24-7-2025
அமாவாசைகளில் மூன்று அமாவாசைகள் அதி முக்கியமானவை. ஒன்று ஆடி அமாவாசை. 2. தை அமாவாசை. மூன்று மஹாளய அமாவாசை. ஆடி அமாவாசை, தை அமாவாசை இரண்டும் முறையே தட்சிணாயண தொடக்கத்திலும், உத்தராயண தொடக்கத்திலும் வரும் அமாவாசைகள்.
இந்த அமாவாசைகள் இரண்டுக்கும் நடுவே உள்ள அமாவாசைகள் ஒவ்வொன்றும் முக்கியமானவை. இதற்குக் காரணம் இருக்கிறது. ஆடி அமாவாசைக்கு பித்ருக்கள் உலகத்திலிருந்து இந்த நில உலகத்திற்கு வருகின்றார்கள். பித்ருக்கள் உலகம் அதாவது பித்ரு லோகம் என்பது உடலை விட்ட ஆன்மாக்கள்.
உயிரை விட்ட ஆன்மாக்கள் தங்களுக்கு வேறு உடல் கிடைக்கும் வரை காத்திருக்கும் இடமாகும். பித்ரு லோகம் எங்கே இருக்கிறது என்பது ஒரு கேள்வி? பூமிக்கும், அந்தநட்சத்திரத்திற்கும் நடுவில் இருப்பதாக பாகவத புராணம் (காண்டம் 5, அத்தியாயம் - 24) கூறுகிறது.
நன்றாக கவனிக்கவும். ஒருவன் ஒரு பையை விட்டு விட்டுப் போய் விட்டான் என்றால் பை அவனைத் தேடாது. விட்டவன் தான் பையை தேடுவான். ஆன்மாதான் உடலை விட்டுவிட்டு போகும். அதுவே வேறொரு உடலைத் தேடும். இதை திருவள்ளுவரும் குடம்பை தனித்து ஒழியப் புள்பறந்தற்றே உடம்போடு உயிரிடை நட்பு.
(அதிகாரம்: நிலையாமை குறள் எண்:338) என்ற குறளில் அழகாகச் சொல்கிறார்.
உடல் நிலைப்பது உயிர் உள்ளவரையில்தான்; இரண்டும் எதற்கும் கட்டுப்பட்டதுமல்ல; அவற்றின் நட்பும் நீடித்ததல்ல. உடலை நீத்த ஆன்மா முற்பிறவியில் செய்த புண்ணிய பாவ கர்ம வினைகளுக்கு ஏற்ப, நரகத்தையும், சொர்க்கத்தையும் அனுபவித்து, பாவ புண்ணியங்கள் தீர்ந்த பின்னர், பித்துரு லோகத்தில் மறு பிறவிக்கான உடல் கிடைக்கும் வரை தங்கியிருக்கும்.
பித்ரு லோகத்தினர் முற்பிறவியில் செய்த வினைகளுக்கு ஏற்ப, மீண்டும் மனிதப் பிறவியாகவோ அல்லது வேறு பிறவியாகவோ பிறப்பர். சூரியனும் சந்திரனும் சேரும் அமாவாசை நாள் அன்று, இந்த பித்ருக்கள், அதாவது பிதுர் உலகத்தில் வாழும் நம் முன்னவர்கள் நம்மைத் தேடி வருவதாகப் பொருள். அவர்களுக்கு ஒரு வணக்கத்தையும் உபசாரத்தையும் நன்றியையும் தெரிவிக்கவே ஒருநாள். அந்த நாள்தான் அமாவாசை.
அவர்கள் ஆடி அமாவாசைக்கு, தான் வாழ்ந்த குடும்பத்தைத் தேடி வருவதாகவும், அவர்கள் மஹாளய அமாவாசை காலத்தில் இங்கே இருப்பதாகவும், தை அமாவாசைக்கு அவர்கள் பூலோகத்திற்குத் திரும்ப புறப்படுவதாகவும் சொல்கிறார்கள்.
எனவே ஆடி அமாவாசை, தை அமாவாசை வரையுள்ள அத்தனை அமாவாசைகளும் பிதுர் வணக்கத்திற்கு உள்ள சிறப்பான நாட்களாகும்.
நம்மைப் போன்று, இல்லறத்தில் இருப்பவர்களுக்கு, நான்கு கடன்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. தேவகடன், ரிஷிகடன், பூத கடன், பிதுர் கடன். ஒரு இல்லறத்தான் முக்கியக் கடமையாகப் பித்ருக்களை உபசரிக்கக் கூடிய சடங்கு சொல்லப்பட்டிருக்கிறது.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
(அதிகாரம்: இல்வாழ்க்கை குறள் எண்:43)
இறந்த முன்னோர், வழிபடும் தெய்வம், விருந்து, சுற்றம், தன் குடும்பம் எனப்பட்ட ஐந்திடத்தும் அறநெறி வழுவாது காத்தல் இல்லறத்தானுக்குத் தலைமையான அறம்.
இறந்த உயிர்க்குத் துணை நிற்கும் பிதிரர்கள் என்று ஒரு அழகான விளக்கம் இருக்கிறது. யார் மறுபிறவி எடுத்தார்கள், எடுக்கவில்லை என்பது நமக்குத் தெரியாது. அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அப்படி எடுத்திருந்தாலும் பிதுர் தேவதைகள் நம் செயலால் மகிழ்ந்து, அவர்க்கும் நமக்குமான நன்மையைத் தருகின்றன. எனவே இது ஒரு வகையில் நம் குடும்பம் சிறப்பாக, குறைகள் இன்றி இருக்கச் செய்யும் சீரிய வழிபாடாகும். எளிமையான வழிபாடாகும்.
அவர்களுக்கு எதுவும் முக்கியமாக வேண்டாம். நாம் தருகின்ற எள்ளும் நீரும் அவர்களுக்கு மனநிறைவைத் தருகின்றன.
இதற்காக ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த எளிமையான பிதுர்க்கடன் சிரத்தையோடு செய்வதன் மூலமாக அவர்களுக்குத் தாகம் நீங்கி ஆசீர் வாதங்களை அளிக்கிறார்கள் சந்தோசமாக நம்மை வாழ்த்துகின்ற அந்த வாழ்த்தினால் நம்முடைய தோஷங்கள் நீங்கி மிக சவுகரி யமான வாழ்க்கையை அடைகின்றோம்.
அதிலும் இப்போது வருகின்ற ஆடி அமாவாசை கடக மாதத்தில் வருகிறது. தந்தை ஆகிய சூரியனும் தாயாகிய சந்திரனும் சேரும் மகத்தான நாள். சூரியனும் சந்திரனும் தான் எல்லாவற்றுக்கும் காரணம். சூரியன் சிவன் என்றால் சந்திரன் சக்தி. சூரியன் திருமால் என்றால் சந்திரன் மகாலட்சுமி. சூரியன் வித்தை என்றால் சந்திரன் செயல். சூரியன் அறிவு என்றால் ஆற்றல் சந்திரன். சூரியன் உஷ்ணம் என்றால் சந்திரன் குளிர்ச்சி. சூரியன் உயிர் என்றால் சந்திரன் உடல். இந்த உயிரும் உடலும் ஒன்று சேரும் நாள் அல்லவா அமாவாசை.
இந்தச் சடங்குகளை யார் யார் செய்ய வேண்டும்?
1. தாய் தந்தை இல்லாத ஆண்கள் அவசியம் செய்ய வேண்டும்.
2. குழந்தை இல்லாத அதே சமயத்தில் கணவனை இழந்த பெண்கள் இந்த விரதத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
3. சங்ககாலத்தில் இந்த விரதத்தை பெண்களும் கடைபிடித்து தாக மரபு உண்டு.சங்க காலத்தில் பெண்கள் செய்த நீத்தார் வழிபாடு பல குறிப்புகள் இருக்கின்றன.
4. திருமணம் ஆன பின் தன்னுடைய தாய் தந்தையர் மறைந்து விட்டால் அவர்களை பெண் வணங்கலாம் ஆனால் அமாவாசை விரதம் இருப்பதற்கும் தர்ப்பணம் செய்வதற்கும் விதிக்கப்படவில்லை
என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
5. பெண்கள் முறையான விரதம் இல்லாமல் (தர்ப்பணம் செய்யாமல்) கோயிலுக்குச் சென்று தானம் செய்யலாம் வீட்டில் பெரியவர்களை அழைத்து அன்னமிட்டு மரியாதை செய்யலாம்.
இந்த ஆண்டு அமாவாசை ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு உரிய ஞாயிறு நாளில், காலை பூச நட்சத்திரம் முடிந்து ஆயில்ய நட்சத்திரம் நடக்கும்பொழுது வருகிறது.
ஆயில்ய நட்சத்திரம் பெருமாளுக்கு உரிய நட்சத்திரம். பெருமாளுக்கு சிரார்த்தத்தைக் காப்பவர். சம்ரக்ஷணம் செய்பவர் என்று சிராத்த மந்திரம் சொல்லும். ஒரு சிராத்தத்தை முறையாக முடிக்க வேண்டும் என்று சொன்னால் அது மகாவிஷ்ணுவின் அருளால் தான் முடிக்க வேண்டும்.
அன்றைக்கு காலையில் நீராடி பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும். முன்னோர்கள் பெயரையும் கோத்ரத்தையும் சொல்லி, தாய் வர்க்கத்தை சேர்ந்தவர்கள், தந்தை வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என மூன்று தலைமுறையினர்கள், ஞாதிகள், முதலியோருக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதில் ஒரு மந்திரம் வரும்.தர்ப்பணம் செய்ய சந்ததி இல்லாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கும் சேர்த்து எள்ளும் நீரும் இறைக்கவேண்டும்.
பிதுர் தர்ப்பணம் செய்த நாளன்று அன்னதானம் செய்வது நல்லது. இதன்மூலமாக பிதுர் தோஷம் நீங்கும். பொதுவாக நதி தீரத்தில் தர்ப்பணம் செய்வது உத்தமமானது. சில கோயில்களில் இதற்கான வசதிகள் உண்டு. திருவெண்காடு தலத்தில் (புதன் தலத்தில்) இந்த ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்வதன் மூலமாக 21 தலைமுறைகள் உய்வுபெறும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. திருவெண்காடு ருத்ர கயா என்று வழங்கப்படுகிறது.
பொதுவாக சமுத்திரக் கரைகளிலும் நதிகளிலும் குளக்கரைகளிலும் ஆறுகளிலும் இந்த ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்வது நல்லது. அப்படி இல்லாதபோது வீட்டிலேயே கங்கையையும் காவிரியையும் நினைத்து அமாவாசை தர்ப்பணம் செய்து, அந்த நீரை,கால் படாமல் நீர்நிலையில் சேர்க்க வேண்டும். பிதுர் பூஜை செய்யாமல் தெய்வ பூஜை செய்வதற்கு அனுமதி இல்லை. எனவே அன்று மாலையில் பிதிர் கடன் முடித்த பிறகு கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றுவது நல்லது. அமாவாசை அன்று காகத்திற்கும் பசுவிற்கும் உணவு வழங்குவது சிறப்பானது.
அமாவாசை என்று அற்புதமான வாழ்வியல் உண்மையை சொல்வது வளர்பிறையில் 15 திதிகள் 15 திதிகள் தேய் பிறையில் இதில் ஒன்று அமாவாசை இன்னொன்று பாருங்கள் ஒரு மறுமொழி முழு ஒலி இன்னொன்று முழு இருள் ஒளியில் இருந்து படிப்படியாக இருளை நோக்கி நகர்வதும் இருளில் இருந்து படிப்படியாக ஒளியை நோக்கி நகர்வதாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறது அமாவாசை. ஆகையினால் இந்த முழுநிலவு நாளும் முழு நிலவில்லாத நாடு மிகச் சிறந்த நாடாக கருதப்படுகின்றனர். அமாவாசைக்கு அடுத்த நாள் வளர்பிறை துளித் துளியாக வளர்ச்சியை நோக்கி நிலவு நகர்கிறது. அதனுடைய உச்சி பௌர்ணமியை அடைந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம் அடைகிறது.
ஒவ்வொரு உயிரினமும் எப்படி வளர்ப்பது ஒரு நிலையை அடைந்தவுடன் தேய்வதும் மறைவதும் ஆகிய செயல் நித்தியமாக இந்த உலகில் நடந்து கொண்டே இருக்கின்றன. புனரபி ஜனனம் புனரபி மரணம் இந்த இரட்டை தத்துவங்களுக்கும் தான் உலகம் இயங்குகிறது. காலம் எத்தனை வந்தாலும் பின்னால் இருள் என்பது ஒன்று உண்டு என்பதை உணர வேண்டும். அதற்கும் தயார் படுத்திக்கொள்ள வேண்டும் எத்தனை இருட்டு இருந்தாலும் சோர்ந்து விடாமல் ஒளி உள்ள காலம் ஒன்று வரும் என்று காத்திருக்க வேண்டும். கவலைப்படாமல் செயலாற்ற வேண்டும் என்கின்ற தத்துவத்தை காட்டுவதுதான் பௌர்ணமியும் அமாவாசையும் இருள் என்பது தென்புறம் குலத்துக்கு உரிய தேவதைகள் வணக்கத்திற்குரிய நமது முன்னோர்கள் என்பதால் இந்த அமாவாசை நாளை வேறு எந்த காரியத்திற்கும் ஒதுக்காமல் முன்னோர்கள் வழிபாட்டுக்கு ஒதுக்கி வைத்தார்கள், நம்முடைய முன்னோர்கள்.
இந்த இரண்டும் இல்லாவிட்டால் உலக இயக்கம் இல்லை. எந்த உயிரினங்களும் வாழ முடியாது புதிய உயிரினங்கள் தோன்றவும் முடியாது. தாயும் தந்தையும் இல்லாவிட்டால் உலக உயிர்கள் ஏது அதனால்தான் தகவல் தானே பிரிந்து தாயாகவும் தந்தையாகவும் மாறினார். தன்னுடைய இரண்டு கண்களையும் படைத்தான்.
சூரியனாகவும் சந்திரனாகவும் படைத்தான். அதன் மூலமாக இந்த உலகத்தை கண்காணித்தார்.
ஆகையினால், நாம் செய்கின்ற ஒவ்வொரு காரியமும் நம்முடைய பெற்றோர்களாகிய சூரியனையும் சந்திரனையும் சாட்சிகளாகக் கொண்டுதான் இருக்கின்றன என்பதை உணர வேண்டும். அதனால்தான் அவர்கள் இருவரும் இணைந்த அமாவாசை தினத்தன்று அவர்கள் வழிவந்த முன்னோர்களை நாம் நினைக்கிறோம் நன்றி செலுத்துகின்றோம்.