பாக். சிந்து மாகாணத்தில் போராட்டத்தில் வெடித்த வன்முறையில் 2 பேர் பலி: அமைச்சர் வீடு தீவைத்து எரிப்பு
கராச்சி: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள சிந்து நதியில் புதிய கால்வாய்கள் கட்ட மாகாண அரசு முயற்சி மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மோரோ, மதியாரி மற்றும் நவ்ஷேரா பெரோஸ் மாவட்டத்தில் சிந்தி சபா தேசியவாத கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் ஒருபகுதியாக தேசிய நெடுஞ்சாலைகள் மறிக்கப்பட்டன. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்ததால், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இதனால், போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் 6 போலீசார் காயமடைந்தனர்.
இதனால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் போராட்டக்கார்கள் 2 பேர் காயமடைந்தனர். பலர் காயமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு துப்பாக்கி சூடு காயங்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறியதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மேலும் ஆத்திரமடைந்தனர். பல்வேறு இடங்களில் சாலைகளில் வாகனங்களுக்கு தீ வைத்தனர். சரக்கு லாரிகளை சூறையாடினர். பெட்ரோல் பங்குகளை அடித்து நொறுக்கினர். சிந்து உள்துறை அமைச்சர் ஜியாவுல் ஹசன் லஞ்சாரின் வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு தீ வைத்து எரித்தனர்.