம்பத்தின் பொருள் என்ன?

- ஸ்ரீதரன், திருப்பூர்.

``உள்ளம் பெருங் கோயில் ஊன் உடம்பு ஆலயம்

வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்

தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன்

சிவ லிங்கம்

கள்ளப் புலன் ஐந்தும் காளா மணி விளக்கே

- எனும் திருமூலர் வாக்கின் படி, நம் உடம்பை ஆலயமாகக் கொண்டால் முதுகுத்தண்டு என்பதே - கொடி மரம். தண்டு வடத்தின் வழியாகச் சுற்றித் தழுவி, மேலே எழும்பும் குண்டலினி சக்தியையே கொடி மரம் உணர்த்துகிறது. ஆலயங்களில் விழாவின் போது, கொடி ஏற்றுவார்கள்; தெய்வம் வெளிப்படும். குண்டலினி சக்தி மேலே ஏறி ஆறு ஆதாரங்களையும் தாண்டியவுடன், சொல்ல முடியாத இன்ப அனுபவம் வெளிப்படும். இதுவே தெய்வீக நிலை. இதை உணர்த்துவதற்காகவே, ஆலயங்களில் கொடிமரம் இடம்பெற்று உள்ளது. மேலும் கருவறையில் உள்ள தெய்வ வடிவங்களுக்கு மந்திரங்களைச் சொல்லி வழிபாடு செய்யும் போது, அந்த மந்திரங்களின் அதிர்வுகள் மூல விக்கிரகத்தின் அடியில் உள்ள யந்திரங்களில் சேரும்; அந்த அதிர்வு ஆற்றல் பொங்கி வழியும். அந்த அதிர்வு ஆற்றல்களைக் கொடிமரம் அப்படியே உள் வாங்கி -கிரகித்துப் பெருமளவில் சேமித்து வைத்திருக்கும். கொடி மரத்தின் அடியில் நாம் விழுந்து வணங்கும்போது, அதில் உள்ள அதிர்வலைகள் அப்படியே நம் தலைவழியாக உடலில் பரவும். நலம் பெறுவோம்.இதை நாம் அடைய வேண்டும் என்பற்காகவே ‘கொடி மரத்தின் அடியில் விழுந்து வணங்க வேண்டும். அதைத் தாண்டிவிட்டால் ஆலயத்தின் எந்தச் சந,நிதியிலும் விழுந்து வணங்கக்கூடாது’என ஆகமங்கள் சொல்கின்றன.