Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

94. ப்ரத்யயாய நமஹ

(Prathyayaaya namaha)

ராமனுக்கும் சுக்ரீவனுக்கும் இடையே நட்பை உண்டாக்கினார், ஆஞ்ஜநேயர். வாலியைக் கொன்று கிஷ்கிந்தை ராஜ்ஜியத்தைத் தனக்குப் பெற்றுக் கொடுத்தால், எழுபது வெள்ள வானர சேனையைக் கொண்டு சீதையைத் தேடித் தருவதாக ராமனிடம் சுக்ரீவன் வாக்களித்தான். ராமனும் அதற்கு இசைந்தான். ஆனால், சுக்ரீவனுக்கு ராமனின் வீரத்தின் மேல் சந்தேகம். வாலியை வீழ்த்தும் அளவு வலிமை ராமனுக்கு உள்ளதா எனச் சோதிக்க நினைத்தான். அதனால் ராமனுக்கு ஒரு பரீட்சை வைத்தான். துந்துபி என்ற அரக்கன் முன்னொரு சமயம் வாலியுடன் போர்புரிய வந்தான். அந்த துந்துபியைக் கொன்று அவனது சடலத்தை வாலி தூக்கி எறிந்த போது, அது ரிஷ்யமூக மலையில் சென்று விழுந்தது. அந்தச் சடலம் இருக்கும் இடத்துக்கு ராமனை அழைத்துச் சென்ற சுக்ரீவன், “ராமா! இது அன்று வாலி வீசி எறிந்த அரக்கனின் சடலம். இப்போது நீ இதை எடுத்து வீசு. நீ எவ்வளவு தூரம் வீசுகிறாய் என்பதைப் பார்த்து, உன் பலத்தையும் வாலியின் பலத்தையும் நான் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்!” என்றான்.அங்கே துந்துபியின் சடலத்தில் சதையெல்லாம் அழுகிப் போய் எலும்புக் கூடு மட்டுமே இருந்தது. உறவினர்கள், மருத்துவர்களைத் தவிர வேறு யாரேனும் இன்னொருவரின் எலும்பைத் தொட்டால் தீட்டு உண்டாகும். அந்தத் தீட்டு நீங்கத் தனி பிராயச்சித்தம் செய்ய வேண்டும். அதனால் அதைத் தொட்டுத் தூக்கி வீச ராமன்

தயங்கினான்.அப்போது லக்ஷ்மணன், “அண்ணா! உங்கள் இடது திருவடியின் கட்டை விரலால் நெம்பிவிடுங்களேன்! தீட்டு ஏற்படாது!” என்றான். ராமனும் அப்படியே தன் இடது திருவடியின் கட்டை விரலால், பூமியைக் கடந்து அப்பால் செல்லும்படி துந்துபியின் எலும்புக்கூட்டை நெம்பிவிட்டான்.

(திருமால் திரிவிக்கிரமனாக உலகளந்த போது, அவரது இடது திருவடி பிரம்மாவின் சத்ய லோகத்தை அடைந்தது. அப்போது பிரம்மா தன் கமண்டலத்தில் உள்ள தீர்த்தத்தால் அந்தத் திருவடிக்கு அபிஷேகம் செய்தார். அவ்வாறு அபிஷேகம் செய்கையில், அந்த இடது திருவடியின் கட்டை விரலில் இருந்து புறப்பட்டுப் பூமிக்கு வந்தது தான் கங்கை நதி. அனைத்து தோஷங்களையும் போக்கும் கங்கையின் உற்பத்தி ஸ்தானமாக இருப்பதால் ராமனின் இடது திருவடிக் கட்டை விரலுக்கு மட்டும் எலும்பைத் தொட்டாலும் தீட்டு ஏற்படாது என்பதை அறிந்து லக்ஷ்மணன் இவ்வாறு கூறியுள்ளான்.)சுக்ரீவனோ, “ராமா! என்ன இருந்தாலும் நீ எலும்புக் கூட்டைத்தான் தூக்கி வீசி இருக்கிறாய். வாலி இவன் உயிரோடு இருந்த காலத்திலேயே இவனைத் தூக்கி எறிந்தான். எனவே இந்த ஒரு செயலைக் கொண்டு உன்னால் வாலியைக் கொல்ல முடியும் என்று என்னால் நிச்சயிக்க முடியவில்லை! உனக்கு இன்னொரு பரீட்சை வைக்கப்போகிறேன்!” என்றான்.“என்ன?” என்று ராமன் கேட்க, அருகில் இருந்த வனத்துக்கு அழைத்துச் சென்ற சுக்ரீவன், “ராமா! வாலி தன் வில்லிலிருந்து பாணம் போட்டால், அது பெருத்த சால மரத்தையே துளைக்கும். அவ்வாறு உன்னால் பாணம் போட முடியுமா?” என்று கேட்டான். ராமன் புன்னகை செய்தபடி தன் கோதண்டத்தில் பாணத்தைப் பூட்டி எய்தான். அது வரிசையாக ஏழு சால மரங்களைத் துளைத்துக் கொண்டு சென்றது. அதைக் கம்பனின் வரிகளில் காண்போம்.

“ஊழி பேரினும் பேர்வில அருங்குலக் கிரிகள்

ஏழும் ஆண்டு சென்று ஒரு வழி நின்றென”

பிரளயம் வந்தாலும் அழியாமல் நிற்கும் மேரு மலைகளைப் போல ஏழு மரங்கள் இருந்தன. ஆனால் அவ்வேழு மரங்களை நோக்கி ஏழு என்று சொல்லி ராமன் பாணத்தைச் செலுத்தினான். அந்த ஏழு என்ற ராமனின் வார்த்தையைக் கேட்டதும், ஏழு மலை, ஏழு கடல், ஏழு உலகம், ஏழு துவீபம், ஏழு நதி என ஏழு என்ற எண்ணிக்கைகொண்ட அனைத்தும் அஞ்சினவாம். அத்தகைய பாணத்தால் ஏழு மரங்களையும் துளைத்தான் ராமன்.அக்காட்சியைக் கண்டபின்தான் சுக்ரீவனுக்கு ராமனின் வீரத்தின் மேல் நம்பிக்கை உண்டானது. இவ்வாறு பலவிதமான சாகசங்களைப் புரிந்து தன் பக்தர்களுக்குத் தன் மேல் நம்பிக்கையை உண்டாக்கி அதை வளர்ப்பவராகத் திருமால் திகழ்வதால் ‘ப்ரத்யய:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 94-வது திருநாமம். தன்நம்பிக்கையை நாம் இழக்கும்போதெல்லாம்

“ப்ரத்யயாய நமஹ” என்ற திருநாமத்தைச் சொல்லித் திருமாலை வணங்கினால், அவர் அருளால் நமக்குத் தன்னம்பிக்கையும் தெய்வநம்பிக்கையும் புத்துணர்ச்சியும் உண்டாகும்.