Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோணிப்பையை அனுப்பிய அபிராமி!

சில வருடங்களுக்கு முன், எனது சொந்த ஊரான மருத்துவக்குடி சென்றிருந்தேன். அருகில் உள்ள இலந்துறை கிராமத்துக்குச் சென்று, அங்கு கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீஅபிராமி அம்பிகா சமேத ஸ்ரீசுந்தரேஸ்வர ஸ்வாமியை தரிசனம் செய்வது வழக்கம். இந்த ஆலயத்திற்கு தட்சிண பத்ரிகாஸ்ரமம் என்ற பெயரும் உண்டு. மருத்துவக்குடிக்கு வயல்களின் வழியே நடந்து சென்றால், இரண்டரை கி.மீ. தூரத்தில் இலந்துறை. சாலை வழியாக சென்றால், 5கி.மீ. தூரம். நான் பெரும்பாலும் வயல்களின் வழியில் செல்வதே வழக்கம். மாலை நான்கு மணிக்கு நானும் மனைவியும் இலந்துறைக்குப் புறப்பட்டோம். அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்யச் சொல்லி, தரிசனம் செய்ய வேண்டும் என்பது வேண்டுதல்.

நாங்கள் இலந்துறையை அடைந்தபோது, சந்தியா காலம் ஆகிவிட்டது. கோயில் வாசலில் அர்ச்சகர் தட்சிணாமூர்த்தி சிவாச்சார்யர், எங்களை வரவேற்றார். ஆலயத்தில் உள்ள எல்லா சந்நதிகளையும் தரிசனம் செய்துவிட்டு, அம்பாள் சந்நதிக்கு வந்தோம். நான், குருக்களிடம் உரிமையாக, ``எனக்கு ஓர் ஆசை. நீங்க சகஸ்ரநாமம் சொல்லி அம்பாளுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் அந்த பாக்கியம் இன்னிக்கு எனக்கு கிடைக்குமா!” என்றேன்.

காரணம், தட்சிணாமூர்த்தி அர்ச்சகர், லலிதாசகஸ்ர நாமத்தை சொல்லும் போது, காதுக்கு இனிமையாக இருக்கும். அதுவும், ஒரு நாமாவளிகூட விட்டுவிடாமல், பக்தியுடன் உச்சரித்து, அர்ச்சனை செய்வார். சில நாமாவளிகளை அவர் சொல்லும்போது, கண் கலங்கிவிடுவார்.``உங்கள் ஆசையை பூர்த்தி செய்து வைக்கிறேன். ஆனா ஒண்ணு, சகஸ்ரநாமார்ச்சனை பண்ணணும்னா ஸ்வாமி நிவேதனத்துக்கு சர்க்கரைப் பொங்கலும், உளுத்தம் வடையும் அவசியம் வேணும். அதுக்கு வேண்டிய பொருட்கள் இருக்கானு பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு அர்ச்சகர் நகர்ந்தார். சற்று நேரத்திற்கு பின் திரும்பி வந்தவர், மகிழ்ச்சியுடன் ``சர்க்கரைப் பொங்கலும், வடை, புளியஞ்சாதம் பண்றதுக்கு பொருட்கள் கைவசம் இருக்கு. நிவேதனம் தயாராகிற வரைக்கும் இங்கே உட்காருங்கள்’’ என்றார். உட்கார்ந்தோம்.

அப்போது என் மனசிலிருந்த ஒரு சந்தேகத்தை அவரிடம் கேட்டேன். “அர்ச்சகரே… இவ்வளவு சிறப்பா, மந்திரங்கள், பூஜைகள் செய்து கொண்டு இருக்கிறீர்களே, இவையெல்லாம் உங்களுக்கு குருவாக இருந்து சொல்லி கொடுத்தது யாரு?” என்றேன். அவரும் சந்தோஷமாக “இதுக்கெல்லாம் காரணம் என் சகோதரியின் கணவர் பூஜ்யஸ்ரீ கங்கா ஜடேச சிவாச்சார்யர்தான். அவர் ஸ்ரீவித்யா உபாசகர். அவர் பொண்ணையே எனக்கு கல்யாணம் செய்து கொடுத்தார். அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன், ஒரு வெள்ளிக் கிழமை மிக மெதுவாக லலிதா சகஸ்ரநாமாவளியை அவர் சொல்ல, என்னை அம்பாளுக்குக் குங்குமார்ச்சனை பண்ணச் சொன்னார்.

அர்ச்சனை முடிந்ததும், அருகில் அழைத்து என் இரு கரங்களையும் பிடித்து, ``தட்சிணாமூர்த்தி! இந்த அன்னை அபிராமியை ஓங்கிட்ட ஒப்படைக்கிறேன். பேசும் தெய்வம் இவள், ஆகமவிதிப்படி பக்தியோட காலந்தவறாம பூஜை செய். உனக்கு நிறைய பணம் வருகிறதோ இல்லையோ… நல்லதொரு ஞானத்தைக் கட்டாயம் குடுப்பாள்’’ என்று சொல்லிவிட்டு, அம்பாளின் இரண்டு திருவடிகளையும் வணங்கி, கண்களில் ஒற்றிக் கொள்ளச் சொன்னார். அப்படியே செய்தேன்.

அந்த நேரத்துல என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல், என் சகோதரியின் கணவரின் இரண்டு கால்களையும் புடிச்சுண்டு, அழுதேன். அவர் என்னை சமாதானம் செய்து, பல நல்ல விஷயங்கள எனக்குச் சொல்லிக் கொடுத்துள்ளார். அதில் ஒன்று, கர்ப்பக்கிரகத்துக்குஉள்ளேர்ந்து பூஜை முடிச்சுண்டு வெளியில் வரும்போது, அம்பாளுக்கு நம்ம உடலின் பின்பக்கத்தை காண்பித்தவாறு வரக் கூடாது. அம்பாள் பாத்துண்டே பின்புறமா நடந்து வரவேண்டும். அதை இன்று வரைக்கும் கடைப்பிடித்து வருகிறேன்!” என்று சொல்லும் போது சிவாச்சார்யரின் கண்கள் பணித்தது. நிவேதனங்கள் தயாராகிவிட்டன. அர்ச்சனைக்கு எழுந்தார் சிவாச்சார்யர். சகஸ்ரநாமார்ச்சனையும், தீபாராதனையும் முடிய ஒரு மணி நேரமாயிற்று.

பின்பு பிரசாதம் பெற்றுக் கொண்டோம். இரவாகி விட்டதால், ‘இன்று தங்கி விட்டுக் காலையில் ஊர் திரும்பலாமே’ என்றார் சிவாச்சார்யர். நான் மறுத்துவிட்டேன். வயல் வரப்பு வழியாக ஊருக்கு நடந்தோம். நல்ல நிலா வெளிச்சம்! எதிர்பாராதவிதமாக நிலவைப் பெரிய மேகம் ஒன்று மறைக்க வெளிச்சம் குறைந்தது. நாங்கள் தட்டுத் தடுமாறி நடந்தோம்.

வெகுநேரம் ஆகியும், விட்டலூர் கிராமம் வந்த பாடில்லை. பிறகுதான், திசை தவறி வந்துவிட்டோம் என்றுஉணர்ந்தோம். என் மனைவி அழுதேவிட்டாள். வேறு வழி இல்லாமல் அங்கேயே அமர்ந்துவிட்டோம். நான் துக்கத்தை அடக்கியபடி, `அன்னை அபிராமி… உன்ன தரிசனம் பண்ணிட்டு வர்றப்ப, எங்களை இப்படித் தவிக்க விடலாமா? சரியான நல்ல பாதையைக் காட்டும்மா!’ என்று வேண்டிக் கொண்டேன்.

அபிராமி மனம் இறங்கிவிட்டால் போலும்! திடீரென பெருங்காற்று. மேகக் கூட்டம் வேக வேகமாக விலக, நிலவு தென்பட்டது. எங்களுக்கு நேர் எதிர் திசையில், தெரு விளக்கின் ஒளி. ஆம், அது விட்டலூர் கிராமம்தான்! உடனே அந்த திசை நோக்கி நடந்து, மருத்துவக்குடிக்கு வந்து சேர்ந்தோம். மறுநாள் காலை, மீண்டும் இலந்துறை சென்று அம்பாளுக்கு சகஸ்ரநாமார்ச்சனை நடத்தி வர வேண்டும் என்ற எண்ணத்துடன் இரவு உறங்கினோம்!

மறுநாள் நாங்கள் இலந்துறையை வந்த போது, காலை 9.30 மணி. கோயில் வாசலில் சிவாச்சார்யர் கவலையுடன் நின்றிருந்தார். அவரிடம், எனக்கு முதல் நாள் இரவு நிகழ்ந்த நிகழ்ச்சியை சொன்னேன். பிறகு, “குருக்களே… ஏன் கவலையுடன் இருக்குறீர்கள்?” என்று கேட்டேன். அவர் சற்று துக்கம் தோய்ந்த குரலில், “மனசு சரியால்லே! நேத்திக்கு இந்த ஊர்ப் பையன் ஒருத்தன்கிட்ட பணத்தை கொடுத்து மளிகை பொருட்களை வாங்கிண்டு வரச் சொன்னேன். நேத்திக்குப் போனவன் இன்னும் வந்து சேரலை.

இப்போ.. ஸ்வாமி நிவேதனத்துக்கு ஒரு மணி பச்சரிசிகூட இல்லை!” என்று கண் கலங்கினார். அப்போது நடுத்தர வயதுடைய ஒருவர், கோணிப்பையை ஒன்றைத் தூக்க முடியாமல் தூக்கியபடி உள்ளே வந்தார். அம்பாள் சந்நதிக்கு முன் அந்த கோணி பையை இறக்கி வைத்தார். நாங்கள் முகத்தில் ஆச்சரியத்தோடுஅவரைப் பார்த்தோம். அவர் பேச ஆரம்பித்தார். “எனக்கு ஊர் கும்பகோணம். ஹரிஹரன்னு என் பெயர். எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் மூலம் இந்தக் கோயில் மகிமையைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அதான் இன்னிக்குக் காலையில் கிளம்பினேன். விட்டலூர் வழியா வந்துகொண்டிருந்த போது, வழியில் அம்பது வயசு மதிக்கத் தக்க பெண் ஒருவர், இந்த கோணிப்பையை மிகவும் கஷ்டப்பட்டு தூக்க முடியாமல் தூக்கிண்டு வந்தார்.

அவர் என்னிடம், ‘ஐயா.. ஒங்களப் பாத்தா எலந்துறை கோயிலுக்குப் போகிறவர் போல் தெரியுது. நானும் அங்கதான் போறேன். இந்த கோணிப்பைக்காக குருக்கள் கோயில்ல காத்துட்டுருப்பாரு! இவ்ளோ தூரம் தூக்கிண்டு வந்துவிட்டேன். இப்போ எனக்கு தல கனக்குது. எனக்காக இதை கொஞ்சம் கோயில் வரைக்கும் தூக்கிண்டு வர முடியுமானு கேட்டாள். நான் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் சரி என்றேன். அந்தம்மா மாநிறம். நெத்தியில ஒரு முழு ரூவா அளவு குங்குமப் பொட்டு. அடர்ந்த கூந்தல்ல மல்லிப் பூவும், தாழம்பூவும் வெச்சுண்டிருந்தா. கோணிப் பையை என் தலைல ஏத்தி விட்டுட்டு, ‘நீங்க முன்னாலே போங்க… நா.. பின்னாலயே வர்றேன்’ என்று சொன்னார்!” என்றார் ஹரிஹரன்.

கோணிப்பையை பிரிக்கச் சொன்னார் குருக்கள். அதில் பொன்னி பச்சரிசியுடன் நிறைய வெல்லம், உளுந்து, பயறு, முந்திரி, திராட்சை, மிளகு, கடுகு, சீரகம், நல்லெண்ணெய், சுத்தமான நெய் ஆகியவை தனித் தனி பாக்கெட்டுகளில் இருந்தன. உடனே அம்பாளுக்கு நிவேதனம் தயார் பண்ண திருமடப்பள்ளிக்கு விரைந்தார் சிவாச்சாரியார். இதற்குள், முன் தினம் சிவாச்சார்யாரிடம் பணம் வாங்கிச் சென்ற நபரும், மளிகை சாமான்களோடு வந்து சேர்ந்தார்! நாங்கள், கோணிப்பையை கொடுத்த அந்தப் பெண்ணின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தோம்.

கடைசி வரை அவள் வரவேயில்லை. பிறகு வெயில் தாழ நாங்கள் கிளம்பினோம். புறப்படும்போது அந்தப் பெண்மணி கொடுத்தனுப்பிய கோணிப்பை என் கண்ணில் பட்டது. அதில் ‘அபிராமி அரிசி மண்டி’ என்று அழகிய வண்ண எழுத்துகளில் அச்சிடப்பட்டிருந்தது!

ரமணி அண்ணா