Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முப்பெருந்தேவியர் அருளும் அற்புத ஆலயம்!

ஆதியில் மும்பை, ஏழு சிறு தீவுகள் கொண்டதாக இருந்தது. ஆனால் தற்போது அப்படியில்லை. ஒரு தீப கற்பமாக உள்ளது. முழுவதும் பாறைகள் நிறைந்த பூமி. மீனவர்கள் மட்டும் வாழ்ந்த குக்கிராமமாக இருந்தது. அதே மும்பை, இன்று மிகப் பெரிய நகரமாக, பாரதநாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்குகிறது. உலக அளவில் இன்று மிகப் பெரிய வணிக கேந்திரமாக உள்ளது. உலகின் மிகச் சிறந்த துறைமுகப் பட்டினமாகவும், சிறப்பிடம் பெற்றுத் திகழ்கிறது.

இந்த நகரம், ஏராளமான செல்வந்தர்கள் வாழும் குபேரப்பட்டணமாக விளங்குகிறது. செல்வச் செழிப்பில் உன்னதமான நிலையில் உயர்ந்துள்ளது. ‘தேங்காயும், உலர்ந்த மீனும் கொண்ட வெற்றுப் பாறைகள் கொண்ட பூமி’ என்றுதான் மும்பையை முன்பொருகாலத்தில் கணித்திருந்தார்கள். செல்வச்செழிப்பில் பிரமாண்டமான நகரமாகத் திகழ்வதற்கு என்ன காரணம் என்று மும்பாய் வாசிகளைக் கேட்டால், ‘‘மும்பையில் அருளாட்சி புரியும் அன்னை மகாலட்சுமியின் கடைக்கண் பார்வையினால்தான் சொர்கபுரியாக அளவற்ற செல்வச் செழிப்புடன் திகழ்கிறது!’’ என்றுதான் சொல்வார்கள்.

அன்னை தரும் செல்வச் செழிப்பிறகு ஏற்றாற்போல், மும்பையில் பல செல்வந்தர்கள், பிரபலங்கள் வாழும் பெட்டர் ரோடிற்கு அருகில் பூலாபாய் தேசாய் சாலையை ஒட்டிய கடற்கரையில், நூறு அடிகளுக்கு மேல் உயர்ந்துள்ள சிறுமலைக் குன்று போன்ற பெரும் பாறையில் ``அருள்மிகு மகாலட்சுமி கோயில்’’ அற்புதமாக அமைந்துள்ளது. இதே இடத்தில், முன்பு இருந்த புராதன கோயில், கால வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மும்பைக்கு மகாலட்சுமி வந்து சேர்ந்தது எப்படி?

‘வைகுண்டத்தில் பாம்பணை மீதில் திருமாலும் திருமகளும் சயனித்திருக்க, அப்போது அங்கு வந்த பிருகு மகரிஷியை இருவரும் கவனிக்கவில்லை. ஆத்திரமடைந்த பிருகு மகரிஷி கோபத்தோடு திருமாலின் மார்பில் எட்டி உதைக்க, உடனே மகாவிஷ்ணு அவசர அவசரமாக எழுந்து மகரிஷியின் கால்களைப் பிடித்து வணங்கி உபசாரம் செய்தார். தவசிரேஷ்டரான பிருகு முனிவரின் உள்ளங்களில் இருந்த ‘அகந்தை’ என்ற கண்ணை அழிப்பதற்காகவே அவர் கால்களைப் பிடித்து, அவர் அறியாமல் அக்கண்ணை அகற்றினார். இதனால் மகரிஷியின் அகந்தை அழிந்தது. அருகில் சயனித்திருந்த மகாலட்சுமி, இதைக் கண்டு; `‘எட்டி உதைத்தவருக்கு பதிலடி கொடுக்காமல் உபசாரமா செய்கிறீர்?’’ என்று கூறிய மகாலட்சுமி மனம் வெறுத்து வைகுண்டத்தை விட்டு பூவுலகு வந்தாள். அப்படி அவள் வந்த இடம்தான் மகாராஷ்டிரா மாநிலம் கடல் அலைகள் வந்து மோதும் மும்பை கடற்கரைக்கு வந்து சேர்ந்தாள்.

அவள் தன் இருப்பை மனிதர்களுக்குத் தெரியப்படுத்தும் நேரமும் வந்தது. 18-ஆம் நூற்றாண்டில் ‘கிழக்கிந்திய கம்பெனி’ என்ற பெயரில் வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள், தந்திரத்தால் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை வசப்படுத்தி ஆட்சிபுரிந்து கொண்டிருந்த நேரம் அது. அப்போது, மும்பையில் அவர்கள் கை ஓங்கியிருந்தது. அரசு புரிந்து கொண்டிருந்தார்கள். மும்பை, வோர்லி பகுதியில் கடல் நீரின் ஆக்கிரமிப்பையும், கடல் அரிப்பையும் தடுப்பதற்காக பாதுகாப்புச் சுவரோடு வோர்லிக்கும் மாகிம்மிற்கும் இடையே மேட்டுப் பாதை அமைக்க அன்றைய ஆட்சியாளர்கள் எண்ணினர்.

அந்தப் பொறுப்பை ராம்ஜி சிவஜீ பிரபு என்பவரிடம் ஒப்படைத்தனர். அந்தப் பொறுப்பை ஏற்ற கட்டிடக் கலைஞர் ‘ஹான்பை’ என்பவர் மேற்பார்வையில் சாலை அமைக்கும் வேலைகள் துவங்கின. அப்போதுதான் சோதனை வந்தது. ஒவ்வொரு நாளும் வேலை செய்து விட்டுப் போவார்கள். அடுத்த நாள் வந்து பார்த்தால் பாதை சீர் குலைந்து கிடக்கும். இரவில் ராட்சத கடல் அலைகள் ஆர்ப்பரிப்புடன் வந்து மதிற்சுவரையும், பாதையையும் சின்னாபின்னமாக்கி விட்டுப் போயிருந்தது.

கட்டிடக் கலைஞர் ஹான்பை பலமுறை முயற்சி செய்தும் மதிற்சுவரும் பாதையும் முற்றுப் பெறாமல் வீழ்ந்துகொண்டிருந்தது என்ற விஷயம் பின்னரே தெரிந்தது. இப்படி பலமுறை ரோடு போட்டுப் பாழானதால் செலவு அதிகரிக்க, வேதனை அடைந்த வருத்தத்தில் இருந்த ராம்ஜிக்கு ஒருநாள் அற்புதக் கனவு வந்தது. மகாலட்சுமி அவரது கனவில் தோன்றி, ‘‘ராம்ஜி, கவலைப்படாதே! நானும், மகாசரஸ்வதியும், மகாகாளியும் இங்கே கடலுக்கு அடியில் கட்டுண்டு கிடக்கிறோம். எங்களைக் கண்டு பிடித்து, பழைய கோயில் இருந்த பாறை உச்சியில். ஒரு ஆலயம் அமைத்து நாங்கள் நிரந்தமாக வசிக்க, எங்களைப் பிரதிஷ்டை செய்.

அதன் பின் உங்களது வேலை எந்த தடங்கலும் இல்லாமல் நிறைவேறும்!’’‘நாங்கள் மூவரும் கடலில் எங்கே இருக்கிறோம்’ என்பதை மகாலட்சுமியே அடையாளம் காட்டிக் கொடுத்தாள். அடுத்த நாளே ஆங்கிலேய அதிகாரிகளிடம் ராம்ஜி சென்று, தான் கண்ட கனவை விவரித்தார். ஆச்சரியம் அடைந்த அதிகாரிகள், ஆழ்கடலில் இருக்கும் சிலைகளைத் தேடி எடுத்துவர அனுமதி அளித்தனர். மீனவர்களுடன் ஆழ்கடலுக்குள் சென்ற ராம்ஜியின் அதிர்ஷ்டம், வீசிய முதல் வலையிலேயே முப்பெருந்தேவியரின் மூன்று சிலைகளும் சிக்கின.

மூன்று சிலைகளும் சிற்ப நேர்த்தியுடன், மிகுந்த அழகோடும், அலங்காரத்தோடும் காணப்பட்டதைக் கண்ட ஆங்கிலேயர்கள் வியந்தார்கள். புலிவாகனத்தில் அமர்ந்த படி அசுரனின் தலைமீது ஒருகாலை வைத்தபடி மகாலட்சுமியும், அழகிய வீணையைக் கையிலேந்தி மயில் மீது அமர்ந்தபடி மகாசரஸ்வதியும், திரிசூலம் ஏந்திய கரங்களால் அசுரனை அழித்தபடி மகாகாளியும் ஆக தேவியர் மூவரும், கருங்கல்லில் வடித்த அழகிய சிலைவடிவில் இருக்கக்கண்ட அனைவரும் ஆச்சரியத்தால் திகைத்துப் போனார்கள்.அன்னை மகாலட்சுமியின் கட்டளைப்படி, 1830-ஆம் ஆண்டு, அலைகள் சூழ அமைந்த சிறு பாறைக்குன்றின் மேல், முன் பிருந்த இடத்திலேயே மகாலட்சுமி கோயிலை உருவாக்கி முப்பெரும் தேவியரையும் பிரதிஷ்டை செய்தனர்.

மதிற்சுவரும் சாலை கட்டுமானப் பணியும் எவ்வித இடையூறும் இல்லாமல் உறுதியாக நின்றன. மகாலட்சுமி திருக்கோயில் நிர்வாகத்தை ராம்ஜி மற்றும் அவரது குடும்பத்தினர், பின் வந்த அவரது சந்ததியினர் என நூறு ஆண்டுகள் கவனித்து வந்தனர். ஆலயத்தின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டனர். மகாலட்சுமி கோயிலுக்குச் ெசல்லும் பக்தர்கள் இடது புறமாகவும், தரிசனம் செய்து திரும்புவோர் வலது பக்கமாகவும் போக வர அருமையான ஏற்பாடு செய்திருக்கிறார்கள். முறையாக பக்தர்களும் கடைப்பிடித்து நடக்கிறார்கள் என்பது சிறப்பு. இடது பக்கமுள்ள கடைகளைத் தாண்டிச் சென்றால் சமதளம். இதற்கு 20-படிகள் ஏறிச்செல்ல வேண்டும். அங்கே கம்பீரமான கொடி மரம், நாலாப்பக்கமும் அஷ்ட லட்சுமிகள்.

இந்த துவஜஸ்தம்பத்தைத் தாண்டியதும் பெரிய மண்டபம் அதை தாண்டினால் கர்ப்பக்கிருகம் காட்சியளிக்கிறது. கருவறையில் இடுப்பளவிலான மகாலட்சுமி, மகாகாளி மகாசரஸ்வதி விக்கிரகங்கள் இரண்டரை அடி உயரம் கொண்டவை அவர்கள் முகங்கள் தங்கக்கவசம் பொருத்தப்பட்டு ஒளி வீசுகின்றன. நடுநாயகமாக மகாலட்சுமி அவளின் வலப்பக்கம் மகாகாளி. இடப் பக்கம் மகா சரஸ்வதி, நாம் தரிசிக்கும் போது துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற வரிசை கிடைக்கும்.

அவரவர் தன்மைகளுக்கு ஏற்றபடி அவர்கள் நெற்றித் திலகங்களும் அமைந்துள்ளன. புல்லாக்கு, மூக்குத்தி, தங்க வளையல்கள், முத்துமாலைகள், சிரசில் தங்கக் கிரீடம் அணிந்து ஜொலிக்கிறார்கள். நெற்றித் திலகங்கள் போலவே மகாகாளி பக்கத்தில் திரிசூலமும், மகாலட்சுமி கரங்களில் சங்கு சக்கரமும், மகாசரஸ்வதி பக்கத்தில் வேலும் காணப்படுகின்றன. செந்தாமரை, வெண்தாமரை மலர்கள் அணிவகுத்து நிற்க, தேவியர் மூவரும் இரண்டு கரங்களையும் உயர்த்தி ஆசீர்வதிக்கும் அற்புதக் கோலத்தில் அருள்பாலிக்கின்றன. படிப்பு இருந்தால் செல்வம் இருக்காது. செல்வம் இருந்தால் வீரம் இருக்காது. வீரமிருந்தால் படிப்பறிவு இருக்காது என்பார்கள். அது பொய் என்பதை நிரூபிக்க மூன்று தேவியரும் சேர்ந்து தரிசனம் அளிக்கிறார்கள்.

கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் வாரிவாரி வழங்குகிறார்கள். அம்மூவரையும் தரிசிக்க திரண்டு வரும் லட்சோபலட்சம் அன்பர்களே சாட்சி! இங்கு இரு நூறு சதுர அடி உள்ள கருவறைக்குள் பக்தர்கள் சென்று முப்பெருந்தேவியரைத் தொழலாம். மாலைகள், தேங்காய்கள், பேடா, பழங்கள், இனிப்புப் பண்டங்கள், பட்டாடைகள் என முப்பெருந்தேவியர்க்குக் காணிக்கைகளாகச் சமர்ப்பிக்கிறார்கள்.

செந்தூரமும், குங்குமமும் காணிக்கைப் பொருட்களோடு பிரசாதமாக திரும்பக் கிடைக்கிறது. சாலையிலிருந்து உயர்ந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டுள்ளதால் மேலே ஏறிச் செல்ல 32 படிகள் உள்ளன. மேல் சென்றதும் முகப்பு மண்டபத்தில் முதல் முதலாக நம் கண்ணில் படுவது தீபமாலாக்கள், தீப ஸ்தம் பங்கள்தான். முகப்பு மண்டபத்தின் நடுவில் உலோகத்தினாலான சிங்கத்தின் உருவச் சிலையைக் காணலாம். அன்னை மகாலட்சுமியின் வாகனமாக இது கருதப்படுகிறது. கர்ப்பகிருகத்தையும் முகப்பு மண்டபத்தையும் பிரிக்கும் சுவரின் இரு கோடிகளிலும் ருக்மாயீ - பாண்டுரங்கனும், விநாயகப்பெருமானும் மாடக் குழிகளில் காணப்படுகின்றனர்.

கர்ப்ப கிருகத்தின் பின் புறத்தில் சுவரில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நாணயங்களை வைத்து அழுத்தினால் ஒட்டிக் கொள்கிறது. இது பணமும் மும்பாய் மக்களோடு ஒட்டிக் கொள்ளும் அதிர்ஷ்டத் தன்மைக்குப் பொருத்தமாக உள்ளது. மகாலட்சுமி ஆலயத்தின் பின்னால் கடலை நோக்கிச் செல்லும் படிகளில் விநாயகப் பெருமானுக்கும், ஆஞ்சநேய சுவாமிக்கு தனித்தனி சந்நதிகள் அழகாக அமைந்துள்ளன. கோயிலின் பின் பக்கத்தில் உள்ள பெரிய பெரிய கடற்பாறைகளில் பக்தர்கள் உட்கார்ந்து கடலையும், இயற்கைக் காட்சிகளையும் மிகவும் ஆர்வத்தோடு ரசித்து மகிழ்கிறார்கள். கோயிலில் தினமும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. செவ்வாய் வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளிலும், விடுமுறை நாட்களிலும் விசேஷ பூஜைகள் மிகப் பெரிய அளவில் கொண்டாடுகிறார்கள்.

இங்கு நவராத்திரி பண்டிகை ‘தசரா’ என்று அழைக்கப்படுகிறது. பத்து நாட்கள் கோலாகலமாக விமரிசையாக தசராவைக் கொண்டாடுகிறார்கள். நுழைவாயிலில் உள்ள பெரிய மைதானத்தில் கண் காட்சியொன்று ஏற்பாடு செய்கிறார்கள். ஆன்மிகம் சார்ந்த பல விஷயங்கள் காட்சிப்படுத்துகிறார்கள். இதை லட்சக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளிக்கிறார்கள். கார்த்திகை மாதம் வரும் பௌர்ணமியில் அன்னை மகாலட்சுமிக்கு 350-வகையான, பிரசாதங்கள் படைக்கிறார்கள். மாலையில் அவை பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது. தசரா, தீபாவளி, மற்றும் புத்தாண்டு போன்ற விசேஷ நாட்களில் முப்பெருந்தேவியருக்கு அற்புதமாகப் பலபல பட்டாடைகள்அணிவித்து அலங்காரம், ஆராதனை செய்கிறார்கள். இதைக் காண பல்லாயிரக் கணக்கில் வருகை தருவது கண் கொள்ளாக் காட்சியாகும்.

திருமலை திருப்பதி போன்று அதிக வருவாய் உள்ள கோயில்களில் ஒன்றாக மகாலட்சுமி கோயில் விளங்குகிறது. பக்தர்கள் அளிக்கும் பணம் பல வகையான சமூக நலத்திட்டங்களுக்கு உதவுகிறது. திருக்கோயிலுக்குள் ஏழை எளியவர்களுக்கு மருத்துவ உதவிகள் இலவசமாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு சனிக் கிழமையும் இலவச கண் சிகிச்சை பரிசோதனைகள் நடைபெறுகிறது. செல்வத்தோடு கல்வி, சக்தி, ஆகியவற்றையும் அளவில்லாமல் கொடுக்கின்ற மகாலட்சுமியின் அருள்நாடி செல்வந்தர்களும் சாதாரண மக்களும் வருகின்றனர்.

அவர்களை என்றுமே மகாலட்சுமி ஏமாற்றுவதில்லை. மகாமண்டபத்தில் வைதிக குடும்பத்தைச் சேர்ந்த பெண் மணிகள் பலர் குழுவாகக் கூடி ஸ்ரீ மகாலட்சுமி அஷ்டகம் பாடுகிறார்கள். கேட்பதற்கே சந்தோஷத்தையும் மன நிறைவையும் அளிக்கிறது.

நாமும் அந்த அற்புதமான,

‘‘நமஸ்தேஸ்து மஹாமாயே

ஸ்ரீபீடே ஸூர பூஜிதே!

ஸங்க சக்ர கதாஹஸ்தே

மஹாலக்ஷ்மி நமோஸ்துதே!.....

என்று தொடங்கும் ``ஸ்ரீ மகாலட்சுமி அஷ்டகம்’’ சொல்லி அம்பாளின் அருளை பெறுவோம்.

டி.எம்.ரத்தினவேல்