Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

87. சரணாய நமஹ (Sharanaaya namaha)

திருவாரூருக்கு அருகே அமைந்துள்ள திவ்யதேசம் திருக்கண்ணமங்கை. அங்கே தர்ச புஷ்கரிணிக் கரையில் அபிஷேகவல்லித் தாயாருடன் ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் எழுந்தருளியுள்ளார். திருமங்கை ஆழ்வார் பத்து பாசுரங்களால் இத்திருத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார். இப்பெருமாளைப் பெரும்புறக்கடல் என்று பெயரிட்டு அழைத்துள்ளார். அவ்வூரில் திருக்கண்ணமங்கை ஆண்டான் என்ற ஒரு திருமால் அடியார் வாழ்ந்து வந்தார். அவர் நாதமுனிகளின் சீடர். ஒருநாள் பக்தவத்சலப் பெருமாளை தரிசிப்பதற்காகக் கோவிலுக்குச் சென்றபோது கோவில் வாசலில் ஒரு காட்சியைக் கண்டார்.வெளியே செருப்பை விட்டுவிட்டுக் கோவிலுக்குச் சென்றிருந்த ஒருவனின் செருப்பை அங்கிருந்த ஒரு நாய் கடித்தது. உள்ளே சென்றவனுடைய நாய், இதைக் கண்டு செருப்பைக் கடித்த நாயைக் கடித்தது.

இரண்டு நாய்களும் சண்டையிட்டு இறந்து போயின. இரண்டு நாய்களின் சொந்தக்காரர்களும் பெருமாளைத் தரிசித்துவிட்டு வெளியே வரும்போது இருவரின் நாய்களுமே இறந்துபோயிருந்தன.அதைக் கண்டு இரு நாய்களின் சொந்தக்காரர்களும் நாயின் மரணத்துக்கான பழியை ஒருவர் மேல் ஒருவர் சுமத்திக்கொண்டு, சண்டையிட்டுக் கத்தியால் ஒருவரை ஒருவர் குத்திக்கொண்டு இறந்துபோனார்கள். இதைப் பார்த்தவுடன் மிகச்சிறந்ததோர் எண்ணம் ஆண்டானுக்கு உதயமானது. “ஒரு சாதாரண மனிதன் தனக்குச் சொந்தமான ஒரு நாயை அடித்ததற்காக கோபப்பட்டு, அடித்தவரைக் கொல்லும் அளவுக்குச் செல்வானேயானால், ஸர்வ ரக்ஷகனான எம்பெருமான் மந்நாராயணன், அவனே கதி என்று வாழும் அவன் தொண்டர்களான நம்மைக் காப்பாற்றாதிருப்பானோ?” என்று அவர் சிந்தித்தார்.

இந்தச் சிந்தனை வந்த அளவிலேயே, தன்னைக் காத்துக் கொள்ள வேண்டியது தன் பொறுப்பு என்ற எண்ணத்தையும், கவலையையும் விட்டு, பக்தவத்சலப் பெருமாளின் சொத்தான நம்மைக் காக்க வேண்டிய பொறுப்பு அவனுடையது என்று தெளிந்து, அந்தப் பெருமாளின் கோவிலிலேயே வாழத் தொடங்கிவிட்டார். தன்னுடைய ஜீவனுத்துக்குத் தேவையான வியாபாரம் உள்ளிட்ட அனைத்துச் செயல்களையும் விட்டார். இறைவனின் பிரசாதத்தை மட்டும் உண்டு அவன் திருவடிவாரத்திலேயே வாழ்வைக் கழித்து இறுதியில் அவன் திருவடிகளை அடைந்தார்.அவர் கோவிலில் வாழ்ந்த காலத்தில் எப்போதும் ஒரு தொடர்மொழியைச் சொல்லிக்கொண்டேயிருப்பாராம்.

“தர்சப் பொய்கைக் கரையின் நாதனே! பக்தவத்சலனே!

நீ ஒரு யானையைக் காத்தாய்! ஒரு யானையைக் கொன்றாய்!

ஒரு குரங்கைக் காத்தாய்! ஒரு குரங்கைக் கொன்றாய்!

ஓர் அத்தானைக் காத்தாய்! ஓர் அத்தானைக் கொன்றாய்!

ஓர் அரக்கனைக் காத்தாய்! ஓர் அரக்கனைக் கொன்றாய்!

ஓர் அசுரனைக் காத்தாய்! ஓர் அசுரனைக் கொன்றாய்!

உன்னைத் தஞ்சமடைந்த அடியேனையும் காத்தருள வேணும்!”

இதன் தாத்பர்யம் யாதெனில், எம்பெருமான் கஜேந்திரன் என்ற யானையைக் காத்தான். குவலயாபீடம் என்ற யானையைக் கொன்றான். சுக்ரீவன் என்ற குரங்கைக் காத்தான். வாலி என்ற குரங்கைக் கொன்றான். அர்ஜுனன் என்ற அத்தைமகனைக் காத்தான். சிசுபாலன் என்ற அத்தைமகனைக் கொன்றான். விபீஷணன் என்ற அரக்கனைக் காத்தான். ராவணன் என்ற அரக்கனைக் கொன்றான். பிரகலாதன் என்ற அசுரனைக் காத்தான். ஹிரண்யன் என்ற அசுரனைக் கொன்றான். இதிலிருந்தே பிறந்த குலத்தைக் கொண்டு யாரையும் அவன் தண்டிப்பதோ காப்பதோ இல்லை என்பது புரிகிறதல்லவா?தீமை செய்பவர்கள் எக்குலத்தவராக இருந்தாலும், தன் அத்தை மகனாகவே இருந்தாலும் அவர்களைக் கொல்கிறான். தஞ்சமடைந்தவர்கள் குரங்காகவோ, அரக்கனாகவோ இருந்தாலும் காக்கிறான். இப்படித் தஞ்சம் அடைந்தவர்கள் யாராக இருப்பினும், வேறுபாடோ ஏற்றத்தாழ்வோ பாராமல் அவர்களை ரக்ஷித்தே தீர வேண்டுமென்ற உறுதியுடன் இருப்பதால், அனைவருக்கும் புகலிடமான திருமால் ‘சரணம்’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 87-வது திருநாமம்.“சரணாய நமஹ” என்று தினமும் சொல்லிப் பெரும்புறக்கடலான பக்தவத்சலின் திருவடிகளைச் சரண்புகுந்து அவன் அருளைப் பெறுவோம்.