Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மகிமைகள் நிறைந்த மச்சாவரம்

33வது அனுமனாக, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விஜயவாடா அருகே ``மச்சாவரம்’’ என்னும் பகுதியில் உள்ள ``தாசாஞ்ஜநேயரை’’ காணவிருக்கிறோம்.

தேவராயர்களின் சாம்ராஜ்யம்

ஆந்திரமாநிலம், அனுமன் கோயிலுக்கு பெயர் போன மாநிலமாகும். அனுமன் கோயில் இல்லாத கிராமமே இல்லை என்று சொன்னால், அது மிகையாகாது. குறிப்பாக, விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆட்சிக்குப் பிறகு, தற்போதைய ஆந்திரப் பிரதேசம் முழுவதும் அனுமன் கோயில்கள் பரந்துவிரிந்து காணப்படுகிறது. ஆந்திர மக்கள், ஆஞ்சநேய சுவாமியை ``ஹனுமந்துடு’’, ``ஆஞ்சநேயலு’’ என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.

1485 - ஆம் ஆண்டு முதல் 1505 - ஆம் ஆண்டு வரை, சுமார் 20 ஆண்டுகள் ``விஜயநகர சாம்ராஜ்யத்தை’’ சாளுவ வம்சத்தினரால் ஆளப்பட்டது. 1485 - 1491 ஆகிய ஆண்டுகள் வரை, சாளுவ நரசிம்ம தேவராயர் விஜயநகரத்தை ஆண்டார். அதன் பின், 1491 - ஆம் ஆண்டில், நரசிம்ம தேவராயரின் மகன் திம்ம பூபாலா ஆட்சி பொறுப்பை ஏற்றார்.

ஆனால், நாட்டில் பெரும் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டது. திம்ம பூபாலாவிற்கு எதிராக அரசியல் சூழ்ச்சிகள் நடந்தன. அதன் காரணமாக, எதிர் நாட்டு தளபதி ஒருவனால், குறுகிய காலத்திலேயே திம்ம பூபாலா கொல்லப்பட்டார்.

பிறகு, இரண்டாம் நரசிம்ம ராயர், 1491 - ஆம் ஆண்டு முதல் 1505 - ஆம் ஆண்டு வரை விஜயநகரத்தை ஆட்சி புரிந்தார். அதன் பின்னர், தௌலவர்கள் (Thaulavs) அதாவது துளுவ வம்சத்தினர்கள் சாளுவர்களை தோற்கடித்து, விஜயநகர சாம்ராஜ்யத்தை கைப்பற்றி, ஆட்சி செய்தார்கள். சிறிது ஆண்டுகளில் அதாவது 1509 - ஆம் ஆண்டில், அதே துளுவ வம்சத்தை சேர்ந்த கிருஷ்ணதேவராயர், விஜயநகர சாம்ராஜ்யத்தின் பேரரசராகிறார்.

சாளுவ மன்னர்கள் காலத்துலையும் சரி.. துளுவ வம்ச மன்னர்கள் காலத்துலையும் சரி. மகான் ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர்தான் அரசவை குருவாக இருந்துள்ளார். அந்த சமயத்தில்தான், அனுமனின் மீது கொண்ட பக்தியால், பல அனுமன்களை பிரதிஷ்டை செய்திருக்கிறார். மேலும், பல ஊர்களுக்கு சென்று ஆன்மிகத்தையும் பரப்பி வந்தார்.

வானரன் ரூபத்தில் அனுமன்

மகான் ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர், தனது சீடர்களோடு தேச சஞ்சாரத்தை மேற்கொண்டு வந்த போது, ​​அவர்கள் அனைவரும் ``இந்திரகீலாத்ரி’’ என்னும் இடத்தில் இளைப்பாறினார்கள். இந்திரகீலாத்ரி, ஆந்திரப் பிரதேசம் விஜயவாடாவில் உள்ள, கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு மலை பகுதியாகும். தற்போது, இந்த மலை மீது புகழ்பெற்ற ``கனக துர்க்கை கோயில்’’ அமைந்துள்ளது. இது தென்னிந்தியாவின் முக்கிய ஆன்மிகத் தலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. அந்த சமயத்தில் அனுமன், ஒரு வானர (குரங்கு) வடிவில் தோன்றி வியாசராஜரை எழுப்பி, தன்னைப் பின்தொடர்ந்து வருமாறு சைகை காட்டி, அந்த வானரன் முன்னோக்கி சென்று கொண்டிருக்க, அதனை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தார், வியாசராஜர்.

பல மணிநேரம் மலைகளையும் காடுகளையும் கடந்து, தற்போதுள்ள ``மச்சா வரம்’’ என்று அழைக்கப்படும் இடத்தை அடைந்தனர். பின்னர், வானர வடிவில் இருந்த மாருதி பகவான், ``இந்த மச்சாவரம் இடத்தில், சதா சர்வ காலமும் ராமபிரானை கைகூப்பி தியானித்து இருக்கும் எனது சிலை ஒன்றை உருவாக்கி, அதனை பிரதிஷ்டை செய்யும்படி’’ வியாசராஜருக்கு உத்தரவிட்டு, வானரன் ரூபத்தில் வந்த அனுமன், ராமநாமத்தை உச்சரித்தபடி வடக்கு திசை நோக்கிச் சென்று மறைந்தார். வானரன் ரூபத்தில் வந்து, அனுமன் கட்டளையிட்டபடி ஸ்ரீ வியாச ராஜதீர்த்தர் அனுமனை சிலையாக வடிவமைத்து கோயிலை கட்டி, பிராண பிரதிஷ்டை செய்து, அந்த அனுமனுக்கு சில நாட்கள் அபிஷேக ஆராதனைகளை செய்திருக்கிறார். அதன் பின்னர், மீண்டும் அவர் தேச சஞ்சாரத்தை மேற்கொண்டிருக்கிறார்.

அரசமரத்தடியில் அனுமன்

காலம் சுழன்றது. விஜயநகர சாம்ராஜ்யம் வீழ்ச்சியடைந்து, அதன் அதிகாரம் மற்றவர்களின் கைக்களுக்கு சென்றது. பல கோயில்கள் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. அவற்றுள், ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமனும் அடக்கம். (இப்போதுகூட வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன், ஆயிரத்திற்கும் மேற்பட்டது என்று சொல்கிறார்கள். ஆனால், 600 முதல் 700 வரை மட்டுமே கோயிலாக உள்ளது. அதிலும் சுமார் 226 மட்டுமே அதிகாரப்பூர்வமாக கணக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்பது வேதனை. இதனை நம் கட்டுரை வழிகாட்டும் என்று நம்புகிறேன்)

இப்படி இருக்க, சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு, ``துன்ன வீராசாமி நாயுடு’’ என்கின்ற சாலை ஒப்பந்ததாரர், ஏலூரு - விஜயவாடா சாலையை அமைத்துக் கொண்டிருந்தார். அப்போது, ஆஞ்சநேயர் அவரது கனவில் தோன்றி, ``தான் மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன் என்றும், சாலையில் இருக்கக்கூடிய குறிப்பிட்ட அரசமரத்தை சுட்டிக் காட்டி, இங்குதான், நான் சிலையாக இருப்பதாககூறி’’ மறைந்தார்.

மறுநாள் காலையில், தனது பணியாட்களை அழைத்துக் கொண்டு, அனுமன் கூறிய அந்த அரசமரத்தை நோக்கி வேகவேகமாக சென்றார், வீராசாமி. அனுமன்கூறிய இடத்தை, தன் பணியாட்களை விட்டு தோண்டச் சொன்னார்.

தாசாஞ்ஜநேயராக மாறிய கதை

சிந்தூர நிறத்தில், அழகான அனுமனின் தெய்வீக சிலை கிடைத்தது. வீராசாமி, கண்ணீர் மல்க அனுமனை தூக்கிக் கொண்டு, பக்தர்களின் தரிசனத்திற்காக, அரசமரத்தடியில் ஒரு ஓலைக் கொட்டகையை ஏற்பாடு செய்து, அனுமனை பிரதிஷ்டை செய்தார். அந்த அரசமரத்தை இன்றும் கோயிலின் பின்னே காணலாம். அன்றிலிருந்து, இக்கோயில் ஆஞ்சநேயர், தன்னை நாடி வரும் ஆஞ்சநேயதாசர்களின் விருப்பங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்து வருகிறார். ஆகையால், இவருக்கு ``ஸ்ரீ தாசாஞ்ஜநேயர்’’ என்னும் பெயரும் உண்டு. அதன் பின், சீதா - லட்சுமணர் சமேதராக ராமபிரானும், அனுமனுக்கு மேலே அழகாக பிரதிஷ்டை ஆகியிருக்கிறார். மேலும், இக்கோயில் சாலையோரமாக இருப்பதால், பலரும் தங்களின் வாகனத்திற்கு பூஜைகளை செய்துவிட்டு செல்கிறார்கள்.

தாசாஞ்ஜநேயர் இரண்டு முதல் மூன்று அடி உயரம் கொண்டவராக இருக்கிறார். அவரது கைகள், மார்பு மற்றும் கால்களில் அழகான ஆபரணங்களை சாற்றிக் கொண்டுள்ளார். கோயில், மிக அமைதியாக காணப்படுகிறது. சற்று தூரத்தில் ``கிருஷ்ணா ஆறு’’ இருக்கிறது.

வழக்கம் போல், வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன்கள் அனைத்தும், வால் தலைக்கு மேலே சென்றும், அதில் ஒரு மணி கட்டப்பட்டிருக்கும். தாசாஞ்ஜநேயரிடத்திலும் அப்படியே காணப்படுகிறது.

திருவிழாக்கள்

தனுர்மாதம் (மார்கழி) மற்றும் அனுமன் ஜெயந்தி ஆகியவை இந்த கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களாகும். அதேபோல், இக்கோயில் அனுமனுக்கு விசேஷமாக ``அக்கு’’ என்னும் வெற்றிலை பூஜை மிக சிறப்பாக நடைபெறும். விஜயவாடா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், குறிப்பாக செவ்வாய்க்கிழமைகளில் தாசாஞ்ஜநேயரை தரிசிக்க திரளாக வருகிறார்கள். அதேபோல், ராமபிரானும் இங்கு இருப்பதால் ``ஸ்ரீ ராம நவமி’’ அன்றும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

``மச்சவர வாசா சதகோடி மன்மத விலாசா

கேசரி புத்ர ஹனுமந்த கீர்த்திமந்த’’

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 5.00 முதல் 1.00 வரை, மாலை 3.00 முதல் 8.00 வரை.

எப்படி செல்வது: விஜயவாடா மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 6 கி.மீ தொலைவிலும், விஜயவாடா ரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ தொலைவிலும் இந்தக் கோயில் அமைந்துள்ளது.