Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிரம்படி வாங்கித் தந்த பிராட்டிக்கு ஒரு கோயில்

3.9.2025 - பூராட நட்சத்திரம் மதுரை சொக்கனுக்கு பிட்டுத் திருவிழா

மதுரை மாநகர் அருள்மிகு மீனாட்சி சமேத சோமசுந்தரக் கடவுள் கோயில் கொண்டுள்ள திருத்தலம். கருணைக் கடலாகிய சோமசுந்தரப் பெருமான் 64. திருவிளையாடல்களை நடத்திய புனிதத்தலம். அவர் அரசராயும் புலவராயும் வீற்றிருந்து செங்கோலோச்சிய இடம். செந்தமிழ் வளர்க்க நல்லிசைப் புலவர்கள் ஒருங்கே இருந்து சங்கம் நடத்திய சிறப்புடையது படைப்புக் காலம் தொடங்கி பல பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த இடம். தமிழ்க் கடவுள் முருகப் பெருமானும் இங்கிருந்து தமிழ் ஆய்ந்தார் எனின் இத்திருத்தலத்தின் சிறப்பிற்கு வேறெதனைக் கூறமுடியும்?

அதுமட்டுமல்ல, திருஞானசம்பந்தர் பெருமானும், மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும், நெடுமாற நாயனாரும் எழுந்தருளி சைவ சமயம் வளரச் செய்த தலம். குமரகுருபரர் பிள்ளைத் தமிழ்பாடியதும், இந்திரன், வருணன், முருகன், விநாயகப் பெருமான் போன்றோர் சிவபெருமானை வழிபட்டுப் பேரின்பம் பெற்ற இடம். இங்குதான் இராசசேகர பாண்டியன் பொருட்டு நடராஜப் பெருமான் வெள்ளியம் பலத்தில் கால் மாறி ஆடிய புண்ணிய பூமி. எட்டு யானைகளால் தாங்கப்பட்டுள்ள ஆலய விமானம் இந்திரனால் கொண்டு வந்து வைக்கப்பட்டு, பூஜிக்கப்பட்ட சிறப்புடையது. ஒப்பற்ற திருக்குறள் அறநூலும் மற்றும் பல இலக்கியங்களும் அரங்கேறிய அற்புதத் திருத்தலம். இன்னும் எத்தனை எத்தனையோ சிறப்புகளைப் பெற்றுத் திகழும் புண்ணியத் திருத்தலம்தான் மதுரை மாநகரம்.

இத்தகைய சிறப்புகளைப் பெற்றுத் திகழும் மதுரையில்தான் சிவபெருமானின் 64 - திருவிளையாடல்களும் நடந்தேறின. அவற்றுள் மிகவும் சிறப்பாகப் பேசப்படுவது மதுரைச் சொக்கனின் பிட்டுத் திருவிழாதான்! இது மாணிக்கவாசகப் பெருமான் பொருட்டுப் பல திருவிளையாடல்களை இங்கு இறைவன் நிகழ்த்தினார். உன்னதமான உயர்ந்த சிவ பக்தியில், சிவ நெறியில் வாழ்ந்து வந்த மூதாட்டி வந்தியம்மையின் பெருமையையும் உலகோருக்கு எடுத்துக்காட்ட அவளிட்ட உணவை உண்டு, பிரம்படி பட்ட பெருமானின் அற்புத வரலாறு. பெருமானுக்கு பிரம்படி வாங்கித்தந்த வந்திக்கு, பாண்டிய மன்னன் திருக்கோயில் கட்டி வைத்தான். மூதாட்டி வந்தியின் வரலாறு இக்கட்டுரை!

திருவிளையாடல் புராணத்தில் வந்தியின் புகழ் பெரிதாகப் பேசப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் பூராடம் நட்சத்திரத்தில் மதுரை பிட்டுத்தோப்பு பகுதியில் உள்ள ஸ்ரீபிட்டு சொக்கநாதர் ஆலயத்தில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது பிட்டுத் திருவிழா. மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்தக் கோயில். மாசில்லா மாணிக்கவாசகப் பெருமானுக்காக சிவபெருமான் வைகை நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படச் செய்ய, வீட்டுக்கு ஒருவர் வந்து ஆற்றின் கரையை உயர்த்தும் பணியில் ஈடுபட வேண்டும் என்று அரிமர்த்தன பாண்டியன் ஆணை பிறப்பித்தான். வைகை ஆற்றின் கரையை உயர்த்தாவிட்டால் பெருவெள்ளம் ஊருக்குள் புகுந்து விடும் அபாயம் இருந்தது.

அப்போது, மாமதுரையின் தென் கீழ்த்திசையில் உள்ளவளும் ஆண்டுகள் பல கடந்து நரை, திரைகளுடன் கூடிய மிகவும் வயதான வந்தியம்மை என்னும் பெயருடைய ஒரு மூதாட்டி வாழ்ந்து வந்தாள். அவள் சிவபக்தியில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தாள். மதுரை சொக்கநாதர் மீது அளவற்ற பக்தியுடையவளாக விளங்கினாள்.

அவளுக்கு உறவு என்று சொல்லிக் கொள்ள யாருமில்லை. யாரும் அற்ற தனியள். நாள்தோறும் அவள் செவியுணவாகிய மறை பொருளை உணர்ந்து அவியுணவை ஊட்டும் சிவனடியார்களினும் தவத்தால் சிறந்த பயனை நுகருவாள். தாயற்றவர்களுக்குத் தாயைப் போன்றவள். உயிர்களிடத்தில் மிக அன்புடையவள். தினந்தோறும் சுவைமிக்க பிட்டினை விற்று உண்ணும் தொழிலினை உடையவள். நாள்தோறும் அவள், தான் அவித்த செம்மையான பிட்டினை மதுரையில் எழுந்தருளியுள்ள சோமசுந்தரக் கடவுளுக்கு பிரியமுடன் படைத்துவிட்டுப் பின்பு விற்பவள் வந்தியம்மை.

சிவநெறியில் நின்று பக்தியில் சிறந்து விளங்கிய வந்தியம்மையின் பெருமையை உலகோருக்கு தெரிவிக்கும் பொருட்டே சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடலை நிகழ்த்தினார் என்பர்.

இந்நிலையில், அரசனின் ஆணைப்படி, மிகவும் வயதான அந்த வந்தியம்மைக்கு அளந்து விடப்பட்ட பங்கை அடைப்பதற்குக் கூலி ஆள் கிடைக்காமல் அல்லாடினாள். யார் யாரிடமோ கேட்டுப் பார்த்தாள். கெஞ்சினாள் யாரும் சம்மதிக்கவில்லை. மிகவும் துன்புற்றாள். அரசனின் தண்டனைக்கு ஆளாக வேண்டுமே என்று பயந்தவள், மதுரைச் சொக்கனை மனமுருக வேண்டிப்பிரார்த்தித்தாள்.

`‘ஐயனே! தினமும் பிட்டுவிற்று உண்டு வாழும் பேதையாகிய நான், இதுவரையிலும் நான் துன்பமின்றி நின் அருளால் இன்புற்றிருந்தேன். இன்று பாண்டிய மன்னனால் இடையூறு வந்து விட்டதே’’ சுவாமி, எனக்கு உற்றார், உறவு என்று யாரும் இல்லை. அநாதை பற்றுக்கோடின்றித் துன்பக் கடலுள் ஆழ்ந்து வாடும் பாவியேனாகிய எனக்கு உன்னை விட்டால் எனக்கு வேறு யாரும் இல்லை. ஏழையாகிய நான் என் செய்வேன் சொக்கா?’’ என்று புலம்பினாள். வந்தியம்மையின் துன்பத்தையும் அவள் மதுரை சொக்கனிடம் முறையிட்டதையும், பரஞ்ஜோதி முனிவர் தாம் அருளிய திருவிளையாடற் புராணத்தில் எடுத்துரைக்கிறார் இப்படி;

‘‘பிட்டு விற் றுண்டு வாழும் பேதையேன் இடும்பை என்ப

தெட்டுணையேனு மின்றி யிரவியெங் கெழுகென் றின்னாண்

மட்டுநின் னருளா லிங்கு வைகினேற் கின்று வந்து

விட்டதோ ரிடையூ றைய மீனவ னாணை யாலே

துணையின்றி மக்கள் இன்றித் தமரின்றிச் சுற்றமாகும்

பணையின்றி யேன்று கொள்வார் பிறரின்றிப் பற்றுக் கோடாம்

புணையின்றித் துன்பத் தாழ்ந்து புலம்புறு பாவியேற்கின்

றிணையின்றி யிந்தத் துன்ப மெய்துவ தறனோ வெந்தாய்!’’

அவ்வந்தியம்மையை மன்மனத்தால் நினைத்து யாரும் அறியாமல் உண்பிக்கும் பிட்டினை, கடல் நீர் சூழ்ந்த இப்புவியில் உள்ளோர் காண உண்டு அவள் துன்பத்தை நீக்கும் பொருட்டு ஞான மூர்த்தியாகிய சோமசுந்தரக் கடவுள் அவளுக்கு அருள்புரிய திருவுளம் கொண்டார். வந்தி மூதாட்டியின் பிரார்த்தனைக்குச் செவி மடுத்த சொக்கநாத பெருமானின் திருவிளையாடல் ஆரம்பமானது. கூலி ஆளாய் உருமாறி வந்தார். அவருடைய தோற்றம் அப்படி இருந்தது?

அழுக்குடைய பழைய துணி ஒன்றை இடையில் கட்டி மெய்த் தொண்டர்கள் கட்டிச் சாத்திய இண்டை மாலையைப் போன்ற சும்மாட்டின் மேல் கூடையினைக் கவிழ்த்து, திருத்தோளின் மீது மழுங்கிய வாயுடைய மண் வெட்டியை வைத்துக் கொண்டு திருவீதியில் நடந்தபடியே

‘‘எனக்குக் கூலி கொடுத்து வேலை வாங்குவோர் யாரேனும் உண்டோ?’’ என்று கூவிய படியே வந்தார். அவரது இன்குரல் வேத ஒலியாகிய சிறந்த வேத மொழி போலக் கூறியபடியே அழுத வண்ணமிருக்கும் மூதாட்டி வந்தியம்மையின் இல்லம் வந்து நின்றார்.

தனித்துக் கூலியாளாய் வரும் இறைவன் குரல் கேட்டு பெருஞ்செல்வம் பெற்றார் போல அளவற்ற மகிழ்ச்சியுடன் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தாள் வந்தியம்மை.

தாய் போலத் தன்னிடம் இனிய அருள் சுரந்து வரும் அழகிய காளைப் பருவம் உடைய அவ்விளைஞனை அன்புடன் அழைத்து,

‘‘அரசன் எனக்கு அளந்து விட்டபங்கினை அடைத்துத் தருவாயோ?’’ என்று வினவினாள். அதற்கு அவன்,

‘‘தாயே! கண்டிப்பாக அடைத்துத் தருகிறேன். எனக்கு என்ன கூலி தருவீர்கள்?’’ என்று கேட்டான். உடனே வந்தியம்மை,

‘‘அப்பனே, உனக்குக் கூலியாக உதிர்ந்த பிட்டுத் தருவேன்!’’ என்றாள்.

அண்டம் அனைத்துக்கும் பசிப் பிணிபோக்கும் இறைவன்,

‘‘தாயே! நான் சாப்பிட்டுப் பல நாளாயிற்று. பெரும் பசித்தீ என்னை வாட்டுகிறது. நான் மிகவும் களைப்புடன் இருக்கிறேன் நான் வேலை செய்வதற்கு முன்பே சுவை மிக்க உதிர்ந்த பிட்டு முழுவதையும் கொடு. அதைத் தின்று என் பசியடங்கியதும் நினது பங்கிற்குரிய கரையை அடைக்கிறேன்!’’ என்று கூற, உடனே வந்தி, தெள்ளிய மாவினால் அவித்த பிட்டினை அழுக்கடைந்த மூடிய ஆடையை நீக்கி, இரு கரங்களாலும் அள்ளியெடுத்து,

‘‘அப்பா, இதனை உண்பாயாக!’’ என்றுகூறி அன்போடு அளித்தாள். கூலி ஆளாய் வந்த இறைவன் தன் வேட்டியின் முன்றானயை விரித்து உதிர்ந்த பிட்டினை மகிழ்ச்சியுடன் பெற்று அவள் அன்பையும் உடன் கூட்டி அருந்தினார். வந்தியைப் பார்த்து,

‘‘தாயே! நீ அன்புடன் அளித்த அரிய சுவையுடையதாகிய இப்பிட்டு இவ்வுலகை ஆண்டருளும் சோமசுந்தரக் கடவுளுக்கே உரியதாகும்!’’ என்று மொழிந்தார். கூலியாளாய் வந்த சோமசுந்தரக் கடவுள்! மேலும் அவன், வந்தியை நோக்கி,

‘‘தாயும் தந்தையும் இல்லாமல் தனிக் கூலியாளாக வந்த எனக்கு ஒரு தாயாகி அருள் சுரந்து என்பசியை நீக்கினாய் தாயே! மிக்க மகிழ்ச்சி இனி வேலையைச் செவ்வனே செய்து முடிப்பேன்! கவலைப்படாதே’’ என்று கூறிப் புறப்பட்டான். ஆபத்துக்கு உதவ வந்தவன் செல்லும் அழகைக் கண்டு நன்றி உணர்வோடு இருகரம் குவித்து வணங்கி நின்றான் வந்தியம்மை!

வைகை ஆற்றின் பெரிய கரையின் கண் வந்து நின்று கூலியாள் ‘‘யான் வந்தியின் கூலி ஆள்’’ என்று அதிகாரிகளிடம் கணக்கில் காட்டி, எழுதுவித்துப் பின் கரையினை அடைக்கத் தொடங்கினார் மற்றவர்கள் பார்க்கும் படி! ஆனால், அவன் வேலை எதுவும் செய்யவில்லை, பெரிய வலிமை யுடையவன் போல் மண்ணை வெட்டுவான் கரையை அடைக்க வேண்டிய இடத்தில் மண்ணைக் கொண்டு போகாமல் வேறிடத்தில் கொண்டு போய் கொட்டுவான். உடைப்புப் பெருகி ஓடுவதைக் கண்டு கைகொட்டிச் சிரிப்பான். களிப்புடன் குதிப்பான். கீழே விழுவான். விசுக்கென்று எழுந்து ஏனோ தானோ வென்று வேலை செய்வான். வேலை செய்வதாகப் பாவனை செய்வான். மொத்தத்தில் அந்தக் கூலியாள் வந்திக்கு ஒதுக்கப்பட்ட கரையை அடைக்கச் சிறிதும் முயன்றார் இல்லை. விளையாட்டுப் பிள்ளையாக ஆடினார் பாடினார். ஓடினார். களைப்புடன் சென்று மரநிழலில் படுத்து உறங்கினார்.

எல்லையில்லாத அருளினாலே உலக மனைத்தையும் ஆக்கியும் காத்தும் அழித்தும் பெரு விளையாடலைப் புரியும் பிறையை அணிந்து முடியையுடைய இறைவன், இங்கே இவ்வாறு விளையாடிக் கொண்டிருக்க, கரையை அடைக்கும் பணியை மேற்கொண்ட குடிமக்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கிய பங்கினை முழுவதும் செவ்வனே அடைத்து விட்டுப் போய்விட்டனர். அரசனின் ஏவலர்கள் அடைபட்ட கரைகளை வரிசையாகப் பார்த்துக் கொண்டு வரும்போது, வந்தியம்மைக்கு ஒதுக்கப்பட்ட கரை மட்டும் அடையா திருந்ததைக் கண்டு கோபம் கொண்டு மன்னனிடம் சென்று விஷயத்தைத் தெரிவித்தனர். மரநிழலில் கூடையைத் தலைக்கு வைத்துத் தூங்கிக் கொண்டிருந்த வந்தியின் கூலியாளின் கடமை, செய்யத் தவறிய, அரசனின் ஆணையை அலட்சியப்படுத்திக் கொண்டு ஆழ்ந்து உறங்கும் அக்கூலியாளைக் கண்ட மன்னன் பெரிதும் சினமுற்றான்.

செய்தியறிந்த அரிமர்த்தன பாண்டியன் சினந்து கையில் பொன் பிரம்பினை வாங்கி, அண்டங்களையும் அளவில்லாத உயிர்களையும் தனது திருமேனியாகக் கொண்ட இறைவனது முதுகிலே, பிரம்பினால் ஓங்கி அடித்தான். அவ்வளவுதான் அந்தப் பிரம்படி சிவபெருமானைத் தவிர எல்லோரது முதுகிலும் விழுந்தது. மன்னன் அரிமர்த்தன பாண்டியன் முதுகிலும் விழுந்தது. அதிர்ந்து போனான் பாண்டியன்.

எவ்வுயிர்கட்கும் அறிவுக்கு அறிவாய் உள்ள சிவபெருமான் மேற்பட்ட அவ்வடித்தழும்பு அரிமர்த்தன பாண்டியன் முதுகில்பட்டது. அது மட்டுமல்லாமல் பிரபஞ்சம் முழுவதிலுமாக இயங்குவினவும்.

நிற்பனவுமாகிய சேதனங்களுக்கும், அசேதனங்களுக்கும் உயிராய் உள்ள இறைவன் அடித்தழும்பினைத் தேவரும் மக்களும், நரகரும், பறவைகளும், விலங்குகளும், எறும்பு முதற்கொண்டு அனைத்து ஊர்வனங்களும் மற்றும் பலவும் மரமும் மலையும் கொடியும் புல்லும் முதலாகிய நிலத் தினைகளும் அவ்வடியைப் பெற்றன. கருப்பையில் தங்கியிருந்த கருக்களும் அடிபட்டன. உயிரில்லாத சித்திரங்களும் அடிபட்டன.

மதுரை நாயகனாகிய சோமசுந்தரக் கடவுளின் மேல்பட்ட பிரம்படியைச் சூரியனும், சந்திரனும் மற்ற கோள்களும், பல நிறமுடைய நட்சத்திரங்களும், நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களும், வான் மேகங்களும், வேத வேதாந்தங்களும் ஆறுவகைச் சமயங்களும், அதற்குரிய தேவர்களும், ஏனையவானோரும், திருத்தொண்டினைச் செய்து வரும் ரிஷிகளும் முனிவர்களும் மற்றுமுள்ள அரக்கர்களும் அசுரர்களும் அவ்வடித்தழும்பினைப் பெற்றனர்.

பிரம்படிபட்டதும் பிரம்மனும் திருமாலும் திடுக்கிட்டனர். வியந்தனர். தேவேந்திரன் பயந்தான். மற்றைத் தேவர்களும் உடல் நடுங்கினர். இலக்கணம் அமைந்த யாழினையுடைய இயக்கர்களும் சித்தர்களும், சாரணர்களும் தம் வகுபடாத உடம்பில் பட்ட அடியை ‘இதுயாது?’ என்று தத்தமக்குள்ளேயே காண்பித்துக் கொண்டு வியந்த வண்ணம் நிகழ்ந்தவற்றை அறியாதவர்களாம் மயங்கினார்கள்.

மன்னனிடம் பிரம்படிபட்ட இறைவன், எதுவுமே தெரியாதது போல எழுந்தார். மன்னன் எதுவும் புரியாமல் அவரைப் பார்க்க, அவரோ தம் பொற்கரத்தால் மண்ணை அள்ளிக் கூடையிலிட்டு, சுமந்து போய் வைகைக் கரையில் வீசிப் போட்டார். கரை அடைந்தது. வெள்ளப் பெருக்கு நின்றது. இறைவன் மறைந்தார். பிரம்படி பட்டதும் ஒரு நொடிப் பொழுதிலேயே அத்தனையும் நடந்தேறியது. மன்னனும் மற்றையோரும் திகைத்தனர். ஒவ்வொருவர் முதுகிலும் அடிபட்டதால் ஏற்பட்ட துடிப்பினை அறிந்த அரிமர்த்தன பாண்டியன், ஐயம் கொண்டு, வந்தியின் கூலியாளாய் வந்தவர் இறைவன் சோமசுந்தரக் கடவுளே என்றுணர்ந்து உள்ளங்கலங்கி, கண்ணீர் பெருக, மெய்சிலிர்க்க, இருகரங்கூப்பி வணங்கி நின்றான். அவனது உடலும் உள்ளமும் நடுங்கியது. எப்பேர்ப்பட்ட சோதனை? எண்ணி மயங்கினான். தான் ஆராயாமல் செய்த தவறுக்குப் பெரிதும் வருந்தி நின்றான்.

அப்போது வானில் இறைவன் குரல் அசரீரியாக,

‘‘பாண்டிய மன்னா! அறநெறியுடைய செங்கோல் ஏந்தியவனே! உன்னுடைய பொருள்கள் அனைத்தும் அறவழியில் தேடிப் பெறப்பட்டவை. அவை அனைத்தையும் குற்றம் ஒன்றுமில்லாத மாணிக்கவாசகரால் உனக்குக் கொடுக்கப்பட்டவை. இதையறியாமல் நீ அவருக்குத் துன்பம் இழைத்தமையால், யாம் அதனைப் பொறுக்க மாட்டாமல், வையை ஆற்றில் வரும் நீரினைப் பெருக்கி பெருவெள்ளம் வரும்படி செய்தோம். அதோடு சிவ பக்தியில் சில நெறியில் சிறந்தவனாக விளங்கிய வந்தியம்மையின் உன்னதமான பக்தியை உலகறியச் செய்யும் பொருட்டும், வந்தியிடம் கூலியாளாய் வந்து அவள் கையில் பிட்டினை வாங்கி உண்டு, பிரம்படி பட்டோம். அதோடு வந்திருக்கு முக்தியும் அளித்தோம். இவ்வாறெல்லாம் செய்ததற்கான காரணம் பக்தன் வாதவூராரின் பொருட்டே என்பதை அறிவாயாக! மண்ணா, நீங்காத செல்வப் பெருக்கோடும் புகழோடும் நீடூழி வாழக்கடவை!’’ என்றொலிக்க மன்னரும் மற்றையோரும் மகிழ்ச்சியுடன் கேட்டு வணங்கி நின்றனர். வந்தியின் பெருமையை அறிந்த மன்னன் அவளைப் போற்றிப் புகழ்ந்தான்!

இந்த உலகில் உள்ள அனைத்தும் தன்னுள் அடக்கம் என்பதை உணர்த்த சிவபெருமான் நிகழ்த்திய இந்தத் திருவிளையாடலைச் சிறப்பிக்கும் திருவிழாவே, மதுரையில் ஆவணி மாதத்தில் வரும் பெருந்திருவிழா பிட்டுத் திருவிழா! இங்கு, ஒவ்வொரு ஆண்டு ஆவணி மாதத்தில் வரும் பூராடம் நட்சத்திரம் நாளில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது, பிட்டுத் திருவிழா. இந்த வருடம் விசுவாவசு ஆண்டில் வரும் ஆவணி மாதம் 18-ஆம் நாள் (ஆங்கிலத் தேதி 3.9.2025) மதுரை பிட்டுத் தோப்பு சொக்கநாதர் கோயிலில் மிகவும் விமரிசையாக பிட்டுத் திருவிழா நடைபெறவுள்ளது.

மதுரை, பிட்டுத் தோப்பு சொக்கநாதர் கோயில் பாண்டிய மன்னர்கள் காலத்தில் உருவான கோயில், இது மிகவும் பழமையானது. பல நூறு வருடங்களாக இந்தப் பிட்டுத் திருவிழா ஆதியில் மதுரை  மீனாட்சியம்மை சமேத சோமசுந்தரப் பெருமான் திருக்கோயிலில் நடைபெற்று வந்தது. கி.பி. 1875-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இப்பகுதியில் வசித்து வரும் பக்தர்கள், தம் பொறுப்பில் எடுத்து வருடந்தோறும், புகழ் பெற்ற இந்தப் புட்டுத் திருவிழாவை மிகவும் சிறப்பாக நடத்தி வருகின்றனர். இந்தப் பிட்டுத் திருவிழாவும், விழாவில் வழங்கும் பிட்டுப் பிரசாதமும் இந்தப் பகுதியில் மிகவும் பிரசித்தம்.

இந்த பிட்டுச் சொக்கநாதர் கோயிலின் சிறப்புக்கு மேலும் சிறப்பு சேர்ப்பது சிவபக்தை. மூதாட்டி வந்தியம்மையின் சந்நதி, இங்கு வந்தியம்மை தனிக் கோயில் கொண்டுள்ளாள். விமானத்துடன் கூடிய கருவறையில் தனித்த மேடையின் மீது பிரபை அலங்கரிக்க, கையில் ஊன்று கோலுடன் நின்ற திருக்கோலத்தில் அழகுற காட்சி தருகிறாள். அருகே ஸ்ரீ லட்சுமி, ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ துர்கை, ஸ்ரீ வீரபத்திரர், ஸ்ரீ சங்கர நாராயணர், இரட்டை வாகன பைரவர் ஆகியோரும் அருளாட்சிபுரிகின்றனர். ஸ்ரீட்டு சொக்கநாதரும், ஸ்ரீ மீனாட்சியும், தனித் தனி சந்நதிகளில் காட்சி தருகின்றனர். கூடையில் மண் சுமந்து கொண்டிருக்கும் திருக்கோலத்தில் உற்சவ மூர்த்தி அருள்பாலிக்கிறார்.

வருடந்தோறும் ஆவணி மாதத்தில் பூராடம் நட்சத்திரத்தன்று காலை சுமார் 6 மணிக்கு மதுரை ஸ்ரீசுந்தரேஸ்வரர், ஸ்ரீ பிரியா விடைநாயகி, ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆகியோர் மேளதாளத்தோடு பிட்டுத் தோப்புக்கு எழுந்தருள்வார்கள்.

இந்த வைபவத்தைக் காண ஸ்ரீ தெய்வானை சமேதராக திருப்பரங்குன்றம் முருகப் பெருமானும், திருவாதவூரிலிருந்து மாணிக்கவாசகப் பெருமானும் இங்கு வருவது மிகவும் விசேஷம். அன்று மாலை 4 மணி சுமாருக்கு, பிட்டுச் சொக்கநாதர் கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த வைபவம் நிகழும். அப்போது பாண்டிய மன்னன், சொக்கநாதர், வந்தியம்மை போன்று பக்தர்கள் வேடமிட்டு வந்து அந்தத் திருவிளையாடலை நிகழ்த்திக் காட்டுவார்கள். இந்த ஒருநாள் மட்டும் மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் கோயில் நடைகள் சாத்தப்பட்டிருக்கும். அபிஷேக, அலங்கார பூஜைகள் முடிந்ததும் பிட்டுத் திருவிழா இனிதே நிறைவு பெறுகிறது. விழா முடிந்ததும் பிட்டமுது பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.

ஆலவாய் அண்ணலுக்கு அன்புடன் பிட்டமுது அளித்துப் பெரும் பேறுபெற்ற இந்த வந்தியம்மையை வழிபடுவது அவ்வளவு விசேஷம் என்கிறார்கள். இந்த வந்தியம்மைக்குத் துளசி மாலை சாத்தி வழிபட்டால், வேண்டும் வரம் கிடைக்கும் என்கிறார்கள்.