Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆனைந்து லிங்கம்

கோமாதா என்று கொண்டாடப்படும் பசுவின் மூலம் பெறப்படும் பொருட்கள் பலவாகும். பசு வாழும் காலத்திலும் மாண்ட பின்னும் தெய்வ காரியங்களுக்குப் பயன் தரும் விலங்காகவே இருக்கிறது. வாழும் காலத்தில் அது அளிக்கும் உயர்ந்த ெபாருள் பாலாகும். பால் மக்களுக்குச் சிறந்த உணவாக இருக்கிறது. மனிதகுலம் வாழ்நாள் முழுவதும் பாலைப்பருகி மகிழ்கின்றனர். நோயுற்ற காலத்தில் முக்கிய உணவு பாலாக இருக்கிறது.

சில தலங்களில் முனிவர்கள் காமதேனுவின் பாலைத்திரட்டி தம் தவசக்தியாலும், அரிய மூலிகைகளாலும் கெட்டியாக்கிய அந்த பொருளைக் கொண்டு சிவலிங்கங்களை அமைத்துள்ளனர். எடுத்துக்காட்டாக திருவான்மியூரில் உள்ள லிங்கம் காமதேனுவின் பாலைத் திரட்டி கெட்டியாக்கி செய்யப்பட்ட லிங்கம் என்பர். அதையொட்டி அவர் பால்வண்ண நாதர் என்று அழைக்கப்படுகின்றார். மேலும் பல தலங்களிலும் பால்வண்ண நாதனாகப் பெருமான் இருக்கிறார்.

பாலைக் காச்சிப் பிரை ஊற்றி கெட்டித் தயிரைப் பெறுகின்றோம். தயிரைக் கொண்டு செய்த லிங்கத்தைப் பூஜை செய்து கொண்டிருப்பதாக சிவபுராணம் கூறுகின்றது. தயிரைக் கடையும்போது அதில் இருந்து கெட்டியான கொழுப்புப் பகுதி தனியாகத் திரளும், தண்ணீர்ப் பகுதி தனியாகும். கடைந்தெடுத்த கொழுப்புப் பகுதியை வெண்ணெய் என்பர். அது தூய வெள்ளை நிறத்துடன் திகழ்வதால் வெண்ணெய் என்று அழைக்கப்படுகின்றது. பாலைத் திரட்டி லிங்கம் அமைத்து வழிபடுவது போலவே வெண்ணெயைத் திரட்டி லிங்க மாக்கியும் வழிபட்டுள்ளனர். சோழநாட்டுத் திருத்தலமான சிக்கலில் வசிட்டமுனிவர் காமதேனுவின் பாலால் உண்டான தீர்த்தத்தில் இருந்து காற்றலையால் திரண்ட வெண்ணெயைக் கண்டு கொண்டு லிங்கம் அமைத்து வழிபட்டுள்ளார். அவருக்கு வெண்ணெய்ப் பிரான் என்பது பெயரானது.

பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக இருப்பது நெல்வெண்ணெய் ஆகும். இது நெய்வெணை என்று அழைக்கப்படுகிறது. இறைவன் நெய்வெண்ணைநாதர் என்று அழைக்கப்படுகிறார்.இறைவன் வெண்ணெய்நல்லூர் என்னும் தலத்தில் சிறப்புடன் வீற்றிருக்கிறார். இத்தலத்தில் அம்பிகை வெண்ணெயால் கோட்டை கட்டி அதனுள் இருந்து சிவபூஜை பெற்று சிவனை அடைந்தாள் என்று கூறப்படுகிறது.

வெண்ணெயைக் காச்சி உருக்கி பெறப் படும் நெய் ஆன்நெய் எனப்படும். இதனை சிறப்பு காரணமாக அடைமொழியின்று நெய் என்றே அழைக்கின்றனர். சிவபெருமான் நெய்மலையாக இருப்பதை கேரள மாநிலத்திலுள்ள திருச்சூர் வடக்குநாதர் கோயிலில் காண்கிறோம். இங்கே நெய்யைக் கொட்டி கொட்டி மலையாக அமைத்துள்ளனர். சுமார் இருபதடி அகலமும் 9 அடி உயரமும் கொண்டதாக இந்த நெய்மலைலிங்கம் உள்ளது. இவருக்கு நெய், பன்னீர் சந்தன அபிஷேகம் செய்கின்றனர். இது உருகாத கெட்டியான நெய்யாக இருக்கிறது. இந்த நெய் உருகுவதில்லை. உருகினாலும் அது காற்றில் கலந்து விடுகிறது என்றும் கூறுகின்றனர்.

ஆதியில், இவர் ஆலமரத்தடியில் இருந்த போது, பரசுராமர் அந்த மரத்தை வெட்ட அப்படி வெட்டும்போது இவர் தலையில் வெட்டுப்பட்டதாகவும் அப்போது தன் வந்திரி பகவான் நெய் கலந்த மருந்தை இவர்மீது அப்பினார் என்றும் அதுமுதல் தேவர்கள் நெய்யால் இவருக்கு அபிஷேகம் செய்ய, அந்த நெய் கெட்டியாகி விட்டது என்றும் கூறுகின்றனர்.

இப்படி நெய் வடிவில் பெரிய திருவுருவமாக இருப்பதை எங்கும் காண முடியவில்லை. பசுவின் பால், தயிர், வெண்ணெய் நெய் போன்றவற்றால் லிங்கம் செய்து வழிபடுவதைப்போலவே, பசுவின் கோமயம் (சாணம்) கோஜலம் (சிறுநீர்) ஆகியவற்றையும் கொண்டு சிவலிங்கம் அமைத்து வழிபடுகின்றனர். ஆனால் இவற்றைக் காணமுடியவில்லை. சாணத்தில் பிள்ளையார் செய்து வழிபடும் வழக்கம் உள்ளது.

பொங்கல் நாளில் முற்றத்தில் சிறிய வீடுபோல் அமைத்து அதில் சாணத்தால் மேடை அமைத்து அதன்மீது இரண்டு பிடியாகச் சாணத்தைப் பிடித்து வைத்து அறுகம்புல் தும்பைப்பூ, பூளைப்பூ போன்றவற்றைச் சூட்டி வழிபடுகின்றனர். அப்போது அந்த இடத்தில் பூசணி, கத்தரிக்காய், அவரைக்காய் வள்ளிக்கிழங்கு போன்றவற்றை பரப்பி வைக்கின்றனர். மஞ்சள், கரும்பு போன்றவற்றை முழுமையாக வைத்து வணங்குவர்.

தயிர் லிங்கம்: தயிரை லிங்கமாக்கி வழிபடும் வழக்கம் நடைமுறையில் இல்லை என்றாலும் தயிரைப்பூசி வழிபடும் வழக்கம் உள்ளது. நித்தியோற்சவம் எனப்படும் ஸ்ரீ பலி உற்சவத்தில் பலி நாயகருடன் அன்னலிங்கம் ஒன்றையும் எழுந்தருளச் செய்வர். இந்த அன்னலிங்கத்தின் மீது கெட்டித் தயிரைப்பூசி தயிர் லிங்கமாகவே ஆக்கி வலம் வரச் செய்வர். இதைத் ததி லிங்கம் என்பர்.

ஜெயசெல்வி